எளிமையான கிராமீய வாழ்க்கை - பகுதி 11

மேகலா : கிருஷ்ணா…. வயல்வெளிகளில் உழுவதற்கு ‘டிராக்டர்’ வருவதற்கு முன்பெல்லாம்… நுகத்தடியால் இணைக்கப்பட்ட, காளை மாடுகளைப் பூட்டிதான் உழுவார்கள் கிருஷ்ணா…

கிருஷ்ணர் : Oh! ’நுகத்தடி’ன்னா…

மேகலா : தெரியாத மாதிரி நடிக்காத கிருஷ்ணா… இரண்டு காளை மாடுகளை இணைப்பது ‘நுகத்தடி’. இந்த நுகத்தடியில், ‘கலப்பை’, அல்லது ‘ஏர்’ இதைச் சேர்த்துக் கட்டி, வயக்காட்டில் உழுவார்கள். நிலத்தை உழும் உழவன், மாடுகளை ஓட்டிக் கொண்டே செல்வான். இங்கு கலப்பை, நிலத்தில் கோடு இழுத்துக் கொண்டே செல்லும்; கீழிருக்கும் மண்ணு மேலே வரும், மேலிருப்பது கீழே சென்று, நிலத்தைப் புரட்டிப் போட்டு பதப்படுத்தும்; அவ்வப்போது, மாட்டின் கோமியமும் (சிறுநீர்), சாணமும், நிலத்திற்கு உரமாகப் பயன்படும். ஈர நிலமாக இருக்கும் பட்சத்தில், நிலத்தைக் கிழித்துச் செல்லும் கலப்பை மீது உழவர்கள் நின்று கொண்டும், ஒரு காலை, வயலில் புதைய விட்டுச் சென்று, விதை விதைக்க தயார்படுத்துவார்கள். அப்பொழுது, பாடத் தெரிந்தவர்கள் பாடிக் கொண்டே வேலை செய்வார்கள்….. இந்தப் பாட்டுக்கு ‘ஓதப்பாட்டு’ என்று பெயர் கிருஷ்ணா. தயார் நிலையில் வைத்திருக்கும் நிலத்தில் மறுநாள், விதை விதைப்பார்கள்.

டிராக்டரில், ‘கலப்பை’ என்பது, ஒரு தனி attachment. டிராக்டருக்குப் பின்புறத்தில், பெரிய பற்கள் கொண்ட ‘சீப்பு’ மாதிரியான attachment-ஐப் பொருத்தி, வண்டி ஓட்டுவார்கள். நாம் car-ல் டிக்கி door-ஐ open பண்ணுவோம்ல, அது மாதிரி, இந்த attachment-ஐயும், நிலத்தை உழுது முடித்து பண்படுத்திய பின், switch போட்டு மேலே தூக்கலாம். வேலை முடிந்த பின்பு, தனியே பிரித்தும் எடுத்து விடலாம்…

கிருஷ்ணர் : பரவாயில்ல, சொல்லிட்ட… எங்க, சொல்ல முடியாம முழிப்பயோ என்று நினைத்தேன்…. நீ சொல்வதைக் கேட்க, வயல் வரப்புகளில் திக்கித் திணறி நடக்க மாட்டோமா என்றிருக்கிறது மேகலா….

மேகலா : கிருஷ்ணா…. நீ கடவுள்…. பழமை மாறாத கிராமத்திற்குள் இறங்கி இயற்கையை ரசிக்கலாம். ஆனால் எங்களைப் பாரு… பழமையை, நினைவுகளில் மட்டுமே சுமந்து கொண்டு, புதுமையோடு புதுமையாகக் கலந்து முழிக்கிறோம் கிருஷ்ணா….

கிருஷ்ணா : அதனாலென்ன…. கிராமம், எளிமை, இயற்கை, இனிமை…, இதெல்லாம் இப்படி நினைத்துப் பார்த்து அனுபவிக்கத் தெரிஞ்சிருக்கே…. எந்த ஒரு மனிதனும் பழமையை மறக்கவும் கூடாது…, புதுமையை ஏற்காமல் இருக்கவும் கூடாது….. சரி, கலப்பைய சொல்லிட்ட, டிராக்டரும் O. K. ’நுகத்தடி’ என்ற அழகான தமிழ்ச் சொல்லும் சொல்லிட்ட… நீ ஏற்றம் இறைப்பதை எங்கயாவது, எப்பவாவது…, சின்னப்புள்ளையிலயாச்சும் பார்த்திருக்கியா மேகலா…

மேகலா : ஏன் பார்க்காமல் கிருஷ்ணா… பார்த்திருக்கிறேன் கிருஷ்ணா… அந்தக் காலங்களில், மோட்டார் போட்டு, tank-ல் தண்ணீர் ஏற்றுவது, எல்லா விவசாயிகளிடமும் 100% புழக்கத்தில் இல்லாத காலங்களில் மக்கள், தங்கள் பயிர்களுக்கு தண்ணீர் இறைப்பதற்குக் கூட உழவு மாடுகளைத்தான் பயன்படுத்துவார்கள் கிருஷ்ணா…

கிருஷ்ணர் : Oh! நீ சின்னப்பிள்ளையாக இருக்கும் போதே, மின்சாரம் என்பது common ஆயிருச்சோ…

மேகலா : ஆமாம் கிருஷ்ணா! ஒரு 59, 60 வருடங்களுக்கு முன்னால் எங்கள் ஊர் வானம் பார்த்த பூமியல்லவா…. அதற்கேற்ற பயிர் தானே விளைவிப்பாங்க… அதனால், பயிர்களுக்குத் தண்ணீர் பாய்ச்சுவது மூணு நாளைக்கு ஒரு தடவை… அல்லது இரண்டு நாளைக்கு ஒரு முறைதானே கிருஷ்ணா… அதனால் மின்சாரம் தேவையில்லை என்று நினைத்தார்கள் போல கிருஷ்ணா… எங்கள் ஊரிலிருந்து சாத்தூருக்கு செல்லும் வழி நெடுக, கிராமங்கள் தான் கிருஷ்ணா… அப்படிப் போகும் போது பார்த்திருக்கிறேன் கிருஷ்ணா…

அந்தக் காலங்களில், கிணற்றில் தண்ணி ‘கெத்து கெத்துணு’ இருக்கும். ஏற்றம் இறைப்பதற்கு ஏதுவாக, கிணற்றின் துவாளத்திலிருந்து சற்று மேலே ஒரு ஆள் நடந்து வரும்படிக்கு ஒரு அமைப்பு…, பாலம் மாதிரி வைக்கப்பட்டிருக்கும். அதன் இடமும் வலதுமாக இரண்டு பகுதியாக பிரிக்கப்பட்டு, ஒரு புறம் நீண்ட தடியிருக்கும். அதன் ஒரு முனையில் கயிறு கட்டி, தண்ணீர் சேந்தி வர பெரிய குடுவை மாதிரி, உலோகத்தில் செய்த கொள்கலம் இருக்கும். கிணற்றின் மீது பாலம் மாதிரியான பாதையில், இப்படியும் அப்படியும் நடந்து வந்து கொள்கலத்தில் தண்ணீரை சேந்துவதை பார்த்துக் கொள்வதுதான் விவசாயியின் வேலை. ‘சீசா’ (seesaw) பலகை மாதிரி தடி மேலேயும் கீழேயும் ஏறி இறங்கி, கிணற்றுக்குள்ளிருந்து தண்ணீரை சேந்தி இழுத்து வரும். அந்தத் தண்ணீர் ஏறி வரும் கயிற்றின் மறுபகுதி, காளை மாட்டின் கழுத்தில் கட்டியிருப்பார்கள். அந்த மாடு குறிப்பிட்ட இடம் வரைக்கும் செல்லுமா…, தண்ணீர் மேலே ஏறி வரும். வாய்க்கால் அருகில் வந்த பின்னும், காளை மாட்டின் இழுப்புக்கு, மெல்ல சாய்ந்து கொள்கலத்தில் கட்டப்பட்டிருக்கும் ‘ரப்பர் ட்யூப்’ வழியாகத் தண்ணீர், வாய்க்காலில் correct-ஆகப் பாயும். மறுபடியும் காளை மாடு கிணற்றருகே வரும், தடியும் தண்ணீரை ஏற்றி இறைப்பதால், இதற்கு ‘ஏற்றம் இறைத்தல்’ என்று பெயர் வந்ததோ….

கிருஷ்ணர் : தெரியலியேமா…

மேகலா : அந்தக் கால சினிமாக்களில், விவசாயம் சம்பந்தப்பட்ட படமென்றால், கட்டாயம் ஏற்றம் இறைக்கும் ’scene’ இருக்கும் கிருஷ்ணா…

கிருஷ்ணர் : ஏன் மேகலா…. கிராமத்தில் வாழும் விவசாயிகளுக்கு, சொல்லப் போனால், ஒரு கிராமத்தானுக்கு விவசாயம் தவிர, வேறு எதுவும் தெரியாதா….?

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 5

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1