Motivation - பகுதி 8
கிருஷ்ணர் : …… சிவாஜி, அவருடைய தாயாரின் அரவணைப்பில் வளர்ந்தவர். அவர் அம்மா, ’ஜிஜாபாய்’, சிவாஜிக்கு, சிறு வயதிலேயே ராமாயணம், மகாபாரதக் கதைகளைக் கூறி, பாரத நாட்டின் பெருமைகளை, கலாச்சாரத்தை, வீரத்தை எடுத்துச் சொல்லி, சிறு வயது சிவாஜிக்கு தேசப் பற்றினைத் தூண்டி விட்டார். அது அவருடைய மனசுக்குள் ஆழமாகப் பதிந்தது. அவருடைய பயமறியாத் தன்மையை, வீரமாக மாற்றிய பெருமை, அவருடைய அம்மாவைச் சேரும். அதன் பிறகு, அவருடைய ஆசிரியரான தாதாபாய் கொண்டதேவ் அவர்களிடம், குதிரையேற்றம், போர்முறை, அரசு நிர்வாகம் முதலியவற்றில் பயிற்சி எடுத்தார். அம்மா வளர்த்த வளர்ப்பு, பயமறியாதது. ஆசிரியர் அளித்த பயிற்சி, பேரரசராக்கியது. இங்கு, ஒரு வீரன் உருவாவதற்கு, மனதில் ஆழமாகப் பதியும்படிக்கு, கதையைச் சொல்லும் அன்பும், அரவணைப்பும் மிக்க அம்மா இருந்திருக்காங்க பார்….. சொல்லப் போனால்…., கதை சொல்லத் தெரிந்த அம்மாக்கள்…., தான் அறியாமலேயே, ஒரு சத்ரபதி சிவாஜியையோ…, விண்வெளியில் சாகசம் புரியும் அப்துல் கலாமையோ உருவாக்கலாம் இல்லையா…..
மேகலா : Yes…., boss…. கிருஷ்ணா, நான் கூட கதை சொல்லும் அம்மாவாக, ஆச்சியாக, ஐயாமாவாக இருந்தும்…, பிள்ளைகளுக்கு கதை சொல்லி சொல்லி, அவர்கள் மனதில் கனவுகளை விதைக்கலாம் என்பதை மறந்து போனேனே… நீ எத்தனை அழகாக விளக்கி விட்டாய்…. நீ சொல்லும் போது தான் எனக்கு ஞாபகம் வருகிறது கிருஷ்ணா…. எத்தனையோ அம்மாக்கள், போலீஸ் கதை சொல்லி, ‘நீயும் அது போல பெரிய போலீஸ்காரராய் வளர்ந்து…, அக்கிரமம் செய்றவங்களை தூக்கி உள்ளே போடணும்’ என்று கண்கள் மலர கேட்கும் பிள்ளைகளுக்கு கதை சொல்லுகிறார்கள்… பிள்ளைகளுக்கு ‘டாக்டர் கிட்’ பொம்மை வாங்கித் தந்து, அதில், ஸ்டெத்தாஸ்கோப்பை காதில் வைத்து, அம்மாவை ‘check’ பண்ணும் பிள்ளையிடம், லேசாக மயங்குவது போல நடித்து, ‘அம்மாக்கு காய்ச்சல், டாக்டர் ஊசி போடுங்க’ என்று சொல்லுவதும்…, ‘சிரிஞ்சை’ எடுத்து ஊசி போடுவது போல நடிக்கும் பிள்ளையை உச்சி மோந்து, ‘நீ பெரியவனானதும் என்னவாய் ஆகுவாய்’ என்று கேட்க…, ‘நான் டாக்டராகி ஊசி போடுவேன்’ என்று மழலையில் பேசும் பிள்ளையை, திருஷ்டி கழிக்கும் அம்மா…., பிள்ளையை உருவாக்குவதில் அவள்தான் உலகின் மிகச் சிறந்த குரு கிருஷ்ணா…. சின்னக் குழந்தையிலேயே, தான் ஒரு teacher ஆகவும், doctor ஆகவும், பொலீஸ்ஸாகவும் கற்பனை பண்ணி ஒரு பிள்ளை பேசுகிறதென்றால். அந்தப் பிள்ளையை வளர்க்கும் அம்மா…, மிகப் பெரிய motivation சக்தி தெரிந்த குரு. அவளிடம் இருப்பது, தன்னுடைய பிள்ளையின் எதிர்காலம் மீது மிகச் சிறந்த அக்கறை மட்டுமே…. சூப்பர் கிருஷ்ணா…..
கிருஷ்ணர் : சரி…, இந்த மாதிரி motivation பரவலாக நிறைய தாய்மார்களிடம் இருக்கலாம். இவர்கள், தங்கள் கனவை, பிள்ளைகளிடம் transplant பண்ணும் மந்திரவாதிகள். இன்னும் சிலர் இருக்கிறார்கள். ஒரு target-ஐ வைத்துக் கொண்டு, ஒரு நபரையோ, ஒரு team-ஐயோ உருவாக்குபவர்கள்… யார் என்று தெரிகிறதா….?
மேகலா : விசுவாமித்திரர், ராமரை உருவாக்கினார். துரோணாச்சாரியார், அர்ஜுனன் உள்ளிட்ட க்ஷத்திரியர்களை உருவாக்கினார்….
கிருஷ்ணர் : இவர்களெல்லாம், ஆச்சாரியர்கள். இவர்களிடம் சென்று, கற்றுக் கொள்ள விரும்பினால், ஏற்றுக் கொள்வார்கள். ஆனால், ஒரு தடகள வீரனையோ, கிரிக்கெட் டீமையோ, டென்னிஸ் வீரனையோ, மிகச் சிறந்த முறையில் பயிற்சி கொடுத்து, மனப் பயிற்சி கொடுத்து, உடல்வலிமைக்கு பிரத்யேக உணவினை பரிந்துரை செய்து, ‘சொல்லி வைத்து’ உச்சத்திற்கு கொண்டு செல்கிறார்களே…, இப்பேர்ப்பட்ட ‘coach’… இவர்களுக்கு எத்தனை விருது கொடுத்தாலும் தகும். இன்று, ‘விராட் கோலி’யையோ, ‘தோனி’யையோ தெரியும் அளவுக்கு, அவர்களுக்கு பயிற்சி கொடுத்த பயிற்சியாளரை நாம் அறிவோமா….? அவர்களோ, மாணவன் செய்யக் கூடிய சிறு தவறுகளைக் கூட கண்டறிந்து, அதைத் தவிர்க்கும் வகையில் பயிற்சி கொடுக்கும் பயிற்சியாளர்கள். நீ குறிப்பிட்ட துரோணாச்சாரியார் கதையையே இங்கு கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம்.
துரோணாச்சாரியாரும், துருபத நாட்டு மன்னனும், சிறு வயதில் குருகுலத்தில் ஒன்றாகப் படித்த போது, நண்பர்கள் ஆனார்கள். அப்பொழுது, துருபதன், நண்பன் மீது கொண்ட அன்பினால், ‘நான் வளர்ந்து பெரியவனாகி, அரசனானவுடன், என் நாட்டின் பாதியை உனக்குத் தருவேன்’ என்று வாக்கு கொடுக்கிறான். இருவரும் வளர்ந்து பெரியவர்களாகிறார்கள். துருபதன், துருபத நாட்டு மன்னனாகிறான். துரோணர், கிருபியை மணந்து, ஏழ்மையில் தவிக்கிறார். அப்பொழுது அவருக்கு, சிறு வயதில் துருபதன் கொடுத்த வாக்கு நினைவுக்கு வருகிறது. அவருக்கு பாதி ராஜ்ஜியம் தேவையில்லையென்றாலும், தான் வாழ்வதற்கு நண்பன் உதவுவான் என்று நம்புகிறார். அதனால், நண்பனைத் தேடி துருபத நாட்டுக்கு வருகிறார். சிறு வயதில் கொடுத்த வாக்கை நினைவுபடுத்தி, துரோணர், துருபதனிடம் இரந்து நிற்கிறார். அவருடைய ஏழ்மைக் கோலத்தைக் கண்ட துருபதன், அவரைப் பார்த்து, அலட்சியமாக, ‘ஒரு அரசனிடம் சரிநிகர் சமமாக நின்று, நண்பன் என்றூ சொல்லும் தகுதி உங்களுக்கு இருக்கிறதா…. என்னோடு நட்பு கொள்வதற்கே, ஒரு நாட்டின் மன்னனாக இருக்க வேண்டும். எந்தத் தகுதியும் இல்லாத ஒரு ஏழை பிராமணனுக்கு, பாதி ராஜ்ஜியம் நான் தருவேன் என்று எப்படி நம்புகிறீர்’ – என்று எகத்தாளமாகப் பேசி அவமானப்படுத்துகிறான். அன்றுதான் துரோணர் ஒரு முடிவெடுக்கிறார். முடிவெடுத்த கையோடு, ‘அஸ்தினாபுரம்’ வந்து, கௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் ஆச்சாரியர் ஆகிறார். அரச குமாரர்களுக்கு பயிற்சி அளிக்கும் போது, அர்ஜுனன் தன்னுடைய எதிர்பார்ப்புக்கேற்ற திறமையான மாணவன் என்பதைப் புரிந்து கொள்கிறார். அதற்கு, அவர் கொடுத்த பயிற்சியின் முறையே தனிச் சிறப்பாக இருக்கும்.
ஒரு நாள், மாணவர்கள் அனைவரையும் பயிற்சிக் கூடத்திற்கு அருகில் இருக்கும் வனத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு ஒரு மரத்தின் உச்சியில், அழகான பறவை அமர்ந்திருந்தது…. தருமனை அழைத்தார், ‘யுதிஷ்டிரா, அதோ அந்த மரத்தின் உச்சியில் என்ன அமர்ந்திருக்கிறது…
தருமன் : பறவை அமர்ந்திருக்கிறது குருவே….
துரோணர் : அதைக் குறி வைத்து, வில்லை வளைத்து நில்; இப்போ என்ன தெரிகிறது…
தருமன் : மரக் கிளையும், இலைகளும் தெரிகின்றது குருவே….
துரோணர் : சரி; நீ செல்…. துரியோதனா, நீ குறி வை. இப்போ உன் கண்களுக்கு என்ன தெரிகிறது….
துரியோதனன் : ஆகாயமும் தெரிகிறது குருவே…
துரோணர் : சரி; நீ செல்….. பீமா, நீ குறி வைத்து, உன் கண்களுக்கு என்ன தெரிகிறது சொல்…..
பீமன் : பறவையின் இறகுகளும், கால்களும் தெரிகிறது குருவே…
துரோணர் : சரி; நீ செல்…. அர்ஜுனா…, நீ குறி வைத்து, உன் கண்களுக்கு என்ன தெரிகிறது சொல்…, ஆகாயமா….
அர்ஜுனன் : இல்லை குருவே…
துரோணர் : மரமும், இலைகளுமா….
அர்ஜுனன் : இல்லை குருவே… பறவையின் கழுத்து மட்டுமே தெரிகிறது குருவே….
— என்றவுடன், ஆச்சாரியார், ‘தொடு கணையை’, என்றவுடன், அர்ஜுனனின் வில்லிலிருந்து சீறிப் பாய்ந்த அம்பு, பறவையை வீழ்த்தியது. ’ஒரு இலக்கை குறி வைக்கும் பொழுது, நம் கவனம் மொத்தமும், அந்த இலக்கின் மீதுதான் இருக்க வேண்டும்’ என்று துரோணாச்சாரியார் அளித்த பயிற்சி, அர்ஜுனனை சிறந்த வீரனாக்கியது. பயிற்சி முடிந்தவுடன், மாணவர்கள், குருதட்சணையாக என்ன வேண்டும் என்று கேட்க, துரோணர், ’துருபதனைக் கைது பண்ணி, தன் முன்னே கட்டி இழுத்து வர வேண்டும்’ என்று கேட்கிறார். மற்ற அரச குமாரர்கள், துருபத மன்னனின் வீரத்தை நினைத்து பின் வாங்க, அர்ஜுனன் மட்டுமே, குருதட்சணை கொடுக்க முன் வந்தான். துருபதனை போரில் வென்று, ஆச்சாரியாரிடம் கட்டி இழுத்து வந்தான். ஒரு இலக்கை நிர்ணயம் பண்ணி, அதற்காக பயிற்சி கொடுக்கும் பயிற்சியாளர்களில் துரோணாச்சாரியார் தான் முன்னோடி…. அதனால் தான், இன்றும், சிறந்த பயிற்சியாளர்களுக்கான விருது, துரோணாச்சாரியார் பெயரில் வழங்கப்படுகிறது…
மேகலா : வாவ்! சூப்பர் கிருஷ்ணா! நீ சொல்வது correct தான் கிருஷ்ணா…. பலன் தெரியாமல், எதிர்பார்ப்புடன் ஒருவரை motivate பண்ணுவது ஒரு விதம். இலக்கை நிர்ணயித்து motivate பண்ணுவது இன்னொரு விதம். சூப்பராக explain பண்ணினாய் கிருஷ்ணா….
(தொடரும்)
(அடுத்த பகுதியுடன் நிறைவு பெறும்)
Comments
Post a Comment