அழகு - பகுதி 6

மேகலா : வீர தீரச் செயல்கள் புரிபவர்கள் கூட, நமக்கு ஹீரோ மாதிரியும், உலகத்திற்கே அழகு அவர்களிடமிருந்து தான் supply ஆவது மாதிரியும் தான் தெரியுது கிருஷ்ணா….

கிருஷ்ணர் : எப்படிச் சொல்லுற….

மேகலா : கிருஷ்ணா…. இந்தியாவின் தங்க மகள் என்று மக்களால் பெருமையாகப் பேசப்படும் பி.டி.உஷா…, ground-ல் ஓடி வந்து, வெற்றிக் கோடைத் தாண்டி வந்து, தரையில் அமர்ந்து, ‘புஸ் புஸ்ஸுனு’ மூச்சு வாங்கும் போது…, அவர் முகத்தில் வழியும் வியர்வை கூட, தாமரைப் பூவில் வழியும் தண்ணீரைப் போல அழகாய்த் தெரியும் கிருஷ்ணா.

பொதிகை channel-ல் இந்தியாவின் நதிகளையும், மலைகளையும், அழகான விளைநிலப் பிரதேசங்களையும் வரிசைப்படுத்தி, தேசத்திற்கே பெருமை சேர்த்த பாடகர்கள், விளையாட்டு வீரர்கள் என்று ஒவ்வொருவராக, தேசபக்தி பாடலின் பின்னணியில் ஒரு clipping காண்பிப்பார்கள். அதில் மான் கூட்டம் ஓடி வரும்; அவைகளுக்கு நடுவில் பி.டி.உஷாவும் தன் நீண்ட கால்களைத் தரையில் பதித்து ஓடி வருவார். நீண்ட அவருடைய கால்களில் தெரியும் அழகில், மொத்த இந்தியாவும் தலை நிமிரும் கிருஷ்ணா…..

கிருஷ்ணர் : அடேயப்பா…. எத்தனை பெருமையாய் சொல்லுகிறாய்…. இந்தியாவில், பொதுவாக விளையாட்டு வீரர்கள் மீது பெரிய அபிமானம் வைத்திருக்கிறார்கள். அதிலும், கிரிக்கெட் வீரர்களுக்கு ரசிகர் மன்றமே வைத்திருப்பார்கள் என்றுதான் நினைக்கிறேன்.

மேகலா : கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டுமல்ல கிருஷ்ணா… ‘புல்வாமா attack’ நடந்து முடிந்ததும், அதற்கு பதிலடி கொடுப்பதற்காக இந்திய படைவீரர்கள், பாகிஸ்தான் தீவிரவாதக் கூடாரத்தை அழிக்கும் வேலையில் ஈடுபட்டனர். அப்பொழுது, இந்திய தரப்பு வீரராகிய ‘அபிநந்தன்’ பாகிஸ்தானின் ராணுவ வசம் மாட்டிக் கொள்ள நேர்ந்தது. இந்திய அரசாங்கத்தின் செயல்பாடு காரணமாக, இரண்டே நாளில் பாகிஸ்தான் ராணுவம் பதறிக் கொண்டு, அபிநந்தனை இந்தியாவிற்கு திருப்பி அனுப்பி வைத்தது. அவர் திரும்பி வந்த நாளில், ‘வாகா’ எல்லைப் பகுதியில், மக்கள் எல்லோரும் காத்திருந்து தேசக் கொடியினை அசைத்து (பெண்கள் எல்லோரும் தேசியக் கொடி border போட்ட சேலை அணிந்திருந்தனர்), அபிநந்தனை வரவேற்றனர். பாகிஸ்தான் ராணுவம் சித்ரவதை செய்து அனுப்பிய அபிநந்தனின் முகம் காயங்களுடன் கூடியதாக, வீர முகமாக, தீவிரவாதக் கூடாரத்தை சிதைத்து திரும்பிய இந்தியாவின் திருமுகமாகத் தெரிந்தார் கிருஷ்ணா. இந்திய மக்கள் அனைவரும் அவர் முகத்தில் வீரத்தின் ஜொலிப்பையே பார்த்தனர் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : தன்னுடைய தாய் நாட்டிற்காக போராடும் ஒவ்வொரு ராணுவ வீரனும் போற்றப்படத் தக்கவரே…. அதிலும், அசாதாரணமான வீர தீரச் செயலை, சாகசத்தைச் செய்யும் போது, அந்த வீரன் துர்க்கையின் அம்சமாகவேதான் மாறுகிறான். அப்போ அவன் அழகாகத்தானே தெரிவான்…

மேகலா : நிஜம் தான் கிருஷ்ணா…. உனக்கு ஒரு விஷயம் தெரியுமா கிருஷ்ணா…. ஒரு மனுஷன்…, பெரிய பெரிய வீரர்களை அழகனாக ஏற்றுக் கொள்கிறான். தங்கப் பதக்கம் வெல்லும் விளையாட்டு வீரர்களை, அழகாய் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால், ஒவ்வொரு மனுஷனும், தன் அம்மாவை மட்டும், அழகோ அழகில்லையோ, நெட்டையோ குட்டையோ கவலைப்படுவதில்லை. இன்று ஒரு நாள் உன் அம்மாவை உலக அழகியாக மாற்றித் தரவா என்று கடவுள் கேட்டாலும், வேண்டாம் என்று சொல்லி விடுவான். தன் அம்மாவை, அம்மாவாக மட்டுமே பார்க்க ஆசைப்படுகிறான்….

கிருஷ்ணர் : ‘தாய்மை’ என்பது அத்தனை அழகு மேகலா… நீ முதலில் ஒன்றை நம்ப வேண்டும். அம்மா, வெறும் சோறு ஊட்டுபவள் மட்டுமல்ல…, அவள் தான் உனக்கு முதல் ஆசான். என்ன சொன்ன…. உன்னோட ஒண்ணாங்கிளாஸ் டீச்சர், கையைப் பிடிச்சி எழுத வச்சி, பிஸ்கட் கொடுப்பாங்க; ஒரு அம்மா மாதிரி பிஸ்கட் கொடுத்து பாடம் சொல்லிக் கொடுப்பாங்க என்று சொன்னேல்ல…, ஒரு ஆசிரியர் கூட அம்மா மாதிரி பாடம் சொல்லிக் கொடுக்கும் போது, அந்தக் கல்வியின் அழகே மேன்மையுறுகிறது.

மேகலா : கிருஷ்ணா…. நான் என்னவோ ‘அம்மா’வுக்கு அழகு தேவையில்லை என்றுதான் சொல்ல வந்தேன். நீ தான்…. அம்மாவுக்குள் இருக்கும் கற்றுக் கொடுக்கும் தன்மையையும்…, ஆசிரியருக்குள் இருக்கும் தாய்மையையும் எடுத்துச் சொல்லி, கல்வியையே அழகாக்கி விட்டாய் கிருஷ்ணா…. Great கிருஷ்ணா….

கிருஷ்ணர் : அம்மா என்றாலே அழகுதான் என்று உலகுக்கே தெரியுமே…. அடுத்து நீ ரசிச்ச அழகைச் சொல்லு மேகலா….

மேகலா : கிருஷ்ணா…. நாம ரொம்ப அழகா இருக்கணும்னு தேவையில்லை. அழகான, அதிசயமான செயலைச் செய்யும் போது, உலகமே நம்மைக் கொண்டாடும்… அப்போ, பெருமையால் நம்ம கண் கலங்கி சிரிப்போம்ல…, அந்த சிரிப்புதான் உலகத்திலேயே அழகான சிரிப்பு கிருஷ்ணா….

கிருஷ்ணர் : என்னவோ சொல்ல வர்ற…. என்னண்ணுதான் தெரியல…. என்ன சொல்லப் போற….

மேகலா : கிருஷ்ணா… ஒரு மூணு வருஷத்துக்கு முன்னாடி ஒரு சுதந்திர தினத்தன்று சென்னையில் ஒரு நிகழ்வு நடந்தது; உனக்கு ஞாபகம் இருக்கா….

கிருஷ்ணர் : Oh…. என்ன சொல்லப் போறன்னு புரிஞ்சி போச்சி…. நீயே சொல்லு….

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2