நான், நானாகத்தான் இருப்பேன் - பகுதி 7 (நிறைவுப் பகுதி)

கிருஷ்ணர் : இல்லாமல் இருக்குமா….? பிள்ளைகளுக்கு கதை சொல்லும் போது, தொழில்துறையில் சாதனையாளர்களான அம்பானி, டாடா நிறுவனர், Infosys நாராயணமூர்த்தி போன்ற சாதனையாளர்களின் வளர்ச்சியைப் பற்றி சொல்லிப் பாரு…. அவர்களுடைய இப்போதைய வளர்ச்சியைப் பற்றி நீ சொல்லும் போது, பிள்ளைகளுக்கும், தானும் ஒரு நாள், அவர்கள் போல வர வேண்டும் என்ற கனவு கண்களில் தெரியும்…..

மேகலா : நெசம் தான் கிருஷ்ணா…. ஒவ்வொரு சின்னப் பிள்ளைக்கும், ‘அம்பானி’, ‘டாடா’, ‘Infosys’ போன்ற பிரம்மாண்டத்தின் மீது ஒரு பிரமிப்பு கட்டாயம் வரும் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : ‘Right’…. அந்த மாதிரி சமயங்களில், அம்பானி ஆரம்ப கட்டத்தில் எவ்வளவு சாதாரணமாக இருந்தார்; மும்பை road side கடைகளில், காத்திருந்து ‘புலாவ்’ சாப்பிட்ட சாதாரண ஆள், தன் உழைப்பினால் இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ளார் என்று அழுத்தமாகச் சொல்லிப் பாரு….. அப்போ, அந்தக் குழந்தை நம்பிக்கையோடு கேட்கும்…. ‘நாமும் நன்றாக படித்து வேலை செய்தால், அம்பானி மாதிரி வரலாமா…..’ என்று. அது மட்டுமல்ல, இத்தனை பெரிய சாம்ராஜ்யத்தின் M. D. Infosys நாராயணமூர்த்தி ஒரு சின்ன apartment-ல் குடியிருக்கிறார் என்று சொல்லிப் பார்…. ‘டாடா group’-ன் தேசபக்தியை சொல்லிப் பார்…… தன்னால், பிரம்மாண்டமாகப் பார்க்கப்படுபவர்களின் ஆரம்ப காலக்கட்ட ஏழ்மை, எளிமை, தேசபக்தி, அவர்களுக்குள் அதிசயத்தையும், அதே நேரத்தில், உழைக்க வேண்டும், பெரிய ஆளாக வர வேண்டும் என்ற உத்வேகத்தையும், அதே சமயத்தில் ‘வருவோம்’ என்ற நம்பிக்கையையும் கொடுக்கும் மேகலா….

மேகலா : உண்மைதான் கிருஷ்ணா…

கிருஷ்ணர் : ஒரு வேளை, பிள்ளைகளுக்கு டாக்டராகவோ, பெரிய போலீஸ் ஆபீசராகவோ வர வேண்டும் என்ற கனவு இருக்குமானால், அந்தக் காலங்களில் படிப்பதற்கே வசதி இல்லாத ஏழைக் குடும்பங்களில், கல்வி கற்பதற்காக பிள்ளைகள் பட்ட சிரமங்களையும், படித்து, தான் கொண்ட லட்சியத்தை அடைந்த பிறகு, மருத்துவத்துறையில் அவர்கள் செய்த சாதனைகளையும், போலீஸ் துறையில் அவர்களின் சாகசங்களையும், ஒரு சினிமா மாதிரி சொன்னாயானால், அவர்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக, கஷ்டப்பட்டு படித்து பெரிய ஆளாக வர வேண்டும் என்ற உறுதி ஆரம்பிக்கும்…

மேகலா : கிருஷ்ணா…. அப்போ, M. G. R – ஐப் பற்றிச் சொல்லலாமா….

கிருஷ்ணர் : இப்ப நாம பேசிக் கொண்டிருப்பது, வளரும் பிள்ளைகளின் மனதில் கனவை விதைப்பது பற்றி…. இங்கேயும் கனவுக் கதாநாயகர்களைப் பற்றிப் பேசுவாயா…. உண்மைக் கதாநாயகர்களைப் பற்றி மட்டும் தான் பேச வேண்டும்…. ஒரு போலீஸ் அதிகாரி, குற்றவாளியைக் கண்டுபிடிக்க என்னென்ன சாகசங்களைப் புரிந்தார்…., குற்றம் புரிந்தவருக்கு எந்த மாதிரியான தண்டனை வழங்கப்படும் என்று யோசிக்க வேண்டிய நேரத்தில், M. G. R – ஐப் பற்றி பேசலாமா என்று கேட்கிறாயே…, உன் ’M. G. R. பாசத்திற்கு’ அளவே இல்லையா… சினிமா உலகமே ‘கனவுலகம்’ அல்லவா; அவர்களை விட நிஜ வாழ்வில் சாகசங்கள், சாதனைகள் புரிந்தவர்கள் எத்தனை பேர் நேர்மையாளர்கள், திறமையானவர்களைப் பற்றி எடுத்துச் சொல்லி, நேர்மையானவர்களை உலகம் எவ்வாறு பாராட்டுகிறது என்று சொல்… உன் மனதுக்குப் பிடித்த ‘ஏவுகணைகளின் தந்தை’ டாக்டர் A. P. J. அப்துல் கலாம் ஒருவரைப் பற்றி மட்டும் சொன்னால் போதும். படிப்பு, எளிமை, அறிவு, திறமை, நேர்மை எல்லாவற்றையும், பிள்ளைகள் easy-யாகப் புரிந்து கொள்வார்கள். அவர் மாணவனாக இருந்த போது, சிறு பெட்டிக்கடையில் வேலை பார்த்ததைச் சொன்னால், ‘எந்த வேலையும் இழிவானதல்ல’, எளிமையான குடும்பத்தில் பிறந்து, எளிமையாக வாழ்பவர்கள் கூட, கல்வியாலும், திறமையாலும் பெரிய விஞ்ஞானியாக வர முடியும் என்ற நம்பிக்கையை அவர்களிடம் எடுத்துச் சொல்லு….

மேகலா : பிள்ளைகளை வளர்ப்பது என்பது, கோயில் கட்டுவது மாதிரி; இல்லையா கிருஷ்ணா….

கிருஷ்ணர் : ஆம்மாம்….. ஆகம விதிப்படி கட்ட வேண்டும். முன்னோர்கள் வகுத்த வழிமுறை மாறக் கூடாது. கோயில்களில் சிற்பங்கள் முறைப்படி அமைக்க வேண்டும். இறைவனைப் பிரதிஷ்டை செய்வதற்கு பெரும் முயற்சியும், சிறந்த தவமும், கடுமையான உழைப்பும் தர வேண்டும். இவை எல்லாமே பிள்ளைகளை வளர்ப்பதிலும் காட்ட வேண்டும். பிள்ளைகளை, முன்னோர்கள் வகுத்த சிறந்த தர்மம், ஒழுக்கம் என்பது படிதான் வளர்க்க வேண்டும். கோயில் சிற்பம் அமைப்பது போல, பிள்ளைகளுக்கு முறையான கல்வியைக் கொடுக்க வேண்டும். இறைவனைப் பிரதிஷ்டை செய்வது போல, பிள்ளைகளை வளர்த்து, இந்த உலகத்திற்கு பயனுள்ளவனாகக் கொடுக்க வேண்டும். இந்த உலகத்தில் பிறந்த எத்தனையோ குழந்தைகள், தாய் தந்தையரை இழந்து, தனக்கு வழிகாட்டுவதற்கும், தன்னை அரவணைப்பதற்கும் பெற்றோர்கள் இல்லாமல் ஏங்கிப் போயிருக்கும் நிலையை எண்ணிப் பாரு. அவர்களாக யோசிச்சி, அவர்களாக தீர்மானம் பண்ணி, சுயமாகவே வளர்ந்தவர்கள். வாழ்க்கையில் தடுமாறிப் போனவர்களையும், தடம் மாறிப் போனவர்களையும் பெற்றோர்கள் யோசிச்சிப் பார்க்கணும். வளரும் பிள்ளைகள், பெற்றோர்களின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டிய அவசியம் புரியும்…. நம் பிள்ளைகளை, நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது, அதுவும் சொல்படி கேட்க வைப்பது என்றால், நாம் எத்தனை திறமையான மந்திரவாதியாக இருக்க வேண்டும்… வாழ்க்கை என்பது, ‘ஏதோ பிறந்தோம், வளர்ந்தோம், பிள்ளைகளைப் பெற்றோம், வளர்த்தோம்’ என்பதல்ல. பிள்ளைகள் வளர்ப்பு என்பது ஒரு வேள்வி மாதிரி…. பெற்றோர்கள், தன் மனதை தெளிவாக்கி, நிர்ணயித்த இலக்கில் செல்ல வேண்டும். இது பந்தயக்களமல்ல…, ஓடி ஜெயிப்பதற்கு…. ஆனாலும், பிள்ளைகளை சிறப்பாக உருவாக்கி ஜெயித்துக் காட்ட வேண்டும். ’பிள்ளைகளை வளர்ப்பதே சவாலா’ என்றால்…., அப்படியல்ல…., சவால்களான பிரச்னைகளை முறியடிக்கத் தெரிந்திருக்கணும்…., இது ‘சவால்’ என்றே அறியாமல்…. பிள்ளைகளை வளர்க்கும் போது, வலிகள் ஏற்படுமா….? ஏற்படலாம்….. முள்ளைக் கூட மதிக்காமல் ரோஜாவைப் பறிப்பதில்லையா…. வலிகளை பொருட்டாக நினையாமல், ரோஜாவைப் பறிக்க வேண்டும்…. அதுதான் பிள்ளைகள் மீது நீ கொண்டுள்ள அக்கறை….. மொத்தத்தில் பிள்ளைகளை வளர்ப்பதே, அதுவும் நீ விரும்பும் சாதனையாளர்களாக உருவாக்குவதே, உன் வாழ்க்கையில் உனக்குக் கிடைத்த மிகப் பெரிய project. அதை successful-ஆக செய்து விட்டால்…., நீதான் சிறந்த அம்மா…..

மேகலா : உண்மைதான் கிருஷ்ணா….. பிள்ளைகள் ‘நானாக சிந்திப்பேன்’, ‘நானாக செயல்படுவேன்’ என்று சொல்லட்டும். ஆனால், அப்படி சொல்வது கூட, நாம் கொடுக்கும் தைரியத்தினாலும், அறிவுத் திறனாலும் மட்டுமாகவே இருக்க வேண்டும். நியாயங்களையும், உண்மைகளையும் உள்வாங்கும் சக்தியை நாம் தான் உருவாக்க வேண்டும். ‘அம்மானா சும்மா இல்ல’… அம்மா, அப்பா என்றால்…., ‘கடமை’, ‘பொறுப்பு’, ‘நேர்மை’, ‘தைரியம்’, ‘உண்மை’ என்று பெற்றோர்கள் உணர வேண்டும்…. Super… super கிருஷ்ணா….. நான் எதையோ நினைத்து…., தலைமுறை இடைவெளியினால் ஏற்பட்ட கவலையினாலும்…, உன்னிடம் புலம்ப மட்டுமே இந்த topic-ஐ எடுத்தேன்…. ஆனால், எப்பவுமே குழந்தைகள் வளர்ப்பு என்பது, ஒழுக்கம், கட்டுப்பாடு, நெறிமுறை என்ற இவற்றுக்குள் வருவதுதான். ஆனால், அந்தக் கட்டுப்பாட்டை ஏற்றுக் கொள்ள வைப்பது, பிள்ளைகள் மனம் அறியாமல், சலிக்காமல், நோகாமல் ‘நொங்கு’ எடுக்கக் கற்றுக் கொடுத்துள்ளாய் கிருஷ்ணா…. Hats off Krishna…

கிருஷ்ணர் : அப்ப….. கட்டுரையை முடிச்சிரலாமா….

மேகலா : இதை இன்னும் வளர்க்க முடியுமா கிருஷ்ணா…..

கிருஷ்ணர் : நீ சொன்னயே….. புரியாதவங்களுக்கு இது தொடர்கதை தான் என்று….. நீ புரிஞ்சிக்கிட்ட…. நான்…. escape…..

(முற்றும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 5

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1