கதை கதையாம் காரணமாம் - பாகம் 12

கிருஷ்ணர் : அப்போ…, நீ…, அடுத்து ‘உத்தங்கர்’ கதையைச் சொல்லப் போகிறாய்…, right…?

மேகலா : Yes, Krishna… கிருஷ்ணா…, உத்தங்கர், தன் வாழ்நாள் முழுவதும் தவம் செய்து, தன்னை தூய்மைப்படுத்தியவர். எல்லோரும் நல்லா இருக்கணும் என்று விரும்புபவர்… உத்தங்கர், பாலைவனப் பகுதிகளில் சஞ்சரித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது, அந்த வழியாக ஸ்ரீகிருஷ்ணர், அஸ்தினாபுரத்தில் தருமனுக்கு பட்டாபிஷேகம் செய்து முடித்து விட்டு, துவாரகை திரும்பிக் கொண்டிருந்தார்… உத்தங்கர், ஸ்ரீகிருஷ்ணரைப் பார்த்து விட்டார். மனமகிழ்வுடன், கிருஷ்ணா! என்றழைத்து, ’உன்னைப் பார்த்து எத்தனை நாளாயிற்று’ என்று குசலம் விசாரித்து, நலம் விசாரித்தார். ‘கிருஷ்ணா…, உன்னுடைய நட்பால் பாண்டவர்களும், கௌரவர்களும் தங்களுடைய பகையை மறந்து, அஸ்தினாபுரத்தை சிறப்புடன் ஆண்டு வருகிறார்கள் என்று நம்புகிறேன். பீஷ்மர் நலமாக இருக்கிறாரா? திருதராஷ்டிரன் சந்தோஷமாக இருக்கிறாரா? துரியோதனன் நலமா? என்று அடுக்கடுக்காக கேள்விகளைக் கேட்டார்… குருக்ஷேத்திரத்தில் போர் நடந்தது உலகமே அறியும்… உத்தங்கருக்குத் தெரியலயா…, என்று ஆச்சரியத்துடன் பார்த்த ஸ்ரீகிருஷ்ணர், ‘என்ன உத்தங்கரே, உங்களுக்கு விஷயமே தெரியாதா…. குருக்ஷேத்திரத்தில், கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்குமிடையில் போர் நடந்து, கௌரவர்களில், பீஷ்மர் உட்பட அனைவரும் மாண்டு போனார்கள்… அஸ்தினாபுரத்திற்கு, யுதிஷ்டிரனை மன்னனாக்கி விட்டு…, இதோ, இப்போதான் துவாரகை திரும்புகிறேன்…. என்ன விஷயம்…’ என்று கேட்டார். உத்தங்கருக்கு, பீஷ்மர், துரியோதனன் உட்பட கௌரவர்கள் அனைவரும் மாண்டனர் என்ற செய்தி கேட்டதும்…, கிருஷ்ணன் அங்கிருக்க, பாண்டவர், கௌரவர்களுக்கிடையில் சமரசம் ஏற்படுத்த முடியவில்லையா…. சத்தியத்தில் சிறந்த பீஷ்மர் இருக்கும் போதே போர் நிகழ்ந்திருக்கிறதென்றால், இது மாயக்கிருஷ்ணனின் சாகச வேலையாகத்தான் இருக்கும் என்று உறுதியாக நம்பி, மிகுந்த கோபத்துடன், ‘ஏன் கிருஷ்ணா…, நீ நினைத்திருந்தால், இந்தப் போரைத் தடுத்து நிறுத்தியிருக்கலாம்…. எனக்குத் தெரியும்…. குருதேவர் துரோணாச்சாரியார், சத்தியவந்தன் பீஷ்மர் என்று எல்லோரும் எடுத்துச் சொல்லியிருப்பார்கள்…. துரியோதனனுக்குக் கோபம் வரும்படி தூண்டி விட்டு போர்க்களம் வரையில் கௌரவர்களை அழைத்துச் சென்று, உன் நண்பன் அர்ஜுனனின் வீரம் உலகம் மெச்சும்படி காட்ட வேண்டும் என்பதற்கே நீ இந்தக் காரியத்தைச் செய்திருப்பாய்… உனக்கு பாண்டவர்கள் மீது தனிப்பாசம்… கௌரவர் குலத்தையே நாசமாக்கிய உன்னை, இதோ நான் சபிக்கப் போகிறேன்…’ என்று சாமி வந்தவர் போல, கன்னாபின்னாவென்று ஆட ஆரம்பித்து விட்டார்…. இதைக் கேட்ட ஸ்ரீகிருஷ்ணரும், புன்னகையோடு, ‘என்னைச் சபிக்க உம்மால் இயலாது… அஸ்தினாபுரத்தில் என்ன நடந்தது தெரியுமா… ‘சகுனி’ என்ற ஒரு கூர்மையான ஆயுதத்தை கையில் வைத்து, பாண்டவர்களை சூதுக்கு அழைத்த துரியோதனன்…, சூதிலே பாண்டவர்களை வென்று…, திரௌபதியை, பலர் நிறைந்த சபையில் அவமானப்படுத்தி, அவர்களை பன்னிரெண்டு ஆண்டுகள் வனவாசமும், ஓராண்டு அஞ்ஞாத வாசமும் இருக்கும்படி விரட்டி விட்டான். அப்பொழுது நீர் எங்கு சென்றீர்… பீஷ்மர், துரோணர் என்ன செய்தார்கள்… 13 வருட காலம் வனவாசம் முடிந்து பாண்டவர்கள், தங்கள் உரிமையைத் திருப்பிக் கேட்டனர்…. ஊசி முனை குத்தும் அளவுக்குக் கூட இடம் கொடுக்க முடியாது என்று பிடிவாதமாக மறுத்து விட்டான் துரியோதனன். பீஷ்மர் தலை குனிந்து பார்த்துக் கொண்டுதானிருந்தார்…. பாண்டவர்களுக்காக, அஸ்தினாபுரத்திற்கு நான் தூது சென்றேன். எவ்வளவோ எடுத்துச் சொன்னேன்… நான் இந்தக் கலியுகத்தில் எடுத்திருப்பது மனித அவதாரம். மனிதர்களின் கோபத்தையும், வெறுப்பையும் சந்தித்துதான் செயல்பட முடியும். அவர்கள் முன் என் கடவுள் அம்சத்தைக் காட்ட முடியாது…. நீரே என்னை ‘மாயக்கண்ணன்’ என்னும் போது, துரியோதனன் மட்டும், அவதார புருஷன் என்றா சொல்லப் போகிறான். என்னை, ‘மாயாவி’ என்று பரிகாசம் செய்த துரியோதனனுக்கு, விஸ்வரூபம் எடுத்துக் காட்டி பயம் காட்டிப் பார்த்தேன். பீஷ்மரும், துரோணரும் பார்த்துக் கொண்டிருக்க, ஊசிமுனையளவு இடம் கூட தர முடியாது என்று என்னை அவமானப்படுத்தினான்…. ஒன்றை நீர் நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளும். அவதாரம் எடுப்பதற்கென்று ஒரு வரைமுறை இருக்கிறது. நான் கந்தர்வர்களுக்கிடையில் பிறந்தால், கந்தர்வனாக இருப்பேன். தேவர்களுக்கிடையில் பிறந்தால், தேவனாக இருப்பேன்… மனிதனாக…, என்னால் செய்ய முடிந்த அனைத்தையும் செய்து பார்த்து விட்டேன். நல்ல யோசனைகளை எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், துரியோதனன், அவன் முடிவுக்கான ஆரம்பத்தை அன்றே எழுதி விட்டான்… அதன்படிதான் நடந்தது…. இது எதுவும் தெரியாமல், ‘ஸ்ரீகிருஷ்ணன், மனிதர்களின் மனங்களை மாயம் செய்து, நடக்க இருப்பதைக் கூட மாற்றி விடுவான் என்று நினைப்பது, சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது…. உங்கள் கையில் இருப்பது வாழ்க்கை. அதை கடவுள் பக்தி என்ற நம்பிக்கையோடு வாழ்பவர்களுக்கு, கடவுள் பக்கபலத்தையும், தைரியத்தையும் கொடுப்பார்…. நம்பிக்கை இல்லாதவர்கள், வாழ்க்கையை அலட்சியமாக நடத்தி, தன் மேன்மையை இழப்பர்…. நீர் தவம் செய்வதாகச் சொல்கிறீர். முதலில் வாழ்க்கைத்தத்துவத்தைப் புரிந்து கொள்ளும்…’ என்றுசொன்னார். உத்தங்கர்…, ஸ்ரீகிருஷ்ணர், பரம்பொருள் என்பதை மறந்து, கோபத்தில் பரம்பொருளுக்கே சாபம் கொடுக்க முயன்றதை நினைத்து வெட்கித் தலை குனிந்தார். கிருஷ்ணரிடம், தன்னை மன்னிக்கும்படிக் கேட்டுக் கொண்டார். கிருஷ்ணரும், ’பரவாயில்லை உத்தங்கரே…., இன்னும் தவம் செய்து உங்களை மேன்மையாக்குங்கள்’ என்று சொல்லி, உத்தங்கர் மீது கருணை கொண்டு, துரியோதனனுக்குக் காட்டிய விஸ்வரூபத்தை அவருக்கும் காட்டினார். மெய் சிலிர்த்துப் போன உத்தங்கரிடம், ‘நீர் ஏதாவது வரம் கேளுங்கர், தருகிறேன்’ என்றார். உத்தங்கர் அதை மறுத்தாலும், மறுபடியும் கிருஷ்ணர் கேட்டதற்காக, ‘நான் எப்பொழுதும் பாலைவனத்தில் சஞ்சரித்துக் கொண்டிருப்பவன். எனக்கு தாகம் ஏற்பட்டால், தாகம் தணிக்க, நீர், தண்ணீர் தந்தருள வேண்டும்’ என்று கேட்டார். ஸ்ரீகிருஷ்ணர், சிரித்துக் கொண்டே, ‘உமக்குத் தாகம் ஏற்பட்டால், என்னை நினைத்தவுடன், உமக்குத் தண்ணீர் கிடைக்கும்’ என்று சொல்லி, துவாரகை திரும்பினார்… சில நாட்கள் சென்ற பின், ஒரு நாள். பாலைவனத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்த உத்தங்கருக்குத் தாகம் ஏற்பட்டது. அதன் விளைவாக, ஸ்ரீகிருஷ்ணரை மனதால் நினைக்க…, அந்த வழியே, ஒரு சண்டாளன் வந்தான். அவன் தோளில் ரத்தம் சொட்டச் சொட்ட, ஒரு மாமிசத்துண்டு கிடந்தது. இடுப்பில் அழுக்கேறிய, துர்நாத்தம் வீசக் கூடிய, தோலினால் செய்யப்பட்ட கோவணத்துண்டு விளங்கியது… அவன் கையில், மிருகத் தோலினால் செய்யப்பட்ட குடுக்கை ஒன்றிருந்தது. அதில் ‘தண்ணீர்’ ததும்பி வழிந்தது. அவன் உத்தங்கரைப் பார்த்து, ‘என்ன முனிவரே, தாகமாக இருக்கிறதா…, தண்ணீர் வேண்டுமா’ என்று அழுக்கேறிய பல் தெரிய சிரித்துக் கொண்டே கேட்டான்… உத்தங்கர், அவனை ஏறெடுத்துப் பார்த்து…, அதிர்ந்து போனார்…..

(தொடரும்)

Comments

Popular posts from this blog

பக்குவம் - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

பக்குவம் - பாகம் 8

பக்குவம் - பாகம் 6