அழகு - பகுதி 14

மேகலா : நீ, பால்காரர் பால் கறப்பதைப் பாத்திருக்கிறாயா கிருஷ்ணா….?

கிருஷ்ணர் : யாரைப் பார்த்து என்ன கேள்வி கேட்டாய்…..?

‘மாடு மேய்க்கும் கண்ணே, நீ

போக வேண்டாம் சொன்னேன்;

காய்ச்சின பாலும் தாரேன்

கற்கண்டு சீனி தாரேன்

கை நிறைய வெண்ணெய் தாரேன்

வெய்யிலிலே போக வேண்டாம்’

‘காய்ச்சின பாலும் வேண்டாம்

கற்கண்டு சீனி வேண்டாம்

உல்லாசமாய் மாடு மேய்த்து

ஒரு நொடியில் திரும்பிடுவேன்’ –

என்ற இந்தப் பாடலைக் கேட்டாயா…., நானும் என் அம்மாவும் பாடுவதாக எழுதிய பாடல்… நாங்கல்லாம் மாடுகளோடேயே இருந்தவங்க. மாடு மேய்ச்சிருக்கேன், மாட்டின் மடியிலிருந்து அப்படியே பாலைக் குடிச்சிருக்கேன்…. எங்கிட்டேவா….?

மேகலா : கிருஷ்ணா…., நான் எப்படி மறந்து போனேன்…. பால் கறப்பதை யோசிச்சிட்டே இருந்தேனா…., அந்தச் செயல் என்னைப் பரபரப்பாக்கிருச்சி கிருஷ்ணா….

கிருஷ்ணர் : அந்த பரபரப்பில், நானே மாட்டுக்காரன் தான் என்பதை மறந்தே போனாயாக்கும்…., சரி, நீ சொல்ல வந்ததைச் சொல்லு…

மேகலா : பால்காரர் பால் கறப்பதுதான் அழகு கிருஷ்ணா…. நாங்க சின்னப்புள்ளையா இருக்கும் போது, எங்க வீட்டுலதான் மாடு கட்டப்பட்டிருக்கும். மாலை நேரத்தில் பால் கறப்பதற்கு, பால்காரரிடம் பாத்திரத்தை நான் தான் எடுத்துக் கொடுப்பேன். அப்போ, பால் கறப்பதை நின்று வேடிக்கை பார்ப்பது அலுக்காத நிகழ்ச்சி கிருஷ்ணா…. சரியாக நான்கு மணிக்கு பால்காரர் வருவார். பெரிய தூக்குச்சட்டியில் தான் பால் கறப்பார். பால் கறப்பதற்கு முன்பாக, கன்றினை அவிழ்த்து, மாட்டின் பக்கம் விடுவார். அப்போ மாடு தாய்மையில் சிலிர்த்து தன் நாவால் கன்றினை நக்கும். அந்த அன்பின் மிகுதியால், அதன் மடியில் பால் சுரந்து நிற்கும். கன்று பால் குடித்த பின், பால்காரர், கன்றை கம்பத்தில் கட்டி விட்டு, தன் முழங்காலுக்கிடையில் பால் பாத்திரத்தை வைத்து, குத்துக் காலிட்டு உட்கார்ந்து, மாட்டைத் தடவிக் கொடுப்பார். மாடு குழைந்து நிற்கும் சமயத்தில், மாட்டின் மடியில் பாலைக் கறக்க ஆரம்பிப்பார். இரண்டு கைகளாலும் ‘சர் சர்’ என்று பால் கறக்கும் போது, பால் பீய்ச்சி பாத்திரத்தில் விழும். ‘சர் சர்’ என்ற சப்தமும், மாட்டின் தாய்மையின் நெகிழ்வும், கன்றின் ‘ம்மே’ என்ற கொஞ்சலும், அந்த மாலை நேரத்தை சுவை மிகுந்த நேரமாக்கி விடும் கிருஷ்ணா. பால்காரர், 10 லிட்டர் பாலும் கறக்கும் வரையிலும், குத்துக் காலிட்டு, இரண்டு கைகளாலும், லாவகமாகப் பாலைக் கறக்கும் திறனில் நான் வியந்து போவேன் கிருஷ்ணா…. நுரை ததும்பி வழியும் பால் பாத்திரத்தை பவ்யமாக வீட்டில் கொண்டு வந்து வைக்கும் போது, தூக்கு நிறைய பாலை ஒரு நாளும் கீழே சிந்தாமல் கறந்தது எப்படி என்று ஆச்சரியப்பட்டுப் போவேன்…

கிருஷ்ணர் : ஒரு செயலை தினந்தோறும் செய்யும் போது, அந்த செயலின் நேர்த்தி, பயிற்சியினால் ஜொலிக்கத்தானே செய்யும்… இருந்தாலும், பாலைக் கறக்கும் அழகே அழகு. சில சமயங்களில், பாலைப் பீய்ச்சும் போது, மாடு அசைந்து கொடுத்து, பால் நம் முகத்தில் தெறிப்பதும் உண்டு மேகலா… பால் வழியும் முகத்தை நீ பார்த்திருக்கிறாயா…? எனக்கெல்லாம் தினமும் முகத்தில் பால் வழியும்…. சரி…, உனக்கு தயிர் கடையத் தெரியுமா….?

மேகலா : என் கிட்ட மாடே கிடையாது. நான் வாங்கும் 1/2 லிட்டர் பாலுக்கு உறை ஊத்தி, தயிராக்கி, அந்தத் தயிரை கடைய முடியுமா கிருஷ்ணா… இப்ப எங்கிட்ட தயிர் கடையும் மத்து கூட கிடையாது. இருக்கும் ஒரு சின்ன மத்தைக் கூட ‘கிருஷ்ண ஜெயந்தி’ அன்று கிருஷ்ணர் முன்னாடி வைத்து சாமி கும்பிடுவதோட சரி….

கிருஷ்ணர் : பின்ன ’மோர்’ வேண்டுமென்றால்…, ‘வெண்ணெய்’ தேவையென்றால் என்ன செய்வாய்…?

மேகலா : மோர் வேணுமின்னா…, ஒரு டம்ளர் தயிரை beater-ல் அடித்து ‘மோர்’ ஆக்குவேன். வெண்ணெய் வேண்டுமானால், Amul butter வாங்கிருவேன். ஆனாலும், பெரிய மத்தினால் தயிர் கடைந்து வெண்ணெய் எடுத்த அனுபவம் உண்டு….

கிருஷ்ணர் : அதைத்தான் நானும் கேட்டேன்…, ‘தயிர் கடையத் தெரியுமா’ என்று. என் அம்மா, பெரிய பானையில் தயிர் கடைவார்கள். எங்கள் வீட்டின் மூலையில் ஒரு கம்பம் இருக்கும். அதன் மேல்பக்கம், கீழ்பக்கம் என்று இரண்டு கயிறுகள் கட்டப்பட்டு, வளையம் மாதிரி லூசாக விட்டிருப்பார்கள். தயிர்ப் பானையில் மத்தை வைத்து அதில் ஒரு கயிறை சுற்றி விட்டு, இந்த மத்தை கயிறு வளையத்திற்குள் விட்டு, மத்தில் சுற்றிய கயிறின் இரு முனைகளையும் பிடித்து, ‘சளக் சளக்’ என்று முன்னேயும் பின்னேயும் இழுக்க வேண்டும். அப்படி என் அம்மா இழுக்கும் போது, அவர்கள் முதுகு அசையும் தோற்றத்தில், நான் ஓடிப் போய் முதுகில் சாய்ந்து கொள்வேன். தயிர், சிலுப்பி சிலுப்பி, என் முகத்தில் வெண்ணெயோடு தெறிக்கும். கொஞ்ச நேரத்தில் தயிர், மோராகி, வெண்ணெய் மிதந்து வரும். எங்க அம்மா தருவதற்குள், நானே கையை விட்டு வெண்ணெயை எடுத்து வாயில் போட்டுக் கொள்வேன்.

மேகலா : கிருஷ்ணா…. யசோதை தயிர் கடையும் அழகை விட, நீ வெண்ணெய் உண்ட கதையும், அதை ரசிச்சி சொல்வதுமே அழகு கிருஷ்ணா…. எங்க அம்மாவும் இப்படித்தான் தயிர் கடைவார்கள். எங்க வீட்டில், தூண் மாதிரியான கம்பம் கிடையாது. அதற்குப் பதில் பெரிய stool ஒன்று உண்டு. தயிர் கடையும் வேகத்திற்கு stool நகராமல் இருக்க, stool-ன் மீது, மாவு திரிக்கும் திருகலை வைத்திருப்போம். இப்போ, stool-ன் ஒரு காலில், கயிறு வளையம் கோர்த்து, மத்தினால் தயிர் கடைவார்கள். நானும் தயிர் கடைந்திருக்கிறேன். எங்க மாம்மை தயிர் கடைந்தால், மத்தினை வெறும் கையாலேயே சிலுப்பி, வெண்ணெய் எடுப்பார்கள். இப்படி கடைவது கூடுதல் நேரமாகும். ஆனாலும் தயிர் கடைவது, வெண்ணெய் எடுப்பது, செம interesting ஆன வேலை கிருஷ்ணா…. தயிர் பானைக்குள் மத்து, பானையின் ஆழத்திற்கும் போகாமல், மிதந்தும் நிற்காமல், ஒரே லயத்தில், இடப்புறம் ஒரு சுற்று, வலப்புறம் ஒரு சுற்று என்று, ‘சளக் சளக்’ என்ற சப்தத்துடன் சிலுப்பும் போது, தயிர் கடைந்து கடைந்து மோராகி வெண்ணெய் திரளும். திரண்ட வெண்ணெயை கையால் அளைந்து, ஒரு பந்தாக உருட்டி, ஒரு கிண்ணத்தில் வைக்கும் போது, அப்படி ஒரு சந்தோஷம் இருக்கும் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : மாடு மேய்க்கிறது…, பால் கறக்கிறது…., தயிர் சிலுப்புற வரைக்கும் எல்லாம் சொல்லிட்ட…. இனி, வண்டி மாடு ஓடுவதைச் சொல்லுவாயோ…..

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2