எளிமையான கிராமீய வாழ்க்கை - பகுதி 3

மேகலா : ‘வண்டு கட்டுறது” – அப்படீன்னா, குழம்புச் சட்டியை வெறுமனே மூடி போட்டு மூடி வைத்தால், மூடியிலிருந்து வேர்த்து தண்ணீர் ஒழுகி, குழம்பு கெட்டு விடலாம். அதனால், பாத்திரத்தை துணியால் கட்டி, அதன் மீது மூடி போடுவார்கள்.

கிருஷ்ணர் : Oh! அப்படியா…. ஆமாம், அந்தச் சட்டியில் என்ன இருக்கும்?

மேகலா : ச்சுக்கா…. கமகம சுக்கா கிருஷ்ணா…. அந்த குழம்புச் சட்டியை அடுப்பில் ஏற்றி சுட வைத்தால், உறைந்து கிடக்கும் கொழுப்பு உருகி, சுக்கா வாசனையில் ஊரே மணமணக்கும். அந்தச் சுவைக்கு இந்த உலகம் ஈடாகுமா கிருஷ்ணா….

கிருஷ்ணர் : இதுக்கு மேலே இந்தக் கதை எனக்கு நல்லா தெரியும்…. உங்க ‘ஐயாமா’ வீடு, கிராமத்து வீடு போல, ஓடு பதித்ததாக…, மாடு கட்டப்பட்டதாக இல்லையோ மேகலா…

மேகலா : கிருஷ்ணா…. எங்க அப்பா சின்னப்புள்ளையாக இருந்த போது…, இந்தப் பெரிய வீடு கிடையாது கிருஷ்ணா… அது வெட்ட வெளியாகத்தான இருந்திருக்கும். அங்குதான் மாடு கட்டப்பட்டிருக்கும். எங்க ஐயாமா, ஆடு, மாடு வளர்த்துதான், தன் ‘சிறுவாடு’ பணத்தை சம்பாதித்திருக்கிறார். வீட்டின் பின்புறம், எங்க ஐயாப்பாவோட நிலம் இருக்கும். அதில் வீட்டுக்குத் தேவையான காய்கறிகளைப் பயிரிட்டு விவசாயம் பார்த்திருக்கிறார்கள் கிருஷ்ணா. எங்க அப்பா கூட பிறந்த அத்தை – அவர்களை ‘அக்கா’ என்றுதான் கூப்பிடுவோம். அவங்க சொல்லுவாங்க, ‘கத்தரிக்காய் பிஞ்சாக இருக்கும் போது, செடியிலிருந்து பிடுங்கி சாப்பிடுவோம்…. விதையே இல்லாமல் ருசியா இருக்கும்’ என்று.

கிருஷ்ணர் : அப்போ…. hybrid கத்தரிக்காய் இல்ல… இது சுத்தமான இயற்கை உரத்தில் விளைந்த ‘organic கத்தரிக்கா’. தமிழை விளக்குவதற்கு கூட ஆங்கிலம் தேவையாயிருக்கு பாரு…

மேகலா : அந்தக் காலங்களில் வேலைக்கு நடுவில் சாப்பிடும் snacks கூட, கத்தரிக்காய், வெள்ளரிக்காய், தக்காளி என்றுதான சாப்பிடுவாங்க கிருஷ்ணா… இன்னும் ஒண்ணு தெரியுமா… கிருஷ்ணா! தட்டப்பயறு, உளுந்து செடிகளை பறித்தவுடன், அதன் காயை சாப்பிடுவார்கள் கிருஷ்ணா…. சாறு வழிந்து, அது கொடுக்கும் சுவையை, சுண்டல் கூட கொடுக்காது கிருஷ்ணா….

கிருஷ்ணர் : இந்த மாதிரி பயறுகளை fresh-ஆ சாப்பிடறது கிராமத்தில் தான் முடியும், இல்லையா…, நீ சாப்பிட்டிருக்கிறாயா மேகலா….

மேகலா : சின்ன வயசில் சாப்பிட்டிருக்கேன் கிருஷ்ணா… எனக்கு கல்யாணம் முடிந்து, நவம்பர் மாதத்தில் ‘பூனா’ சென்றிருக்கிறேன். அப்போ வீதியில் பச்சை ‘சென்னா’ விற்று வருவார்கள். கீரைக்கட்டு மாதிரி இருக்கும். அதில் பசுமையான கொண்டைக்கடலை, பட்டாணி மாதிரிக் கூட்டுக்குள் இருக்கும். காலையில், பத்து மணி வாக்கில், இந்த பச்சை கொண்டைக்கடலையை கீரையோடு விற்று வருவார்கள். ‘Cycle society colony’-யில் பெண்கள் எல்லாம், வேலையை முடித்து விட்டு வாசலுக்கு வந்து அரட்டைக்கச்சேரி போடும் நேரம். கொண்டைக்கடலை வியாபாரி வந்தவுடன், ஆளுக்கொரு கட்டு வாங்கி, சாப்பிட்டுக் கொண்டே அரட்டையைத் தொடருவார்கள்….

கிருஷ்ணர் : Oh! Instant snack-ஆ…, மக்கள் நகரத்துக்கு வந்தாலும், சில பாரம்பரிய சுவையை மறக்காமல் இருப்பது, ஒரு சுவையான விஷயம் தான். ஏன் மேகலா…, கிராமீய உணவுப் பழக்கங்கள் என்ன….?

மேகலா : கிருஷ்ணா…. காலையில் எழுந்ததும், தேங்காய் துருவி, சட்னி அரைத்து, தோசை சுட்டு சாப்பிடும் வழக்கமெல்லாம் அந்தக் காலத்தில் கிராமங்களில் கிடையாது கிருஷ்ணா. இப்ப வேணா, கிராமங்களில் உணவுப்பழக்கம், இட்லி, தோசையாக மாறி இருக்கலாம். ஆனால், விஞ்ஞானம் நம் வீடுகளில் ஆக்ரமிக்காத காலங்களில், எல்லா வேலைகளும், மனித முயற்சியால் மட்டுமே நடந்த காலங்களில், காலையில் கேப்பைக்கூழ், கம்மஞ்சோறு, சோளச்சோறு என்றுதான் இருக்கும். பாரதியார் கண்ட கனவு போல, கிராமத்தில் இருக்கும் ஒவ்வொரு விவசாயிக்கும் காணி நிலமாவது இருக்கத்தான் செய்யும். வானம் பார்த்த பூமியில் விளையும் கேழ்வரகு, சோளம், கம்பு தானியங்களை, உரலில் குத்தி மாவாக்கி, திருகலில் நைஸாக திரித்து, பெரிய பானையில், 2 நாள், 3 நாளைக்கான கூழைக் காய்ச்சி, உருண்டையாய் திரட்டி, தண்ணிக்குள் போட்டு வைத்திருப்பார்கள்; அது கெட்டுப் போகாது. அப்பப்போ பசிக்கும் போது, ஒரு உருண்டையை எடுத்து, மோர் ஊற்றிக் கரைத்து, வெங்காயம், பச்சை மிளகாய் கடித்து சாப்பிடுவார்கள். இது காலை நேரம் மட்டுமில்லை கிருஷ்ணா; மத்தியான வேளைக்குக் கூட, இந்த உணவையே சாப்பிடுவார்கள். எங்க அப்பா சொல்லுவார், ‘நெல்லுச்சோறு, பருப்பு, நெய்யெல்லாம் வாரத்திற்கொரு முறை தான் இருக்குமாம். இத்தனைக்கும், ஆடு, மாடு வளர்த்து, வீட்டில் பால், தயிர், நெய்யெல்லாம் குறையில்லாமல் இருக்குமாம். கோழி வளர்த்து, அதன் முட்டையை, ஐயாமா, எங்க அப்பாவுக்கு மட்டுமே omelet போட்டுக் கொடுப்பார்களாம். இந்தக் கூழ், களிக்கு இன்னொரு side dish என்ன தெரியுமா கிருஷ்ணா…?

கிருஷ்ணர் : என்ன chicken-ஆ….

மேகலா : ஐயோ கிருஷ்ணா… அதெல்லாம் எப்பவாவது ஒரு நாள் சாப்பிடுவது. இது ‘கருவாடு’. அதையும், வெங்காயம் வெட்டிப் போட்டு வதக்கி சாப்பிடுவது இல்லை; ஒரு கருவாட்டுத் துண்டை, ஒரு சிறு துணியில் சுற்றி, ஒரு குச்சியில் சொருகி, தீயில் வாட்டி, அதை எடுத்து, கூழுக்குத் தொட்டுக்குவார்கள் கிருஷ்ணா…

கிருஷ்ணர் : ‘Fish kabab’-ஆ… சமையல் வேலை இல்லைன்னா, வேற வேலை என்ன செய்வார்கள்…?

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2