வழிப்போக்கர்கள் - பகுதி 3
கிருஷ்ணர் : வழிப்போக்கர்களின் தகவல் பரிமாற்றம், மக்களுக்கு உபயோகமாக இருந்திருக்கிறது என்பது வரலாற்று உண்மை.
மேகலா : கிருஷ்ணா…, உனக்கு ஒன்று தெரியுமா…? நம்முடைய ராமேஸ்வரம் பகுதி, வெப்பமான பகுதிதானே… அந்தக் காலங்களில், இங்கு விவசாயம் என்று சிலாகித்துச் சொல்லும்படி பெருசா எதுவும் கிடையாது அல்லவா…. அந்த சமயங்களில், வடமாநிலத்தைச் சேர்ந்த ஒரு விவசாயக் குடும்பத்தினர், ராமேஸ்வரம் வந்திருக்கின்றனர். இந்தப் புண்ணிய ஸ்தலங்களைச் சுற்றி விவசாயம் பெருசாக இல்லாததைப் பார்த்த ஒரு விவசாயி இங்கேயே தங்கி விட்டார். ராமேஸ்வரத்தைச் சுற்றி இருக்கும் நிலப் பகுதிகளில் சல்லிசாகக் கிடைத்த ஒரு தரிசு நிலத்தை விலைக்கு வாங்கி, அங்கேயே தங்குவதற்கும் குடிசை அமைத்துக் கொண்டு, நிலத்தைப் பதப்படுத்தி, பண்படுத்தி, சொட்டு நீர் பாசனம் மூலம், அதை விளைநிலமாக்கி, இயற்கை உரங்களாலேயே, காய்கறி விளைய வைத்து, அந்த நிலத்தை சோலைவனமாக்கி, இன்று அந்த நிலத்தை பெரிய அளவில் விவசாய நிலமாக்கி விட்டார் கிருஷ்ணா…. ஒரு சாதாரண வழிப்போக்கன், தரிசு நிலத்தை, விளைநிலமாக்கி, இந்த புண்ணிய பூமியை சொர்க்க பூமியாக்கிய கதை, இன்று ‘வைரலாகி’, இந்தியா முழுக்க பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது கிருஷ்ணா….
கிருஷ்ணர் : வாவ்…., அற்புதம்…. ‘விவசாய வழிப்போக்கன்’…. ஏற்கனவே ராமர் பாதம் பட்ட இடம். இன்று இந்த வழிப்போக்கனின் பாதம் பட்டதால், மண்ணே சிலிர்த்துப் போய், விளை மண்ணாகி விட்டது…. போகும் பாதையில் சாமியைக் கண்ட மனுஷன், போகும் வழியில் இதைப் போல புதையலைக் கண்டெடுத்ததும் சுவாரஸ்யம் தானே….
மேகலா : புதையல் மட்டுமா கிருஷ்ணா…. பிரச்னையைக் கூட விலைக்கு வாங்கிய வழிப்போக்கனை உனக்குத் தெரியுமா கிருஷ்ணா…..
கிருஷ்ணர் : நீ யாரைச் சொல்லுகிறாய்….? கதை புதுசா இருக்கே….
மேகலா : புதுக் கதை எல்லாம் கிடையாது கிருஷ்ணா… நமக்கெல்லாம் தெரிந்த கதை தான். பாண்டிய மன்னன் குதிரை வாங்கி வரச் சொல்லி, பணம் கொடுத்து அனுப்பினால், ‘பணத்தை வாங்கினோமா…, கிளம்பிச் சென்றோமா…., குதிரையை வாங்கினோமா….’ என்றுதானே இருக்கணும்….
கிருஷ்ணர் : ஓ! திருவாதவூரார் என்னும் மணிவாசகரைச் சொல்லுகிறாயா…. குதிரையை வாங்கினாரா, இல்லையா….?
மேகலா : குதிரையை வாங்கினால் தான் பிரச்னையே இல்லையே…. மணிவாசகர் ஒரு சிவபக்தர்… வெளிநாட்டுக் குதிரைகளை வாங்குவதற்கு, கடல் வாணிகம் செய்வதற்கு திருப்பெருந்துறையைத் தாண்டித்தான் செல்ல வேண்டும். போகும் வழிதோறும், கோயில்களைக் கண்டால் போதும், உள்ளே சென்று சாமியைக் கும்பிட்டுத் தான், மேலே பயணத்தைத் தொடருவார். அப்படிப் போகும் போது, திருப்பெருந்துறை கோயிலுக்குள் நுழைந்ததும், அந்த வேதநாயகனையே கண்டது மாதிரி ஒரு ஞானாசிரியரைப் பார்த்து விட்டார். அது மட்டுமல்ல, அவருடைய வேத மொழிகளைக் கேட்டதும், அங்கேயே தங்கி விட்டார். வந்தது வினை… குதிரையைத் தானே வாங்க வந்திருக்கிறார்; வந்த வேலையை விட்டு விட்டு, கோயிலே கதி என்று கிடந்தால், அரசனாகிய அரிமர்த்த பாண்டியன் சும்மா விடுவானா கிருஷ்ணா….
கிருஷ்ணர் : எல்லாம் அந்த வேத நாயகனின் திருவிளையாடல். அப்புறம் என்னாச்சி…. பிரச்னை எப்படித் தீர்ந்தது….
மேகலா : குதிரை வாங்க வைத்திருந்த பணம் அனைத்தையும் திருப்பெருந்துறை கோயிலுக்கே செலவழித்து, அங்கேயே தங்கி விட்ட மணிவாசகரை, அரசன் மதுரைக்கு வரவழைத்து, குதிரைகள் எங்கே என்று கேட்க, பிரச்னை உருவாகக் காரணமான அந்த இறையனாரே, பிரச்னையைக் தீர்த்து வைக்கவும் தீர்மானம் செய்தார். வழிப்போக்கனாகிய மாணிக்கவாசகருக்காக, காட்டிலுள்ள நரியையெல்லாம் குதிரைகளாக்கி, தானும் குதிரை வீரனாக மாறி, சிவகணங்களையும் குதிரை வீரர்களாக்கி, பாண்டிய மன்னனிடம், ‘இதுதான் மாணிக்கவாசகர் வாங்கிய நல்ல ஜாதிக் குதிரைகள்’ என்று கொடுத்து, ஒரு நாடகத்தையே நடத்தி விட்டார்…..
கிருஷ்ணர் : ஐயய்யோ…. பிரச்னை பெருசால மாறிப் போச்சு… நரியெல்லாம், குதிரையாக நின்றதா….
மேகலா : எங்க கிருஷ்ணா…. குதிரைகளை லாயத்தில் கட்டியதும்…., அது ஊளையிட்டுக் கொண்டே தெறிச்சு ஓடிருச்சில…..
கிருஷ்ணர் : அப்புறம்….
மேகலா : சும்மா விடுவானா….., பாண்டிய மன்னன்….. மாணிக்கவாசகரை சிறையிலடைத்தான். இறையனார், மன்னனின் கவனத்தை திசை திருப்ப, வைகையை பெருக்கெடுத்து ஓடச் செய்து, கூலியாளாக வந்து, உடைப்பை சரி செய்கிறேன் என்று போக்குக் காட்டி, மன்னனிடம் மொத்துப்பட்டு…, இதற்கிடையில் வந்தியிடம் புட்டு வாங்கித் தின்று, மண் சுமந்து, வைகை நீர் அணை உடைப்பை சரி செய்து, மாணிக்கவாசகரை ஆட்கொண்ட கதை…. எத்தனை முறை படித்தாலும், சொன்னாலும், எழுதினாலும், அலுக்கவே அலுக்காத சுவாரஸ்யமான கதை…
கிருஷ்ணர் : அப்ப…., நீ என்ன சொல்ல வர்ற…. வழிப்போக்கர்கள் பிரச்னையைக் கொண்டு வருவார்கள் என்கிறாயா….
மேகலா : ஐயோ…, அப்பா…., சாமி…., நான் அப்படிச் சொல்லல…. வழியில் வந்த ஒரு பிரச்னையால், மாணிக்கவாசகர் சந்தித்தது தண்டனையோடு, இறையருளையும் என்கிறேன்.
கிருஷ்ணர் : அப்ப…. இறையருளே இல்லாமல், பிரச்னையைச் சந்தித்த வழிப்போக்கர்களும் இருக்கிறார்களா மேகலா….
மேகலா : போச்சுடா…. இறையருளே இல்லாமல் பிரச்னையா…. கிருஷ்ணா…., நீ இப்படிக் கேட்கலாமா…. சோதனையையும் தந்து, அதிலிருந்து விடுவிக்கும் மாயக்காரன் நீ. இப்படிக் கேட்……, கொஞ்சம் இரு…. நீ என்ன கேட்டாய்….. வழிப்போக்கன் சந்தித்த பிரச்னை…. ஹாங்…, எனக்கு ஞாபகம் வந்து விட்டது கிருஷ்ணா……
(தொடரும்)
Comments
Post a Comment