நான், நானாகத்தான் இருப்பேன் - பகுதி 3
மேகலா : கிருஷ்ணா…. ‘நான், நானாக இருக்க வேண்டும்’ என்றால், என்ன கிருஷ்ணா….?
கிருஷ்ணர் : ’எனக்குப் பிடித்த வேலையைச் செய்து, பிடித்த ஆடையை அணிந்து, பிடித்ததைச் சாப்பிட்டு, சுதந்திரமாக இருப்பேன்….’ என்பது தானே….
மேகலா : இப்படி நெனக்கிறவங்க, ரொம்ப conscious ஆக, யார் சொன்னாலும் கேட்க மாட்டேன்; என் மனசு என்ன சொல்லுதோ, அத மட்டும் தான் கேட்பேன் என்று சொல்றவங்களாத்தானே இருக்காங்க….. அப்போ, ‘அனுசரணை’ என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம்…… பெரியவங்க சொல்றத கேட்கணும் என்பதற்குத்தான் என்ன மரியாதை இருக்கிறது…. ‘நான், நானாக இருப்பேன் என்பவர்கள்…., பிடிவாதம் பிடித்தவங்களாத்தானே இருக்கிறாங்க…. ஏன் கிருஷ்ணா, ஒரு அம்மா, அல்லது அப்பா…. அவங்களுக்கு, அவங்களோட பிள்ளைகளின் கல்வி, ஒழுக்கம், எதிர்காலம் இதிலெல்லாம் அக்கறை இருக்காதா…., அல்லது இருக்கக் கூடாதா….. பிள்ளைகளின் மீதான அக்கறையை, ஏன் ‘தலையீடு’ என்று சொல்லணும்…..
கிருஷ்ணர் : நீ ஏன், பெற்றவர்களின் அக்கறையை மதிப்பதில்லை என்று பார்க்கிறாய்….? தங்கள் தனித்தன்மையை புரிந்து கொள்ள மறுக்கிறார்கள் என்று நினையேன். அப்போ, நானாக வாழணும் என்று சொல்பவர்களின் மனநிலை உனக்குப் புரியும்.
மேகலா : கிருஷ்ணா, தனித்தன்மையைப் பெற்றவர்கள் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள் என்பதெல்லாம் சிறுபிள்ளைத்தனமான காரணம் இல்லையா கிருஷ்ணா…. படிக்கிற காலத்தில், தனக்கு கணக்குப் பாடம் பிடிக்காது; அதனால் மேற்கொண்டு கணக்குப் பாடத்தை பிரதானமாக எடுக்க மாட்டேன் என்று சொல்லும் குழந்தை, வேற subject என்ன படிக்கப் போகிறோம் என்று தெளிவாகத் தெரியாமல் இருந்தால், அப்போ, அப்பா சொல்வதையாவது கேட்கத்தானே செய்யணும்…. படிப்பதிலேயே ஆர்வம் காட்டாமல் இருக்கும் போது, ‘நான் நானாக இருப்பேன்’ என்று சொல்வது எப்படி….. கண்ணெதிரே தன் பிள்ளை, எதிர்காலத்தைப் பற்றி கொஞ்சம் கூட யோசிக்காமல் இருந்தால், ‘நானாக இருப்பேன்’ என்று சொல்பவன், தறி கெட்டுப் போய் விடுவானோ என்று பயப்படாமல் இருப்பார்களா கிருஷ்ணா….
கிருஷ்ணர் : சரி, உன்னை ஒன்று கேட்கிறேன்….. தன் பிள்ளை குப்புற விழும் பருவத்தில், ஒரு அம்மா, பிள்ளையை, தானாக குப்புற விழுவதைக் கண்டு ரசிப்பாளா…., அல்லது ஒவ்வொரு பருவத்திலும் அவளாக குப்புற விழ வைக்கவும், நடக்கவும் வைப்பாளா…..
மேகலா : தானாக குப்புற விழுவதைத்தான் ஊக்குவிப்பாள்….
கிருஷ்ணர் : குழந்தை தானாக குப்புற விழுவதையும், நடக்க வைப்பதையும் ஊக்குவிக்கும் அம்மா, வளரும் காலத்தில், ‘இதைச் செய்யாதே, இதைப் படி, இதைச் சாப்பிடு’ என்று ரொம்ப ஓவராகக் குறுக்கிட மட்டும் செய்யலாமா….. ஒரு தடவை தப்பு நேர்ந்து விட்டால், மறுபடியும் திருத்திக் கொள்ளப் போகிறான்.
மேகலா : கிருஷ்ணா…, ஒழுக்கம், கல்வி, எதிர்காலம் என்பதெல்லாம், குழந்தை குப்புற விழுவதோடு ஒப்பிடலாமா….. அம்மாவின் வளர்ப்பு என்பது என்ன கிருஷ்ணா…. தானாகச் செய்வதைச் செய்ய வைத்து, ஆலோசனை சொல்லும் போது, கண்டிப்பைச் சேர்த்து சொன்னால்தானே வளர்ப்பும் சரியாக இருக்கும். குழந்தை அழுவதைப் பார்த்து, அது பசிக்கு அழுகிறதா, எறும்பு கடித்து அழுகிறதா என்பதைத் தெரிந்து கொள்ளும் அம்மா, அது வளரும் காலத்தில் இப்படி வளர்ந்தால், குழந்தை உலகம் பாராட்ட பேரெடுக்கும் என்றும் யோசிக்கத்தானே செய்வார்கள் கிருஷ்ணா….
கிருஷ்ணர் : எப்படி வளர்ந்தால்….?
மேகலா : ஒழுக்கத்தோடும், பெரியோர்களை மதித்தும், கல்வித் தகுதியோடும் வளரும் பிள்ளைகளைத்தான் சொல்கிறேன்.
கிருஷ்ணர் : சரி, நீ சொல்கிற முறைக்கே வருகிறேன். உலகில், 100க்கு 90 அம்மாமார்கள், அப்பாமார்கள், தன் பிள்ளை, ஒரு பெரிய டாக்டராகவோ அல்லது விமானம் ஓட்டும் விமானியாகவோ, அப்துல் கலாமாகவோ வரணும்னுதான் ஆசைப்படுகிறார்கள்…., ஊக்குவிக்கிறார்கள். அதனால், பிள்ளைகளுக்கு, ’படி, படி’ என்று நெருக்கடியைக் கொடுக்கிறார்கள். ஆனால், எல்லோருக்கும் medical college-லயும், விருப்பப்பட்ட கல்லூரியிலயுமா இடம் கிடைக்கிறது? அல்லது, உலகத்தில் மருத்துவமும், இஞ்சினியரிங்கும் மட்டும்தான் சிறப்பான எதிர்காலத்தைக் கொடுக்கிறதா….? உத்தரவாதமான எதிர்காலத்தை நம்பி, தன் சேமிப்புப் பணம் எல்லாவற்றையும் தரத் தயாராக இருக்கும் பெற்றோர்கள், வேறு துறைகளைப் பற்றியும் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்கலாமில்ல. உதாரணமாக ஒரு பையன், computer-ல் project பண்ணுவதைக் காட்டிலும், அதைக் கழட்டி assemble பண்ணுவதில் அசகாய சூரனாக இருப்பான்.
’பசிக்கு அழுகிறதா….’, ’வலிக்கு அழுகிறதா…’ என்று விவரம் தெரிந்த பெற்றோர்…, கொஞ்சம் கற்றுக் கொள்வதில் எந்தத் துறை என்றாலும், அதில் சிறப்பாக சாதிக்கும் மனோ தைரியத்தையும், உற்சாகத்தையும் பிள்ளைகளுக்கு ஏன் கற்றுத் தருவதில்லை.. ஒன்று தெரிந்து கொள்….. நீ சொல்லும் கதையை ஆர்வமாகக் கேட்கும் பிள்ளைகள், தன் கற்பனா சக்தியுடன் தானே கதை விடும் போது, அதை உன்னிப்பாகக் கவனித்து உற்சாகப் படுத்திப் பார்…. அதன் கண்ணுக்குள் புதியதோர் உலகம் பிறக்கும்…. உனக்கு, நீ சொல்வதைக் கேட்கும் பிள்ளைகள் தேவை என்று எப்படி நினைக்கிறாயோ, அதே மாதிரி குழந்தைக்குக் கூட, அவர்கள் கதை விடுவதைக் கேட்கும் அம்மாவும், அப்பாவும் ரொம்பப் பிடித்துப் போவார்கள்….. அப்போ, பிள்ளைகள் கொஞ்சம் ‘ரூட்’ மாறுகிறார்கள் என்று லேசாகத் தெரியும் போதே, அவர்களுக்குப் பிடிச்ச மாதிரி பேசி…., ஒரு பழமொழி சொல்வார்களே…
‘ஆடுற மாட்ட ஆடிக் கறக்கணும்…
பாடுற மாட்டைப் பாடிக் கறக்கணும்’.
அவங்க மனசுக்குள்ளிருக்கும் positive எண்ணங்களை வெளிக் கொண்டு வரத் தெரியணும்….. ஐந்திலே வளைக்க முடியக் கூடிய சின்னப் பிள்ளைகள் பண்ணும் சேட்டைகளை, over attention மூலம், ஊதிப் பெருசாக்கி, ‘நானே யோசிக்கிறேன்’ என்று ‘பதினைந்திலே’ முறுக்கிக்கிட்டு நிற்கும் போது, ‘எதிர்காலம்’, ‘ஆலோசனை’, ‘தலையீடு’ என்று புலம்பினால், பெற்றோர்களை எரிச்சலாகத்தான் பார்ப்பான். குழந்தைகள் கல்லாய் இருக்கும் போது, நீ சிற்பியாகத்தான் தட்டித் தட்டி செதுக்க வேண்டும். அவர்கள் ஈர மண்ணாய் இருக்கும் போது, அவர்களைக் குழைத்து, பதப்படுத்தி ஒரு பானையாய் வடிவெடுக்க ஒரு குயவனால் தான் முடியும். அதை விட்டுட்டு, மண் மீதேறி, ஜிங்கு, ஜிங்குன்னு மிதித்து ஆர்ப்பாட்டம் பண்ணினால், அது தரிசு நிலமாகப் போகக் கூடிய அபாயம் இருக்கிறது. கவனமாய் இருப்பது, பெற்றோர்கள் கையில் இருக்கிறது.
மேகலா : அப்போ…., பெற்றோர்களுக்கு, பிள்ளைகள் விஷயத்தில் எந்த உரிமையும் இல்லையா கிருஷ்ணா…..?
(தொடரும்)
Comments
Post a Comment