பெண்களால் முடியும் - பாகம் 5

மேகலா : கிருஷ்ணா…., நீ தாய்மை குணம் கொண்ட பெண்கள் என்று சொன்னது, ஔவைக்கு மிகச் சரியாகப் பொருந்தும் கிருஷ்ணா… அந்தக் காலங்களில், குறுநில மன்னர்களிடையே போர் நடந்து கொண்டே இருக்கும் போல… அப்படியொரு சூழலில், கடையெழு வள்ளல்களில் ஒருவரான பாரி, தனக்குப் பிறந்த இரு பெண் பிள்ளைகளைப் பரிதவிக்க விட்டு மாண்டு போனான். பாரியின் வள்ளல்தன்மை, சங்க நூல்களில் பிரசித்தமான வரலாறு. அவனுடைய பெண்பிள்ளைகள், அரவணைக்க யாருமின்றி தவிப்பதைக் கேள்வியுற்ற ஔவைப்பிராட்டி, பாரியின் பரம்பு நாட்டிற்குச் சென்று, அவருடைய மகள்களைத் தன் மகள்களாகப் பாவித்து, அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்தார் கிருஷ்ணா…

கிருஷ்ணர் : ஏய்…, இது super தகவலாக இருக்கிறதே… நாம், ராமாயண காலத்திலேயே பார்த்திருக்கிறோமே… விசுவாமித்திரர், தானாக முடிவெடுத்து, ராமருக்கு, ஜனகரின் மகளாகிய ஜானகிக்கு மணமுடித்து வைத்த நாடல்லவா…, நம்முடைய பாரத நாடு… இங்கு குருவாக இருப்பவர்களுக்கு பொறுப்பு அதிகம்… இதில் ஆண் என்ன, பெண் என்ன.. ஔவையால்…., ஏன்…, பெண்களால் முடியும் மேகலா….

மேகலா : ஆமாம் கிருஷ்ணா… நீ சொன்ன பிறகுதான் தெரியுது…. விசுவாமித்திரரும், பொறுப்பாக ராமருக்கு கல்யாணம் முடித்து வைக்கிறார்…. ஔவையும், பாரியின் மகள்களுக்கு திருமணம் முடித்து வைக்கிறார். ஆனாலும், விசுவாமித்திரர், உறவுகள் மிகுந்திருக்கும் ராமருக்கு, எந்த வித சிரமமுமில்லாமல் திருமணம் நடத்துகிறார். ஆனால், ஔவையாரோ, பாரி இல்லாமல் தவிக்கும் பெண்களுக்குத் திருமணம் முடித்து வைக்கிறார். இக்கட்டான சந்தர்ப்பத்தில் கூட, பெண்கள் பொறுப்பாக செயல்படுவார்கள் என்பதைத்தானே ஔவையில் செயல் காட்டுகிறது….

கிருஷ்ணர் : நீ சொல்வது சரிதான்… கல்வியில் சிறந்த ஔவையினால் மட்டும் தான் அக்கறையுடன் செயல்பட முடியும் என்பதில்லையே… எந்த சூழ்நிலையிலும்…, எந்த இடத்திலும்…, எப்பேர்ப்பட்ட வேலையிலும் பெண்களால் செயல்படவும் முடியும்…, ஜெயிக்கவும் முடியும் மேகலா….

மேகலா : ஆமாம் கிருஷ்ணா… போர்…, சமாதானம்…, நாடு…, நாட்டு மக்கள்…, இவையெல்லாம், சர்வதேச ‘லெவல்’ செயல்பாடு கிருஷ்ணா… அன்றாட வாழ்க்கையில், கணவனுடன் சேர்ந்து வேலை பார்க்கும் பெண்களை, வீட்டுக்கு வீடு நம்மால் பார்க்க முடியும் கிருஷ்ணா… குறிப்பாக, விவசாய குடும்பத்தில் இருக்கும் பெண்கள்…, ‘ஆண்கள்தானே வேலை செய்யணும்.., நாமெல்லாம் சோறு ஆக்க மட்டும் தான்…’ என்று சீவிச் சிங்காரிச்சி சும்மா இருப்பதில்லை… காலையில் எழுந்தவுடன், மாட்டைக் குளிப்பாட்டி, தொழுவத்தைக் கழுவிப் பெருக்கி…, தீவனம் போட்டு…, என்று யாரும் சொல்லாமலேயே, தனக்கான வேலைகளை, தானே தேர்ந்தெடுத்து, செய்ய ஆரம்பித்து விடுவாள். அதன் பிறகு, உழுவதும், விதைப்பதும், நீர் பாய்ச்சுவதுமாக, ‘உழவன்’ செயல்பட்டால், களை பறித்து, நடவு நட்டு, உழவனுக்கு சமைத்துக் கொடுத்து, ‘ஆன கொண்ட’ அத்தனை வேலையையும் செய்வாள்…. உழவன், வயலில் நெல் விதைத்தால், காய்கறி பயிரிட்டு, உரம் தயாரிப்பது என்று, மனைவி செய்வாள்…. ஒரு திரைப்படப் பாடல் கேட்டிருக்காயா கிருஷ்ணா…

‘ஆடிப்பாடி வேலை செஞ்சா அலுப்பிருக்காது

அதில் ஆணும் பெண்ணும் சேராவிட்டால் அழகிருக்காது’

கிருஷ்ணர் : ஆமாம் மேகலா…அழகான, அருமையான பாடல்…

மேகலா : எனக்குத் தெரிஞ்சி, உலகமெங்கும், விவசாயத் தொழிலில், ஆண்கள் வேலை செய்யும் போது, பெண்கள், எந்த interview-வும் இல்லாமல், தகுதி, மேற்பார்வை இல்லாமல், பயிற்சி எதுவும் இல்லாமல், மனைவி என்ற உரிமையை வைத்து, தானே விரும்பிச் செய்யும் தொழில், விவசாயம் தான். இதில் பெண்கள், தானும் விவசாயியாக மிக விரும்பி பங்கெடுக்கிறார்கள் என்பது என்னோட கணிப்பு… உனக்கு ஒண்ணு தெரியுமா கிருஷ்ணா… நம்முடைய தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ‘எடப்பாடி பழனிசாமி’, சேலம் ‘எடப்பாடி’ என்னும் கிராமத்தில், ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்… திடீரென்று அவர் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், அவர் மனைவி எடப்பாடியிலேயே தங்கி விட்டார். பத்திரிக்கைக்காரர்கள் விரட்டிச் சென்று அவரை interview எடுக்க…, விவசாயத்தில் பண்ணையம் பார்க்க ஆள் இல்லாததாலும், தனக்கு விவசாயம் மட்டும் தான் தெரியும் என்பதாலும், தான் சேலத்திலேயே தங்கி விட்டதாகக் கூறுகிறார். தமிழகமே ஆச்சர்யப்பட்டுப் போயிற்று கிருஷ்ணா….

கிருஷ்ணர் : ஏன் மேகலா… இதில் ஆச்சர்யப்படுவதற்கு என்ன இருக்கிறது…? ஆண்களுக்கு மட்டும் தான் விவசாயத்தின் மீது அக்கறை இருக்குமா… பெண்களுக்கும் உண்டு மேகலா….

மேகலா : ஆமாம் கிருஷ்ணா… விவசாயம் நம்ம நாட்டுக்கு மட்டுமல்ல…, உலகத்திற்கே எவ்வளவு முக்கியமானது என்று நம்ம எல்லோருக்கும் தெரியும். அதிலும், பெண்களும் விவசாயம் பார்ப்பதை encourage பண்ண வேண்டும் என்று ‘மோடி அரசாங்கம்’ நினைத்தார்களோ…, என்னவோ…, சமீபத்தில் கோவையைச் சேர்ந்த ‘பாப்பம்மாள்’ என்ற 102 வயது பாட்டி, இன்னும் தங்கள் விவசாய நிலத்தில் பண்ணையம் பார்ப்பதால்…, அரசாங்கம், நம்ம நாட்டின் உயரிய விருதான ‘பத்மஸ்ரீ’ விருது கொடுத்து கௌரவித்திருக்கிறார்கள் கிருஷ்ணா…

கிருஷ்ணர் : Oh! வாவ்! Great மேகலா…., Great…. கொடுக்க வேண்டும்… இந்த மாதிரி விருது கொடுப்பதால், அந்த விருதுக்கே பெருமை சேர்கிறது பார்… பாப்பம்மாள்…, கோவையில் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்….

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2