அழகு - பகுதி 4

மேகலா : ஐயோ…. ஆமாம் கிருஷ்ணா… உனக்கும் பாப்பையா பிடிக்குமா கிருஷ்ணா…. ‘கருப்பு தான் அழகு, காந்தலே ருசி’ – என்ற பழமொழியை நான் சொன்னேன்ல… பாப்பையா ஐயா அவர்களை கருப்புன்னு யாராவது சொல்வாங்களா கிருஷ்ணா… அவரை நெனச்சவுடனே எனக்குத் தமிழும், தமிழின் அழகும், தெளிவும், தங்கு தடையில்லாத தகவல்களும், எல்லாவற்றிற்கும் மேலாக, அவரோட நகைச்சுவை கலந்த பேச்சு, இவைதானே ஞாபகத்துக்கு வரும்…, ரொம்பப் பிடிக்கவும் செய்யும். பட்டிமன்ற நிகழ்ச்சியே, பேச்சாளர்களின் பொடி வச்சுப் பேசுவதையும்…, ஒருவர் பேச்சுக்கு மற்றொருவர் எதிர்வாதம் செய்வதையும் கேட்பதற்குத்தானே கிருஷ்ணா… பேச்சாளர்கள் பொடி வச்சுப் பேசும் போது, அரங்கமே அதிரும் கிருஷ்ணா…. அப்போ யாராவது, அழகுன்னா என்ன என்று கேட்டால்…, எல்லோரும் சொல்லி விடுவார்கள்… ‘வாதமும்’, ‘எதிர்வாதமும்’ காமெடியாகப் பேசப்படுமானால், அதுதான் அழகு’ என்று…

கிருஷ்ணர் : சாதனையாளர்களுக்கு, அழகு என்பது, அவர்கள் திறமை மட்டும் தான் மேகலா…

மேகலா : ஐயோ.., கிருஷ்ணா, இன்னைக்குப் பூரா எனக்குப் பிடிச்ச மாதிரியே பேசுற கிருஷ்ணா… ‘சாதனையாளர்’, ‘திறமை’ என்று சொல்லிட்டயா…. எனக்கு, ஏவுகணைகளின் தந்தை, மேதகு அப்துல் கலாம் அவர்கள் ஞாபகத்திற்கு வருகிறார்…. கிருஷ்ணா, எனக்கு, அவர் கண்களைச் சுருக்கிக் கொண்டு சிரிப்பது பிடிக்கும்; அவர் hair style பிடிக்கும்; மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பொறுமையாகப் பதில் சொல்வது பிடிக்கும்.. உலக அரங்கில், புறநாநூற்றுப் பாடலைத் தமிழில் மேற்கோள் காட்டுவது பிடிக்கும். ‘வலிமை’யின் அர்த்தமாய் அவர் பேசும் பேச்சுக்கள் பிடிக்கும் கிருஷ்ணா… என்னைப் பொறுத்தவரை, ‘அழகு’ என்றால், ‘வலிமை’; ‘வலிமை’ என்றால், ’தைரியம்’; ‘தைரியம்’ என்றால், ‘நேர்மை’ என்றுதான் அர்த்தம்…

கிருஷ்ணர் : So…., நேர்மையே ‘அழகு’; தைரியம் தான் ’அழகு’ என்கிறாய். நேர்மையான திறமை கொடுக்கும் தைரியத்துக்கு முன்பு, தீவிரவாதமே காணாமல் போய் விடுமே….

மேகலா : இந்த தீவிரவாதத்துக்கு எதிராக தேசப்பற்றுள்ள ஒருவன் துணிச்சலுடன் செயல்பட்டால்…. அந்த செயல் எத்தனை அழகுடையதாக இருக்கும்…, இல்லையா கிருஷ்ணா….

கிருஷ்ணர் : உனக்குத் தெரியுமா…, இந்த அழகை வெளிப்படுத்துபவனுக்கு, பயம் என்றால் என்னவென்றே தெரியாதவனாய் இருப்பான். அதற்கான தகவல்களை சேகரித்தவனாய்…, தீவிரவாதக் கூடாரத்துக்குள்ளேயே சென்று, sketch போட்டு கூண்டோடு தூக்குறானே…. அவனை மாதிரி அழகானவன் வேறு யாராவது உண்டா… அப்படிப்பட்ட ஜேம்ஸ் பாண்ட், தன்னுடைய வீரதீரச் செயலால் ஹீரோவான யாரையாவது உனக்குத் தெரியுமா….

மேகலா : தெரியும்….மாவா….. ‘அஜீத் தோவல்’, பாரத தேசத்தின் பாதுகாப்பு ஆலோசகர்…. பாகிஸ்தானின் மக்களோடு மக்களாக பழகி…, அதற்காக தன்னை முஸ்லீமாகக் காட்டிக் கொண்டு, ராணுவ ரகசியங்களை அள்ளிக் கொண்டு வந்தவர். எத்தனையோ தீவிரவாதக் கும்பலை அடியோடு காலி பண்ணியதால் தான், இன்று நம்ம நாட்டின் பாதுகாப்பே அவர் கையில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. எனக்கெல்லாம் அவர் பெயரைக் கேட்டாலே, இன்று என்ன வீரதீரச் செயலைச் செய்தார் என்று கேட்குமளவு ஹீரோ லெவலுக்கு ஒரு சிலிர்ப்பே உண்டாகி விடும். உண்மையைச் சொல்லணும்னா…, திறமையானவர்களுக்கும், இந்த மாதிரி பெரிய பெரிய வேலையைச் செய்பவர்களுக்கும் இயல்பாகவே அவர்கள் முகத்தில் ஓர் அழகு வந்து விடுகிறதுண்ணு நினைக்கிறேன் கிருஷ்ணா…

கிருஷ்ணர் : அது வேற ஒண்ணுமில்ல மேகலா…. அவர்களின் திறமையின் கம்பீரம், முகத்தில் கொடி கட்டிப் பறக்கும்ல…. இதே மாதிரி பார்ப்பதற்கு அழகானவங்க, தர்மத்துக்குப் புறம்பாய் காரியம் செய்யும் போது, அவர்களின் அழகே, கோரமாகத் தெரிவதைப் பார்த்திருக்கிறாயா……

மேகலா : எத்தனை பேரைப் பார்க்கிறோம் கிருஷ்ணா…. நானெல்லாம் சின்ன வயசுலேயே இந்த மாதிரியான நிறையப் பேரைப் பார்த்திருக்கிறேன் கிருஷ்ணா…. நான் school-ல் படிக்கும் போது, 3rd std படிக்கும் வரை எனக்கு சொல்லிக் கொடுத்த டீச்சரெல்லாம், அவர்கள் class-ல் படிப்பதற்காகவே அம்மாமார்கள் தங்கள் பிள்ளைகளை அவங்க class-ல் சேர்க்கணும்னு ஆசைப்படும் அளவுக்கு தாய்மையோடு கல்வி கற்றுக் கொடுப்பார்கள். 1st std teacher, பிள்ளைகளை, ’என்ன கண்ணு…, அழக்கூடாதும்மா…., இப்படி குச்சியைப் பிடிக்கணும்….., சரியா எழுதுனா…, டீச்சர் biscuit கொடுப்பேன்’ – அப்படீன்னு பேசி, கையைப் பிடிச்சி எழுத வச்சி, பிஸ்கட் கொடுத்து, ஒரு அம்மாவா மாறிய ஆசான். 2nd std teacher…., கொஞ்சம் பருமனா இருப்பாங்க…. class ஆரம்பித்தவுடன், பாட்டு சொல்லணும்…, அதைச் சொல்லும் போது…, ‘எங்க, இப்படி கையைத் தூக்கி ஆடுங்க…., நான் செய்யுற மாதிரி’ என்று ஆட்டிக் காட்டி…, பாட்டை மனதில் பதிய வைப்பாங்க…. 3rd std teacher, என்ன செய்வாங்க தெரியுமா….? எனக்கு கணக்கு சரியா வராது… சொல்லிக் கொடுத்த கணக்கை பிள்ளைகளைச் செய்யச் சொல்வார்கள்…, என்னை அவங்க table பக்கம் கூட்டிச் சென்று…, ‘நாம ரெண்டு பேரும் கணக்கு செய்வோம்…, நாம தான் முதலில் செஞ்சு முடிக்கப் போறோம்’ என்று husky-யாகப் பேசும் போதே, எனக்கு புரியாத கணக்கெல்லாம் புரிய ஆரம்பிச்சிரும்…. இப்படி, தாயாக இருந்து பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களிடம் படிச்சிட்டு, 4th std-ல் ஒரு டீச்சரிடம் சேர்ந்தோம்… அந்த டீச்சர், நெசம்மாவே ரொம்ப அழகா இருப்பாங்க. ஒரு முறை class test-ல், சரியா எழுதாத பிள்ளையின் தலையில் slate-ஆல் அடித்து ரத்தம் வந்து விட்டது. அப்போ, கோபத்தில் அவங்க முகம் எப்படி இருந்தது தெரியுமா…? மற்றப் பிள்ளைகள் எல்லாம் பயந்து பம்மிக்கிட்டு இருந்தாங்க… பிரச்னை head-master-ட்ட போச்சி…. teacher suspend பண்ணப்பட்டாங்க….. temporary-யாகத்தான்னாலும், அந்த நிகழ்ச்சி, அவங்க teacher தொழிலையே விடும் அளவுக்குப் போயிருச்சி… அந்த டீச்சருக்கு ரொம்ப கோபம் வரும். சாதாரண கோபம்லாம்…, யாரையும் கோரமாக்காது…. ஆனால், அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, அந்த teacher முகத்தில் ஒரு சோகம்…, ஒரு வெறுமை எப்பவும் குடி கொண்டிருச்சி…. இது ஒரு சம்பவம் தான்…. எத்தனையோ பேர், தான் அழகாய் இருக்கோம் என்ற கர்வத்தோடு இருப்பாங்க தெரியுமா… அந்த கர்வமே, அவங்களை அழகாக சிரிக்கக் கூட விடாது…. யாரைப் பார்த்தாலும், அலட்சியமாய்…, நக்கலாய் தான் சிரிப்பாங்க…. அந்த அலட்சியம் அவங்களை அழகாவா காட்டும் கிருஷ்ணா….? கொடிய மிருகங்கள் கூட, தன் குட்டியை அரவணைக்கும் போது மிக அழகாக இருக்கும். அதே விலங்கு, வேட்டையாடும் போது, கூரிய பற்களும், நகங்களும், உறுமலும், உறுத்தும் பார்வையும்…, யப்பா…., அழகான மான் கூட்டம் சிதறிப் போயிருமே….

கிருஷ்ணர் : சரி…, அழகின் மறுபக்கம் ஆபத்து மட்டுமல்ல… கோரம் கூட, அழகோடேயே ஒட்டியிருக்கிறது…..

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2