’வலிமை’ என்பதா...? ‘Strong personality' என்பதா...? - பகுதி 4

மேகலா : ஒரு முறை, அவ்வையார், அதியமானின் அரசவைக்கு வந்திருந்தார். நம்ம வீட்டுக்கு, டாக்டர் கலாம் வந்தால், நாம எப்படி சந்தோஷப்படுவோமோ, அது மாதிரி, தன் அரசவைக்கு வந்த அவ்வையாரை, அதியமான், கல்வி தேவதை சரஸ்வதியே வந்த மாதிரி, தன் அரசவைக்கு வந்த அவ்வையாரை கொண்டாடினான். தனக்கு அபூர்வமாகக் கிடைத்த, நீண்ட ஆயுளைக் கொடுக்கக் கூடிய நெல்லிக்கனியை, தான் உண்ணாது, அவ்வையாருக்கே கொடுத்து மகிழ்ந்தான். தமிழ்ப் புலமையும், கூர்த்த ஞானமும் கொண்ட அவ்வையோ, மன்னன் மனதில் ஓடும் எண்ணத்தைப் புரிந்து கொண்டு, மன்னனின் சிந்தனைக்குக் காரணம் கேட்டார். வளம் பொருந்திய தகடூர், எப்பவுமே பக்கத்து நாட்டு அரசர்களின் கண்களை உறுத்துவதாகவே இருந்தன. எப்பவும், பகைவர்களால் முற்றுகையிடப்பட்டு, போர்க்களமாகவே இருப்பதால், நாட்டு மக்களின் வளத்தையும், முன்னேற்றத்தையும் கவனிக்க முடியாமல் இருப்பதாக மனம் திறந்து பேசினான். அவ்வையின் மனம் நெகிழ்ந்தது.

அதியமானிடம் விடை பெற்று பக்கத்து நாட்டிற்குச் சென்றார். பக்கத்து நாட்டு மன்னனாகிய தொண்டைமானுக்கு, தமிழ் மூதாட்டியான அவ்வையாரின் வருகை தனக்குக் கிடைத்த மிகப் பெரிய கௌரவமாக நினைத்து, அவ்வையாரை மனம் திறந்து வரவேற்றான். அந்தக் காலத்து மன்னர்கள், போரின் மீதும், அண்டை நாட்டைத் தனதாக்கிக் கொள்ளும் ஆசையிலும் எவ்வளவு விருப்பம் வைத்திருந்தார்களோ, அதையெல்லாம் விட, தமிழ் மீதும், தமிழ்ப் புலவர்கள் மீதும் அவர்கள் கொண்ட பற்று அளவு கடந்தது. தொண்டைமானும் அப்படியே…. அவ்வையாரை மிகுந்த மரியாதையுடனும், பணிவுடனும் நடத்திய தொண்டைமான், தன் நாட்டை அவருக்கு சுற்றிக் காட்ட விரும்பினான். அவ்வையாரும், அவருடைய வரவேற்பில் மனம் மகிழ்ந்து, ஆயுதங்கள் குவிக்கப்பட்டுக் கிடந்த அறையையும் பார்வையிட்டார். தொண்டைமானின் ஆர்வத்தை கூர்மையாகக் கவனித்த அவ்வைப் பிராட்டி, ‘மன்னா! உன் ஆயுதக் கிடங்குகளில், ஆயுதங்கள் கூர்மை தீட்டப்பட்டு, பளபளப்பாகவும் அழகாக அடுக்கியும் வைக்கப்பட்டிருக்கிறது. உன்னுடைய படை வீரர்கள், கள்ளுண்டு, தன் நிலை மறந்து களிப்புடன் வாழுகிறார்கள்….. இப்பொழுதுதான் தகடூருக்குச் சென்று அதியமானைச் சந்தித்து வருகிறேன். அங்குள்ள மக்கள், தினந்தோறும் பகைவர்களைச் சந்தித்து உரமேறி இருக்கிறார்கள். அவர்கள் மார்பினில், யானையின் தந்தங்களால் குத்தப்பட்ட காயங்களின் தழும்பு தெரிகிறது. ஆயுதங்களைக் கையில் பிடித்துப் பிடித்து கைகள் காய்த்துப் போயிருக்கிறது. அவர்கள் ஆயுதங்களோ யுத்தகளத்தில் முனை மழுங்கிப் போய், காயலான் பட்டறையில் சுளுக்கு எடுக்கக் குவிந்து கிடக்கிறது. யுத்த களம் அவர்களுக்கு தினந்தோறும் சந்திக்கும் களமாகிப் போனது. போர் புரிவதே, உடற்பயிற்சியாகிப் போனது’ என்று, அதியமானைத் தாழ்த்திச் சொல்லுவது போல பேசியதைக் கேட்ட தொண்டைமான், ஆழ்ந்து யோசிக்க ஆரம்பித்தான். அவ்வையாரும், மன்னனை கூர்மையாகப் பார்த்துக் கொண்டே, ‘மன்னா! தினந்தோறும் அதியமானின் படை வீரர்கள் பகைவர்களை சந்திப்பதால், பலம் குன்றிப் போகவில்லை. அது போல, ஆயுதத்தை ஏந்தாமல் உடற்பயிற்சி செய்வதால் மட்டுமே உன்னுடைய படை வீரர்கள், வீரத்தில் சிறந்து விடப் போவதில்லை. மன்னா, நாட்டின் மன்னனாகவும், காவலனாகவும், எல்லாவற்றுக்கும் மேலாக இந்த நாட்டு மக்களைப் பேணிக் காக்கும் தந்தையாகவும், கவனிக்க வேண்டிய வேலைகள் நிறையக் கிடக்கின்றன. விளைநிலங்கள், விவசாயிகளின் பராமரிப்புக்காக காத்துக் கிடக்கின்றன. இந்த மண்ணின் வளம் இப்போது ரொம்ப அவசியமானது அல்லவா…. இரு நாட்டு மன்னர்களும், பகையை மறந்து நட்பாக இருப்பது, நாட்டு வளத்திற்கு நல்லதல்லவா….’ என்றவுடன், தொண்டைமான், கண்களில் நீர் மல்க, அவ்வையின் இரு கரங்களையும் பற்றிக் கொண்டு, ‘தாயே, என் அறிவுக் கண்களைத் திறந்து விட்டாய்…. அதியமானுடன் நட்பு கொண்டால், என்னுடைய நாடும் வளம் பொருந்தியதாக இருக்கும் என்பதை நான் ஏன் மறந்தேன். என்னை மன்னித்து விடுங்கள் தாயே… இந்தக் கணத்தில் போர் எண்ணத்தையே கைவிட்டேன்’ – என்றான். அவ்வையும், நிறைந்த மனதுடன் மன்னனை வாழ்த்தி விடை பெற்றார்.

கிருஷ்ணர் : கூர்த்த ஞானத்தின் ‘வலிமை’ இதுதான் மேகலா. ‘கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு’ என்ற வாக்கியத்தையே, அவ்வைப் பிராட்டியின் கூர்த்த ஞானத்தைப் பார்த்தும், அவருடைய இந்த மேன்மையான செயலையும் பார்த்துத்தான் சொன்னார்கள் போலிருக்கிறது….. கல்வியின், புத்திக் கூர்மையின் வலிமையைத் தெரிந்து கொண்டோம். அடுத்து நான் எதிர்பார்க்கும் ஒரு வலிமையைச் சொல்லு மேகலா….

மேகலா : கிருஷ்ணா…. நீ எதிர்பார்த்தது, காந்திஜியின் புன்னகையில் மலர்ந்த அஹிம்சையின் வலிமைதானே கிருஷ்ணா….

கிருஷ்ணர் புத்தியின் வலிமையைச் சொல்லும் போது, அஹிம்சையின் வலிமையைச் சொல்ல வேண்டாமா….

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 5

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1