உள்ளத்தனையது உயர்வு - பாகம் - 4
மேகலா : அடுத்து, வெடுக்கு வெடுக்குனு பேசுறவங்க…., எதைக் கேட்டாலும், எடுத்தெறிஞ்சி பேசுறவங்க…, முதல் தடவை பார்க்கும் போதே வெறுப்பு வரும் மாதிரி நடந்து கொள்பவர்கள்…, உயர்ந்த உள்ளம் கொண்டவர்களாக இருக்க முடியாது கிருஷ்ணா….
கிருஷ்ணர் : ஏன் அப்படிச் சொல்ற… சில சமய சந்தர்ப்பங்களில், நல்லவங்க கூட, ஏதாவது பிரச்னை காரணமாக, மனம் தடுமாறிப் போகலாம்…. அதனால் அவர்கள் எரிச்சலாகப் பேசலாம்… அந்த நேரத்துல நீ அவங்கள பார்த்து…, இப்படிப்பட்டவங்க மோசமானவங்களாத்தான் இருப்பாங்க என்று எப்படிச் சொல்லுகிறாய்… எனக்கென்னவோ, நீ அவசரப்படுகிறயோ என்று தோணுது மேகலா….
மேகலா : இல்ல கிருஷ்ணா… எந்த situation-லும் பொறுமையாக பதில் சொல்பவர்கள் இருக்கும் போது, சாதாரணமாகப் பேசும் போதே…, ‘ஏண்டா இவங்க கிட்ட பேசுகிறோம்’ங்கிற மாதிரி பேசினால், நமக்கு எப்படி கிருஷ்ணா, அவர்கள் மீது மரியாதை உண்டாகும்…. ஒருவருடன் பேசும் போது, நமக்கு உரிமை வேண்டாம், நட்பு வேண்டாம்…, மரியாதை கூட வேண்டாம். ஆனால், வெறுப்பு ஏற்படாமல், சகஜமான மனநிலை கட்டாயம் இருக்க வேண்டும் அல்லவா…. அப்படி, சகஜநிலை இருந்தால்தான், அடுத்து நட்புடன் பழகுபவர்களிடம் நமக்கு நம்பிக்கை வரும்… சில கருத்துக்களை share பண்ணணும்னு தோணும். அந்த உறவு, அவர்கள் உயர்ந்தவர்களா, இல்லையா என்று எடுத்துக் காட்டும்.
கிருஷ்ணர் : அப்படிங்கறயா… நீ சொல்றதும் ‘சரி’ என்பது மாதிரிதான் இருக்கிறது. ஆனாலும், சில பொறுப்பில் இருப்பவர்கள், தங்களை சந்திக்க வரும் நபர்களின் அறியாமையினாலோ, ஒண்ணுமே புரிஞ்சிக்க முடியாத தன்மையாலோ, ‘எல்லாமே இவரே பார்த்துக்குவார்’ என்ற மெத்தனத்தினாலோ, தாங்கள் கறாராக இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு…, அதனால், கோபத்தை தன் குணமாக மாற்றிக் கொண்டிருக்கலாம்… இவர்கள், உண்மையில் பலருக்கு நன்மையைச் செய்தவர்களாக இருந்திருப்பார்கள். அவர்களின் முகமூடிதான், எரிச்சலான குணம்… இவர்களை எப்படி, நல்ல மனம் படைத்தவர்கள் இல்லை என்று சொல்ல முடியும்… சிலர், சொன்னதையே, திரும்பத் திரும்ப சொல்லுவார்கள்…, அல்லது, பொய்யை விடாப்பிடியாக கூறி, உண்மையாக்கப் பார்ப்பார்கள். இவர்களிடம், கண்ணியமாகவா நடந்து கொள்ள முடியும்…? கறாராகத்தான் இருக்க முடியும்….
மேகலா : இருக்கலாம் கிருஷ்ணா… நமக்கு, அரசாங்க அலுவலகத்திலோ…, இல்லை வேறு ஒரு பொது நிறுவனத்திலோ வேலை இருக்கும் போது, அதிகாரிகள் எரிச்சலாகப் பேசுவதைப் பார்த்திருக்கிறோம். அதெல்லாம் counter-க்குள்ளே இருக்கும் போது மட்டும் தானே பேசணும்… அதை வாடிக்கையாளர்கள் பொறுத்துக் கொள்ளத்தான் செய்வார்கள்… ஆனால், நான் சொல்லுவது, நம்மிடையே வாழ்பவர்கள்…, உதாரணத்திற்கு, சில காய்கறிக் கடைக்காரர்களோ, தெருவோரத்து வியாபாரிகளோ…, நாம் பொருளைத் தொடும் முன்னமேயே, ‘அம்மா, தொடாதீங்க; அப்படியே வாங்குங்க’ என்று கறாராகப் பேசுவாங்க. அதிலும், குறிப்பாக, ‘சந்தை’ என்று சொல்லப்படும் திறந்த வெளி மார்க்கெட்டில், வியாபாரிகள் ஏக வசனத்தில் பேசுவதும், வாங்குபவர்களை, தொட்டு வாங்க அனுமதிக்காததும், நம்மை அடுத்த கடைக்கு நகரச் செய்து விடும் கிருஷ்ணா…. இது, உதாரணத்திற்குச் சொன்னேன்… இதே போல, எந்தத் துறையிலும், எரிச்சலாகப் பேசுபவர்களை, நம்மால் அனுசரிக்க முடியாது கிருஷ்ணா… அவர்களுடைய உள்ளத்தின் தன்மையைக் கூட அறிந்து கொள்ள முடியாது….
கிருஷ்ணர் : ‘வியாபாரிகள்’, அதிலும் சந்தை வியாபாரிகள் கொஞ்சம் கறாராக இருப்பது அவசியம் தானே. வருபவரெல்லாம் தங்கள் பொருளை நசுக்கிப் பார்த்தால்…, பொருள் எப்படி விற்பனையாகும்… விற்பதற்கு, பொருளின் தரம் ரொம்ப முக்கியம் அல்லவா…. இருந்தாலும், எரிச்சலையே தன்னுடைய குணமாகக் கொண்டவர்கள், உயர்ந்த உள்ளம் என்ற தகுதியை அடைய மாட்டார்கள் என்ற உன் வார்த்தையை ஏற்றுக் கொள்கிறேன்… ஒன்று சொல்கிறேன் கேள்… உயர்ந்த உள்ளம் கொண்டவர்கள், தான் இனிமையாகப் பேசி, தன் உயர்ந்த உள்ளத்தைக் காட்ட வேண்டும் என்று நினைத்து செயல்பட மாட்டார்கள்… நிஜமாகவே நல்ல எண்ணம் கொண்டவர்கள், தன்னுடைய அக்கறையாலும், திறமையாலும், தன்னுடைய செயலைச் செய்து கொண்டே இருப்பார்கள். அந்தச் செயலின் பயனை அடைந்தவர்கள், ‘எங்கிருந்தாலும் அவன் நல்லா இருக்கணும்’ என்று வாழ்த்தும் போது தான், தாமரைப் பூவின் மலர் நீட்டம், வெளியே தெரிந்து, பூ பளிச்சென்று பூத்தது தெரியும்…
மேகலா : ஆமாம் கிருஷ்ணா! நீ சொல்வது 100% உண்மை கிருஷ்ணா…. நல்லவர்கள் யாரும், நான் அதைச் செய்தேன்…, இதைச் செய்தேன் என்று பீற்ற மாட்டார்கள். அவர்கள் பாட்டுக்கு அவர்கள் வேலையைச் செய்து கொண்டே இருப்பார்கள். உலகம் அவர்கள் செயலைப் பராட்டும் போது…, வானளாவிய புகழ் வெளிப்பட்டு, அவர்கள் பெருமை பேசும்….
கிருஷ்ணர் : சரி! இன்னும் வேற ஏதாவது route இருக்கா….
(தொடரும்)
Comments
Post a Comment