பக்குவம் - பாகம் 1

மேகலா : கிருஷ்ணா…, தினந்தோறும் ஏதும் எழுதாமல் சும்மா இருப்பது…, குற்ற உணர்ச்சியில் குறுகிப் போகிறேன். ‘ஆபரேஷன் சிந்தூர்’ பற்றி எழுதலாமா…. இன்று, மாண்புமிகு நரேந்திர மோடி பேசிய, ‘ரோட்டி காவ்…, இல்லையேல் என் துப்பாக்கியின் கோலி உன்னைத் தேடி வரும்’ – என்று பாகிஸ்தானை எச்சரித்ததை நினைத்து கொந்தளிக்கவா…, என்று திணறித் திணறி மூச்சு முட்டுது கிருஷ்ணா….

கிருஷ்ணர் : மூச்சு முட்டெல்லாம் வேண்டாம்… ஏதாவது எழுதணும் என்றால், நல்ல தலைப்பாக யோசி… இன்னும் முடிவுறாத ஆபரேஷன் சிந்தூரை வேறு ஒரு நாள் யோசிக்கலாம்… நிறையப் பேசி, பேசி நானே கொதித்துப் போனேன்… ஏதாவது குளிர்ச்சியாகப் பேசலாம்…

மேகலா : அக்னி நட்சத்திரத்தில், சூரியன் கூட தகிக்காமல், கொஞ்ச நாளாக குளிர்ச்சியாயிருக்கிறான். அது போல, நாட்டு மக்கள் எல்லோருக்கும் ஒரு இதம் தேவையாக இருக்கு போல…. நீயும் அதைத்தான் சொல்லுகிறாய்…

கிருஷ்ணர் : சரி…, தலைப்பைச் சொல்லு…

மேகலா : எதை எழுதுவது என்று எனக்கும் புரியவில்லை கிருஷ்ணா….

கிருஷ்ணர் : இன்று முழுவதும், ‘பக்குவம்’, ‘பக்குவமடைதல்’…, ‘மேன்மை’ – இதைப் பற்றி யோசி… அப்புறம் பேசலாம்…

கிருஷ்ணர் : என்ன யோசிச்சயா….

மேகலா : கிருஷ்ணா…, நீ தலைப்பைச் சொன்னாலும் சொன்ன…. என் மண்டைக்குள்ள, எத்தனையோ விஷயங்கள் வந்து போகுது கிருஷ்ணா….

கிருஷ்ணர் : இத…., இதத்தான் எதிர்பார்த்தேன்… ஒண்ணு சொல்லேன் கேட்போம்….

மேகலா : கிருஷ்ணா…, ஒரு விவசாயி பாட்டுப் பாடுகிறான் கிருஷ்ணா…

‘மணப்பாறை மாடு கட்டி

மாயவரம் ஏரு பூட்டி

வயக்காட்டை உழுது போடு சின்னக்கண்ணு

பசுந்தழையப் போட்டு பாடு படு செல்லக்கண்ணு

ஆத்தூரு கிச்சடி சம்பா

பாத்து வாங்கி விதை வெதச்சி

நாத்து பறிச்சி நட்டுப் போடு சின்னக்கண்ணு

தண்ணிய ஏத்தம் ஏத்தி எறச்சிப் போடு சின்னக்கண்ணு

கருத நல்லா விளைய வச்சி

மருத ஜில்லா ஆள வச்சி

அறுத்துப் போடு களத்து மேட்டுல சின்னக்கண்ணு

நல்லா அடிச்சித் தோச்சி அளந்து போடு செல்லக்கண்ணு

பொதிய ஏத்தி வண்டியில பொள்ளாச்சி சந்தையில

விருதுநகர் வியாபாரிக்கு சின்னக்கண்ணு

நீயும் வித்துப் போட்டு பணத்த எண்ணு செல்லக்கண்ணு

சேத்த பணத்த சிக்கனமா செலவு

பண்ண பக்குவமா அம்மா கையில

குடுத்துப் போடு சின்னக்கண்ணு

உங்க அம்மா கையில கொடுத்துப் போடு சின்னக்கண்ணு

அவங்க ஆற நூறு ஆக்குவாங்க செல்லக்கண்ணு’

முறையான விவசாயம் இப்படித்தான் இருக்கணும்… விவசாயத்தின் பலனாக கை மீது கிடைக்கும் போது வருவது, பக்குவம்… பக்குவமா அம்மாவிடம் கொடுத்தால், அது பல்கிப் பெருகும் என்பது கவிஞரின் வாக்கு… உண்மையா உழைப்பவனுக்கு, கால நேரம் அறியும் பக்குவம்…, தன்னாலே வந்து சேரும்… அது எல்லா நன்மையும் தரும் என்று சொல்லுகிறார் கிருஷ்ணா… எனக்கு முதலில் தோன்றியது இந்தப் பாட்டு தான் கிருஷ்ணா…

கிருஷ்ணர் : ஆரம்பமே களை கட்டுதே… பக்குவம் என்பதை, ஒரு சிறு கோடு இழுத்து காட்டியிருக்கிறாய்… ஒரு மரத்தில், பூ பூக்கிறது…, அது வளர்ந்து காயாகி, பழமாகிறது. இதை பக்குவமடைதல் என்கிறோம்… சேத்த பணத்த, சிக்கனமாய் செலவு செய்ய, பக்குவமாய் அம்மா கையில் கொடுத்துப் போடு சின்னக்கண்ணு…, என்கிற வரிகளில், செய்த செயல்களின் பலனைக் கூட, பக்குவமாத்தான் கையாள வேண்டும் என்பது தான் வாழ்க்கைத் தத்துவம்… அதை வெகு இயல்பாக கவிஞர் புரிய வைத்திருக்கிறார்… சூப்பர்… சரி…, ‘பக்குவம்’ என்பதை நீ எப்படி புரிந்து வைத்திருக்கிறாய்….?

(தொடரும்)

Comments

Popular posts from this blog

பக்குவம் - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

தன்னம்பிக்கை - பாகம் 3

தன்னம்பிக்கை - பாகம் 4