வாழ்க்கையில் ஒருமுறையாவது - பகுதி 13

மேகலா : நாங்கள் கங்கையில் குளிப்பதற்காக வந்த நேரத்தில் கூட்டம் ஒன்றும் பெரிதாக இல்லை கிருஷ்ணா… ஹரித்துவாரில், மக்கள் குடும்பம் குடும்பமாக ஆங்காங்கே தங்கள் பாவங்களைக் கழுவிக் கொண்டிருந்தனர்…. ரிஷிகேஷிலோ, எங்களைச் சேர்த்து மூன்று அல்லது நான்கு குடும்பங்கள் இருந்திருக்கலாம்…. ‘நதியில் நீராடி, கொடியில் தலை சீவி நடந்த இளம் தென்றல்’ எங்களையும் தழுவிச் சென்றது… வளையோசை குலுங்க, கங்கையும் பதினாறு வயது பாவையாக சிணுங்கிச் சென்றாள்… கரையில் கட்டிய படியினில், எல்லோரும் அமர்ந்து, யார் முதலில் கால் நனைப்பது என்று எங்களுக்குள் ஒரு தயக்கமும், பரபரப்பும் ஊடுருவி நிற்க…, ஹரியும், கார்த்தியும் மேலாடையைக் கழற்றி சட்டென்று கங்கையில் இறங்கினார்கள்…. ‘இங்கு ஒர் படி இருக்கிறது. அம்மா, மெள்ள இறங்குங்கள்’ என்று ஹரி சொல்ல…., கண்டிப்பான அம்மாவை நெருங்கத் தயங்கும் சின்னப் பிள்ளை போல, நானும் பயந்தேன். அதற்குள் ராணிமாவும், மதனாவும், நன்றாக இறங்கி, ஒரு முறை முழுகி எழுந்தார்கள். ஆதிக்கு, அம்மா இறங்கியதும் பயம் கொஞ்சம் விலகியது. பாதம் நனையுமளவுக்கு இறங்கினான். நான் இரண்டாம் படியில் இறங்கி உட்கார்ந்து கொண்டேன். ராணிமா, ‘என் கையைப் பிடித்துக் கொண்டு இறங்குங்க’ என்றாலும் கூட, கால்களால் துழாவிப் பார்த்து, அங்கு படியில்லையோ என்ற பயத்தில், உட்கார்ந்தபடிக்கே, முழுகினேன். இதில், சங்கிலியின் வளையத்தை விடவே இல்லை… கங்கை, இது ஏதும் அறியாதவள் போல, தன் வளையோசை சிலுசிலுக்க, சிரித்துக் கொண்டே ஓடினாள். எல்லோருக்கும் கடைசியாக, ஷீத்தல் அப்பா நதியில் இறங்கி, ஒரு ‘சொர்க்’ அடித்து, பாவம் தொலைத்து புனிதமானார். ஒரு பத்து, பதினைந்து நிமிடத்திற்கு, இந்த உலக வாழ்க்கையிலிருந்து விலகி, கங்கையோடு முழுமையாக உறவாடி மகிழ்ந்தோம் கிருஷ்ணா…. இன்னும் கங்கா ஆர்த்திதான் பார்க்கணும். அது வரை, அந்தப் பிரதேசத்தையே சுற்றி வரும் காற்றையும், உன் குறைகள் எதுவாக இருந்தாலும், என்னிடம் கொட்டி விடு; நான் உன் குறைகளைத் தீர்த்து வைக்கிறேன்’ என்று நம்பிக்கையாக உலா வரும் கங்கையம்மாவையும் ரசித்துக் கொண்டே இருக்கலாம் என்று தோன்றியது. எங்கள் நம்பிக்கைகளை, தீபமாக ஒளியேற்றி, கங்கையம்மாவிடம் மிதக்க விட்ட பின், கங்கா ஆர்த்தி நடக்கும் இடத்திற்கு, கைடு எங்களைக் கூட்டிச் சென்றார். அங்கிருந்து, இரவு 7.30 மணிக்கு taxi stand-க்கு வந்து சேரும் வரையில் நடைப் பயணம் தான் கிருஷ்ணா…. நல்ல வேளை, ஏற்ற இறக்கமுள்ள பிரதேசமாக இல்லை… படித்துறையிலிருந்து, கங்கா ஆர்த்தி நடக்குமிடத்திற்கு செல்லும் வழியில், ஒரு ‘தர்மசாலா’ வருகிறது… அதைப் பார்க்கும் போது, ஒரு கல்லூரி hostel மாதிரி இருக்கிறது. அந்த தர்மசாலாவிற்குள் நுழைந்தோம். ஆங்காங்கே நன்றாக சீரமைக்கப்பட்ட பூந்தோட்டம்…, அந்த இடத்தை வனப்பூட்டியது. அதைச் சுற்றிலும் தங்கும் விடுதி… 1st floor, 2nd floor என்று இருக்கிறது. ஒவ்வொரு ரூமிலும் மக்கள் தங்கி, ஒரு அன்யோன்யமான சூழலை உருவாக்கியிருக்கிறார்கள். பொதுவாக, hotel, resorts என்றால், private gate போடப்பட்டு, யாருக்கும் அனுமதியில்லாமல், ஒரு ’சொகுசான சூழல்’ இருக்கும். இங்கு அப்படியில்லை. ரூம்களுக்கு நடுவில், ஒரு தியான அறை மாதிரி பெரிய ஹால் ஒன்று இருக்கிறது. சாஸ்திரங்களுக்கு உட்படாத, ஆனால் அமைதியான கோயில் ஒன்று இருக்கிறது. மொத்தத்தில், எங்களை மாதிரி வழிப்போக்கர்கள் இந்த தர்மசாலாவில் நடந்து சென்று வேடிக்கை பார்த்துக் கொண்டே, கங்கா ஆர்த்தி பார்க்கச் செல்லலாம். இந்த தர்மசாலாவின் எதிர்புறத்தில் தான் ‘கங்கா ஆர்த்தி’ நடைபெறுகிறது… இங்குள்ளவர்களும் தினந்தோறும், கங்கை தீப ஆராதனையில் மின்னும் அழகை பார்க்கச் சென்று விடுவார்கள் போல… இந்த ‘தர்மசாலா’ எந்த வித கட்டுப்பாடும் இல்லாமல் இருந்தாலும், அந்த சூழல் ஒரு அமைதியான கட்டுப்பாட்டோடு இயங்கிக் கொண்டிருந்தது என்றுதான் சொல்லுவேன். செண்பகப் பூவின் வாசம் வீசும் காற்றை சுவாசித்துக் கொண்டே, அங்கிருந்து வெளியே வந்தோம்…. நேரமும், ‘மாலை நேரம்’ ஆகி விட்டது…. ‘பிள்ளைகளே, என் அருகில் அமர்ந்து கொள்ளுங்கள்… எல்லோரும் ஆர்வத்துடன் சொல்லும் ‘கங்கா மாதாகி ஜே’ என்ற கோஷத்தைக் கேட்க விரும்புகிறேன்.. நீயும் உச்சரிக்க வேண்டும்’ என்று கங்காதேவி எங்களை அழைத்தாள்… ஆற்றோரம் எல்லோரும் அமரும்படியான வெளிமுற்றம் இருக்கிறது. ஹரித்துவார் மாதிரி நெருக்கியமர்ந்த மக்கள் கூட்டமோ, கூட்டத்தை விரட்டும் வாலண்டியர்ஸோ கிடையாது… தர்மசாலா இருக்கும் வீதி நெடுக, ஆற்றினையொட்டி கரை கட்டப்பட்டிருக்கிறது. அங்கு சிறு கோயில் ஒன்று இருந்தது. அதைச் சுற்றிய பிரகாரங்களில் மக்கள் அமர்வதற்கு வாகாக படிக்கட்டுக்கள் இருந்தன. அங்கு ஓரிடத்தில், செருப்பைக் கழட்டி விட்டு, நான், ஹரி, அப்பா, கார்த்தி, ஆதி எல்லோரும் படிக்கட்டில் அமர்ந்து கொண்டோம்…. ராணிமா, மதனா எங்களுக்கு எதிர்புறத்தில், வெளிமுற்றத்தில், கரையில் நின்று கொண்டார்கள். மக்கள், கொஞ்சம் கொஞ்சமாக ஆரத்தியைப் பார்க்க திரள ஆரம்பித்தார்கள். அப்பொழுது, கூட்டத்தில் ஆங்காங்கே சிலர், ஒரு தட்டில் தீபத்தை வைத்து, அவர்கள் அங்கிருந்த நபர்களில் random-ஆக சிலரிடம் கொடுத்தார்கள். எங்கள் பகுதிக்கு வரும் பொழுது, தீபத்தட்டை ஹரியில் கையில் கொடுத்தார்….

கிருஷ்ணர் : பார்ரா…, எல்லாம் காவி வேஷ்டியின் மகிமையோ….

மேகலா : ஹரி அதைப் பெற்றுக் கொண்டு, சொல்ல முடியாத சந்தோஷத்தில், ’அம்மா பாருங்க’ என்று சொல்லி, கங்கைக்கு ஆரத்தி காட்ட தயாரானான். மேகம் மெள்ள நிறம் மங்கியது… ‘போலோ, கங்கா மாதாகி ஜே’ என்ற கோஷம் பெரும் குரலெடுக்கவும், கங்கையும் துள்ளலுடன் பாய்கிறாள். தீபமும், ஒளியேற்றப்பட்டு, அந்தப் பிரதேசத்தையே உணர்ச்சிமயமாக்கியது. மிகுந்த சந்தோஷத்துடன், ‘ஹரி சாமியாரும்’ தீபத்தை ஏற்றி, ‘கங்கா மாதாகி ஜே’ என்று முழங்கினார். இங்கு மந்திரங்கள் சொல்லப்படவில்லை. பல தீபங்களால் ஏற்றப்பட்ட தீபத்தட்டை ஒரு சிலர் ஏற்றினாலும், பரவலாக மக்கள் கையால் ஆரத்தி காட்டப்பட்டதால், அதிகமான ஜொலிப்பாக இருந்தது கிருஷ்ணா… முற்றிலும் இருள் கவிழ்ந்த நிலையில், தீபத்தின் ஒளியில், கங்கையின் சப்தத்தில், மக்களின் மகிழ்ச்சியில், அந்தப் பிரதேசமே, தேவலோக இந்திரனின் பட்டினம் போல ஜொலித்தது கிருஷ்ணா…. நிதானமாக,மன மகிழ்ச்சியாக கங்கை ஆர்த்தி பார்த்த பின், மக்களோடு மக்களாக, taxi இருக்குமிடத்திற்கு நடக்க ஆரம்பித்தோம் கிருஷ்ணா….

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2