Maturity - பாகம் 2

கிருஷ்ணர் : ஒரு சம்பவத்தில், தன்னுடைய அறியாமையை விலக்கிய ஒருவரைச் சொல்ல முடியுமா…?

மேகலா : ஒரே சம்பவத்தின் மூலம், சாதாரண மக்களுக்கு ‘அறியாமை’ விலகும் என்பது ரொம்ப கஷ்டம் கிருஷ்ணா…. பணப் பிரச்னையில், நம்முடைய இயலாமை, நமக்கு பொறுமையைக் கற்றுக் கொடுக்கும். ஒரு செயல், தோல்வியில் முடியும் போது, அது தரும் வலி, அந்த தோல்வியை முறியடிக்கக் கற்றுக் கொடுக்கும்… இப்படி ஒவ்வொரு சம்பவமும், மெள்ள மெள்ள ஒரு மனிதனை, வாழ்க்கையை அறிந்து கொள்ளக் கற்றுக் கொடுக்கும்…..

ஒரே சம்பவம், மனிதனை புரட்டிப் போடுமா…. ஹாங்…! எனக்கு வால்மீகி முனிவர் கதை ஞாபகம் வந்து விட்டது கிருஷ்ணா…. ராமாயணத்தை எழுதிய வால்மீகி, மஹரிஷியாவதற்கு முன்னாடி, ‘ரத்னாகர்’ என்னும் வழிப்பறிக் கொள்ளைக்காரர். காட்டு வழியே செல்லும் வழிப்போக்கர்களை வழிமறித்து, அவர்களிடமிருக்கும் பொருட்களை அபகரிக்கும் கொடுந்தொழில் செய்து வந்தார். சில சமயங்களில் கொலை கூட செய்து விடுவதுண்டு…

இப்படியான காலகட்டத்தில், அந்தக் காட்டு வழியில், வேத விற்பன்னர்கள் கூட்டமாக வந்தார்கள். பார்ப்பதற்கு செல்வச் செழிப்பாக இருந்தவர்களிடம் கொள்ளையடிக்க, கொள்ளைக்காரர் அவர்களை வழிமறித்தார்.. வேதங்களை ஓதும் அவர்களோ, ரத்னாகர் என்ற கொள்ளைக்காரரிடம், ‘ஏன் இப்படி பாவ காரியங்களில் ஈடுபடுகிறீர்கள். உங்களுடைய பாவச் செயல், உங்களுடைய பாதுகாப்பில் இருக்கும் உங்கள் குடும்பத்தாரையும் பாதிக்குமே. அவர்களுக்கு, நீங்கள் பாவச் செயலில் ஈடுபடுவது தெரியுமா…? அந்தப் பாவத்தில் பங்கு பெறுவதில் அவர்களுக்கும் சம்மதமா?’ என்று கேட்டனர்…. இதுவரையிலும், பாவ புண்ணியங்களைப் பற்றியே அறியாமல் இருந்த ரத்னாகருக்கு, தன்னுடைய தாய், தகப்பன், மனைவி ஆகியோரும், தான் செய்த பாவச் செயலில் பங்கு பெறுவார்களா…, இந்தப் பாவத்திலிருந்து விடுதலை கிடைக்குமா என்ற மன உளைச்சலில், தன் குடும்பத்தாரைக் காணச் சென்றார்….

முதலில், அவருடைய தாய், தந்தையரிடம், ’நான் செய்த திருட்டுத் தொழிலின் மூலம் கிடைத்த பணத்தில் தான் அனைவரையும் காப்பாற்றி வந்துள்ளேன்… அது பாவ காரியம் என்று இப்போது அறிந்து கொண்டேன். என் பாவத்தில் நீங்களும் பங்கு பெற்றால், என் பாவத்தின் சுமை குறையும்’ என்று கேட்டார். அதற்கு அவர்களோ, ‘மகனே, பெற்றவர்களைக் காப்பாற்றுவது ஒரு மகனின் கடமை… ஆனால், அவனுடைய பாவத்தில், பெற்றவர்களுக்கு பங்கு கிடையாது’ என்று சொல்லவும், பெருத்த ஏமாற்றத்துடன் ரத்னாகர், தன் மனைவியிடம் இதே கேள்வியைக் கேட்டார்…. அவளும், அவருடைய பாவத்தில் மனைவிக்குப் பங்கு கிடையாது என்று சொல்லவும், ரத்னாகர், வேத விற்பன்னர்களிடம், தன் மன உளைச்சலைக் கூறி, தன் பாவம் குறைய என்ன வழி என்று கேட்டார். அவர்கள் ராம நாமத்தை, மந்திரமாக உச்சரிக்கச் சொன்னார்கள். கல்வியறிவு இல்லாத ரத்னாகருக்கு, மந்திரத்தை உச்சரிக்கக் கூடத் தெரியாமல் திணறுவதைப் பார்த்த வேதாந்திரிகள், வனங்களில் வாழ்ந்த ரத்னாகரை, ‘மரா, மரா’ என்று உச்சரிக்கச் சொல்லி கற்றுக் கொடுத்தனர்.

ஒரு மரத்தடியில் அமர்ந்து, கண்களை மூடிய நிலையில், ஒருமுகப்பட்ட சிந்தனையுடன், ‘மரா, மரா’ என்று உச்சரிக்க, உச்சரிக்க, அது ‘ராம, ராம’ என்று ஒலிக்கத் தொடங்கியது. அவர் சிந்தை, ஒரே லயத்தில் சீராக இயங்கியது…. மனதில் தெளிவு பிறந்தது. ‘தெளிவு’, நல்ல ஞானத்தை வளர்க்க ஆரம்பித்தது. இப்படி பல ஆண்டுகள் தொடர்ந்து, ராம நாமத்தை உச்சரிக்க ஆரம்பித்தார். அவர் அறியாமலேயே அவர் மீது புற்று வளர்ந்தது. ஒரு காலகட்டத்தில், மனம் முழுக்க அமைதி தவழ, ராம நாமம் அவருக்கு தெளிவைக் கொடுக்க, ரத்னாகர் புற்றிலிருந்து வெளிப்பட்டு, ‘வால்மீகி’ முனிவரானார். ‘வால்மீகி’ என்றால், புற்றிலிருந்து வெளிப்பட்டவர் என்று பொருள். அதன் பிறகு, ‘ராமாயணம்’ என்ற மகா காவியத்தை எழுதும் அளவுக்கு அவருடைய பக்குவம், ஞானம் வரச் செய்து, அவரை மேன்மைப்படுத்தியது…. ஒரே ஒரு கேள்விதான் அவரை புரட்டிப் போட்டது என்றாலும், அவருடைய அறியாமை விலக, பல ஆண்டுகளாக அவர் எடுத்த முயற்சி, அவர் காத்த பொறுமை, அவர் செய்த தவம், அவருடைய விவேகத்திற்கும், பக்குவம் வருவதற்கும் காரணமாகியது கிருஷ்ணா…. எனக்குத் தெரிந்து பக்குவம் வருவதற்கு மனிதனுக்கு பொறுமை மிக மிக அவசியமாகிறது கிருஷ்ணா….

கிருஷ்ணர் : நீ சொல்லுவது சரிதான். நீ சொல்வதைப் பார்த்தால், ஆத்திரம் மூட்டுபவர்களுக்கும், அறியாமல் பேசுபவர்களிடமும், பொறுமையாய் பதில் சொல்பவர்கள் நிச்சயமாக, எதிராளியிடம் பேசத் தெரிந்த பக்குவம் உடையவர்கள் என்று சொல்லலாம் இல்லையா…. உனக்கு ஒண்ணு தெரியுமா மேகலா…. இந்த maturity, பக்குவம் இல்லாத மனுஷன் எப்படி behave பண்ணுவான் தெரியுமா…. Maturity-க்குப் பிடிக்காத ஒரு குணம் ‘கோபம்’… எதையும் புரிந்து கொள்ள மறுப்பது…, அவசரப்பட்டு வார்த்தையை விடுவது…, சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் எரிச்சலடைவது… என்றிருப்பவர்களைப் பார்த்தாலே தெரியும்…, அவர்கள் total ஆக எல்லா விஷயங்களிலும் immaturity person என்று…. தமிழில் ஒரு பழமொழி உண்டு… ‘சின்னப் புள்ளைக வெள்ளாம வீடு வந்து சேராது’ன்னு – கேள்விப்பட்டிருக்கயா….

மேகலா : ஆமாம் கிருஷ்ணா…. அதே மாதிரி, இன்னொரு பழமொழியும் உண்டு… ‘பதறுகிற காரியம் சிதறிப் போகும்’ என்று…. பொட்டிலடிச்ச மாதிரி சொல்லியிருக்காங்கல்ல…, நம்முடைய அந்தக் காலத்து மனுஷங்க…

கிருஷ்ணர் : Yes, very sure….

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 5

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1