அழகு - பகுதி 11
மேகலா : ஏன் கிருஷ்ணா…. முருகன் அருள் புரிந்ததால் மட்டுமே, ஹரி கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது.
கிருஷ்ணர் : ஆமாம்…, ஆமாம்…., வாஸ்தவம்தான்; மயில் நடந்து வருவதில் கிறங்கிப் போகிறாயே…. அது தோகை விரித்து ஆடுவதைப் பார்த்ததே கிடையாதா….
மேகலா : பார்த்திருக்கிறேன் கிருஷ்ணா….. சிவகாசியில் ANJA College தாண்டி, railway station போகும் வரைக்கும் மயில்களின் நடமாட்டம் நிறையவே இருக்கும். எப்பவாவது மழைக்கு ‘கோப்பு’ இருக்கும் போது, ஒன்றிரண்டு முறை மயில் தோகை விரித்து ஆடுவதைப் பார்த்திருக்கிறேன். மற்றப்படி, zoo-ல தான் சில அபூர்வ பறவைகளைப் பார்த்திருக்கிறேன் கிருஷ்ணா. அதிலும் மணிப்புறா – என்ற பறவை இருக்கும். அதன் குட்டி சிறகு தோகை மாதிரி இருக்கும். அந்த தோகை மாதிரியான சிறகை விரித்து அமர்ந்திருக்கும் அழகு, கொஞ்ச நேரம் அங்கேயே நின்று பார்க்கத் தோன்றும். நீ சொன்ன மாதிரி, பறவைகள் உலகமே அழகான ஆனந்தமான உலகம் தான் கிருஷ்ணா….
கிருஷ்ணர் : ஏன் மேகலா…., ‘அழகு’…, ‘அழகானவர்கள்’ என்று எதை வைத்து நீ தீர்மானிக்கிறாய்?
மேகலா : ‘அழகானவர்கள்’ என்று யாரை நினைக்கிறேனா…., அவர்கள் என் மனசுக்குப் பிடித்திருக்க வேண்டும்…. ‘நல்லவர்கள், ‘வல்லவர்கள்’, ‘திறமைசாலி’, ‘கல்வியறிவு’, ‘தைரியசாலி’, ‘நகைச்சுவையாளர்’ என்று எந்த category-யில் ஒருவரை ரசிக்கிறோமோ…, அவர்கள் முதலில், கடவுள் பக்தி உடையவராக இருக்க வேண்டும்…, நேர்மையானவராக இருக்க வேண்டும்…, சகமனிதரை மதிக்கத் தெரிந்தவராக இருக்க வேண்டும்…., சமூக நலன் மீது அக்கறை கொண்டவராக இருக்க வேண்டும்…, சட்டத்திற்கும், ஒழுக்கத்திற்கும், நம்முடைய கலாச்சாரத்திற்கும் மரியாதை கொடுக்கத் தெரிந்தவராக இருக்க வேண்டும். ‘ஒற்றுமை என்றும் பலமாம்’ என்ற ஔவையின் கூற்றின் உண்மை தெரிந்தவராக இருக்க வேண்டும். இப்படி இருப்பவர்கள் தான் என் மனசுக்கும் பிடித்தமானவர்களாக இருப்பார்கள்…. இவ்வளவு ஏன்…? அவர்கள் தான் அழகானவரும் கூட…. என் மனசுக்குப் பிடித்த ஒருவரை, யார் தவறாகச் சொன்னாலும், அந்தத் தவறான வதந்தியை நம்பவும் மாட்டேன்; சொல்பவரைச் சொல்லவும் விட மாட்டேன்….
கிருஷ்ணர் : ஏ….யப்பா….. இத்தனை அழுத்தமாகச் சொல்லுகிறாய்…. ஏன் அப்படி நினைக்கிறாய்….?
மேகலா : கிருஷ்ணா…. எனக்கு M. G. R – னா ரொம்பப் பிடிக்கும் என்று உனக்குத் தெரியும். அவர் ‘அழகானவர்’ என்பது மட்டும் தான் எனக்குப் பிடிப்பதற்குக் காரணமா…. ‘ஆளுமை’ – அதுதான் முதற்காரணம்; அடுத்து ‘வல்லவர்’…. அதுதான் அவருடைய ஆளுமையின் அடிப்படை காரணம். வல்லவராக இருப்பவர், திரைக்குப் பின்னால், மற்றவருக்குப் பிடிக்காத காரியம் கூட செய்யலாம்…. ஆனால், பல நேரங்களில், அவருடை நோக்கம் சரியாக இருக்கும். அதனால் தான் பலருடைய மனதில் அவரால் குடியிருக்க முடிந்தது. தனிப்பட்ட வாழ்க்கையில் சில தவறுகள் செய்திருக்கலாம். பலருடைய நன்மதிப்பைப் பெற்ற ஒருவரின் சில தவறுகளை பொருட்படுத்தத் தேவையில்லை என்பது என் எண்ணம். அவர் மக்களுக்கு என்ன சொல்ல வருகிறார். அவருடைய திரைப்படத்தின் மூலம், எந்தத் தனி மனிதனையும் பாதிக்கக் கூடிய கருத்துக்களை அவர் சொல்லவே மாட்டார். இவ்வளவு ஏன்…. வசனங்களிலும், பாடல்களிலும் negative ஆன வார்த்தைகளைப் போடவே அனுமதிக்க மாட்டாராம். இன்னும் நிறைய குணம் இருக்கு. சமூக அக்கறை, ‘இல்லை’ என்ற சொல் சொல்லாத தன்மை…., என்று அவரோட அழகுக்கு அழகு கூட்டும் தரமான குணங்கள்…, அவை மட்டுமே அவரோட அழகுக்குக் காரணம் கிருஷ்ணா…. எனக்கு என்ன தோணுதுன்னா… ஒருவரோட செயல்பாடுகள் அவரை மட்டும் வாழ வைப்பது அழகில்லை கிருஷ்ணா… அவருடைய திரைப்படப் பாடல்கள், நம்மை நல்வழிப் படுத்தும்; பெற்ற அம்மாவை மதிக்கச் சொல்லிக் கொடுக்கும்; தேசப் பற்றை வளர்க்கும்; தன்னம்பிக்கை கொடுக்கும்; தைரியத்தைக் கொடுக்கும்…; இன்னொரு M. G. R – ஐ உருவாக்கும். ஒரு ஆசிரியருக்கு அழகு, நிறைய அறிவுள்ளவர்களை உருவாக்குவது; ஒரு M. G. R – க்கு அழகு, இன்னொரு மேகலாவை உருவாக்குவது. So, M. G. R is the most beautiful person in the world.
கிருஷ்ணர் : என்னடா, சில நாட்களாகவே M. G. R பற்றிப் பேசவேயில்லையே என்று யோசித்தேன். இதோ, இன்று M. G. R பிறந்த நாள் அன்று, அவருடைய அழகு எதில் இருக்கிறது என்று சொல்லி விட்டாய். ஒருவர் சொன்னால், கேட்பவர்கள் அதை வேதவாக்காகக் கடைப்பிடிக்கும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்காது. M. G. R -க்கு அது கிடைத்தது; சரியாக அதை பயன்படுத்திக் கொண்டார். அவர் திரையில் தோன்றி, ‘அம்மா’ என்று கையெடுத்துக் கும்பிட்டால், பார்க்கும் ரசிகர்கள், அம்மாவை மதித்து வாழ்வார்கள். ‘மதுவைக் குடிக்காதே’ என்று சொன்னால், ‘சாராயம்’ குடிக்கப் பயப்படுவார்கள். பரவாயில்லை…, நீ சொன்ன மாதிரி, தனக்குக் கிடைத்த வாய்ப்பில், பிறரை வழி நடத்தத் தெரிந்த M. G. R….. உண்மையிலேயே அழகான super hero தான்…..
(தொடரும்)
Comments
Post a Comment