’வலிமை’ என்பதா...? ‘Strong personality' என்பதா...? - பகுதி 3
மேகலா : கிருஷ்ணா! 12-ம் நூற்றாண்டுகளில், பல வருடங்களாக சோழப் பேரரசு, மதுரையைத் தன் வசப்படுத்தி வைத்திருந்ததாம்…. அதன் பிறகு, சோழர் பரம்பரையில் வந்த சில மன்னர்களின் நிர்வாகத் திறமையின்மை காரணமாக, அவர்களுக்கு கப்பம் செலுத்திய மன்னர்கள் சிலர், கப்பம் செலுத்தாமல், சுயாட்சி செய்யத் துவங்கினார்கள். அதன் பிறகு வந்த குலோத்துங்க சோழன் எல்லோரையும் அடக்கி மறுபடியும் சோழப் பேரரசைத் திறமையாக நடத்தினார். அப்பொழுது, மதுரையை குலசேகர பாண்டியன் ஆண்டு வந்தார். அவர், இனி சோழப் பேரரசுக்கு கப்பம் கட்டப் போவதில்லை என்று அறிவித்தார். இதைக் கேட்ட குலோத்துங்க சோழன், மதுரைக்குப் படையெடுத்துச் சென்று, குலசேகரனை வென்று, அவருடைய தாயையும், குடும்பத்தாரையும் காட்டிற்குள் விரட்டினார். அந்த நிலையில், குலசேகரனின் தம்பியாகிய மாறவர்மன் என்னும் சுந்தரபாண்டியன், மன்னனாகப் பொறுப்பேற்றார். அச்சமயத்தில், குலோத்துங்க சோழன், பாண்டியர்களின் பட்டாபிஷேக மண்டபத்தை இடித்துத் தரைமட்டமாக்கினான். அது மட்டுமல்லாமல், விளைநிலங்களில் கழுதைகளைப் பூட்டி, வரகை விதைத்து உழச் செய்து, நிலங்களை நாசமாக்கினான். இச்செயல்களால் பெரும் கோபமுற்ற மாறவர்மன், சோழ நாட்டுக்குப் படையெடுத்துச் சென்று வென்றார். உறையூரையும், தஞ்சாவூரையும் தன் வசமாக்கினார். அதனால், ‘சோணாடு கொண்டான்’ என்று பெயர் பெற்றான். குலோத்துங்கன் இறந்ததும், அவனுடைய மகனாகிய மூன்றாம் ராஜ ராஜ சோழனுக்கு முடிசூடி வைத்தார், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன். இருந்தாலும், சோழப் பேரரசு, மதுரைக்கு கப்பம் கட்டும் நாடாகத்தான் இருந்தது.
கிருஷ்ணர் : வாவ்! தகவல்கள் சேகரிக்கப்பட்டதா…? நீயாகச் சொன்னதா….?
மேகலா : எனக்கு, சுந்தரபாண்டியன் மார்பில் 94 விழுப்புண்கள் இருந்தது என்பது மட்டும் தான் தெரியும் கிருஷ்ணா…. அவருடைய பெயர் மாறவர்மன் என்பது கூட, இன்று தான் Google உபயத்தால் தெரிந்து கொண்டேன்.
கிருஷ்ணர் : சரி, போகட்டும்…. ஒரு நாடு சுயாட்சி பெறுவதற்கு முந்நூறு ஆண்டுகள் காத்திருந்திருக்கிறது. வலிமையுள்ளவனும், புத்திக்கூர்மையும் உடைய ஒருவன் வந்ததனால், பாண்டியர்களுடைய கௌரவம் தலை நிமிர்ந்திருக்கிறது…. சரி…. இது போல, வலிமையான பழைய வரலாறு ஏதாவது சொல் மேகலா….
மேகலா : கிருஷ்ணா! வருஷக்கணக்குல தன் சுயகௌரவத்தை இழந்திருந்த தன் நாட்டை, போராடி மீண்டும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த வலிமையானவர்களைத் தானே நாம பார்த்தோம். அப்படிப்பட்ட அரசர்கள் பல நூற்றாண்டுகளாக வலிமையானவர்களாகவும், பேரரசர்களாகவும், இந்த உலகம் முழுவதும் சிறந்து விளங்கியிருக்கிறார்கள். இது ஒரு matter-ஏ இல்ல கிருஷ்ணா….
கிருஷ்ணர் : இது matter கிடையாதா…. என்ன இப்படி பொசுக்குணு சொல்லிட்ட…. வேற எது matter…?
மேகலா : இரு நாடுகளுக்கிடையில் நடக்க இருந்த போரை நிறுத்திய, பயம் என்பதையே அறியாத ஒரு சாமர்த்தியசாலியை உனக்குத் தெரியுமா கிருஷ்ணா…?
கிருஷ்ணர் : Oh! நீ அவ்வையை சொல்லுகிறாயா…., அவர் strong ஆனவர் தான்…
மேகலா : ச்சும்மா strong இல்ல கிருஷ்ணா. இது மக்கள் மேல கொண்ட அக்கறை கொடுத்த தைரியம் கிருஷ்ணா….
கிருஷ்ணர் : ‘ஆத்திசூடி’ கொடுத்த அவ்வையின் தைரியத்தையும், வலிமையையும் சொல்லு மேகலா….
மேகலா : கிருஷ்ணா! அந்தக் காலங்களில், அரசர்களுக்கு, தமிழ்ப்புலவர்கள் மீதும், தமிழ் மீதும், அளவற்ற பாசமும், மதிப்பும் இருந்திருக்கிறது கிருஷ்ணா…. புலவர்கள், தங்கள் தமிழ்த்திறமையைக் காட்ட மட்டும் அரசர்களைத் தேடிப் போவதில்லை…. அரசர்கள் மீதும், நாட்டு நலன் மீதும் அக்கறை கொண்டு, தங்கள் யோசனையைச் சொல்வதற்குக் கூட செல்வார்கள் என்று, இந்தக் கதையின் மூலம் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது…. ‘தகடூர்’ என்ற இந்த சிற்றரசு எங்கிருக்கிறது…., உனக்குத் தெரியுமா கிருஷ்ணா…?
கிருஷ்ணர் : எனக்குத் தெரிவது இருக்கட்டும். நிறுத்தாமல் நீயே சொல்லு….
மேகலா : இன்றைய ‘தர்மபுரி’ பகுதி தான் அன்றைய ‘தகடூர்’…. இன்றே தர்மபுரி பகுதி, பச்சைப் பசேலென குளுகுளு என்றிருக்கிறது. அப்போ…., அன்றைய காலங்களில், பக்கத்து நாட்டு அரசர்களின் கண்களை உறுத்தும் வளம் கொண்ட நாடாகத்தானே இருந்திருக்கும். அப்படிப்பட்ட அழகான ஒரு மலைத்தேன் நிறைந்திருக்கும் நாட்டிற்கு அரசன் தான் ‘அதியமான்’ என்னும் குறுநில மன்னன்…. தன்னுடைய நாட்டினை வளம் பொருந்திய பகுதியாக்குவதில் மிகுந்த அக்கறை கொண்ட அதியமான், தன் நாட்டு மக்களின் வாழ்விலும் வளம் பெருக நல்லாட்சி புரிந்து வந்தான். அது மட்டுமல்ல கிருஷ்ணா…. இயற்கையாகவே தமிழ் மீதும், தமிழை வளர்க்கும் தமிழ்ப்புலவர்கள் மீதும் மிகுந்த மதிப்பும் பற்றும் கொண்டிருந்தான். அதனால் தான் அவனுடைய அரசவை விருந்தினராக நாள்தோறும் தமிழ்ப்புலவர்கள் வருவதும், அதியமானின் உபசரிப்பில் மகிழ்வதுமாக, தினந்தோறும் அதியமானின் அரசவை கலகலப்பாக இருந்தது. இவ்வளவு ஏன்…. குறிஞ்சி நிலத்தின் அதிபதியான அதியமானுக்கு கிடைத்தற்கரிய மலைதேசத்துப் பொருள் கிடைத்தால், அதை, தமிழ் வளர்க்கும் புலவர்களுக்கே கொடுத்து மகிழ்வான்.
(தொடரும்)
Comments
Post a Comment