வழிப்போக்கர்கள் - பகுதி 4

மேகலா : ஒரு சமயம், பக்கத்து ஊரிலிருந்து, மதுரைக்கு ஒரு வழிப்போக்கன், மனைவி குழந்தையோடு வந்து கொண்டிருந்தான். கால்நடையாகவே வந்ததால், களைப்பும் அலுப்பும் ஒரு சேர, தன் மனைவியிடம், வழியில் செழித்து வளர்ந்திருந்த ஒரு ஆலமரத்தைக் காட்டி, இங்கு தங்கி இளைப்பாறி விட்டுச் செல்லலாம் என்றான். அவன் மனைவிக்கு களைப்பினில் தாகம் எடுத்தது. வழிப்போக்கனும், அங்கிருந்த குளத்திற்குச் சென்று தண்ணீர் எடுத்து வருகிறேன் என்றான். அவன் மனைவியும், தன் குழந்தையை, அருகில் இறக்கி வைத்து விட்டு, ஆலமரத்தடியில் அமர்ந்து இளைப்பாறினாள். அப்போது, காற்று அடித்தது. ஆலமரத்து இலைகள் அசைந்தன. அப்போது அதில் சிக்கியிருந்த அம்பு ஒன்று, வழிப்போக்கன் மனைவி மேல் குத்தி, அவள் அங்கேயே இறந்து போனாள். தண்ணீர் கொண்டு வரச் சென்ற வழிப்போக்கன் சப்தம் கேட்டு, திரும்பி வந்து பார்த்தான். அவன் மனைவி, இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தாள். திகைத்துப் போன வழிப்போக்கன், அவள் மார்பில் குத்திய அம்பினை எடுத்து, ‘இந்த அநியாயத்தைச் செய்தது யார்?’ என்று கதறினான். அப்போது, ஆலமரத்தின் மறுபக்கத்தில் இருந்த வேடனைப் பார்த்ததும், ‘இப்படி அநியாயமாய் என் மனைவியைக் கொன்று விட்டாயே. நாங்கள் உனக்கு என்ன கேடு செய்தோம்…, ஏன் இப்படிச் செய்தாய்?’ என்று கேட்டு, ஆவேசத்துடன் அவனை இழுத்துக் கொண்டு, எனக்கு நீதி வேண்டும். அரசனிடம் உன்னை இழுத்துச் செல்கிறேன். அவன் உனக்கு தண்டனை தரட்டும் என்று கதறி, இறந்து போன தன் மனைவியையும் சுமந்து கொண்டு, குழந்தையையும் தூக்கிக் கொண்டு, அரண்மனைக்குச் செல்ல முயன்றான். வேடனுக்கு ஒன்றுமே விளங்கவில்லை. தான் இந்த பாதகத்தைச் செய்யவில்லை என்று மன்றாடிப் பார்த்தான். ஆனால், வழிப்போக்கன் கேட்கவில்லை. வேடனை அரண்மனைக்கே இழுத்துச் சென்றான். மன்னனிடம், ‘வழக்கு’ எடுத்துச் செல்லப்பட்டது. வேடனோ, தான் இந்த கொலையைச் செய்யவே இல்லை என்று திரும்பத் திரும்ப மன்றாடினான். மன்னன் பெரிதும் குழப்பமடைந்தான். ஒரு ‘நியாயம்’ கூட தன்னால் தண்டிக்கப்பட்டு விடக் கூடாது என்று யோசித்த மன்னன், இறையனாரிடம் வேண்டிக் கொண்டான். அப்பொழுது ஒரு அசரீரிக் குரல் கேட்டது – ‘இன்று இரவு செட்டியத் தெருவில் நடக்க இருக்கும் கல்யாணத்திற்குச் சென்றால், உன் வழக்கிற்கான விடை கிடைக்கும்’ என்று கேட்டவுடன், மன்னன் குழப்பம் நீங்கியவனாக, வழிப்போக்கனையும் அழைத்துக் கொண்டு திருமணத்திற்குச் சென்றான். அங்கு, மன்னனுக்கருகில் அமர்ந்திருந்த இருவர் பேசிக் கொண்டனர்…. ‘சித்ரகுப்தா, இன்று இந்த மணமகனின் உயிரை எடுக்க வேண்டும். மணமகனோ நல்ல ஆரோக்யமாக இருக்கிறான். அவன் உயிரை எப்படி எடுப்பது’ – என்று கேட்க, அதற்கு மற்றொருவன், ‘இதென்ன பிரமாதம்…, இன்று காலையில் வழிப்போக்கனின் மனைவியை, ஆலமரத்து இலைகளுக்கிடையில் சிக்கியிருந்த அம்பினை, கீழே விழச் செய்து, அது அந்தப் பெண்ணின் மீது விழச் செய்து அவள் உயிரை எடுக்கச் செய்தோமே…, அப்படித்தான் மணமகனின் உயிரையும் எடுக்க வேண்டும். தொழுவத்தில் கட்டப்பட்டிருக்கும் மாடு மிரண்டு ஓடி வந்து, மணமகனைக் கொம்பினால் குத்தி விடச் செய்து விடலாம்’…. என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே… சத்திரத்தில் கலகலப்பான சப்தத்தைக் கேட்ட மாடு, மிரண்டு போய், கட்டிலிருந்து கயிற்றை அவிழ்த்து ஓடி வந்தது. கொம்பினால் மணமகனைக் குத்தியது. மணமகனும் இறந்து வீழ்ந்தான். இந்தக் காட்சியைக் கண்ட மன்னனுக்கும், வழிப்போக்கனுக்கும் குழப்பம் நீங்கியது. வழிப்போக்கனின் மனைவி இறந்தது, விதியின் பயனே என்ற உண்மையைத் தெரிந்து கொண்ட மன்னன், வழிப்போக்கனுக்கு ஆறுதல் சொல்லி, பெரும் செல்வத்தைக் கொடுத்து அனுப்பி வைத்தான். வேடனையும் விடுவித்தான். வழிப்போக்கன் எதிர்பாராமல் சந்தித்த இந்தப் பிரச்னைக்கு, இறையருள் direct ஆகக் கிடைக்கவில்லை. சும்மா போனவனுக்கு, சோதனையாகப் பிரச்னை வந்தது….

கிருஷ்ணர் : போகும் வழியில், பிரச்னை என்பதற்காக எங்குமே போகாமலேயே இருந்து விடலாமா…?

மேகலா : அதெப்படி கிருஷ்ணா…. போகும் வழியில் tyre பங்ச்சர் ஆயிரும் என்று பயந்து பயணத்தை நிறுத்துவது முட்டாள்தனம் இல்லையா…

கிருஷ்ணர் : வழிப் பயணத்தில், பல ஊர்களைக் கடந்து செல்லும் போது, வழியில் நடக்கும் நிகழ்வுகளை அறிந்து கொண்டே செல்கிறோம்…. இதைக் கேட்கும் இன்னொருவருக்கு அது தகவல்களாகவும் ஆகிறது. அப்படிப்பட்ட தகவல்களை நீ அறிவாயா மேகலா…?

மேகலா : இப்படிச் செல்பவர்கள் கொடுக்கும் தகவல்கள் பல, சுவாரஸ்யமாகவும், வேற ஊர்களைப் பற்றி நாம் அறிவதாகவும் கூட இருக்கும் கிருஷ்ணா…. வார இதழ்களில் ஒரு காலத்தில் வெற்றி நடை போட்டு வந்த விகடன், குமுதம் போன்ற பத்திரிகைகள்…, யாரையாவது வெளிநாட்டுக்கு அனுப்பி, அவர்களுடைய அனுபவங்கள், சுவாரஸ்யமான தகவல்களைப் பத்திரிகைகளில் எழுதச் செய்வார்கள். அவர்களில், ‘விகடன்’ பத்திரிகையில், ‘இதயம் பேசுகிறது’ – என்ற தலைப்பில், திரு. மணியன் எழுதிய பயணக் கட்டுரைகள், பல நாடுகளைப் பற்றி நாம் அறியும்படிக்கு சுவாரஸ்யமாக எழுதியிருப்பார். அதே போல, குமுதத்தில் பரணீதரன் எழுதிய ‘புனித யாத்திரை’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை படித்துத்தான் எனக்கு கேதாரிநாத், பத்ரிநாத், கைலாயம் என்ற இடங்களைப் பற்றியே தெரியும். இப்போ, travels மூலமாகவோ, நண்பர்கள், உறவினர்கள் குழுவாகவோ செல்பவர்கள், தங்கள் பயணத்தில், வழியில் சந்திக்கும் ஸ்தலங்கள், இயற்கை காட்சிகள், நடந்து சென்ற அனுபவங்களை அழகாகக் camera-வில் பதிவு பண்ணி, YouTube-ல் video-வாக upload பண்ணி, நம்மை பிரமிப்பில் ஆழ்த்தி விடுகிறார்கள். நம்முடைய பாரதத்தில் இத்தனை அழகான மலைகளும், வனங்களும், கோயில்களும் இருக்கிறதா என்று நினைக்கத் தோணுது…. கடவுள் இங்குதான் வசிக்கிறாரோ என்று நினைக்குமளவுக்கு அழகின் ஆக்ரமிப்பு நம்மை மெய்மறக்கச் செய்கிறது கிருஷ்ணா….

கிருஷ்ணர் : ஆக, வழிப்போக்கர்கள், தாங்கள் அனுபவப்பட்டதை பிறரோடு பகிர்ந்து எல்லோருக்கும் சொல்ல, நாமும் இந்த இடத்திற்குச் செல்ல மாட்டோமா என்ற ஏக்கத்தையும் கிளப்பி விட்டு விடுவார்கள் போலயே….

மேகலா : ஆமாம் கிருஷ்ணா…. ‘யாத்ரா’ என்ற channel-லில் ‘பஞ்ச கேதார்நாத்’ சென்று வந்த கோவை சரளாவும், லலிதகுமாரியும், அவர்கள் தங்கள் அனுபவத்தையும், கோயிலின் ஸ்தல வரலாறையும் கூறுவதைக் கேட்டு, எனக்கும் அங்கெல்லாம் போகணும் என்ற ஏக்கம் என்னைப் பாடாப் படுத்திருச்சி கிருஷ்ணா…. ஆனால், அங்கெல்லாம் செல்வதற்கு, அதிலும் குறிப்பா, ‘மத்மகேஸ்வர் ஆலயம்’ செல்வதற்கு, நடந்துதான் செல்ல வேண்டும், ரொம்ப சிரமமாக இருந்தது…, அதையும் மீறி நாங்க சென்றது இறைவனுடைய கருணைதான் என்று அவர்கள் சொல்லும் போது நமக்குக் கடவுளுடைய அருள் இல்லையோ என்று ஏக்கமாக இருந்தது கிருஷ்ணா…

கிருஷ்ணர் : ஏன் அப்படிச் சொல்லுற…. ‘மத்மகேஸ்வர்’ கோயிலுக்குச் சென்றால் தான் பரம்பொருள் தரிசனமா…. மடவார்வளாகம் கோயிலுக்குச் சென்று வா மேகலா. பஞ்சகேதார்நாத்திலும் குடிகொண்டிருக்கும் பரமேஸ்வரர், உன்னை கனிவோடு நலம் விசாரிப்பார்…

மேகலா : கிருஷ்ணா, பல சமயங்களில் உன்னுடைய அன்பான, ஆறுதலான வார்த்தைகள் என்னை நெகிழச் செய்து விடுகிறது கிருஷ்ணா…

கிருஷ்ணர் : நெகிழ்ச்சி, மகிழ்ச்சி என்றெல்லாம் பேசி…, வழிப்போக்கர்களை வழி தவறச் செய்து விடாதே…. Social media-வில் புனித யாத்திரை சென்றதை மட்டும் தான் போடுகிறார்களா…..

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2