பெண்களால் முடியும் - பாகம் 6

மேகலா : கிருஷ்ணா…., பவானி ஆற்றங்கரையில் விவசாயம் பார்த்துக் கொண்டிருப்பவர் கிருஷ்ணா…. மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி கிராமத்தைச் சார்ந்த பாப்பம்மாள். விவசாயத்தின் மீது கொண்ட நம்பிக்கையில், முதலில் 4 ஏக்கர் நிலம் வாங்கி, ‘இயற்கை முறை’யில் (organic) விவசாயம் பார்க்க ஆரம்பித்தார்… அது, இன்று 10 ஏக்கராக பெருகியிருக்கிறது… பிறருக்கு ஆரோக்கிய உணவு கொடுக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் விவசாயம் பார்ப்பதை அறிந்த சமூக ஆர்வலர்கள், அவரை பெருமையுடன் கொண்டாடுகின்றனர். இதைக் கேள்வியுற்ற மத்திய அரசாங்கம்…, இன்று, பாரதத்தின் உயரிய விருதான ‘பத்மஸ்ரீ’ விருது கொடுத்து கௌரவித்திருக்கிறார்கள் கிருஷ்ணா…..

கிருஷ்ணர் : விருதுக்கு ஆண், பெண் பேதம் கிடையாது. ஆனாலும்…, பாப்பம்மாளுக்கு விருது வழங்கியதில், விருது, நிமிர்ந்து, உயர்ந்து நிற்கிறது மேகலா…. வாவ்…. பெண்களால் முடியும்….

மேகலா : கிருஷ்ணா…., விருது வழங்கப்பட்ட பெண்ணைத்தானே இப்போ பார்த்தோம். பிரதமந்திரியே ஒரு பெண்ணின் காலில் விழுந்த சம்பவம் நினைவிருக்கிறதா கிருஷ்ணா…..

கிருஷ்ணர் : மறக்க முடியுமா மேகலா… ‘சின்னப்புள்ள’… இவரும், எளிய, அழகான கிராமத்தைச் சேர்ந்தவர்தானே….

மேகலா : ஆமாம் கிருஷ்ணா…. தமிழ்நாட்டிலுள்ள மதுரை மாவட்டம் ‘பில்லுச்சேரி’யைச் சேர்ந்த சின்னப்புள்ள என்ற எளிய கிராமத்துப் பெண்ணின் சமூக சேவையைப் பாராட்டி, முன்னாள் இந்தியப் பிரதமரும், பா.ஜ.க-வின் மூத்த தலைவருமான ‘வாஜ்பாய்’ அவர்கள், விருது வழங்கும் விழாவின் போது, அவரது காலில் விழுந்து வணங்கினார் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : சின்னப்புள்ள செய்த சமூக சேவை என்னவாம்….

மேகலா : மது ஒழிப்பு, பெண்களின் முன்னேற்றம் என்ற பிரிவின் கீழ், ‘சக்தி புரஸ்கார்’ என்ற மதிப்பு மிக்க விருது பெற்றார் கிருஷ்ணா… பொதுவாக, கல்யாணம் செய்து வரும் எளிமையான குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு வாழ்க்கையே போராட்டம் தானே… அதிலும், மது அருந்தும் கணவன்மார்கள் இருந்தால் சொல்லவே வேண்டாம். அந்த காலகட்டத்தில், பிலுச்சேரிக்கு விழிப்புணர்வு பிரசாரம் செய்ய வந்த மாதர் சங்கத்தினர், மற்றும் தன்னார்வ அமைப்புக்களின் பேச்சுக்களைக் கேட்டு, அவர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார். பின் தானும் கிராமம் தோறும் பிரசாரத்தில் ஈடுபட்டார். ‘தானம் அறக்கட்டளை’ தொடங்கிய களஞ்சியம் மகளிர் சுய உதவிக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டார். இதன் மூலம், வட்டிக்குக் கடன் வாங்கி, காலம் முழுவதும் கடனை அடைக்க முடியாமல் திணறும் கிராமப் பெண்களுக்கு, களஞ்சியம் இயக்கம் மூலம் உதவிகள் பெற்றுக் கொடுத்தார். இப்படிப்பட்ட இயக்கம், அந்தக் காலக்கட்டத்தில், தமிழகம் முழுவதும் பரவியது. மகளிர் சுய உதவிக் குழுக்களின் எழுச்சி ஆட்சியாளர்களால் கவனிக்கப்பட்டு, தமிழகத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது கிருஷ்ணா… இவருடைய பணி ‘டெல்லி’ வரைக்கும் சென்று பேசப்பட்டது. அப்போதையப் பிரதமர் ‘அடல் பிஹாரி வாஜ்பாய்’, ‘சக்தி புரஸ்கார்’ என்னும் மதிப்பு மிக்க விருதை சின்னப்புள்ளைக்கு வழங்கி கௌரவித்தார். அந்த விழாவின் போதுதான், போராடும் பெண்கள் மீது சின்னப்புள்ளைக்கு இருந்த அக்கறை காரணமாக, பிரதமர், அவர் காலில் விழுந்து வணங்கினார்…. தேசமே புல்லரித்துப் போய், ஒரு விநாடி சிலிர்த்துப் போனது கிருஷ்ணா….

கிருஷ்ணர் : யப்பா…. என்ன ஒரு அற்புதமான சம்பவம்… பெண்களால் மட்டுமே இன்னொரு பெண்ணுக்கு நேருகின்ற துன்பங்களை அறியவும் முடியும்…, துடைக்கவும் முடியும்… ‘பெண்களால் முடியும் மேகலா….. போராடும் பெண்களை ஒருங்கிணைத்து, அவர்களுடைய வாழ்வாதாரத்திற்கு நம்பிக்கை கொடுப்பதென்பது லேசுப்பட்ட காரியமா… ஔவையார் ஏற்படுத்திய சமாதான நடவடிக்கையை விட மேலானது என்றுதான் சொல்லுவேன்…. பிரதம மந்திரி காலில் விழுந்தது புரிந்து கொள்ளக் கூடியதே….

மேகலா : விவசாய வேலையிலிருந்த பெண்களை ஒருங்கிணைத்து, கடன் வசதி பெற்றுக் கொடுப்பதிலிருந்து, பெண்களின் உழைப்பு சமுதாயத்தின் மீதான அக்கறை போன்ற பாராட்டுக்குரிய செயல்கள் அரசாங்கத்தால் பார்க்கப்பட்டு, பெருமைப்படுத்தவும் முடிந்தது. இன்னும் எத்தனை பெண்கள், தன்னுடைய கணவரின் வேலையில், தானும் பங்கெடுத்து, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், தன் குடும்பத்தைத் தானும் தாங்கி, பிள்ளைகளைப் படிக்க வைத்து, வளர்த்து, தனக்கான கடமையைச் செம்மையாக செய்கிறார்கள்… இவர்களைப் பெருமைப்படுத்தணும் என்று ஆரம்பித்தால், ஒவ்வொரு பெண்ணும் பாராட்டப்படத்தக்கவர்களே கிருஷ்ணா….

கிருஷ்ணர் : நிச்சயமாக…. கணவன்மார்கள் வேலையில் பங்கெடுப்பார்கள் என்று சொல்லுகிறாயே…. விவசாயம் தவிர்த்து, வேற எந்த வேலைகளில் பங்கெடுப்பார்கள்…

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 5

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1