உள்ளத்தனையது உயர்வு - பாகம் 6
கிருஷ்ணர் : நீ, இப்போ அரசியலில் உள்ளவர்களைப் பற்றி பேசுகிறாய் என்று எடுத்துக் கொள்கிறேன்… நான் சொல்லுவதைக் கவனமாகக் கேள்…. இன்றைய அரசியல்வாதிகளை கொஞ்ச நேரம் ஒதுக்கி விட்டு, ராஜ ராஜ சோழனை…, அவனுடைய அரசியல் போராட்டங்களை நினைத்துப் பார். ‘சோழ வள நாடு சோறுடைத்து’ என்பது பொன்மொழி. சோழ நாடு, காவிரியால் வளம் பெற்றதால், பழமொழி ஏற்பட்டதா…, மன்னர்கள், ஒரு சதுர அடி நிலம் கூட, விவசாயம் பார்க்காமல், சும்மா இருந்து விடக் கூடாது என்று தீவிரமாய் கண்காணித்ததால் ஏற்பட்டதா…, ‘தொன்னையால், நெய் ஒழுகாமல் இருந்ததா…, நெய் நிரம்பி வழிந்ததால், தொன்னைக்குப் பெருமையா’ என்று இரண்டும் பெருமை பெற்றது போல, சோழ நாடு மன்னர்களின் கண்காணிப்பாலும், காவிரியின் அரவணைப்பாலும், அன்னபூரணி, மனமகிழ்ச்சியாய் குடியிருக்கும் நாடானது…. குறிப்பாக, ராஜ ராஜ சோழனுடைய வரலாற்றுக் குறிப்பில், விவசாயப் பெருமக்கள், விவசாயம் பார்க்காமல், நிலத்தை தரிசாகப் போட்டு வைத்திருந்தால், நிலத்தை அரசாங்கம் எடுத்துக் கொள்ளும் என்று கண்டிப்பான சட்டம் போடப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது… இதனால் என்ன தெரிகிறது என்றால்…., ஒரு விவசாயி கூட, பண்ணையம் பார்க்காமல் சும்மா இருக்கக் கூடாது என்று கடுமையான சட்டம் போட்டிருந்தார்கள் என்று வரலாறு கூறுகிறது. இன்று இப்படி சட்டம் போட்டால்…, அரசாங்கம் கொடுமை செய்வதாகப் போராட்டம் வெடிக்கும்… ஆனால், அன்று…, சோழ நாடு, அன்னபூரணியின் சொர்க்கவாசலாக இருந்திருக்கிறது. மன்னனின் கடுமையான சட்டம்…, நாட்டை செழிப்பாக்கியது. இது மட்டுமல்ல…, ராஜ ராஜ சோழன் காலத்தில், இலங்கை வரைக்கும் சென்று, வெற்றிக் கொடி நாட்டியிருக்கிறார். அந்த நேரத்தில், இங்குள்ள தஞ்சையில், என்ன மாதிரி அரசியல் தந்திரங்கள் நடந்திருக்கும் என்று நம்மால் ஓரளவு யூகிக்க முடிகிறது…. அரசியல் தந்திரங்களை முறியடித்து, நாட்டின் வளத்தைப் பெருக்கும் வேலையையும், ஓய்வில்லாமல் செய்து வந்த மன்னன் நிம்மதியாகவா இருந்திருப்பான்… நித்தமும் வளர்ச்சி, வளர்ச்சியைச் சுற்றிப் படர்ந்திருக்கும் அரசியல் சாணக்கியத்தனம்…, இதற்கு நடுவில், தஞ்சை பெரிய கோயில் கட்டும் பணி… இப்படித்தான், ராஜராஜ சோழன் காலம், பரபரப்பாக இயங்கியது. இன்று நாம் மன்னனுடைய முழுமையான அரசியல் வரலாற்றை தெரிந்து கொண்டோமா என்றால்…, அது நமக்குத் தெரியாது…. ஆனால், சாசனம் கொடுக்கும் தகவல்களின்படி, ராஜராஜ சோழன் வாழ்ந்த காலத்தில், தான் நல்லவனா, கெட்டவனா என்று அவனே தெரிந்து கொண்டதில்லை. ஆனால், மன்னன் மிகச் சிறந்த நல்லாட்சியைத்தான் தந்திருக்கிறான் என்பதுதான், நாம் அறிந்து கொள்ளும் உண்மை. மன்னர்கள், தங்களுடைய காலத்தில், பல எதிர்ப்புகளுக்கிடையே, நாட்டையும், நாட்டின் வளர்ச்சியையும் பாதுகாக்கிறார்கள். அப்படிச் செய்யும் போது கடுமையாக நடந்து கொள்ளத்தான் வேண்டும். அதுதான் அவர்களை உயர்த்தி விடும்… இது ஒருபுறமிருக்க, உயர்ந்த மனசு, உயர்ந்த உள்ளம் என்பது, சாதாரணமாக, ஒரு சம்பவத்தைப் பார்த்து விமர்சிப்பதாலோ, ஒரு காட்சியைப் பார்த்து ரசிப்பதாலோ, மற்றவர்களைக் குறை சொல்வதாலோ, நண்பர்கள் சேர்ந்து நட்பு பாராட்டுவதாலோ வருவது கிடையாது… நண்பர்கள் ஜாலியாக அரட்டை அடிக்கலாம். ஆனால்,
‘உடுக்கை இழந்தவன் கை போல, ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு’
நண்பனுக்கு பிரச்னை என்றால்…, உண்மையாகத் தோள் கொடுக்க வேண்டும்… ரசனையோடு வாழ்வது நல்லதுதான். ஆனால், பிறர் மனம் மகிழும்படியாக நாம் செய்யும் செயல் இருக்க வேண்டும்… பிறத்தியாரைப் பற்றிக் குற்றம் கூறுவதையும், விமர்சிப்பதையும் விட…, அவர்களின் பிழைகளுக்கு solution சொன்னாயானால், அந்த decision உன்னுடைய மனத்தின் உயரத்தை…, இன்னும் உயர்த்திக் காட்டும்….
மேகலா : நீ சொல்வதும் ரொம்ப சரி, கிருஷ்ணா….உயர்ந்த உள்ளம் படைத்தவர்கள்…, ‘நாம், நல்லவனா, கெட்டவனா…, என்பது கூட அறிய முடியாத போராட்டத்துடன் தான் வாழ்கிறார்கள்’ என்று நீ சொன்னது 100% உண்மை கிருஷ்ணா… சும்மா…., வளவளன்னு பேசுறதுன்னால, நாம உயர்ந்தவர்களாக முடியுமா… என்றெல்லாம் நீ சொல்லும் போது, எங்களைச் சுற்றி நடக்கும் சம்பவங்களையும், மனிதர்களின் நடவடிக்கைகளையும்…, நீ எப்படி அளந்து வைத்திருக்கிறாய்… இன்னொரு விஷயத்தையும் எனக்கு விளக்கிச் சொல்லு கிருஷ்ணா…
கிருஷ்ணர் : என்ன விஷயத்தை விளக்கணும்….
மேகலா :
‘அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
அன்னையாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்’
என்று மகாகவி பாரதியார், சிறந்த புண்ணியம் எதுவென்று, கல்வியின் பெருமையை உரத்துக் கூறுகிறார்…. அப்படின்னா…, அன்னதானம் செய்தலும், கோயில் கட்டுவதும் புண்ணியம் இல்லையா கிருஷ்ணா….
கிருஷ்ணர் : அப்படீன்னு யார் சொன்னது….
(தொடரும்)
Comments
Post a Comment