பெண்களால் முடியும் - பாகம் 12

மேகலா : கண்ணகி…, அமைதியானவள்…, அன்பானவள்…, உலகம் தெரியாத அப்பாவி. அவளை, கோவலனுக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுக்கின்றனர் பெற்றோர். குடும்பப் பொறுப்பை ஏற்று, இருவரும் சந்தோஷமாகத்தான் குடும்பத்தை நடத்தி வந்தார்கள்…. யார் கண்ணு பட்டதோ…, கோவலன் கவனம், நாட்டியக்காரியான மாதவி பக்கம் திரும்பியது… செல்வந்தனான கோவலன், மாதவிக்காக தன் செல்வம் அனைத்தையும் செல்வழித்தான். மலை போல் செல்வம், கொஞ்சம் கொஞ்சமாக குன்று போலத் தேய்ந்து, இறுதியில் கையிருப்பும் கரைந்து போனது… வாழ்க்கை வாழ்வதற்கே பொருள் தேட வேண்டும் என்ற நிலை வந்ததும், கண்ணகியிடம், ‘ஏதாவது தங்க நகை இருக்கிறதா’ என்று கேட்கிறான். புருஷன் இன்னும் நகை கேட்கிறான் என்று நினைத்து, தன் கால் சிலம்பைக் கழட்டப் போகிறாள். ‘என்னிடம் இருக்கும் கால் சிலம்பை விற்று, உங்கள் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளுங்கள்’ என்று மிகவும் மெலிதான குரலில் சொன்னாள்…. வேதனையிலும், அவமானத்திலும் நொந்து போயிருந்த கோவலன், அந்த கால் சிலம்பைப் பெற்றுக் கொண்டு, ‘என் தேவை என்பது, நம் தேவை. நாம், மதுரை நகருக்குச் சென்று, புது வாழ்க்கையை ஆரம்பிப்போம். இந்தக் கால் சிலம்பை விற்று, புதிதாய் வியாபாரம் தொடங்குவோம்’ என்று சொன்னவுடன், கண்ணகி, புதிதாய் வாழ்வை ஆரம்பிக்கும் உற்சாகத்தில், கோவலனோடு மதுரை புறப்படத் தயாரானாள்….

கிருஷ்ணர் : மதுரைக்குச் சென்று, வாழ்க்கையை ஆரம்பித்தார்களா…?

மேகலா : கிட்டத்தட்ட அப்படித்தான் கிருஷ்ணா… மதுரைக்குச் சென்றார்கள். வாழ்க்கையை ஆரம்பிக்கும் பொருட்டு, கோவலன், கண்ணகியின் கால் சிலம்பை விற்று வர, மதுரை வீதிக்கு கிளம்பினான்…. எத்தனை மன அழுத்தத்துடனும், எப்படியாவது மீண்டும் வாழ்வில் உயர்வு பெற வேண்டும் என்ற உணர்வோடும் கிளம்பினானோ, அத்தனை முயற்சிகளும் சீர் குலையும்படியாக ஒரு செய்தி, மதுரை நகரமெங்கும் காட்டுத் தீயாகப் பரவியது. ’பூம்புகாரிலிருந்து வந்த ஒரு வணிகன், அரசியாரின் கால் சிலம்பைத் திருடி விட்டானாம். அதனால், அவனுக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டதாம்’ என்ற செய்தி, நகர மக்களைக் கூட, ‘ஓ! அரசியாரின் கால் சிலம்பையே திருடினானா…., யாரவன்’ – என்று வியக்க வைத்தது… பூம்புகார்…, வணிகன்…, சிலம்பு…, திருடி விட்டான்…, என்ற வார்த்தைகள் மட்டும் கண்ணகி காதில் விழுந்தது…. அவள், அடிவயிற்றில் ஒரு தீ பற்றியது… ‘ஐயோ…, நம் கணவனும், சிலம்புடன் சென்றாரே’ என்று நினைத்து…, மற்றொரு சிலம்பையும் கையில் எடுத்துக் கொண்டு, வீதி வழியே பதைபதைப்புடனும், கண்ணீருடனும் ஓடினாள்… வழியில் சென்றவர்களிடம் விசாரிக்க…, தண்டனை கிடைத்தது தன் கணவனுக்குத்தான் என்பது உறுதியாகியது. இதை இப்படியே விடக் கூடாது என்று நினைத்து, தன் கோபமனைத்தையும் மன்னன் மீது திருப்பி, கண்ணில் கனல் பறக்க, அரண்மனைக்குச் சென்றாள்…. கிருஷ்ணா…, உலகமே தெரியாத ஒரு அப்பாவிப் பெண், தன் கண் முன்னே, கணவன் வேறொரு பெண்ணுடன் உறவு வைத்திருப்பதைத் தெரிந்தும், செய்வதறியாமல், எதிர்த்துப் பேசத் தெரியாமல் செயலற்று இருந்த பெண், தன் கணவன் மீது திருட்டுப்பழி விழுந்ததை அறிந்தவுடன், மதுரை வீதியில், பயம் என்பதை மறந்து போய், நெருப்புப் புயல் போல சென்ற காட்சி…, யப்பா…., உனக்குத் தெரியுமா…, தமிழக வரலாற்றிலேயே, முதன் முதலில் நீதிமன்றத்தின் படியேறிச் சென்று, கையில் கொண்டு சென்ற கால் சிலம்பை, மன்னனின் முன்னிலையிலேயே உடைத்துக் காட்டி, கோவலனால் திருடப்பட்டதாகச் சொன்ன காற்சிலம்பு, தன்னுடையது என்பதை நிரூபித்தாள். தவறான தீர்ப்பு சொல்லி, பிழைப்பு தேடி வந்த ஒரு வணிகனைக் கொன்று விட்டோமே என்ற குற்ற உணர்வில், மன்னனும் அவ்விடத்திலேயே உயிர் விட்டான் கிருஷ்ணா… ஒற்றைச் சிலம்புடன், கண்ணில் சீற்றமும், கண்ணீருமாய், தலை விரிகோலத்துடன், பெருமூச்சு விட்டுக் கொண்டு, நீதிமன்றத்தில் கண்ணகி நின்ற கோலம்…, வதம் செய்ய வந்த துர்கை அம்மனைப் போலிருந்தது…. அவள் கணவனுக்கு நீதி கிடைத்ததா…., அது வேறு விஷயம்… ஆனால், கணவனுக்கு அநியாயம் இழைக்கப்பட்டது என்றவுடன், அவளுக்குள் எழுந்த சீற்றம்…, மதுரையையே எரித்தது கிருஷ்ணா…. இன்று, நீதிமன்றத்தில் எத்தனையோ வக்கீல்கள் வாதாடினாலும், அவர்களுக்கெல்லாம் முன்னோடி…, நம்ம கண்ணகிதான் கிருஷ்ணா…..

கிருஷ்ணர் : கண்ணகிக்கும் முன்னோடி பாஞ்சாலி இருக்கிறாளே…. கண்ணகி நீதிக்காக வாதாடினாள். திரௌபதியோ, முறையற்ற செயலை எதிர்த்து வாதாடினாள்…. மொத்தத்தில், தேவைப்படும் போது, தென்றலைப் போல பெண்கள், புயலாய் சீறி…, ‘உண்டு, இல்லை’ என்று ஆக்கி விடுவார்கள்… பெண்களால் முடியும் மேகலா…. கண்ணகி, தன் கணவனுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக ஆக்ரோஷமானாள்…. திரௌபதியின் கதையே வேற…. தன் கணவன் மூலமாக வந்த அநீதியை தட்டிக் கேட்டு வாதாடினாள்… உனக்கு நினைவிருக்கிறதா மேகலா…..

மேகலா : மறக்க முடியுமா கிருஷ்ணா….

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 5

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1