வாழ்க்கையில் ஒருமுறையாவது... - பகுதி 2

மேகலா : பரபரப்பான எங்கள் விமானப் பயணம், மேகங்களை விலக்கிக் கொண்டு பறந்தது. விமானி, எல்லோருக்கும் வணக்கம் தெரிவித்து, ‘டேராடூனை நோக்கிச் செல்லும் இந்த விமானம், ஹைதராபாத், போபாலைக் கடந்து, சரியாக 4.30 மணிக்கு டேராடூனைச் சென்றடையும்’ என்று சொன்ன சிறிது நேரத்தில், ஒரு சின்ன கோடு மாதிரி கங்கை நதி தெரிய ஆரம்பித்தது. கார்த்தி, ‘கிரீச்’ என்று குரல் கொடுத்து, ‘கங்கை தெரிகிறது’ என்று சொல்லி, photo எடுக்க ஆரம்பித்தான். சற்று நேரத்தில், வீடுகளின் மேற்கூரை, கட்டம் கட்டமாகத் தெரிய ஆரம்பித்தது. விமானம் இன்னும் தாழப் பறந்து விமான நிலையத்தை வந்தடைந்தது. தடதடவென ஓடி, மூச்சிரைக்க நின்றவுடன், இடுப்பில் கட்டிய belt-ஐ அவிழ்த்து, டேராடூன் விமான நிலையத்தில் இறங்கினோம். மதுரை விமான நிலையம் அளவே இருந்த விமான நிலையத்தில், எங்கள் luggage-ஐ எடுக்கும் நேரத்தில், ஹரி, எங்களுக்கான ‘cab’ driver-க்கு phone பண்ணினான். அவர் காத்திருப்பதாகச் சொல்லவும், luggage-ஐ ட்ராலியில் ஏற்றி, விமான நிலையத்தின் வெளியில் வந்தோம். நான் என்னை ஒரு முறை கிள்ளிப் பார்த்துக் கொண்டேன் கிருஷ்ணா…

கிருஷ்ணர் : ஏன்….?

மேகலா : ’இதெல்லாம் நிஜம்தானா…., நாம் கங்கையின் அருகில் இருக்கிறோமா…. நாம் நினைத்தே பார்க்காத இமயமலையின் அடிவாரத்தில் இருக்கிறோமா…’ என்று என்னால் நம்பவே முடியவில்லை கிருஷ்ணா….

கிருஷ்ணர் : சிறு பிள்ளைத்தனமாக இருக்கு உன் செயல்….

மேகலா : இருக்கட்டும்…. நான் சிறு பிள்ளையாகவே இருந்து விட்டுப் போகிறேன்…. Driver கை காட்டி விட்டார்…. நாங்கள் எங்கள் cab அருகில் சென்று விட்டோம். அதன் பிறகு car-ல் ஏறி உட்கார்ந்து….., ஹரி முதலில் எங்கு போவது என்று discuss பண்ண ஆரம்பித்து விட்டான்….

கிருஷ்ணர் : Driver-க்கு English தெரிந்ததா….

மேகலா : ஹரி ஆங்கிலத்தில் கேட்பதற்கு, பாதி ஆங்கிலமும், பாதி ஹிந்தியும் கலந்து பேசினார்… எனக்கே புரிஞ்சுது கிருஷ்ணா…..

கிருஷ்ணர் : இந்த டூப்பெல்லாம் எங்கிட்ட விடாத…. புரிஞ்ச மாதிரி தலையாட்டினாயா….?

மேகலா : புரிஞ்ச மாதிரிதான் இருந்தது கிருஷ்ணா…. ரிஷிகேஷை நோக்கி எங்கள் ‘car’ எங்களை அழைத்துச் சென்றது… செல்லும் போது, வளைந்து வளைந்து செல்லும் மலைப் பாதை சிலிர்ப்பூட்டியது… பாதையின் இடது பக்கத்தில், ஆற்று நீர் ஓடி வரும் அகண்ட பாதை, கூழாங்கற்கள் நிறைந்து வறண்ட நிலையில் காய்ந்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சியானேன்…. என்னடா கங்கை வறண்டிருக்கிறதா என்று எங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தோம். Driver, ’இது மழை நீர் ஓடி வரும் பாதை…, இது இப்படியே கங்கையைச் சென்றடையும்’ என்று சொன்னதும், எனக்கு, ‘பார்ரா, மலையில் இருந்து வழிந்து வரும் மழைநீர் வீணாகிப் போகாமல் கங்கையில் கலப்பதற்கு, இயற்கையாகவோ, செயற்கையாகவோ ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்று ஆச்சர்யமாக இருந்தது…. வெள்ளமாய் கங்கை பாயும் ஊரில் கூட, மழை நீரை வீணாக்காமல், மொத்தமாய் திருப்பி விட்டு, நதியுடன் கலக்கச் செய்தது, ‘நீரின்றி அமையாது உலகு’ என்ற வாசகத்தை உணர்ந்திருக்கிறார்கள் என்று புரிந்தது கிருஷ்ணா…. இந்த மழை நீர் கங்கையுடன் கலப்பதை, இங்கு மட்டுமல்ல கிருஷ்ணா, இமயமலையின் வளைவுகளில் கூட, ஓடை மாதிரி உருவாகி, கீழிருக்கும் பிரதேசத்தில் விழுந்து நதியாகி, அது கங்கையில் கலப்பதையும் பார்த்து சிலிர்த்துப் போனேன் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : ஆமாம்…., நிமிர்ந்து நிற்பது இமயமலை. அங்கு பொழியும் மழையும் கங்கையில்தானே கலக்கும்… உனக்கு ஒண்ணு தெரியுமா…. ரிஷிகேஷில் தான் இமயமலை ஆரம்பமாகிறது. அதாவது ரிஷிகேஷில், புனித கங்கை ஆறும் ஓடுகிறது. ‘இமயமலையின் நுழைவாயில்’ என்றும் அழைக்கப்படுகிறது. ரிஷிகேஷின் தனிச்சிறப்பு என்னவென்றால், அது உங்களை ஒரே நேரத்தில் இயற்கையுடனும், மாயா சக்திகளுடனும் இணைக்கிறது….

மேகலா : ஓ! நாங்கள் இமயமலையின் நுழைவாயிலைத்தான் பார்த்தோமா…. செல்லும் வழிகள் எனக்கு குற்றாலத்தை நினைவுபடுத்தின கிருஷ்ணா… அடர்ந்து செழித்த மரங்களும், ஒற்றைச் சாலையாக நெளிந்து செல்லும் மலைப்பாதையும், வியர்வையில்லாத சீதோஷ்ணமும்…, குற்றாலம் செல்வது போல் மனம் குதூகலித்தது….

கிருஷ்ணர் : நீ அடிக்கடி குற்றாலம் சென்று வந்திருப்பதால், அந்த feeling…

மேகலா : எதிர்பார்ப்புகளுடனும், சிலிர்ப்போடும், அரைகுறை ஹிந்தியோடும், நாங்கள் எதிர்பார்த்த ரிஷிகேஷ் வந்து விட்டது கிருஷ்ணா…. ஆஹா…, புனித பூமியில் நானும் கால் பதித்து விட்டேன். மஹா ரிஷிகளும், மாமுனிவர்களும், மகான்களும் சுற்றித் திரிந்த புனித பூமிக்கு எல்லோரும் வந்து இறங்கினோம்… நான் வாழும் காலத்தில் வாழ்ந்த மகான், என் மொழியையே பேசி, உலகத்தையே தன் திறமையால் அதிசயப்பட வைத்த புனித ஆத்மா, செயல் வீரர் அப்துல் கலாம் நடந்த பூமியில் நானும் நடந்து வந்தேன் கிருஷ்ணா…. மஹாரிஷிகளின் மூச்சுக்காற்று பரவிய பிரதேசத்தில், ஒருமுறை இழுத்து மூச்சு விட்டேன் கிருஷ்ணா…. Driver சொன்னார், ‘லக்கேஜெல்லாம் இறக்கி வைத்து நீங்கள் வந்தால், ‘லக்ஷ்மண் ஜூலா’ சென்று, அதன் கீழ் கங்கை பரவி ஓடுவதைப் பார்க்கலாம்’ என்றார்…. உடனே, கங்கையைப் பார்க்கத் தயாராகி, காருக்குள் அமர்ந்தோம்…. ஒரு சின்ன turn சென்று, அங்கு வண்டியை நிறுத்தி, ஒரு ‘guide’-ஐ எங்களோடு அனுப்பி வைத்தார். அங்கிருந்து நடந்துதான் செல்ல முடியும். மலைகளின் வளைவுகளில், முடிந்த மட்டுக்கும் பாதை அமைத்து, இறக்கம் வரும் போது படிக்கட்டுக்களை கட்டியிருந்தனர். மெள்ள மெள்ள எங்களைக் கூட்டிச் சென்றார். பாதை என்று பாதசாரிகள் நடக்கவும், இருசக்கர வாகனம் போவதற்கு மாத்திரம் என்பது போல அமைந்திருந்தது. அதிலும் இருமருங்கிலும் மக்களை ஈர்ப்பதற்கான கடைகளும், பேல்பூரி, பானிபூரி, டீக்கடைகளும் நிறைந்திருந்தன. நாங்கள் நடந்து சென்ற இரண்டு நிமிடத்தில் கங்காதேவிக் கோவில் வந்தது. அந்தக் கோவிலுக்குள் சென்றதும், guide, ’நீங்கள் photo எடுக்கலாம். மேலே சென்று, அங்கிருந்து, ஓடி வரும் கங்கையைப் பார்க்கலாம்’ என்றார். கோயிலைப் பார்த்தால், ஒரு வீடு மாதிரி இருந்தது கிருஷ்ணா…. ஒரு சின்ன ரூம்; அதுதான் கருவறை… அங்கு marble ’கங்காதேவி’ அமைதியாக கொலுவிருந்தார். அங்கு full-ஆக dress பண்ணியிருந்த பூசாரி… எல்லோருக்கும் பொட்டு வைத்தார். வெளியில் மாடி செல்லும் படிக்கட்டில் சென்று, கீழே தெரிந்த கங்கையைப் பார்த்தோம் கிருஷ்ணா…. உயரத்தில் இருந்து பார்க்கும் போதே, கங்கையின் உற்சாகம் அற்புதமாகத் தெரிந்தது கிருஷ்ணா…. அருகில், நாங்கள் நின்றிருக்கும் இடத்திற்குப் பக்கத்தில், விளிம்பில் சிவபெருமான் நின்ற கோலத்தில், தன் திரிசடையை விரித்து, இரு கைகளையும் விரித்துக் காட்டி, நிற்கிறார். அருகில் பார்வதி தேவி இறையனாரை அண்ணாந்து பார்க்கிறார். ரிஷப வாகனம் அருகில் இருக்கிறது. அருகில் ஒரு முனிவர் இருக்கிறார். இதன் கதை எனக்குத் தெரியவில்லை. ஆனால், அப்போதுதான், கங்கையையும், பெருமானையும் சேர்ந்து பார்க்கும் போதுதான் மின்னலாய் ஒரு சிலிர்ப்பு ஊடுருவி, அந்தப் பிரதேசத்தின் தெய்வத் தன்மையை உணர்த்தியது. நீ சொன்னாயே கிருஷ்ணா, ‘ஒரே நேரத்தில், உங்களை ரிஷிகேஷ், இயற்கையோடும், மாயாவதிகளோடும் இணைக்கிறது’ என்றாயே…, எவ்வளவு உண்மை…. இமயமலையும், கங்கையும், ஆதிபகவனும், மஹாசக்தியும் இணைந்த தோற்றமாக…, இயற்கையின் எழில்வடிவமாக, தெய்வத்தின் கருணையாக, எனக்குள் சிலிர்ப்பை ஏற்படுத்தியது உண்மை கிருஷ்ணா….

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2