கல்யாணங்களும், கலாட்டாக்களும் - பகுதி 3

மேகலா : கிருஷ்ணா...., மாப்பிள்ளை வீட்டார்கள், கல்யாண மண்டபத்திற்கு செல்லும் போது, பலவித சீர்த்தட்டுக்களைக் கொண்டு செல்வார்கள். அதே மாதிரி, பொண்ணு, மாப்பிள்ளை வீட்டுக்கு முதன் முதலாகச் செல்லும் போது சீர்வரிசைகளைக் கொண்டு செல்வாள். இரண்டுக்கும் வேறு வேறு அர்த்தம் இருக்கு கிருஷ்ணா....

கிருஷ்ணர் : Oh! இதுக்கெல்லாம் மாப்பிள்ளை ஊர்வலம் மாதிரி உள்ளர்த்தம் இருக்கிறதா மேகலா....

மேகலா : உள்ளர்த்தம் இருக்கான்னு தெரியல கிருஷ்ணா. ஆனா...., மாப்பிள்ளை வீட்டார் கொண்டு வரும் சீர்த்தட்டுக்களைப் பார்த்து, பொண்ணு வீட்டார் மிரண்டு விடுதல் நடக்கும்.... நம்ம வீடுகளில், உறவுகள் வீட்டுக்குச் செல்லும் போது என்ன செய்வோம்.... அவர்களுக்குப் பிடித்ததை வாங்கிச் செல்வோமில்லையா.... அது மாதிரி, கல்யாணங்களில், ‘உன்னை என் பையனுக்குத்தான் கல்யாணம் பண்ணி வைக்கப் போகிறேன்’ என்று சொல்வதாக, பலகாரத் தட்டுக்களுடன் ஊர்வலம் வருகிறார்கள்.

கிருஷ்ணர் : என்ன.... இந்த பலகாரத்தட்டுக்களை ஊர்வலமாகத்தான் எடுத்து வரணுமா....?

மேகலா : பின்ன.... அப்பத்தானே.... ‘அடேயப்பா, மாப்பிள்ளை வீட்டுக்காரர்களின் சீர்வரிசையைப் பாருங்கப்பா.... என்ன பிரம்மாண்டம்.... அப்போ, இதை விட அதிகமாகத்தான், பொண்ணு வீட்டுக்காரங்க செய்வாங்க.... ஏ, யப்பா! ராசா வீட்டுக் கல்யாணம்’ என்று சொல்வாங்க....

கிருஷ்ணர் : Oh! இது உண்மையிலேயே கலாட்டா தான் மேகலா.... சரி! அந்தப் பலகாரத் தட்டுக்களைப் பற்றிச் சொல்லேன்.....

மேகலா : கிருஷ்ணா...., நிச்சயதார்த்தம் என்றால், பூ, பழம், வெற்றிலை, பேரீச்சம்பழம், தேங்காய், ஆரஞ்சுப்பழம், வாழைப்பழம் இதெல்லாம் பாரம்பரியமான தட்டுக்கள்....

கிருஷ்ணர் : இதில், modern தட்டுக்களும் உண்டா....?

மேகலா : அந்தந்த ஊரில் famous ஆக இருக்கும் பொருட்களை, சீர்த்தட்டில் வைப்பது இன்றைய கலாச்சாரம். அதிலும், பிள்ளை வீட்டாரும், பொண்ணு வீட்டாரும் போட்டி போட்டுக் கொண்டு, பலகாரங்களை வரவழைத்து, கல்யாண மேடையை நிறைத்து விடுவார்கள். இனிப்பில், Cadbury's chocolate-லிருந்து (அதிலும், இது எங்க பாப்பாக்கு ரொம்பப் பிடிக்கும்’ என்ற comment வேற இருக்கும்), ஸ்ரீவி பால்கோவா, திருநெல்வேலி அல்வா, தூத்துக்குடி மக்ரூன், குலோப்ஜாமூன் கூட, cup-ல் வைத்து வைக்கப்பட்டிருக்கும்.... உனக்குத் தெரியுமா... பொண்ணுக்கு make-up பொருட்கள் கூட, powder, scent என்று மாப்பிள்ளை வீட்டார் சீராக கொண்டு வருவது உண்டு. கைச்சுத்து முறுக்கு, முலாம்பழம், cherry, strawberry....., இதில், பலாப்பழம் மட்டும் தான் வைப்பதில்லை. இமயமலையில் விளையும் பழம் கிடைக்குமானால், அதையும் வைத்து விடுவார்கள்.... எத்தனை வகை உண்டோ, அத்தனையையும் இறக்கி...., ‘நாங்க வைத்து விட்டோம், நீங்க ரெடியா’ என்பது போல, ‘வரிசைகள்’ நிமிர்ந்து நிற்கும்....

கிருஷ்ணர் : இவர்கள் பண்ணும் அலப்பறையில், பெண் வீட்டார் மிரண்டு விடுவார்களோ....?

மேகலா : நான் பேசுவது, பணமும், பணமும் சங்கமமாகும் கல்யாணங்களைப் பற்றி மட்டும் தான் கிருஷ்ணா.... மாப்பிள்ளை வீட்டார், local-ல் இருந்து collect பண்ணியிருந்தால், பெண் வீட்டார் international அளவுக்குப் போய் விடுவார்கள் என்றால் பார்த்துக்கோயேன். Dry fruits-லாம், imported சாமான்களை வாங்கி இறைத்து விடுவார்கள். இதிலென்ன கலாட்டா என்றால், ஆசைப்பட்டு, பெருமைக்காக வாங்கிய அத்தனை தின்பண்டங்களும், உறவினர்கள் பகிர்ந்து உண்டார்களா என்பது கேள்விக்குரியதுதான். பல சமயங்களில், இவை கல்யாண மண்டபத்திலேயே இறைக்கப்பட்டு சிதறிப் போவதும் உண்டு....

கிருஷ்ணர் : பெருமைக்காக நடக்கும் கல்யாணங்களில், விரயமாவதற்கென்றே சடங்குகள் நடப்பது மாதிரி இருக்கிறதோ.... சரி..., இதனால் ‘பட்ஜெட்’ கல்யாணம் நடத்துபவர்கள் பாதிப்படைவதுண்டா....?

மேகலா : ஐயோ.... நாமளும் இப்படிக் கல்யாணம் நடத்தணுமே என்று ஏங்குபவர்கள் தான் பதறுவார்கள் கிருஷ்ணா. மற்றப்படி, அவரவர் பட்ஜெட்டுக்குள்தான் கல்யாணம் நடத்த வேண்டும் என்றுதான் பலரும் தயாராவார்கள் கிருஷ்ணா. பட்ஜெட் கல்யாணம் என்றாலும், பொண்ணு வீட்டுக்காரர்கள் வைக்கும் சீர்வரிசைகளில் பாரம்பரியமான சீர்த்தட்டுக்களை வச்சே ஆகணும் கிருஷ்ணா.....

கிருஷ்ணர் : ஹேங்! அதென்ன கட்டாய சீர்வரிசை...

மேகலா : ‘துட்டுப்பானை’ என்று சொல்லப்படும் தாமிரப் பானை..... அது நிறைய அரிசி, அதில் குத்தி வைக்கப்படும் ‘சினுக்கரி’, சாதம் சோமாறும் சட்டுவம் என்னும் கரண்டி, காமாட்சி விளக்கு, மஞ்சள் கிழங்கு, குங்கும டப்பா..... பொண்ணு புகுந்த வீட்டிற்கு, கையில் குத்துவிளக்கோடதான் நுழையணும்..... அதனால், குத்துவிளக்கு, இன்னும் வீட்டுக்குத் தேவையான அண்டா, குண்டா....

கிருஷ்ணர் : ஏன், அவங்க வீட்டுல அண்டா, குண்டாலாம் கிடையாதா..... இது பெரும் கலாட்டாவா இருக்கே..... ஏற்கனவே வீட்டுச் சாமான்கள் இருக்கும் போது, இன்னும் புதுசா அண்டா, குண்டாலாம் எதுக்கு....

மேகலா : அண்டா, குண்டாவாவது பரவாயில்லை...., தனிக் குடித்தனம் போனா, use ஆயிரும். சிலர், சாமானெல்லாம் வேண்டாமே...., அதுக்குப் பதிலா, உங்க பொண்ணுக்கு bank-ல பணமா போட்டிருங்கன்னு சொல்லிருவாங்க....

கிருஷ்ணர் : ஹா!...... எனக்கே தலை சுத்துதே.....

மேகலா : அதனாலத்தான கிருஷ்ணா...., ‘கல்யாணம் பண்ணிப் பாரு...., வீட்டைக் கட்டிப் பாரு’ன்னு பழமொழியச் சொல்லியிருக்காங்க.... இந்தச் சாமான்களோட பலகாரத் தட்டும் அனுப்பியே ஆகணும்.... 7, 9 என்ற odd number ரீதியில பலகாரத்தட்டு வைக்கணும். அதுவும் சிவகாசினா...., வேலாயுத நாடார் பலகாரம் தான் வாங்கி வைக்கணும்....

கிருஷ்ணர் : யப்பா.... இந்த பட்ஜெட் கல்யாணத்தில் fun கலாட்டாவே இருக்காதோ....

மேகலா : என்னதான்..., எண்ணி எண்ணி செலவழிச்சாலும், இந்த பட்ஜெட் கல்யாணங்களில் fun கலாட்டாவுக்கு குறையே இருக்காது கிருஷ்ணா...

கிருஷ்ணர் : அப்பாடி.... பதறிப் பதறிக் கல்யாணம் நடத்தி, கலாட்டாவே இல்லாமல் போய் விடுமோ என்று பயந்தே போனேன்.... ஆமாம், fun கலாட்டாலயும், பாரம்பரியம், modern என்று இருக்கா மேகலா.....

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2