வாழ்க்கையில் ஒருமுறையாவது... - பகுதி 5

மேகலா : கிருஷ்ணா….., நாங்கள் தங்கியிருந்தது ரிஷிகேஷில்…. அதனால், முதல் நாள் சுற்றியது, நாங்கள் தங்கியிருந்த இடத்தைச் சுற்றித்தான்… இரண்டாம் நாள், 1/2 மணி நேரப் பயணத்தில் ஹரித்துவாரை அடைந்தோம். நம்ம ஊரில், கோயில் நடை சாற்றுவது என்ற வழக்கம் இருப்பதால், கிளம்பும் நேரமெல்லாம் பார்த்து பரபரப்பாவோம்…. ஹரித்துவாரில் நாங்க பார்க்க நினைத்தது மலை மீது இருக்கும் ‘சண்டிதேவி’, ‘மானசதேவி’ கோயில்கள் இரண்டும் ஒரே மலையில்தான்; ஆனால், வேறு வேறு குன்றுகளில் இருக்கிறது. காலை breakfast-ஐ முடித்துக் கொண்டு, பரபரப்பேயில்லாமல் 9 மணிக்குக் கிளம்பினோம். சிறிது நேரப் பயணத்தில் ஹரித்துவாரை அடைந்தோம். போகும் வழியில், digital மயமான city தென்படாமல், எளிமையான நகரத்தைப் பார்த்ததால், பயணம் சலனமின்றி சென்றது. ஹரித்துவாரத்தில் மலைக்கோயிலுக்கு அடிவாரத்தில் வந்து விட்டோம். அங்கிருந்து, மலை மீது இருக்கும் கோயிலுக்கு rope car-ல் தான் செல்ல வேண்டும். அதற்கான ticket-ஐ எங்கு எடுப்பது என்று ஹரி விசாரித்துக் கொண்டிருந்தான். அங்கு சென்று பார்த்தால்…, காத்திருப்போர்கள் கூட்டம், எங்களை மிரட்டியது. எனக்கு உள்ளூர பயம்… இத்தனை பேரும் ticket எடுத்த பின்பு, நாம எடுத்து…., அதற்குப் பின் மேலே சென்று…, சாமியப் பார்த்து…, மறுபடியும் கீழே வர…, சாயந்திரம் ஆகி விடுமோ…, என்று யோசித்துக் கொண்டே திரும்பினால், ஹரி, ‘வாங்கம்மா, டிக்கெட் எடுத்தாச்சு’ என்று வருகிறான். எல்லோரும் rope car புறப்படும் இடத்திற்குச் சென்றோம். Exhibition-ல், giant wheel-ல் செல்வதற்கு ஒரு கூண்டு இருக்குமே…, அது மாதிரியான கூண்டில் அமர வேண்டும். எத்தனை பேர் செல்வது என்று கேட்கிறார்கள். 7 பேர் என்றதும்…, ஒரு car-ல் – 4 பேர்…, மற்றொன்றில் மூன்று பேர் என்று பிரித்து அமரச் செய்தார்கள். நானிருந்த car-ல் தான் கார்த்தியும், ஆதியும், ராணிமாவும் ஏறினார்கள்… கார்த்தி ஓரளவு exciting ஆகத்தான் ஏறினான்… ஆதிக்கு, என்ன…, ஏது… என்று புரியவில்லை. ஏறி அமர்ந்து, car புறப்பட்டு…, rope-ல் செல்கிறது… கீழே பூமி…, சுற்றிலும் வெட்டவெளி…, சற்று பயமாகத்தான் இருந்தது… இயற்கையை மருண்டுதான் ரசிக்க முடிந்தது. ஆதி அழ ஆரம்பித்து விட்டான். அப்போதான், நாமளும் பயந்தால், பிள்ளை ரொம்ப பயந்திருவான் என்று நினைத்து, அவன் கண்களைப் பொத்தி, மடியில் கிடத்தி ஆறுதல் சொல்கிறேன்… கார்த்திக்கு, இந்த அனுபவம் கும்மாளத்தைக் கொடுத்து விட்டது…, photo எடுக்கவும், ஆதியைக் கிண்டல் பண்ணவும்…, ஒரே அலப்பறை…. ஆதி கொஞ்சம் பயம் தெளிந்தான். Rope car-ம் கோயிலைச் சென்றடைந்தது… யப்பா…., மலை மீது, car-ல் சர்ரென்று விரைந்து வரும் போது, சுற்றியிருக்கும் காடுகளையும், கீழே என்ன தெரிகிறது என்பதையும் ரசிக்க…, ஏன் பார்க்கக் கூட முடியவில்லை கிருஷ்ணா…. கோயிலுக்கு நடந்து செல்லவும் பாதை இருக்கிறது போல… நானெல்லாம் நடந்து வருவேனா என்பது சந்தேகம் தான்… ஏன்னா…., rope car, land ஆன இடத்தில் இருந்து மேலே செல்ல கொஞ்சம் படிக்கட்டுகள் இருக்கத்தான் செய்தன. சுவற்றைப் பிடித்துக் கொண்டும்…, யாராவது கைகளைப் பிடித்துக் கொண்டும் தான் ஏறினேன். கோயிலுக்குள் நுழைந்து விட்டோம் கிருஷ்ணா… நம்ம பக்கத்தில் கோயிலுக்குள் நுழைந்தாலே விசாலமாகத்தானே இருக்கும்…, இங்கு அப்படியில்லை. நிதானமான கோயிலுக்குள் கூட்டம் நிதானமாகத்தான் இருந்தது… கோயிலுக்குள் நுழையும் போதே, கால் செருப்பைக் கழட்டி வைக்கச் சொல்லி கடைக்காரர்கள் கூவிக் கூவி அழைக்கிறார்கள். சாமிக்கு நைவேத்யமாக ஒரு தட்டு, அதில் சில பொருட்கள் வைத்திருக்கிறார்கள்… அதை வாங்கி கையில் வைத்துக் கொண்டு, செருப்பைக் கழட்டிப் போட்டு விட்டு உள்ளே செல்ல அழைக்கிறார்கள். ஆனால், நாங்கள் அங்கேயெல்லாம் கழட்டவில்லை…, நைவேத்யத் தட்டும் வாங்கவில்லை…. கிருஷ்ணா, உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும்… ‘சண்டிதேவி கோயில்’, ‘மானசதேவி கோயில்’ என்ற இரண்டு கோயில்களும், மலையின் இரண்டு திசைகளில் இருக்கிறது போல…. இரண்டுக்கும் செல்வதற்கான ticket-ஐ ஒரே இடத்தில் ஹரி வாங்கி விட்டான்… அவன் நினைத்துக் கொண்டான், டிக்கெட்டைப் பார்த்து அவர்களே எங்களை இரண்டு கோயிலுக்கும் அனுப்பி வைப்பார்கள் என்று…. நான் நினைத்தேன், ஹரி இருக்கிறான், கூட்டிச் செல்வான்’ என்று… இப்படி நாங்கள் அரைகுறையாகத் தெரிந்து கொண்டு, முதல் rope car-ல் ஏறி கோயிலுக்குள் வந்து விட்டோம்… படிகளில் support-ஐப் பிடித்துக் கொண்டு ஏறுகிறேன்… ஒரு பையனும், அவனுடைய மனைவியும் தரிசனம் முடித்து, படிக்கட்டுக்கு அருகில் பேசிக் கொண்டிருந்தார்கள்… நான் ஏறிய தளர்ச்சியில், சட்டென அவர் கையைப் பிடித்து ஏறி விட்டேன். இதை எதிர்பாராத அந்தப் பையன், என்னுடைய தளர்ச்சியைக் கண்டு, மேலும் கை கொடுக்க வந்தார். அதற்குள் நான் சமவெளிக்கு வந்து, thanks சொல்லி விட்டு நடந்தேன்…. ஏறிய களைப்பில், எல்லோரும் தாகத்திற்கு ஏதாவது குடிக்கலாம் என்று நினைக்கவும், ஹரி அனைவருக்கும் ‘லஸ்ஸி’ வாங்கிக் கொடுத்தான். நடந்த களைப்பிற்கு, லஸ்ஸி அமிர்தமாக இருந்தது. எங்களை மாதிரி பக்தர்கள், பிரசாதத்தட்டுடன் செல்ல, நாங்கள் அப்படி எதுவும் வாங்கவில்லை. அந்தத் தட்டில், தண்ணீர், பூ, நூல்மாலை என்றிருப்பதைப் பார்த்தேன். நூல்மாலை எதற்கு என்று புரியவில்லை. அதற்குள் சன்னிதானம் வந்து விட்டது. நிதானமாகவும், பூரிப்புடனும் சண்டிதேவியை வழிபட்டு, பூசாரி வைத்த பொட்டையும் ஏற்றுக் கொண்டு வெளிப்பிரகாரத்திற்கு வந்தால், அங்குதான் மக்கள் எல்லோரும், அந்த நூல்மாலையைக் கட்டி வேண்டிக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு, திருச்சியில் வெக்காளியம்மனுக்கு வேண்டுதலை, பேப்பரில் எழுதி, அம்மன் பார்வையில் படும்படி அங்கு இருக்கும் மரத்தில் கட்டி விடுவோமே, அது ஞாபகத்திற்கு வந்தது கிருஷ்ணா…. ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு பழக்கம்… ஆனால், concept என்னவோ, நம்ம வேண்டுதலை அன்னையிடம் சமர்ப்பிப்பது… பிரார்த்தனை முடிந்து, rope car-ல் ஏறி…, கீழே வந்து விட்டோம்…..

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2