தன்னம்பிக்கை - பாகம் 6 (நிறைவுப் பகுதி)

கிருஷ்ணர் : பாண்டவர்கள் கதை வேறு… எல்லோருக்கும் தெரிந்தே வனவாசம் சென்றார்கள்… பதின்மூன்று வருடங்களாக…, நாடும் நகரமும், நல்லவர்களும் அவர்களுக்காகக் காத்திருந்தனர். ஆனால், ஒரு சிற்றரசரோ…, பேரரசரோ, தன் ஆட்சியைப் பறி கொடுத்தால்…, தலைமறைவு வாழ்க்கையை…, தன் பகுதி மக்களுக்கே தெரியாமல் தான் வாழ முடியும்… உதாரணத்திற்கு, மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனை உனக்குத் தெரியுமா… அவனுடைய இயற்பெயர், ‘மாறவர்மன்’. தன்னுடைய பெயரே, ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ என்று மாறுமளவுக்கு, சோழர்களிடமிருந்து தன்னுடைய நாட்டை மீட்பதற்கு, கிட்டத்தட்ட 23 ஆண்டுகள் பொறுமையாகப் போராடித்தான் அடைந்திருக்கிறான். தன்னுடைய நாடு, சோழர்களிடம் பறி போன பின், 23 ஆண்டு காலம் கழித்துப் போய், அவர்களிடம் பொறுமையாகவா கேட்டுப் பெற்றிருப்பார்…

மேகலா : இல்லை…, ஆனால், எனக்கு, இது எப்படி சாத்தியமாயிற்று என்பதுதான் என் சந்தேகமே…

கிருஷ்ணர் : சரி…, உனக்கு வேற மாதிரி கேள்வி கேட்கிறேன். உன்னுடைய ஒரு பொருளை நீ இழந்திருந்தால்…, அல்லது உன்னால் வாங்க முடியாத பொருளை வாங்க வேண்டும் என்றால், என்ன செய்வாய்…?

மேகலா : கிருஷ்ணா…, என்னைப் போன்றோருக்கு, அதிக பட்சம், ‘சொந்த வீடு’ என்ற கனவு இருக்கும்… ஆனாலும், எப்போதும் அதைக் கனவாகவேதான் எங்களால் காண முடியும்… படுக்க இடம், மேலே கூரை, குளிக்க இடம், சமைக்க ஒரு சின்ன அடுப்பு என்று இருந்தால் மட்டும் போதும் என்று தினம் தினம் வெந்து வெந்து, பெருமூச்சு விட்டுக் கொண்டு, முழிச்சிக்கிட்டே கனவு காணுவோம்… திக்குத் தெரியாத எங்கள் வாழ்க்கையில் திசை காட்ட கடவுள் மட்டும் தான் இருக்கிறார் என்ற நினைப்பு வந்த பிறகு, தூங்கும் போதும், முழிக்கும் போதும், மூச்சு விடும் போதும், சோறு சாப்பிடும் போதும்…, தண்ணி குடித்தால் கூட, ‘கடவுளே, எனக்கு படுத்துத் தூங்க ஒரு வீடு இருந்தால் போதும் என்ற நினைப்பைக் கொண்டு வந்து, மறுபடியும் மறுபடியும், இதே சிந்தனையாக இருந்து…, ஒரு நாள் கனவு நனவாகும்…, திசை தெரியும் கிருஷ்ணா… அந்த நாளில், வெறும் செங்கலும், கல்லும், மண்ணும் கொண்டு கட்டிய வீடு, சொர்க்கமாகத் தெரியும் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : இதுதான்… இதைத்தான் ‘வைராக்கியம்’ என்று சொல்லுகிறோம்… வீடு கட்டும் உன்னுடைய கனவு…, மாறவர்மனுக்கு, மதுரையை மீட்கும் லட்சியமாகிறது… சதாசர்வ நேரமும் கடவுளிடம் மன்றாடிய உன்னுடைய தவம்…, சுந்தரபாண்டியனுக்கு, மக்களைத் திரட்டி, போர்ப்பயிற்சி கொடுத்து, தளவாடங்களை சேகரித்த போராட்டமாகிறது…. வீடு கட்டிய உன்னுடைய சாதனை…, மாறவர்மனுக்கு, மதுரையை மீட்டுத் தருகிறது… பொதுவாக, ஒரு லட்சியம்.., அதற்கான தவம்.., அதை நிறைவேற்றும் வைராக்கியம்…, இவையெல்லாம் தன்னம்பிக்கையின் பரிமாணங்கள்….

மேகலா : சூப்பர் கிருஷ்ணா…., நீ சொன்ன விளக்கம்…, பிரமாதம் கிருஷ்ணா… ஏ யப்பா.., இதுக்கு மேல, ‘எனக்கு சந்தேகம்’, ‘புரியல’ன்னு நான் சொன்னால்…, என்னை விட ‘மக்கு’ வேற யாரும் இருக்க முடியாது கிருஷ்ணா…

கிருஷ்ணர் : நான் சொல்லணும்னு நினைத்தேன்…, என்னடா, இவ்வளவு ‘மக்கா’ கேக்குறாளே…, வைராக்கியத்தைப் பற்றி மறந்துட்டாளோ…, என்று கூட யோசிச்சேன். அதனாலதான் உன் சொந்தக் கதையைத் தூண்டி விட்டேன்… யப்பா…, இப்பவாவது புரிஞ்சுதே…. தன்னம்பிக்கை உள்ள மனிதர்களிடம். சோதனை வரும் போது…, நம்பிக்கை காணாமல் போய் விடும் என்றா நினைத்தாய்… நீ சொன்ன மாதிரி, மனம் தளர்ச்சி அடைந்தவர்கள்…, கடவுள் மட்டும் தான் நம் பிரச்னையைக் காது கொடுத்து கேட்க முடியும் என்று நினைப்பவர்கள்…, ‘நான் கடவுளிடம், என் பிரச்னையைத் திரும்பத் திரும்ப ‘தவம்’ மாதிரி புலம்பிக்கிட்டே இருந்தேன்’ என்று புலம்புவார்கள். இவர்களுடைய தளர்ச்சி, புலம்பல் எதை நினைவுபடுத்துகிறது உனக்கு….

மேகலா : கிருஷ்ணா…, இப்பத்தான் எல்லாம் எனக்குப் புரியுது கிருஷ்ணா… ’அலை பாயும் உன் மனசைக் கட்டுப்படுத்த முடியாவிட்டாலோ…, அல்லது சோர்வடைந்தாலோ, என்னை நினை…. எது புசித்தாலும், எனக்கு அர்ப்பணம் செய். உன்னை பாவங்களிலிருந்து விலக்கி விடுகிறேன்’ என்று பகவான் கிருஷ்ணர் கீதையில் கூறிய நம்பிக்கை வார்த்தைகள் இப்பத்தான் தெளிவாகப் புரிகிறது கிருஷ்ணா…

கிருஷ்ணர் : புரிஞ்சுதா… ‘நம்பிக்கை’ – இது மனிதர்களிடம் கட்டாயம் இருக்க வேண்டிய பிராண மூச்சு… மூச்சு விடுவதற்கு கொஞ்சம் சிரமம் என்றாலும், ‘கடவுள் பக்தி’ என்ற ஆக்ஸிஜனை சுவாசித்தால் போதும்… தன்னம்பிக்கை, கடவுளின் பக்தியைப் பிடித்துக் கொண்டே நிமிர்ந்து விடும். திறமையான மனிதனுக்கு, எந்தச் செயலையும் செய்யும் துணிச்சல் வேண்டும். வாய்ப்பு கிடைக்கும் போது, அதைப் பயன்படுத்திக் கொள்ளும் அறிவும், ஆர்வமும், அதற்கான முயற்சியும் இருக்க வேண்டும்… முயற்சியோடு தைரியமும், பெரியோர்களின் ஆலோசனையும், உந்துதல் சக்தியும் இருக்க வேண்டும். அதற்குப் பின் வருவது, நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கை.. தன்னம்பிக்கை வந்த மனிதன் செயல்களில் ஈடுபடும் போது, ‘வெற்றி மட்டுமே’ என்ற இலக்கினைத்தான் வைப்பான். அதில் தடங்கல்களும், தடைகளும் எதிர்கொள்ளும் போது, மனிதனின் நம்பிக்கையில் தளர்ச்சி வரலாம். அப்பொழுது, ஜெயிக்க வேண்டும் என்ற உத்வேகம்.., அல்லது, நம்பிக்கையைக் கொடுக்கக் கூடிய strong-ஆன நண்பன்…, அல்லது, எதிர்மறையான தூண்டுதல்…, இதுவும் முடியவில்லை என்றால்…, கடவுள் பக்தி – இதில் ஏதாவது ஒன்று, கடுமையான வைராக்கியத்தைக் கொடுத்து, மனிதனை, ‘எது வந்தாலும் பரவாயில்லை, நான் இந்த முயற்சியைக் கை விட மாட்டேன்’ என்ற துணிச்சலைக் கொடுத்து, கன்னா பின்னாவென்று, தன்னம்பிக்கை என்ற வீரத்தைக் கொடுக்கும். அந்த வீரம் விவேகமாய் செயல்பட்டு, வெற்றியின் பாதையைத் திறந்து வைக்கும்… எல்லாச் செயலுக்கும், வெற்றிக்கும், கடவுள் பக்தி, கடவுள் தான் காரணம் என்று பக்தர்கள் சொல்லுவார்கள். அது ஒருபுறமிருக்கட்டும். ஒவ்வொரு செயலுக்கும், மனிதனுக்கு தன்னம்பிக்கை அவசியம் தானே… அது யார் கொடுத்தாலும் பரவாயில்லை….

மேகலா : கிருஷ்ணா…, நான் ஒண்ணு சொல்லவா… தன்னம்பிக்கை, தைரியம், துணிச்சல், வைராக்கியம்…, எது வந்தாலும் பரவாயில்லை என்ற குணம், இதெல்லாம், கடவுள் அம்சம் கொண்டது கிருஷ்ணா…இன்னொண்ணு சொல்லணும்னா, தன்னம்பிக்கை உள்ள மனிதர்கள், கடவுள் பக்தி கொண்டவர்கள்… அதுதான் உண்மை..

கிருஷ்ணர் : அதே தான்… நல்ல முடிவுரை…

மேகலா : முடிவுரையா…, ஐயோ கிருஷ்ணா…. அப்போ…, கட்டுரை…

கிருஷ்ணர் : அதுவா…, முடிஞ்சி போச்சு… வர்ட்டா….

(நிறைவு பெற்றது)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 5

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1