’வலிமை’ என்பதா...? ‘Strong personality' என்பதா...? - பகுதி 2
மேகலா : எங்கள் வீட்டில் ஒரு முறை பூனை குட்டி போட்டிருந்தது கிருஷ்ணா. மாடிக்குச் செல்லும் ஏணிப்படிக்குக் கீழே ஒரு store room மாதிரி இருக்கும். அதில் ஒரு அட்டைப் பெட்டி இருந்தது. அங்கிருந்து மெல்லியதாக ‘முசுமுசு’வென்று சப்தம் கேட்டதும், நான், என் தம்பி எல்லோரும் எட்டிப் பார்த்தோம். பூனை குட்டி போட்டிருந்தது தெரிய வந்தது. பூனை அவஸ்தையோடு படுத்திருந்தது. அதன் வயிற்றை முட்டிக் கொண்டு, கண் முழிக்காத குட்டிப் பூனை சப்தம் தான் ‘முசுமுசு’ன்னு கேட்டுச்சு. நாங்க அந்த குஞ்சுப்பூனையைத் தூக்கலாமா என்று யோசிக்கும் போது, அந்தப் பக்கம் வந்த எங்க ‘ஞானக்கண்’ அண்ணன், ‘ன்னா…., பூனை இன்னும் ஒரு குட்டி போடப் போகுது. அதத் தொந்தரவு பண்ணாதீங்க’ என்றாரா…. நாங்க பயந்து ஓடியே போயிட்டோம். அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சு, பூனையின் நினைவாகவே இருந்த நான், பூனை எத்தனை குட்டி போட்டிருக்கோ என்ற பரபரப்பில், store room-க்குப் போயி, அட்டைப் பெட்டியின் மூடியை சற்றே விலக்கி எட்டிப் பார்த்தேன். பெரிய பூனை, ஒருசாய்ந்து சற்றே ஆயாசமாகப் படுத்திருந்தது. வெள்ளையும் கருப்புமாக ஒரு குஞ்சு, சாம்பல் கலரில் ஒன்று, மஞ்சள் brown கலரில் ஒன்றுமாக மூன்று குட்டிகளும், கண்களைத் திறக்காமல் பூனையின் வயிற்றை முட்டிக் கொண்டு தலையைத் தூக்கவும், மெள்ளச் சாய்வதுமாக இருந்ததைப் பார்த்ததும், எனக்கு அந்தக் குட்டியைத் தொட்டுப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. நான் மெள்ள பூனையைத் தொ……டத்தான் செய்தேன். பெரிய பூனை, கண்டிப்பான தொனியில், ‘மியாவ்’ என்று குரல் கொடுத்து, தன் காலைத் தூக்கி குட்டிகளின் மீது போட்டு பாதுகாத்தது.
கிருஷ்ணர் : Oh! ’என்ன….. என் குட்டியைத் தூக்க வர்ரயா…. உதை விழும்’ என்பது மாதிரியா குரல் கொடுத்தது….
மேகலா : ஆமாம் கிருஷ்ணா…. நம்ம வீட்டுப் பூனைதான். தினமும் பூனைக்கு நாமதான் பால் வைக்கிறோம் என்ற நினைப்பில், ஒரு குட்டியைத் தூக்கியே விட்டேன். அப்போ, பெரிய பூனை ஒரு சீறு சீறுச்சி பாரு கிருஷ்ணா…. அடேயப்பா… தன் குட்டியைத் தூக்கக் கூட பொறுக்காத பூனை, புலியாக மாறிய கதை எனக்கு மறக்கவே மறக்காது கிருஷ்ணா….
கிருஷ்ணர் : குட்டிகளின் பாதுகாப்புக்காக, பூனை கூட புலியாக மாறத்தான் செய்யும்….
மேகலா : சாதாரண மக்களுக்கு, ‘வலிமை’ என்பது வளர்த்துக் கொள்வது இல்லை; சந்தர்ப்பங்களும், அவசியமும் தான் ஒவ்வொரு மனிதனையும் வலிமையாக்குகிறது என்பது என் அபிப்பிராயம் கிருஷ்ணா…
கிருஷ்ணர் : நீ சொல்றது ரொம்ப சரிதான் மேகலா…. தினமும் கரலாக்கட்டை தூக்கி, exercise பண்ணி உடம்பை ஏத்தி வைத்திருப்பவன் கூட, சின்ன தூசி கண்ணில் விழுந்ததைக் கூட தாங்க முடியாமல் தவிச்சுப் போயிருவாங்க… ‘புல் தடுக்கிப் பயில்வான்’ என்று இவர்களைத்தான் சொல்வாங்க போல…
மேகலா : ஹாஹ்ஹா…. ‘புல் தடுக்கி பயில்வான்’ – இது நல்லாயிருக்குல்ல கிருஷ்ணா…. ஆனாலும், புத்தி உள்ளவன் வலிமை முன்னாடி, ‘பாடி பில்டர்’ வலிமை நிற்க முடியுமா கிருஷ்ணா…
கிருஷ்ணர் : அது எப்படி முடியும் மேகலா…. புத்தி உள்ளவன் தான், எக்காலத்திலும் வலிமை உள்ளவன் ஆகிறான். இரண்டு நாடுகளுக்கிடையே போர் நடக்கும் போது, வீரமும் வலிமையும் உள்ளவன் ஜெயித்து விடுகிறான். தன் நாட்டை இழந்த மன்னன், மறுபடியும், இழந்த நாட்டை மீட்டெடுப்பதற்கு தன் புத்தியைப் பிரயோகித்துத்தான் திட்டம் போடுகிறான். அப்படித் தன் புத்தியை உபயோகித்து தன் நாட்டை மீட்டெடுத்த மன்னர்களை உனக்குத் தெரியுமா, மேகலா…
மேகலா : கிருஷ்ணா… இன்றைய சுதந்திரப் போராட்டம் வரைக்கும் நம்ம நாட்டு வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால்…., நிறைய சம்பவங்கள் இழந்த நட்டைத் திரும்பக் கைப்பற்றிய மன்னர்களின் வரலாற்றை சொல்லுகிறது கிருஷ்ணா….
’மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ – இவன் பெயரிலேயே, ‘மதுரையை மீட்ட’ என்ற சொல் அடைமொழியாகி, அவருடைய வலிமையைக் காட்டுகிறது கிருஷ்ணா… தன் நாட்டை மீட்கும் வரை, போரை மட்டுமே சந்தித்து வந்த சுந்தரபாண்டிய மன்னனின் மார்பில் மட்டும் 94 விழுப்புண்கள் உண்டாம் கிருஷ்ணா…
கிருஷ்ணர் : Oh! இவருடைய வரலாறு உனக்குத் தெரியுமா மேகலா… யாரிடமிருந்து மதுரையை மீட்டார்…?
(தொடரும்)
Comments
Post a Comment