பக்குவம் - பாகம் 3
மேகலா : எப்புடி கிருஷ்ணா.., எப்டி…, என் மனசுல உள்ளத அப்படியே சொல்ற….
கிருஷ்ணர் : இதை நீ சொல்லி…, நான் கேட்டு கேட்டு…, என் ஒரு பக்கத்துக் காது வீங்கியே போச்சு… ஆனாலும், நீ சொல்லும் கைப்பக்குவம் ரொம்ப சுவையா இருக்கு… இது மட்டும் தானா…, இன்னும் இருக்கா….
மேகலா : ஐயோ கிருஷ்ணா…, தீபாவளி வரட்டும் கிருஷ்ணா… அதற்கான பலகாரங்களில் இந்த ‘பக்குவம்’ சும்மா புகுந்து விளையாடும். அதிலும், இனிப்பு வகையறாவில்…, ‘ஜீரா’ தயாரிப்போமே…, அதற்கு ‘பக்குவம்’ ரொம்ப அவசியம் கிருஷ்ணா… குலோப் ஜாமூனுக்கு…, ஜீராவின் பக்குவம், பிசுபிசுப்பாய் இருக்க வேண்டும்… லட்டுக்கு, one string கம்பி பதம்…. அதிலும், அதிரசத்திற்கு வெல்லப் பாகு ‘டங்கு’ பதம்… அப்படீன்னு, பலகாரம் பக்குவமாய் வருவதற்கு, இந்த பதம் பலவிதமாய் மாறுபடும்…. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பக்குவம் இருக்கு… இந்த ‘பக்குவம்’ தப்பாமல் செய்தால் மட்டுமே, நாம் விரும்பும் சுவை நமக்குக் கிடைக்கும். முறுக்கு பக்குவமாய் செய்தால் தான், ‘கரகரப்பாய்’ இருக்கும்… அதிரசம் பக்குவமாய் செய்தால் தான் மிருதுவாய் இருக்கும்….
கிருஷ்ணர் : Oh! இதில் இத்தனை விஷயம் இருக்கா…. ‘பக்குவம்’ சமையல் வேலைகளில் dance ஆடத்தான் செய்கிறது…. ஒண்ணு பாத்தியா மேகலா… முறுக்கு பதம் பக்குவமானால்தான் ருசி நன்றாக இருக்கிறது… குலோப் ஜாமூனும், அதிரசமும், பக்குவமாக பாகு காய்ச்சி சுட்டால்தான், அதன் சுவை பல மடங்காகும்…. எந்த செயலும், பக்குவமானால்தான், அதன் பலன் சிறப்பாக அமையும்…
மேகலா : உண்மைதான் கிருஷ்ணா…. இனிப்பு, காரம், கரகரப்பு… அதே மாதிரி, timing, perfection, சீரான அளவு…, என்று எல்லா வகையிலும் சரியாக இருக்கும் போது தான், அது பக்குவமாகவே ஆகும்… வாழ்க்கையும் அப்படித்தானே கிருஷ்ணா… சின்ன வயதில் immature ஆக இருக்கும் மனுசங்க…, உண்மை, திறமை, நியாயம், வாழ்க்கையின் போக்கு, அனுசரிப்பு, நிதானம் என்று எல்லாம் சரியாக சேரும் போது…, வாழ்க்கையை எதிர்கொள்ளும் பக்குவம் தானாக வந்து விடுகிறது போல கிருஷ்ணா….
கிருஷ்ணர் : ‘பக்குவம்’ என்ற எப்பேர்ப்பட்ட தத்துவத்தை…, அதிரசம் சுடுவதை வைத்து match பண்ணிட்டயே…
மேகலா : இது இயற்கையான தத்துவம் என்று உனக்குத் தெரியாதா கிருஷ்ணா… எனக்கு, என் வீட்டில் வைத்திருக்கும் மல்லிகைப்பூச்செடி…, நான் Bangalore சென்று திரும்புவதற்குள், தண்ணீர் இல்லாமல், இலைகளெல்லாம் வாடி, துவண்டு போயிருச்சி. மேலுள்ள கிளைகளெல்லாம் காய்ந்து ஒடிந்து போயின… அடித்தண்டை தொட்டுப் பார்த்தேன் கிருஷ்ணா… உயிரோட்டம் இருப்பதாக மனசு சொல்லியது. நம்பிக்கையை இழக்காமல்…, தண்ணீர் ஊற்றி, பராமரித்து வந்தேன் கிருஷ்ணா…. இடையில், ஒரு வாரம் climate மொத்தமாக மாறி, அடைமழை காலம் போல சிலுசிலுவென்றிருந்ததா…, ஏற்கனவே பக்குவப்பட்டிருந்த ஒரு செடிக்கு, அரைகுறை உயிரிருக்கும் போது, நம்முடைய பராமரிப்பும், அரவணைப்பும் மறுபடியும் துளிர் விடச் செய்திருக்கிறது கிருஷ்ணா….
கிருஷ்ணர் : பார்த்தாயா மேகலா… ஏற்கனவே பக்குவப்பட்டிருந்தவர், சற்றே வாடிப் போனாலும், அரவணைப்பும், உறுதுணையும் இருந்தால், இயற்கையும் கூட, மறுபடியும் தழைத்தோங்க உதவி செய்யும்… பக்குவத்தின் மேன்மையே இதுதான் மேகலா… மேன்மையானவர்களின் பக்குவம் என்றும் ஒருவரை சிறப்படையச் செய்யுமே தவிர, முடக்கிப் போடாது…
மேகலா : வாஸ்தவம் தான் கிருஷ்ணா… ஒண்ணு நிச்சயம் கிருஷ்ணா… பக்குவம் அடைந்தவர்கள் சிறப்படைவதை யாராலும் தடுக்க முடியாது என்பது மாதிரி…, வளர்ந்து கொண்டிருப்பவரின் வளர்ச்சியில், ‘நான் உன்னைத் தூக்கி விடுகிறேன்’ என்று யாராவது குறுக்கே வந்து ஏதாவது செய்தால்…, அது வளர்ச்சியைத் தூண்டி விடும் தூண்டுகோலாக இருக்காது கிருஷ்ணா… நிச்சயம் அது இடையூறாகத்தான் இருக்கும்….
கிருஷ்ணர் : எப்படிச் சொல்லுகிறாய்…?
மேகலா : கிருஷ்ணா…, ஒரு கூட்டுப்புழு, கூட்டுக்குள் இருப்பது…, ‘சிறைக்குள் முடங்கிக் கிடப்பது போல’ என்று யாராவது நினைத்து, புழுவை வெளியே கொண்டு வர கூட்டை உடைத்தால்…, என்னாகும்…. வண்ணப்பூச்சியாக வளர்ந்து சிறகடிக்க வேண்டிய கூட்டுப்புழு மடிந்தே போகும்… இல்லையா கிருஷ்ணா….
கிருஷ்ணர் : நிஜம் தான் மேகலா…. கூட்டுப்புழு தானேதான் கூட்டை உடைக்க வேண்டும்.. அதுதான் முழு வளர்ச்சி… அடை காக்கும் கோழியிடம், ஒரு முட்டையை எடுத்து, நீ சோதித்துப் பாரேன்… குஞ்சு, தானே முட்டிக் கொண்டு கூட்டை உடைக்க சிரமப்படும். அந்த நேரம் நாம் குஞ்சுக்கு உதவப் போனால், தாய்க்கோழி சீறும்… ஏன் தெரியுமா? நாம முட்டையை உடைத்தால், குஞ்சு எழுந்திருக்கவே செய்யாது…. குஞ்சோ, புழுவோ…, முழு வளர்ச்சிப் பக்குவம் அடைந்த பிறகு, தானே கூட்டிலிருந்தோ, முட்டையிலிருந்தோ வெளியேறுவது தான் பக்குவமான வளர்ச்சி….
(தொடரும்)
Comments
Post a Comment