அந்தக் காலம் Vs இந்தக் காலம் - பகுதி 5
மேகலா : விசுவாமித்திரர், வசிஷ்டர் இருவரும் ராமர் மீது கொண்ட அக்கறையை, ராமாயணம் படிக்கும் பொழுதெல்லாம் படித்து வியந்து போவேன் கிருஷ்ணா… ராமரின் திறமைகளையெல்லாம் உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியவரே விசுவாமித்திரர் என்றுதான் சொல்லுவேன்…. இன்னும் சொல்லப் போனால், ராமருக்கு சீதையை மணமுடித்துக் கொடுப்பதற்காக, மிதிலை மன்னன் ஜனகரிடம் அழைத்துச் சென்றதே விசுவாமித்திரர் தானே கிருஷ்ணா….
கிருஷ்ணர் : அது மட்டுமல்ல மேகலா….. அற்புதமான சிவதனுசுவை ராமரிடம் எடுத்துக் காட்டச் சொல்லி, ராமரின் வில்திறமையை உலகுக்குக் காட்டிய பெருமை அனைத்தும் விசுவாமித்திரரையே சாரும்…. தன்னுடைய மாணவன் மீது அவருக்கிருந்த நம்பிக்கை எவ்வளவு திடமானது! ராமரின் விருப்பத்தையும், தசரதரின் விருப்பத்தையும் கேட்காமலேயே ராமருக்கும் சீதைக்கும் மணம் பேசி முடித்த பின்னரே, தசரதருக்குச் செய்தி சொல்லப்பட்டது. இதெல்லாம் ராமரின் அவதார நோக்கம் அறிந்த விசுவாமித்திரரின் மேன்மையான செயல்கள்….
மேகலா : ராமர் என்ற மாணவன்…, அவதார புருஷன் என்றாலும், ஆசிரியர் மீது அவருக்கிருந்த மதிப்பு, மரியாதை, அவர் காட்டிய பணிவு இவையெல்லாம் நாம் கற்றுக் கொள்ள வேண்டியது… இன்னுமொரு சம்பவம் – இன்னொரு மாணவன், எதிரி கூடாரத்திலிருந்து வந்தவன் என்றாலும், அவனைத் தன் சீடனாக ஏற்றுக் கொண்ட ஆசிரியர் தான் சுக்ராச்சாரியார். அவர் அசுரர்களுக்கெல்லாம் ஆச்சாரியர்; பல சாஸ்திரங்களை அறிந்தவர். தேவர்களின் குருவாகிய பிரகஸ்பதி அறியாத ஒரு வித்தையை அறிந்து வைத்தவர். இறந்தவரை உயிர்த்தெழச் செய்யும் ‘மிருத்யு சஞ்சீவினி’ மந்திரத்தால், தேவர்களுக்கும் அசுரர்களுக்குமிடையில் யுத்தம் நடக்கும் போது, அசுரர்கள் இறந்து போனால், இந்த மந்திரத்தை உபயோகித்து அவர்களை உயிர்த்தெழச் செய்வார். அசுரர்கள் முன்னிலும் பலமுள்ளவர்களாகப் போரிடுவார்கள். அவர்களின் வலிமையை அறிந்த தேவர்கள், தங்களின் குருவாகிய பிரகஸ்பதியிடம் முறையிட்டார்கள். இறந்தவரைப் பிழைக்கச் செய்யும் மந்திரத்தை, சுக்ராச்சாரியாரிடம், குருவின் மகனாகிய கசனை அனுப்பி தெரிந்து கொள்ள வேண்டும் என்று வேண்டிக் கொண்டனர்….. தேவர்களின் குருவும் இதற்குச் சம்மதித்தார். கசனை சுக்ராச்சாரியாரிடம் மந்திரத்தைத் தெரிந்து வரச் சொல்லி அனுப்பினார். கசன், சுக்ராச்சாரியாரிடம் சென்று, தன்னை மாணவனாக ஏற்றுக் கொள்ளும்படி கேட்க, எதிரியின் மகனென்றாலும், கல்வி கற்றுக் கொள்ள வருபவரை ஏற்றுக் கொள்வதுதான் சிறந்த தர்மம் என்ற அடிப்படையில், சுக்ராச்சாரியார், கசனை மாணவனாக ஏற்றுக் கொண்டார்….. இதைப் பொறுக்காத அசுரர்கள், சமயம் பார்த்து கசனைக் கொன்று விடுகிறார்கள். சுக்ராச்சாரியாரின் மகளாகிய தேவயானி, கசன் மீது காதல் கொண்டிருந்தாள். பொழுது சாயும் நேரம் வந்ததும், தேவயானி, கசன் இன்னும் வீடு திரும்பாமல் இருப்பதைக் கண்டு, அவனுக்கு ஏதும் ஆபத்து வந்ததோ என்று அச்சப்படுகிறாள். அதனை சுக்ராச்சாரியாரிடம் சொல்லிப் புலம்புகிறாள். சுக்ராச்சாரியார், தன்னுடைய ஞானதிருஷ்டியால், கசனை அசுரர்கள் கொன்று விட்டனர் என்பதை அறிகிறார்….. தன்னுடைய மகளின் வேண்டுகோளுக்கிணங்க, கசனை, தான் அறிந்த மந்திர சக்தியால் உயிர்த்தெழுப்புகிறார்….. இதை அறிந்த அசுரர்கள், கோபம் கொண்டு, மறுபடியும் கசனை கொன்று விடுகின்றனர். இப்படி மூன்று முறை முயற்சி செய்து, மூன்றாவது முறை கொன்றவுடன், கசனை எரித்து அந்தச் சாம்பலை சுக்ராச்சாரியார் அருந்தும் மதுவினில் கலந்து விடுகிறார்கள். சுக்ராச்சாரியார் மது அருந்த, கசன் அவரின் வயிற்றில் கலந்து விட்டான். இம்முறை தேவயானி அழுது புலம்ப, கசன் அவர் வயிற்றிலேயே மதுவோடு கலந்து விட்டதை அறிகிறார். எது நடக்க வேண்டும் என்று கசன் நினைத்து அவரிடம் மாணவனாக சேர்ந்தானோ…., எது நடக்கக் கூடாது என்று அசுரர்கள் கசனைக் கொன்றார்களோ, அது நடக்கும் தருணம் வந்து விட்டதாக சுக்ராச்சாரியார் நினைத்தார். அவர், தன் வயிற்றில் கலந்த கசனை அழைத்து, இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் மந்திரத்தை உபதேசிக்கிறார். அவன் உயிர் பெற்று, சுக்ராச்சாரியாரின் வயிற்றைக் கிழித்து வெளியே வருகிறான். தான் பெற்ற மந்திர சக்தியால் கசன், சுக்ராச்சாரியாரை உயிர் பிழைக்கச் செய்கிறான். உயிர் பெற்று வந்த சுக்ராச்சாரியார்…, தான் மது அருந்தியதாலேயே இந்த மோசமான சம்பவம் நடைபெற்றது என்பதை உணர்ந்து…, ‘சாஸ்திரம் கற்பவரும், சாஸ்திரத்தைப் போதிப்பவர்களும், ஒழுக்கம் நிறைந்தவர்களும், தர்மம் தவறாதவர்களும், சத்தியம் கடைப்பிடிப்பவர்களும் மது அருந்துதல் கூடாது’ என்ற சாஸ்திரத்தைப் பிறப்பித்தார்…..
கிருஷ்ணர் : நம்முடைய ஒரு தவறினால், மாணவர்கள் பாதிப்படையக் கூடாது என்ற ஆசிரியருடைய அக்கறை நன்றாகத் தெரிகிறது….. ஆனால், ஆசிரியருடைய அக்கறையினால் புதிதாக ஒரு சட்டம் பிறப்பிக்கப்படுகிறது என்பது எந்தக் காலத்திலும் உண்டு. இது நான் சொல்லும் இந்த சம்பவத்தின் மூலம் உனக்குத் தெளிவாகப் புரியும்.
மேகலா : இந்தக் காலத்தில் அப்படியென்ன பிரமாதமான சட்டம் பிறப்பிக்கப்படுகிறது கிருஷ்ணா…. நீயே விரும்பி, அந்தக் கால மாணவர்கள் மீது ஆசிரியர்களின் அக்கறையை விளக்கச் சொல்லிக் கேட்டாயல்லவா…. அந்தக் காலத்து ஆசிரியர்களின் மேன்மை அத்தகையது கிருஷ்ணா…
கிருஷ்ணர் : இரும்மா…. அவசரப்படாதே….. சில வருடங்களுக்கு முன்பு, தமிழ்நாடே…., ஏன் இந்தியாவே அலறிய ஒரு சம்பவம் ஞாபகத்திற்கு வருகிறதா…. அதுதான், ‘நாவரசு கொலை வழக்கு’… இந்தக் கொலையின் பின்னணியை கொஞ்சம் யோசித்துப் பார்…. புதிதாக கல்லூரியில் சேர வரும் முதலாண்டு மாணவர்களை, சீனியர் மாணவர்கள் ragging பண்ணுவது எல்லாக் கல்லூரிகளிலும் வழக்கமான ஒன்றுதான். அந்தச் சமயங்களில், சீனியர் மாணவர்கள் அடிக்கும் கூத்தை…, அக்கிரமத்தை…., ஏன் அயோக்கியத்தனத்தை…, கல்லூரி நிர்வாகம் கண்டுக்காது விட்டு விடுவார்கள். புது மாணவர்கள், பயந்தாலும்…, அழுதாலும்…, எல்லாம் ஒரு வாரத்திற்குத்தான்…. அதன் பின் எல்லோரும் நண்பர்களாகி விடுவார்கள்…. அதனால், இவர்களுடைய அலப்பறையில் நிர்வாகம் தலையிடாது…. ஆனால், ragging என்று ஆரம்பிக்கப்பட்ட ஒரு சின்ன விஷயம்…. கொலையில் போய் முடிந்தது…. ‘நாவரசு’ என்ற மாணவனை, ‘டேவிட்’ என்ற மாணவன் கொலை செய்தான் என்ற செய்தி தமிழ்நாட்டையே உலுக்கியது… அரசாங்கம் பதறிப் போனது. அது மட்டுமல்ல… இனி வரும் காலங்களில், ragging கிடையாது என்று தடை செய்து, அதற்கான சட்டமும் பிறப்பிக்கப்பட்டதா இல்லையா…. அதனால்தான் சொல்கிறேன்… எந்தக் காலத்திலும், பாதிப்பு மாணவர்களுக்கு என்றால், ஆசிரியரோ…., அரசாங்கமோ…, அவர்களைப் பாதுகாக்கக்கூடிய…, தர்மத்துடன் கூடிய சட்டத்தைப் பிறப்பிக்கிறார்கள் என்கிறேன். சுக்ராச்சாரியாருடைய கதை உணர்த்தும் பாடம் தர்மத்துக்கு உட்பட்டது. நாவரசு கொலை வழக்கு உணர்த்தும் பாடம்…, சட்டம் மக்களுக்கும், மாணவர்களுக்கும் பாதுகாப்பு தரவல்லது…. அடுத்து, ராமருடைய பேராற்றலையும், மகாத்மியத்தையும் இந்த உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியவர் விசுவாமித்திரர் என்று சொன்னாய்…. நிஜமாகவே, ‘ராமாயணம்’ வாசிக்கும் பொழுது, ‘குரு’ என்றால், இவரல்லவோ ‘குரு’…. ராமருக்கே புகழைப் பெற்றுக் கொடுத்தவரல்லவா என்று நினைக்கத் தோணும்…. நீ, இப்படி யோசித்துப் பாரேன்…. நம்ம பாரதத்தின் ‘தங்கமகளை’த் தெரியுமா உனக்கு….?
(தொடரும்)
Comments
Post a Comment