எளிமையான கிராமீய வாழ்க்கை - பகுதி 18 (நிறைவுப் பகுதி)

மேகலா : கிருஷ்ணா….. மக்கள் பூ இறங்குவதும், தீச்சட்டி ஏந்தி வருவதும், கயறு குத்துவதும்…. இது பக்தியில்லை கிருஷ்ணா…, நம்பிக்கை. நம் அன்னை, நாள்தோறும் உழைக்கும் நமக்கு, நாம் கேட்பதை எல்லாம் கட்டாயம் கொடுப்பாள் என்று ‘தாய் மகள்’ உரிமையோடு நம்புகிற நம்பிக்கை…. சிவன் கோயிலுக்கோ, பெருமாள் கோயிலுக்கோ செல்லும் போது, கோயிலுக்குச் செல்லும் பக்தனின் உணர்வு வரும்…. ஆனால், மாரியாத்தா கோயிலுக்குச் செல்லும் போது மட்டும், சொந்த வீட்டிற்குச் செல்லும் உணர்வு தான் வரும் கிருஷ்ணா. பங்குனிப் பொங்கல் சமயங்களில், கோயிலுக்கு வரும் மக்கள், குடும்பம் குடும்பமாக அமர்ந்து பழம் சாப்பிடுவதும், தேங்காயை உடைத்து பங்கு போட்டு சாப்பிடுவதும், பார்க்கும் நமக்கு, அங்கிருந்தே வெளியே வர மனசே இருக்காது கிருஷ்ணா….

கிருஷ்ணர் : வாஸ்தவம் தான்…. எளிமை இருக்கும் இடங்களில், உரிமையும் இயல்பாக வந்து விடும் போல…. கொடையாக அள்ளித் தந்த அன்னைக்கு, நன்றியறிந்த மனுஷன், எரியும் நெருப்பில் கூட, பூவில் நடப்பது போல நடக்கத்தான் செய்வான். கிராமத்து பக்தி நெசம்மாவே மெய் சிலிர்க்கச் செய்கிறது.

மேகலா : மாரியாத்தா மீது கொண்ட பக்தி இப்படியென்றால், குலதெய்வம் கோயில் வழிபாடும், மக்கள் தன் முன்னோர்கள், மூத்த குடிப்பிறப்புகளைத் தேடிச் செல்வது போலவே இருக்கும் கிருஷ்ணா…. திருமணம் முடிந்தவுடன், குலதெய்வம் கோயிலுக்குச் சென்று பொங்கல் வைப்பவர்கள்….. அடுத்த வருடமே, குழந்தைக்கு மொட்டை போட, காது குத்த என்று கோயிலுக்குச் சென்று தங்கள் சந்தோஷத்தை நாள் முழுக்கக் கொண்டாடி, மகிழ்ந்து போவார்கள் கிருஷ்ணா…..

கிருஷ்ணர் : Oh! மாரியம்மன் கோயில், தன்னோட அம்மா வீடு என்றால்…., குலதெய்வம் கோயில், தங்கள் சொந்த பந்தங்கள் அனைவரும் சேர்ந்து சந்தோஷமாய் இருக்கும் இடம்….

மேகலா : கிருஷ்ணா! பல ஊர்களிலும் இருந்தும் கோயில் கொடைக்கு வருபவர்கள், கெடா வெட்டி, ஒரே குழம்பாய் வைத்து சோறாக்கி, அத்தனை பேரும் ஒன்றாய் உட்கார்ந்து சாப்பிடுவார்கள் கிருஷ்ணா. முன்ன பின்ன அறிமுகமில்லாதவர்கள் கூட, அண்ணன் தம்பியாய், ஒன்றாய் அமர்ந்து சாப்பிடுவதும், பெரியவர் சிறியவர் என்ற பேதமில்லாமல் ஓடியாடி பரிமாறுவதும், இந்த சந்தோஷத்தை எதிர்பார்த்து, மக்களெல்லாம் குலதெய்வம் சாமி கும்பிடும் நாளை எதிர்பார்த்து காத்திருப்பதும்…., இதெல்லாம் சந்தோஷமான கிராமீய பக்தி கிருஷ்ணா….

கிருஷ்ணர் : ஏன் மேகலா…. உங்கள் குலதெய்வம் கோயில் எங்கிருக்கு…. அங்கு தெய்வமாய் குடியிருக்கும் சாமி யாரு….

மேகலா : எங்க குலதெய்வம், ‘கருக்குவேல் அய்யனார்’, கிருஷ்ணா…. கோயில் இருக்குமிடம், திருச்செந்தூர் பக்கத்துல ‘தேரி குடியிருப்பு’ என்ற ஊரில்…. முந்திரிக் காடு நிறைந்த ஊர் கிருஷ்ணா…. இப்போ முந்திரி மரம் கொஞ்சம் குறைஞ்சிருக்கு; மற்றப்படி…. செவக்காட்டு மண் நிறைந்த பூமி கிருஷ்ணா…. அந்தக் காலங்களில் மக்கள் வசிக்கும் பகுதியிலிருந்து, கோயிலுக்குப் போகும் வழியில் ரோடு கூட கிடையாது கிருஷ்ணா. 2 or 3 கிலோமீட்டருக்கு நடந்துதான் போக வேண்டும். மணற்பரப்பு, சஹாரா பாலைவனம் மாதிரி தகிக்கும் கிருஷ்ணா… அதில் எங்க மாமனார் காலில் செருப்பு கூட போட மாட்டார் கிருஷ்ணா….. அப்படியொரு பக்தி….

கிருஷ்ணர் : மனுஷங்களுக்கு கடவுள் மீது நம்பிக்கை இருந்தால் போதும் மேகலா…. தைரியம் தேவைப்படுமிடத்தில், தைரியமாய் துணை நிற்கும். பயந்து விலக வேண்டிய இடத்தில், விலக வைக்கும்….. கிராம மக்களோட பக்தி, சுவாரஸ்யமாய் இருக்கும் மேகலா…. பக்தி மட்டுமல்ல…. கிராம மக்களின் உழைப்பு….. உழைப்பு சார்ந்த அறிவு…… எளிமையான வாழ்க்கை முறை….. வாழ்க்கையை நடத்தத் தெரிந்த திறமை….. அவர்களுடைய நடை, உடை, பாவனை…. உணவு பழக்கம்…. அலங்காரம்….. பொழுதுபோக்கு…. நகைச்சுவை உணர்வு…. என்று எந்தத் துறையாக இருந்தாலும், இயற்கையோடு இசைந்த அவர்களின் அறிவு, எளிமை…… இவற்றில் எதுவுமே சுவாரஸ்யம் குறையாது இருக்கிறது…… பேசப் பேச அலுப்பில்லாமல் பேசத் தோணுது….. நகரம் என்பது என்ன மேகலா….? ‘நேற்றைய கிராமம்…., இன்றைய நகரம்’….. இன்று கிராமங்கள் கூட, விஞ்ஞான உலகத்தோடு கை கோர்த்துப் போகிறது. கல்வியறிவு இல்லாதவன் கிராமத்தான் என்பது கிடையாது. வாழ்க்கையில் பக்குவப்படாதவனும் கிராமவாசி கிடையாது. இயற்கையைப் பற்றிய அறிவில் தெளிவானவன்…. தன் எளிமையான வாழ்க்கையை திருப்தியுடன் வாழும் பக்குவம் தெரிந்தவன்….

பக்தி செலுத்துவதில் கூட, நம்பிக்கையை மட்டுமே துணையாகக் கொண்ட அனுபவஞானி…. என்று சொல்லிக் கொண்டே போகலாம். சிறந்த தலைப்பு…. இன்னும் எளிமையான கிராம வாழ்க்கையைப் பற்றி ஏதாவது பேசணுமா மேகலா…. என்ன…. ஒண்ணுமே பேச மாட்டேங்குற….

மேகலா : ம்…….. நீ பேசியதை கேட்டுட்டே இருக்கலாம் போல இருக்கு கிருஷ்ணா…. நான் partly கிராமவாசி…. partly townகாரி….. இதுக்கு மேல நிறைய படித்துத்தான் தெரிஞ்சிக்கணும் போல கிருஷ்ணா…..

கிருஷ்ணர் : படிப்போம்…. அடுத்து வேற தலைப்புல பேசலாம்…. இப்போ…. Bye மேகலா…..

(நிறைவு பெற்றது)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2