அழகு - பகுதி 5

மேகலா : ஆம்மாம் கிருஷ்ணா….! ஆனாலும், சில இடங்களில், சில தருணங்களில் அழகின் ஆக்ரமிப்பு நம்மை, மெய் சிலிர்க்கச் செய்து விடும். இருள் விலகாத வைகறைப் பொழுதில்…., பறவைகளின் ‘கிரீச், கிரீச்’ என்ற சப்தத்தின் பின்னணியில், சூரியன் மெதுவாய், மிக மெதுவாய் தன் கதிர்களால் நம்மை வருடிக் கொடுக்கும் தருணம்…. தோட்டத்தின் இலைகள் நீர் ஊற்றாமலேயே சில்லென்று இதமாய் வீசும் காற்றில் அசைந்து கொடுக்கும்… இந்த காலைப் பொழுதில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் பூக்கும் சின்னப்பூ கூட, தோட்டத்தின் அழகை தூக்கிக் காட்டும். குளிர் காலத்துக்கென்றே ஊர்ந்து வரும் ‘ரயில் பூச்சி’ கூட, வீட்டின் இயக்கத்தை சுறுசுறுப்பாக்கும்…. செடிக்குச் செடி மகரந்தத்தைப் பரப்பும் பட்டாம்பூச்சி என் வீட்டையே வண்ணமயமாக்கும் அழகு…, காலையின் அழகு. தினந்தோறும் வேலையின் பரபரப்பில் கூட என்னை வருட வைக்கும் அழகு….

கிருஷ்ணர் : தினந்தோறும் நடக்கிற காலை நேரத்து நிகழ்ச்சி…. இதை நீ ரசிச்சி சொல்லும் போது, உன் வீடே அழகாய் இருக்கு மேகலா…. இதே போல, வெகு சாதாரணமான நிகழ்வினை அழகாய்ச் சொல்லு மேகலா…, கேட்கிறேன்….

மேகலா : நான் எங்க கிருஷ்ணா…, அழகாய்ச் சொல்லுகிறேன்…. ‘உண்மை’ குடிகொண்டிருப்பதெல்லாம் அழகு என்று சொன்னவனே நீதானே கிருஷ்ணா. உள்ளதை உள்ளபடியே சொல்லும் போது, அது அழகான வார்த்தைகளாய் வெளி வருகிறது…

கிருஷ்ணர் : அப்போ… ஒரு அழகு… அதை வர்ணிக்கும் பொழுது, கூடுதல் அழகாகிறது…, அப்படித்தானே….

மேகலா : அதுவும் ஒரு காரணமே… அழகு…, அழகாய்ப் பார்க்கப்படுவதும் ஒரு காரணம்… இயற்கை சம்பந்தப்பட்ட நிலா, வானம், காற்று, மழை, வயல், வரப்பு, தோட்டம், பசு, கன்று, ஏன்…, கடுமையாய் உழைக்கும் விவசாயி கூட அலங்காரமேயில்லாமல் எத்தனை அழகாய் இருக்கிறது கிருஷ்ணா… அதிலும், மாசி மாதத்து பௌர்ணமி நிலா, பார்ப்பதற்கும் ரசிப்பதற்கும் இந்த ரெண்டு கண்ணு பத்தாது கிருஷ்ணா….

கிருஷ்ணர் : அதென்ன, மாசி மாதத்து பௌர்ணமி மட்டும் அத்தனை special….

மேகலா : கிருஷ்ணா…, மாசி மாதத்தில், பங்குனி, சித்திரை மாதத்தின் வெப்பத்தின் தாக்கம், மாசி மாத பௌர்ணமி அன்று இருக்காது. ஆனால், வெப்பம் இல்லாத வானம் தெளிவாக, தேரோடும் வீதி மாதிரி பரந்து நிற்கும். தை மாதம் குளிர் கலந்த மாதம் என்பதால், மேகங்கள் சூழ்ந்தும், கொஞ்சம் மங்கலாக இருக்கும் என்பதால், பௌர்ணமியன்று, நிலாவும் மேக்கப் இல்லாத நடிகை போலவே மங்கலாகவே தெரியும். ஆனால் மாசி மாதத்தில் வானமும், தேரோடும் வீதி போல பளிச்சென்றிருக்கும். நிலாவும், வீதி உலா வரும் தங்கத் தேர் போல ஜொலிக்கும் கிருஷ்ணா…. பார்க்கக் கண் கோடி வேணும்…. வியர்வை இல்லாத இருளின் சூழலில், அனிச்சையாக அண்ணாந்து பார்க்க நேர்ந்தால்…, கண்கள் இமைக்க மறந்து போய் விடும். அப்படியே pause-லயே நின்று விடும். நிலாவின் ஒளி, வீட்டின் கூரையில் சிதறலாய் ஒளிரும் போது, வீட்டின் அழகே பிரம்மாண்டமாய் தெரியும். தென்னை மரத்தின் ஊடே நிலாவின் ஒளி ஊடுருவி ஒளிரும் போது, தென்னங்கீற்று அசைவது போல, நம்மோட மனசும் அசைந்து அசைந்து நிலவை அனுபவிக்கும் கிருஷ்ணா… எனக்கு மாசி மாத பௌர்ணமி ரொம்ப special கிருஷ்ணா….

கிருஷ்ணர் : எனக்கும் தான்… ஆமாம்…. நிலாப்பாட்டு பாடியதால் தான் உனக்கு பாரதியாரைப் பிடிக்குமோ….?

மேகலா : இது அப்படியில்லை கிருஷ்ணா. இயற்கையை ரசிப்பவர்கள், நீ, நான், பாரதி உட்பட எல்லோருக்கும் நிலா பிடிக்கும். அந்த நிலாவின் அழகை ரசிச்சுப் பாடியதால் தான், மீசைக்கார பாரதியும் அழகாய்த் தெரிகிறாரோ…

கிருஷ்ணர் : Oh! எனக்கு என்ன தோணுதுன்னா, உனக்கு மாதிரியே பாரதிக்கும் பொசுக்கு பொசுக்குன்னு கோபம் வரும்.., இல்லையா…. அதைப் பாட்டிலேயும் காட்டி…, பாட்டு முழுக்க மீசையை முறுக்கிக் காட்டியே உன் மனதிலும் இடம் பிடிச்சிட்டாரோ… ஏன் மேகலா…, கோபப்படுபவர்களை உனக்குப் பிடிக்குமோ….

மேகலா : என்ன கிருஷ்ணா…., இப்படிச் சொல்லிட்ட…. பாரதி, கோபத்தின் அடையாளம் மட்டுமா கிருஷ்ணா…. மென்மையான மனசுக்காரர்; அழகை ஆராதனை செய்பவர்; தேசப்பற்றாளர். காக்கை, குருவியைக் கூட, தன் இனமாகப் பார்க்கத் தெரிந்தவர். ஆங்கிலேயரை வெறுத்தவர். தமிழில் புலமை கொண்டவர். குங்குமப் பொட்டுக்காரர். முறுக்கி விட்ட மீசைக்காரர். தனித்துவமான தலைப்பாகை அணிந்தவர். இதெல்லாம் தான் அவரோட அழகு…, நீ என்னவோ கோபம் மட்டும் தான் பாரதிக்குச் சொந்தம் என்று சொல்லிட்டயே…

கிருஷ்ணர் : உனக்குப் பிடித்த குணமெல்லாம் பாரதியிடமும் இருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக…, தேசபக்திப் பாடல்கள் எழுதுகிறார்…. எனக்கும் அவரை ரொம்பப் பிடிக்கும் மேகலா…. உண்மை, எளிமை, சம நோக்கு…, இதுதான் பாரதி. So, தேசப்பற்று கொண்ட மகாகவி சுப்ரமண்ய பாரதியார் உனக்கு அழகானவராகத் தெரிகிறார்….

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2