உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2

கிருஷ்ணர் : இதிகாசம், புராணங்கள் இவற்றிலிருந்து, மனிதனின் உயர்ந்த உள்ளத்தைக் கூறேன்….

மேகலா : இதற்கு எதற்கு இதிகாசத்தைப் புரட்டணும்… இருந்தாலும், அதையும் சொல்லுகிறேன்… சிம்பிளா…, போற போக்குல பஞ்ச் டயலாக் மாதிரி சொன்ன பழமொழி போதும் கிருஷ்ணா…, நம் முன்னோர்களின் உயர்ந்த உள்ளத்தைக் காட்ட…

‘சிறுகக் கட்டி பெருக வாழ்’ – என்று நம் முன்னோர்கள், நமக்கு யோசனையாகச் சொல்லும் பழமொழி… சிறுக, சிறுக சேமித்து, பெருமையாய் வாழணும் என்று சொல்லும் போது, சிக்கனம், சேமிப்பு…, பெருமையாய் வாழ வாழ்த்து என்று, வாழ்க்கையை வாழும் முறையை, இவ்வளவு எளிமையாக, உயர்வாக யாரால் சொல்ல முடியும்… நம்ம பெருசுகளுக்கு, வாழ்த்துவதற்கு பெரிய காரணம் எதுவும் தேவையில்லை கிருஷ்ணா… வாழ்த்த மனசு இருந்தால் போதும்.

‘ஆல் போல் பெருகி அருகு போல் செழிக்கணும்’ – என்று மனம் நிறைந்து வாழ்த்துவார்கள் கிருஷ்ணா…

கிருஷ்ணர் : ஆஹா… ஆலமரம், எத்தனை பேர் வந்தாலும்…, நிழல் கொடுத்து இளைப்பாற இடம் கொடுக்கும். அது தவிர, ஆலமரத்தின் விழுதுகளும் கீழிறங்கி, அடிமரத்தின் வேருக்கு பலம் கொடுக்கும்… அருகம்புல், தான் முளைத்த இடமெல்லாம் பரவி, சுட்டெரிக்கும் வெயிலானாலும், அதன் மீது நடப்பவர்க்குக் குளிர்ச்சியூட்டும். ‘ஆல் போல் பெருகி, அருகு போல் செழித்து தழைக்க வேண்டும்’ – என்று வாழ்த்துவதற்கு எவ்வளவு பெரிய மனசு வேண்டும். இந்தப் பழமொழிகளெல்லாம் யார் எழுதி இருப்பார்கள்… ‘ராமாயணம்’, வால்மீகியாலும், கம்பராலும் எழுதப்பட்டது… ‘மகாபாரதம்’ வியாசரால் எழுதப்பட்டது என்பதை நாம் அறிவோம்… ‘திருக்குறள்’ என்றால் வள்ளுவர்… ‘பெரிய புராணம்’ என்றால் சேக்கிழார் என்று உடனே நாம் சொல்லி விடலாம்… ஆனால், பழமொழியோ, எந்தெந்த காலங்களில், மனது நிறைந்தவர்களும், எண்ணங்களால் உயர்ந்தவர்களும், வாழ்ந்து பார்த்தவர்களும், வாழ்வை உணர்ந்தவர்களும்…, இன்னும் சுவாரஸ்யமான பெரியோர்களால் சொல்லப்பட்டது என்பதை யோசிக்கும் போது…, எனக்கு என்ன தோணுது தெரியுமா மேகலா….

‘சொல்லில் உயர்ந்தது, தமிழ்ச் சொல்லே’ – என்ற பாரதியாரின் வார்த்தைகள் எவ்வளவு ஆழமானது என்று கூத்தாடத் தோணுது….

மேகலா : கிருஷ்ணா…, நீ இதற்கே இப்படி கூத்தாடுறயே…

‘கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு’ – என்றுதானே கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவோம்… இதனைக் கேட்ட இன்னொருவர் சொல்லுவதைப் பார் கிருஷ்ணா…. ‘சும்மா படிச்சு பட்டம் வாங்கினா மட்டும் பத்தாது… உங்க படிப்பு…

‘கற்றது கையளவு; கல்லாதது உலகளவு’ – என்று போற போக்குல சொல்லி…, பட்டப்படிப்போட நிறுத்திராத…, உலகம் கற்றுக் கொடுக்கும் உண்மைகளை தினந்தோறும் கற்று வாருங்கள்… செல்லும் இடம் தோறும் சிறப்படையுங்கள்… என்று சொல்லி விட்டுப் போயிருக்கார்…. இது எத்தனை ஆழமான, அழகான உண்மை… நம்மை, கல்வி கற்க, உலகின் வரலாறுகளை அறிந்து கொள்ளத் தூண்டும் ‘தூண்டுகோல்’ கிருஷ்ணா…. வாழ்க்கையில், மிகப் பெரிய அனுபவங்களை கடந்து வந்தவர் சொல்லிய பழமொழி, அவருடைய பரந்த மனதையும், விரிந்த அறிவையும் எடுத்துக் காட்டுகிறதா இல்லையா….

கிருஷ்ணர் : நிச்சயமாக…. ஆதாரத்துடன் நீ சொல்லும் போது, மறுக்க முடியுமா…? நம்முடைய முன்னோர்கள், கல்வியில் சிறந்தவர்கள், திறமை வாய்ந்த அனுபவஸ்தர்கள்… தங்களுடைய நல்ல எண்ணங்களை…, தான் அறிந்த தகவல்களை, எப்படியாவது அடுத்தவர்கள் அறிவதற்காக, பழமொழியாகவோ, கதைகளாகவோ, இலக்கியமாகவோ…, எப்படியாவது பதிவு செய்து விடுகிறார்கள்… ஏன்…, ஆதி மனிதன் கூட, குகைகளிலும், கல்பாறைகளிலும்…., தான் தெரிந்து கொண்ட இயற்கை ரகசியத்தை செதுக்கி வைத்து, அடுத்தவர்களை விழிப்புடன் இருக்கச் செய்திருக்கிறானே… ஆதி காலத்து மனிதனிலிருந்து…, இன்று வரை, புதிய கண்டுபிடிப்பாளர்கள், அறிவில் சிறந்தவர்கள்…, உயர்ந்த உள்ளம் கொண்டவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள்…

மேகலா : பழமொழி போலவே, கதைகளின் வாயிலாகவும், சிறந்த நீதிகளையும், உயர்ந்த தர்மங்களையும் எடுத்துக் கூறிய கதாசிரியர்களை நாம் பாராட்டியே ஆகணும் கிருஷ்ணா… அதிலும், குறிப்பாக, பஞ்சதந்திரக் கதைகள் நமக்கு எடுத்துச் சொல்லும் நீதிகள்…, தர்மங்கள்…, அடேங்கப்பா… கிருஷ்ணா…, உனக்கு ஒண்ணு தெரியுமா… இந்தக் கதைகளில் வரும் நீதிகளை, மனிதன் கேட்பானோ, மாட்டானோ என்று பயந்த கதை சொல்லுபவர்…, விலங்குகள் பேசுவது போல பேசி, நீதிகளை எடுத்துச் சொல்லும் விதம்…, அட்டகாசம் கிருஷ்ணா….

‘ஒற்றுமை என்றும் பலமாம்’ – என்று அவ்வைப்பாட்டி நறுக்கென்று சொன்னார். கதை சொல்பவர்…, ‘ஒற்றுமையான நான்கு மாடுகள், தன்னை எதிர்த்து வருவது சிங்கமாக இருந்தாலும், நான்கு மாடுகளும் ஒன்று சேர்ந்து சிங்கத்தையே விரட்டி விடுமாம்… இதைப் பார்த்த நரி, சிங்க ராஜாவிடம் ஒரு யோசனை சொல்லியது. அதன்படி, நான்கு மாடுகளுக்குள்ளும் சண்டையை மூட்டி விட, அவர்கள் தனித்தனியாக காட்டில் மேய்ந்து திரிந்தார்கள்… தனியாய்த் திரிந்த மாடுகளை, சிங்கம், சுலபமாக அடித்துக் கொன்றது’ என்று கதையைக் கொண்டு போகிறார்…. இந்தக் கதைகளை, சின்ன வயதிலேயே குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லும் பொழுது, குழந்தைகளுக்குள், ஒற்றுமை உணர்வு பலமாக, விதையாக ஊன்றப்படுகிறது கிருஷ்ணா… ரொம்ப நாசூக்காக.., அதோடு ரொம்ப சுலபமாக, ஒரு உயர்ந்த கருத்தை, மக்களிடம் சொல்வதற்கு, எத்தனை தெளிவு இருக்கணும்…. அறிவு, திறமை…, எல்லாவற்றுக்கும் மேலாக, உயர்ந்த மனசு இருக்கணும்…. யார் எப்படி வாழ்ந்தால், நமக்கென்ன என்று போகாமல், மக்களுக்குத் தேவையான நீதி, நியாயங்களை, சின்னப்புள்ளைகள் கூட கேட்டுக் கொள்ளும் வகையில் சொல்பவர்களுக்கு ஒரு பெரிய salute கிருஷ்ணா… மகாபாரதம் முழுக்க எடுத்துச் சொல்லப்படும் நீதிகள், இப்படிப்பட்ட கதைகள் மூலமாகச் சொல்லப்பட்டிருக்கு கிருஷ்ணா….

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 5

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1