வலிமை - பாகம் 7

மேகலா : கிருஷ்ணா….. ‘வலிமை’யின் சுவாரஸ்யமான பரிமாணங்களைப் பார்த்தோமல்லவா… இன்னொரு சூப்பர் சுவாரஸ்யமான பக்கமும் இதுக்கு இருக்கு தெரியுமா கிருஷ்ணா….

கிருஷ்ணர் : ஏய்…, என்னம்மா, ‘வலிமை’ என்ற ரொம்ப ஆகிருதியான ஒரு தலைப்பை, ‘ரொம்ப சுவாரஸ்யம்’ என்று சொல்லிக் கொண்டே போகிறாய்…

மேகலா : ஆமாம் கிருஷ்ணா…. ஒரு M. G. R. பாட்டு ஒன்று சொல்லவா….

‘புகழினில் போதையில்லையோ

பிள்ளை மழலையில் போதை இல்லையோ

காதலில் போதை இல்லையோ….

என்ற பாட்டைக் கேட்டிருக்கிறாயா கிருஷ்ணா…

கிருஷ்ணர் : புகழும், மழலையும், காதலும்…, போதை மட்டுமல்ல…, நெஞ்சுக்குள் வலிமையை பெருக்கும் என்று சொல்லியிருக்காங்களா….. சூப்பர்… சூப்பர்… எனக்கும் ஒரு பாரதியார் பாட்டு ஞாபகத்துக்கு வருது…

‘காற்றிலேறி விண்ணையும் சாடுவோம்….

காதற்பெண்கள் கடைக்கண் காட்டினால்’

என்று பாடுகிறார்…..

பாரதிதாசனோ…,

‘கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டி விட்டால்

மண்ணில் குமரருக்கு மாமலையும் ஓர் கடுகாம்’

என்று பாடி, காதலின் வலிமையை எடுத்துச் சொல்லியிருக்காங்க. இது காதலின் ‘வலிமை’. உனக்கு ஒண்ணு தெரியுமா மேகலா…. இன்னொரு புறம், பிள்ளைகள் எத்தனை சேட்டை பண்ணி, முரட்டுத்தனமாக இருந்தாலும்…, அம்மா…, கருப்பசாமி கோயிலிலிருந்து மந்திரிச்சி கொண்டு வந்த கயிறை கையில் கட்டி விட்டு, ‘எங்கயும் போயி சண்டை போடக் கூடாது. அப்படி சண்டை போடணும்னு தோணிச்சுனா…, அம்மாவை நினைச்சுக்கோ… இந்தக் கயிறு உன்னை, கருப்பசாமியா நின்னு காக்கும்’ என்று சொல்றாங்கல்ல…. அந்த அன்புக்கும், சத்தியத்துக்கும் வலிவு இருக்கிறது… நெடுந்தூரம் பயணப்பட்டுப் போகும் முரட்டுப்பிள்ளை…, தான் வந்த வேலையை மட்டும் முன் வைத்து, முரட்டுத்தனத்தை, கெட்ட பழக்கங்களை விட்டு விடுவான்…. நிறைய கதைகளில் படித்திருக்கிறோம். மகாத்மா காந்தி, லண்டனுக்கு மேல்படிப்புக்காகச் செல்லும் முன், தன் அம்மாவுக்கு சத்தியம் செய்து தந்ததால்தான், மாமிசத்தை, தன் வாழ்நாள் முழுக்க சாப்பிடாமல் இருந்தார். இதையெல்லாம் விட, ஆண் பெண் காதலுக்கு ஒரு ‘பவர்’ இருக்கு மேகலா…. நானெல்லாம், ‘நப்பின்னை’யைத் திருமணம் செய்து கொள்ள, ‘ஏழு காளைகளை’ அடக்கியிருக்கிறேன்….

மேகலா : கிருஷ்ணா…, இதை நீ இவ்வளவு ரசிச்சி சொல்லும் போது, எனக்கே, ‘நம்மையெல்லாம் இப்படி யாரும் love பண்ணலியே என்றிருக்கு கிருஷ்ணா….

கிருஷ்ணர் : காதலினால், மக்காக இருந்தவனும், கல்வியில் சிறந்தவனாகியிருக்கிறான்.. செல்வச் செழிப்பானவனும், சீரழிந்து போயிருக்கிறான்… பெண்களின் கடைக்கண் பார்வையை பார்த்ததும்…, இன்றைக்கும் காளையை அடக்கப் புறப்படுபவர் எத்தனை பேர்… ‘இளவட்டக்கல்’ தூக்குபவர் எத்தனை பேர்… இந்த வலிமையான காதலினால், திருமணம் முடிந்து, குழந்தை குட்டி என்று ஆன பிறகு, அந்த மழலை கொடுக்கும் ’பொறுப்பு’…. எப்பேர்ப்பட்ட ஊதாரியையும் குடும்பஸ்தனாக்கி விடும். அன்பு, பாசம், காதல்…, இவையெல்லாம் மனிதன் கையில் மாட்டி விடப்படும் invisible விலங்கு… இது என்றும் அவிழ்க்க முடியாத…, அவிழ்க்க விருப்பமில்லாத ‘புதிர் விலங்கு’…..

மேகலா : வாவ்…! சூப்பர் கிருஷ்ணா…. மென்மையான காதலுக்கும், பாசத்திற்கும், சத்தியத்திற்கும், ஒருவரின் குணங்களையே மாற்றக்கூடிய வலிமை இருக்கிறது என்பது மிகப் பெரிய அதிசயம் தான் கிருஷ்ணா… நம்ம உலக வாழ்க்கை முறையில், எனக்கு எப்பவும் ஒரு விஷயம் ரொம்ப அதிசயப்படும் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : எது…? காதலைப் பற்றியா அதிசயப்படுகிறாய்….?

மேகலா : இல்ல கிருஷ்ணா…. மனிதன் உருவான காலத்தில் இருந்தே…, மனிதர்கள் தனியாக வாழ்வதை விரும்புவதே இல்லை. ஆதி காலத்து மனிதர்கள், காடுகளில் வசித்தாலும்…, நீர்நிலைகளுக்கருகில் வசித்தாலும், கூட்டம் கூட்டமாகத்தான் வசித்திருக்கிறார்கள். இதன் காரணம் என்னன்னு நீதான் விளக்கிச் சொல்லேன் கிருஷ்ணா…..

கிருஷ்ணர் : கேள்வி கேட்டாலும்…, அர்த்தமுள்ள கேள்விதான் கேட்டிருக்கிறாய்… மனிதர்கள் மட்டுமல்ல மேகலா… விலங்குகள் கூட கூட்டம் கூட்டமாகத்தான் வசிக்கும்… யானைகளின் அணிவகுப்பு…, மான்களின் கூட்டம்…, குரங்குக் கூட்டம்…, சிங்கங்களின் குடும்பம்…, என்று எந்த விலங்கானாலும், கூட்டம் கூட்டமாகத்தான் வசிக்கும். அதற்கு ஒரு முக்கிய காரணம்…, ‘பாதுகாப்பு’; வாழ்க்கையின் ஒழுங்குமுறை; இது உயிரினங்கள் அனைத்து பேருக்கும் பொருத்தமானதுதான்…. ஆதி காலத்து மனிதர்கள், இயற்கையை எதிர்த்துப் போராட வேண்டும்…. அடுத்து வந்தவர்கள்…., எதிரிகளை எதிர்த்துப் போராட வேண்டும்…. இன்றுள்ளவர்களோ…, உணவுக்கும், உறைவிடத்துக்குமே போராட வேண்டும்… அப்போ…, கூட்டமாக வசித்தால் மட்டுமே…, தன்னை பயமுறுத்தும் தடைகளை எதிர்த்துப் போராடும் ‘வலிமை’ கிடைக்கும். ஒரு சிங்கம், தன் இரையை வேட்டையாடும் போது…, ஒரு குழுவாக சூழ்ந்து கொண்டுதான் வேட்டையாடுகிறது… ஒரு யானைக்குட்டி ஏதாவது குழிக்குள் விழுந்து விட்டால், யானைக் கூட்டமே கூடி நின்று குட்டியை வெளியே கொண்டு வருகிறது…. கூட்டமாய் வாழ்வது, அந்தக் கூட்டத்திற்கு பெரும் பலம்…. இந்தத் தத்துவத்தைப் புரிந்ததால்தான், மனிதர்கள் கூட்டமாக வாழ்கிறார்கள்…. காட்டில் வாழும் மகரிஷிகள் கூட, பலர் ஒன்று சேர்ந்து, நீர்நிலைகளுக்கருகில் ஆஸ்ரமம் அமைத்து வாழ்வதாகத்தான் நாம் ராமாயணம், மகாபாரதக் கதைகளில் படித்திருக்கிறோம்… மனிதர்களுக்கு, தனக்குள் என்ன பலம் இருக்கிறது…, அது புத்தி பலமா…, அல்லது உடல் பலமா…, என்று தெரிந்து கொள்வது கூட, கூட்டமாய் வாழ்ந்தால்தானே தெரிந்து கொள்ள முடியும்….

மேகலா : ஆமாம்ல….

கிருஷ்ணர் : ஆமாவா…., இல்லையா….

மேகலா : ஆமாம் கிருஷ்ணா…. என்றும் கூட்டமாய் வாழ்வதுதான், எல்லோருக்கும் பலம்…, ‘வலிமை’….

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 5

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1