கல்யாணங்களும், கலாட்டாக்களும் - பகுதி 13 (நிறைவுப் பகுதி)
மேகலா : கிருஷ்ணா…., செம மூடுல இருக்க கிருஷ்ணா நீ….
‘லே ஜாயேங்கே, லே ஜாயேங்கே தில்வாலே
துல்ஹனியா லே ஜாயேங்கே’ – என்ற பாட்டுதானே…. கிருஷ்ணா….. எனக்குக் கல்யாணமான வருடம் 1974…. நான் பூனாவில் இருந்த போது, Cycle Society-யில் குடியிருந்தேன். சைக்கிள் கடை வைத்திருக்கும் பஞ்சாப் சிங்குகள் குடியிருந்த காலனி… எனக்குக் கல்யாணமாகி 2 மாதம்தான் ஆகியிருந்தது. எங்கள் வீட்டுக்கு எதிர் வீட்டில் ஒரு பஞ்சாப் சிங் வீட்டில் கல்யாணம். Aunty, uncle, இளம் வயதினர், குழந்தைகள் என மாப்பிள்ளை ஊர்வலத்தோடு, ஊர்வலம் வருகிறார்கள். Band வாசிப்பவர்கள், இந்தப் பாட்டை வாசிக்க ஆரம்பித்ததும், பாட்டி முதல் குழந்தைகள் வரை குதூகலமாய் டான்ஸ் ஆட ஆரம்பித்து விடுகிறார்கள். ஊர்வலம் சற்று நிற்கிறது. எந்த வித பந்தா இல்லாமல், பகட்டுக்காக இல்லாமல், இது சடங்கு என்று இல்லாமல், சந்தோஷமாக ஆடுகிறார்கள். நாங்கள் வாசலில் நின்று வேடிக்கை பார்த்தோம். எனக்குக் கொஞ்சம் ஏக்கமாகவும் இருந்தது, நம்ம கல்யாணத்தில் டான்ஸ் ஆடலியே என்று. அன்று, அந்த வீட்டு வாசலில் வைத்துத்தான் தந்தூரி, ரொட்டி, சிக்கன் மற்றைய உணவுப் பதார்த்தங்கள் தயாரிக்கப்பட்டது. சாப்பிட விரும்புபவர், தங்கள் தட்டை எடுத்துத் தானே பரிமாறி, ப்ஃபே (buffet) மாதிரி, நின்று கொண்டே சாப்பிடுகிறார்கள். யாரும், யாரையும் சாப்பிடச் சொல்லி தாங்கவில்லை. அங்கு வலம் வந்தது, சந்தோஷம் மட்டும் தான் கிருஷ்ணா… பிரம்மாண்டம், அவர்கள் செய்த செலவுகளில் இல்லை; அவர்களுடைய லிப்ஸ்டிக், கண்ணைக் கவரும் லெஹங்கா, சிவப்புக் கலர் டிசைனர் சேலை…. ஆண்கள் அனைவரும் அணிந்திருந்த coat, டர்பன், கை நிறைய கண்ணாடி வளையல், உள்ளங்கை சிவக்க மெஹந்தி, தன்னை மறந்து ஆடும் நடனம், முகம் நிறைய சிரிப்பு, வெண்ணெய் மணம் கமழும் பஞ்சாபி உணவு…, என்ற இந்த சந்தோஷம் தான் பிரம்மாண்டமாக எனக்குத் தெரிந்தது….
கிருஷ்ணர் : இத்தனை நாளா, இந்தக் கதையை எனக்குச் சொல்லவேயில்லையே….
மேகலா : இது மட்டுமில்ல கிருஷ்ணா…. எங்களோட friend ’கதோ’வோட பையன் reception-க்கு நாங்கள் சென்றிருந்தோம்…. Reception என்னவோ ஒரு hotel-லில் தான் நடைபெற்றது. நாங்கள் hotel-லில் room போட்டிருந்தோம். Friends எல்லோரும் இருந்தது, ‘கதோ’வோட அப்பார்ட்மெண்டில்தான் கிருஷ்ணா. அவங்க அப்பார்ட்மெண்டில் காலியாக இருந்த இரண்டு வீட்டை arrange பண்ணியிருந்தார்கள். நாங்கள் சென்ற நேரத்தில் வீட்டுப் பெண்களே, ‘பாவ் பாஜி’ பண்ணினார்கள். பாவ் பாஜிக்கான பன், ஒரு அட்டைப் பெட்டியில் இருந்தது. பெரிய தேக்ஸா நிறைய குழம்பு செய்திருந்தார்கள். ஒவ்வொருவராக வர வர, 2 பன், பாவ் பாஜியென்று வீட்டுப் பெண்களே serve பண்ணுகிறார்கள். கிட்டத்தட்ட 50, 60 பேர் வந்திருப்பார்கள். இன்முகத்துடன், சலிப்பே இல்லாமல் அவர்கள் பரிமாறிய விதம், வற்புறுத்தி நம்மைச் சாப்பிட வைத்த பண்பு; பிரம்மாண்டத்தையே ஒளி மங்கச் செய்யும் பண்பு என்னை பிரமிக்க வைத்தது கிருஷ்ணா….
கிருஷ்ணர் : இங்கே ‘லே ஜாயேங்கே’ பாட்டு பாடலயா மேகலா….
மேகலா : நாங்க நண்பர்கள் தான கிருஷ்ணா…., கொஞ்ச நேரம் தான் அங்க இருந்தோம். அப்போ டான்ஸ் ஆடல. உனக்குத் தெரியுமா…, அந்தக் காலங்களில், கல்யாண வீடுகளில் மைக் செட் போட்டு, record-ல் பாட்டு போடுவார்கள். காற்றில் பாட்டு கலந்து வந்தால், அந்தத் தெருவில் எங்கேயோ கல்யாணம் நடக்கிறது என்று அர்த்தம். Annual exam-க்குப் படித்துக் கொண்டிருக்கும் போது, பக்கத்து வீட்டில் கல்யாணம் நடக்கும்…. படிப்பு மண்டையில் ஏறுதோ என்னவோ…, ‘பாட்டு’ மனப்பாடம் ஆயிரும். அதில் ஒரு பாட்டு ரொம்ப special கிருஷ்ணா.
‘வாராயென் தோழி வாராயோ….., மணப் பந்தல் காண வாராயோ’ – என்ற இந்தப் பாட்டு ஒலிக்குது என்றால், கல்யாணம் நடக்கப் போகுது என்று அர்த்தம்….
‘புருஷன் வீட்டில் வாழப் போகும் பொண்ணே…., தங்கச்சி கண்ணே’ – என்ற இந்தப் பாட்டு கேட்டது என்றால், தாலி கட்டி முடிஞ்சிருச்சி என்று அர்த்தம்….
கிருஷ்ணர் : Oh! இது மைக்செட்காரன் செய்யும் கலாட்டாவா… ஆனா, ரொம்ப interesting-ஆக இருக்கு மேகலா….
மேகலா : இப்போ, கல்யாண வீடுகளில், ‘ஹஹ்ஹா கல்யாணம், ஹஹ்ஹா கல்யாணம்’ – என்ற பாடல் ரொம்ப பிரபல்யமாக இருக்கு கிருஷ்ணா…. சீரியல்களில், கல்யாணம் நடந்தது என்றால், இந்தப் பாட்டைப் போட்டு, dance ஆடுவதாகக் காட்டுகிறார்கள்.
கிருஷ்ணர் : இப்படி, திரைப்படங்கள் கூட, கல்யாணம் என்றால், அதற்காக special-ஆகப் பாட்டுப் பாடி கலகலப்பாக டான்ஸ் ஆடுவது, கொண்டாடுவது என்று காட்டுகிறார்கள். நம்முடைய பாரத தேசத்தின் கலாச்சாரமும் இதைத்தான் நமக்கு எடுத்துச் சொல்லுகிறது. உன்னுடைய அனுபவத்தைச் சொல்லும் போது, கலாட்டாவுக்காகவே கல்யாணத்திற்குச் செல்வார்களோ என்று கூட தோணுது. சடங்குகளும், சம்பிரதாயங்களும், மணமக்களை சிறப்பாக வாழ வைக்கும் என்று மக்கள் நம்புகிறார்கள். கலாட்டாக்கள் அந்தக் கல்யாணத்தை, ‘வெகு சிறப்பாக’, ‘விமரிசையாக’ என்ற பிரம்மாண்ட நிலைக்குக் கொண்டு செல்கிறது….
மேகலா : ரொம்ப சரியாகச் சொன்னாய் கிருஷ்ணா… என்னை மாதிரி retired people-க்கு உறவினர் கல்யாணத்துக்குச் செல்வது, ஒரு outlet – அன்றாடம் விடியும் விடியலிலிருந்து கொஞ்சம் மாறுதலாக, மந்தமான வாழ்க்கைப் போக்கில் கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது; இந்தக் கல்யாணங்களும் அதில் நடைபெறும் கலாட்டாக்களும். நாங்கள் அதில் பங்கு பெறாவிட்டாலும், நம்முடைய வாரிசுகள் கொண்டாடுவதைப் பார்த்து ஒரு பக்குவப்பட்ட மகிழ்ச்சி; பிரம்மாண்டத்தையும், பணம் விரயமாவதைக் கண்டு கொஞ்சம் சங்கடமாக இருந்தாலும், ‘காசு இருக்கிறவன் செலவழிக்கிறான்’…., என்று எங்கள் போக்கில் சும்மா இருந்து விடுவோம். நம் பிள்ளைகள் ஒத்த இளைய தலைமுறையினர்…., கல்யாணங்களுக்குச் செல்வதற்கு நிறைய காரணம் இருக்கிறது… உறவுகளில் நடக்கும் கல்யாணத்திற்குச் செல்வது தவிர்க்க முடியாது…. நாளை, நம் வீட்டில் கல்யாணம் நடந்தால், எல்லா உறவுகளும் வர வேண்டும் என்ற எண்ணமும் ஒரு காரணம். அவர்களுக்குள் ஓர் உணர்வு ஓடும்…. நாளை, நம் பிள்ளைகளுக்கும் இது மாதிரி கல்யாணம் நடந்தாலும், இதை விட ‘சிறப்பாக’ கலாட்டாக்களால், கலகலப்பாக கல்யாணம் நடத்த வேண்டும் என்ற ஆதங்கம் ஒரு காரணம்…. அன்றாட பரபரப்புகளிலிருந்து, கொஞ்சம் relaxed-ஆக, கல்யாண கலாட்டாக்களை அனுபவிக்கலாம் என்ற ஒரு காரணமும் உண்டு… குழந்தைகளுக்கு, நல்லா dress பண்ணலாம்…., school-க்குப் போகாமல் இரண்டு நாள் jolly-யாக விளையாடலாம் என்ற காரணம் மட்டும் தான், குழந்தைகளின் சந்தோஷத்திற்குக் காரணமாக இருக்க முடியும்…. இந்த group எதிலும் சேராத ஒரு பட்டாம்பூச்சிப் பருவம் ஒன்று இருக்கிறது. அவர்கள் ஏன் கல்யாணத்திற்கு வருகிறார்கள் என்று அவர்களுக்கெ தேரியாது. அழகுக்கே அலங்காரம் செய்து, தேவதை மாதிரி வருவார்கள். காரணமே இல்லாமல் உதட்டினில் ஒரு சிரிப்பு ஒட்டியிருக்கும். நடந்து வர மாட்டார்கள்; மிதந்து வருவர்கள். கல்யாணத்திற்கு வந்திருந்தவர்கள், கல்யாணத்தையும், கலாட்டாவையும் ரசிப்பது போல, அவர்களையும் ரசிக்க ஆரம்பிப்பார்கள். இப்படி ஒவ்வொருவரும் கல்யாணத்துக்கு செல்வதற்கும் ஒரு காரணம் இருக்கிறது.
கிருஷ்ணர் : ஒவ்வொருவரும் கல்யாணத்திற்குச் செல்வதை விரும்புகிறார்கள் என்று நம்முடைய அரட்டையில் தெரிந்து கொண்டோம். எளிமையான கல்யாணமோ, பட்ஜெட் கல்யாணமோ, பிரம்மாண்டமான கல்யாணமோ இல்லை, ‘கல்யாணங்களும், கலாட்டாக்களும்’ என்ற தலைப்பிலோ…, நமக்குக் கிடைப்பது, சந்தோஷம் தான். இந்த பத்து நாட்களில், முந்நூறு கல்யாணத்திற்கு சென்று வந்த மகிழ்ச்சி உன் முகத்தில் தெரிகிறது மேகலா…. அடுத்து என்ன தலைப்பில் பேசலாம் என்று யோசி மேகலா…. நான் அடுத்த flight-ஐப் பிடிக்கப் போகணும்…
மேகலா : கிருஷ்ணா…, நான் இன்னொரு கல்யாணத்துகுச் சென்றேனில்லையா….
கிருஷ்ணர் : ஐயோ…. அம்மா…. கருடா…. உடனே இங்கு வா…. நான் துவாரகை செல்லணும்… escape…..
(நிறைவு பெறுகிறது)
Comments
Post a Comment