வலிமை - பாகம் 6
கிருஷ்ணர் : வள்ளுவர் காட்டும் அந்தப் பரிமாணம்…, practical-ஆக ரொம்ப சிறப்பான விஷயம். அந்தக் குறளைச் சொல், பார்க்கலாம்….
மேகலா : “நெடும்புனலுள் வெல்லும் முதலை, அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற”
என்று சொல்கிறார் கிருஷ்ணா…. தண்ணீருக்குள்ள இருக்கிற வரைக்கும் தான், முதலை strong… யானையோ, புலியோ…, எது மாட்டினாலும், சும்மா ஒரே கடியில் கடித்து கொத்துக்கறி போட்டு விடும்…. ஆனால், அதே முதலை நீர் நிலையை விட்டு வெளியே வந்து விட்டால், மற்ற மிருகங்கள், முதலையைப் பந்தாடி விடும். அவரவர்கள்…., அவரவர் இடத்தில் இருக்கும் வரைக்கும் தான், அவர்கள் வலிமையாய் இருக்க முடியும். தெரியாத இடத்தில் மாட்டிக் கொண்டால், அந்த இடத்தின் வலிமையானவர்களை வெல்லுவது ரொம்பக் கஷ்டம் தானே கிருஷ்ணா…..
கிருஷ்ணர் : இது ரொம்ப யதார்த்தமான உண்மை, மேகலா…. அதிலும், இரண்டு நாடுகளுக்கிடையே போர் நடக்கும் போது, எதிரி நாட்டு தட்ப வெப்பம், கால நேரம்…, இவையெல்லாம் அனுசரித்துத்தான் போருக்குச் செல்ல வேண்டும்…. இரண்டாவது உலகப் போரில், சர்வ உலகத்தையும் அச்சுறுத்திக் கொண்டிருந்த, ஜெர்மனியைச் சேர்ந்த ஹிட்லரின் படை, ரஷ்யாவில், பெரும் பின்னடைவைத்தானே சந்தித்தது. அதற்குக் காரணம் என்ன…. ரஷ்யாவின் கடுமையான பனிப்புயலை ஜெர்மனி வீரர்களால் சமாளிக்க முடியவில்லை… இந்த பின்னடைவிற்குப் பிறகு, ஹிட்லர் அடுத்தடுத்து, தன் வலிமையை கொஞ்சம் கொஞ்சமாக இழக்கவில்லையா… இதைத்தான் வள்ளுவர், சிறப்பாகச் சொல்லியிருக்கிறார்… இது ‘வலிமை’யின் ஒரு சுவாரஸ்யமான பரிமாணம்….
மேகலா : இன்னொரு சுவாரஸ்யமும் இருக்கு கிருஷ்ணா…. இடம், காலத்துக்குத் தகுந்த மாதிரி, நம்மோட வலிமை கூட மெலிந்து போகுதுல்ல கிருஷ்ணா… அதே மாதிரி, ஒரு மெலிந்த உயிர் கூட, வலிமை மிக்கவர்களை, இடம் பார்த்து, நேரம் பார்த்து தட்டித் தூக்கும் காலமும் வரும் கிருஷ்ணா…
கிருஷ்ணர் : ஆமாம்…. வரும்…, வரும்….
மேகலா : ஒரு சின்ன எறும்பு யானையின் தும்பிக்கைக்குள்ளே நுழைந்து விட்டால், அத்தனை பலம் பொருந்திய யானையால் என்ன செய்ய முடியும் கிருஷ்ணா….
கிருஷ்ணர் : ஒண்ணும் செய்ய முடியாது – அலறித் துடிச்சிரும்…
மேகலா : சின்னத் துரும்பு கூட, பல் குத்த உதவும் கிருஷ்ணா…. இந்தக் கதையைக் கேள் கிருஷ்ணா…. அடர்ந்த காட்டில், சிங்கம் ஒன்று, ரொம்ப relaxed ஆக படுத்திருந்தது. சிங்கம் படுத்திருந்த இடத்திற்குப் பக்கத்தில், ஒரு எலி, தன் வளையில் வாழ்ந்து வந்தது… சிங்கம் கனைப்பதைக் கேட்டு வெளியே வந்த எலி, சிங்கத்தின் முதுகில் ஏறி, யார் படுத்திருப்பது என்று எட்டிப் பார்த்தது. அதற்குள் சிங்கம், முதுகை சிலுப்பி விட, எலி கீழே விழுந்தது. சிங்கத்திற்கு ஆச்சரியமாக இருந்தது… ‘யார்ரா நீ, இவ்வளவு தைரியமாக என் முதுகில் ஏறுகிறாய்’ என்று கர்ஜனையாகக் கேட்கவும்…, எலி கொஞ்சம் கூடப் பயப்படாமல், ‘சிங்க ராஜா…, நீங்க படுத்திருப்பது என் வளைக்கு அருகில் தான். உங்கள் குரல் கேட்டதும்…, யார் இத்தனை கம்பீரமாக கர்ஜிப்பது என்று தெரிந்து கொள்ளும் ஆவலில், உங்கள் முதுகில் ஏறி விட்டேன். என்னை மன்னியுங்கள்…. நான், இதுவரை, காட்டு ராஜாவாகிய உங்களை இவ்வளவு அருகில் என்ன…, தூரத்திலும் பார்த்தது கிடையாது… ராஜான்னா…, அது நீங்கதான்…, எத்தனை கம்பீரம்….’ என்று புகழ்ந்தது. சிங்கத்திற்கு கொஞ்சமாக கோபம் வந்தாலும், எலியைப் பார்த்து, ‘இத்தனூண்டு இருந்து கொண்டு…, எவ்வளவு பேசுகிறாய்… உன்னால் என்னெல்லாம் செய்ய முடியும்’ என்று சுவாரஸ்யமாகக் கேட்க, எலி சொல்லியது….’ராஜா’ – ஆளப் பாத்து எடை போடாதீங்க… ‘சிறு துரும்பும் பல்லு குத்த உதவும்’ – சமயத்தில் உங்களுக்கே உதவும் காலம் எனக்கு வந்தாலும் வரும்… அப்போ, என் திறமையைப் பத்தி நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்’ என்றது. சிங்கம் சிரித்துக் கொண்டே…, ‘அப்படியா! காலம் வரட்டும், பார்க்கலாம்’ என்று சொன்னது. சொன்னது போலவே…, மானுக்காக வேடன் விரித்த வலையில், சிங்கம் ஒரு நாள் மாட்டிக் கொண்டது. இதை எதிர்பாராத சிங்கம், மாட்டிக் கொண்ட கோபத்தில், கன்னாபின்னாவென்று கூச்சலிட்டு கர்ஜித்தது. இதைக் கேட்ட எலி, சிங்க ராஜா எங்கு மாட்டிக் கொண்டார் என்ற யோசனையோடு, சப்தம் வந்த திசை நோக்கி ஓடியது. சிங்கம் வலையில் மாட்டியதைப் பார்த்து, எலி அருகில் சென்று…, ’சிங்க ராஜா, கொஞ்சம் அமைதியாயிருங்கள். இந்த வலையை நான் என் பற்களால் கடித்து அறுத்து விடுகிறேன்’ என்று சொல்லி, வலையைக் கடித்துக் குதறி, சிங்கத்தை விடுவித்தது… சிங்கத்திற்கு, அப்போதான் புரிந்தது… ‘வலிமையில் மெலிந்தவர்கள் கூட, சில சமயங்களில், வலிமையானவர்களுக்கு பக்கபலமாய் இருந்து, நம்மை விட வலியவர்களாகிறார்கள்’ என்று… இந்தக் கதை உணர்த்தும் நீதி… ‘சிறு துரும்பு கூட, பல் குத்த உதவும்’ – என்பதுதான். யாரிடமிருந்து, எந்த வகையான வலுவான உதவி நமக்குக் கிடைக்கும் என்பது, நமக்கே தெரியாது…. ஆனால், அப்படிக் கிடைக்கும் உதவி, வள்ளுவர் கூறியது போல, உலகமே நம் கையில் கிடைத்தாலும், அதை விட மிகப் பெரியது… ‘ஞாலத்தின் மாணப் பெரிது’…. இல்லையா கிருஷ்ணா….
கிருஷ்ணர் : உன் பீடிகையைப் பார்த்ததும், ஏதோ… பெரிய்….ய கதை சொல்லப் போகிறாய் என்று நினைத்தேன்…. சிங்கம், எலி கதைதான் என்றாலும், சூப்பர் மேகலா…. யானையின் காதுக்குள் சென்ற எறும்பு, சிங்கத்தின் முதுகிலேறிய எலியும் உணர்த்தும் பாடம் மிகப் பெருசு… யாரையும்…, ஓ…, நீதானா… என்று சாதாரணமாக நினைத்து விடக் கூடாது… சூப்பர் மேகலா…..
(தொடரும்)
Comments
Post a Comment