பக்குவம் - பாகம் 4

கிருஷ்ணர் : இதுதான் கீதையில், அர்ஜுனனிடம் சொல்லப்பட்ட உபதேசம்…, போர்க்களத்தில், உனக்கான உரிமையைப் போரிட்டு, எதிரிகளை வீழ்த்திப் பெறுவதில் தவறேயில்லை…. அவரவர்க்கான கடமைகளை, அவரவர் செய்வதுதான், மனிதர்களுக்கு விதிக்கப்பட்ட விதி… அதை சிறப்பாக திறமையாகச் செய்பவன், எல்லோராலும் விரும்பப்படுகிறான்… நீ சொன்ன உதாரணம் உண்மையானது…, வலிமையானதும் கூட. மனிதனோட வேலைகளை எட்ட நின்று, encourage பண்ணலாம். ‘நான் அந்த வேலையைச் செய்கிறேன்’ என்று யார் குறுக்கே வந்தாலும்…, கடவுளே ஆனால் கூட, மனிதனால் ‘பக்குவம் அடைவது’ என்ன…, ‘வளரவே’ முடியாது….

மேகலா : உண்மை கிருஷ்ணா… இந்த ‘பக்குவத்திற்கு’ இன்னும் ஒரு அர்த்தம் கூட இருக்கிறது கிருஷ்ணா….

கிருஷ்ணர் : என்ன…, அது…?

மேகலா : ஒருவருக்கு, ஏதோ ஒரு இழப்பு நேர்ந்து, அதனால் பாதிக்கப்பட்டு, மனம் உடைந்து அழுகிறார் என்று வைத்துக் கொள்வோம்… அம்மாவோ…, அப்பாவோ…, யார் சொன்னால் அவர்கள் கேட்பார்கள் என்று அறிந்து, அவர்களிடம், ‘நீதான் பக்குவமாய் எடுத்துச் சொல்லி, அவளை சமாதானப்படுத்தணும்’ என்று கேட்டுக் கொள்வார்களே… இந்தப் பக்குவத்தின் அர்த்தம் என்ன கிருஷ்ணா…

கிருஷ்ணர் : ஒருவருடைய இழப்பு என்பது, அந்தக் குடும்பத்தாருக்கு, மிகப் பெரிய துன்பத்தையும், துயரத்தையும் கொடுக்கக் கூடியது…. என்றாலும், அதிலிருந்து மீண்டு வர வேண்டும் என்பதுதான் யதார்த்தம்…, எல்லோருடைய நோக்கமும் கூட… ஒவ்வொருவருக்கும், மீண்டு வருவதில் ஒவ்வொரு பரிகாரம் இருக்கிறது… சிலர், தனக்குத் தானே பக்குவமாகி, இயல்பு நிலைக்கு வரலாம்… இழப்பினால் நேரிடையாக பாதிக்கப்பட்டவருக்கு, அரவணைப்பும், அனுசரணையும், ஆறுதலும் தேவைப்படும் போது, யாருடைய அரவணைப்பினால் பாதிக்கப்பட்டோர் இயல்பு நிலைக்கு வருவார்களோ, அவர்களை பக்குவமாக பேசச் சொல்லலாம்… அந்த நேரத்தில் தடாலடியாகப் பேசினால், பாதிக்கப்பட்டோர் மேலும் துவண்டு போகலாம்…. அதனால்தான் பெரியவங்க, ‘பக்குவமா எடுத்துச் சொல்லு’ என்று சொல்வார்கள்… பக்குவமா..ன்னா.., ’நிதானமா’, ‘அன்பா’, ‘நியாயமான’…, என்றெல்லாம் யோசித்துப் பார். அதன் ஆழம் புரியும் உனக்கு….

மேகலா : உண்மைதான் கிருஷ்ணா…. ஆனால், அர்ஜுனனுக்கு மனத்தளர்ச்சியை நீக்குவதற்கு, எம்பெருமான் ஸ்ரீகிருஷ்ணர், ‘அலியின் இயல்பை அடையாதே’ என்று கடுமையாகத்தானே பேசுகிறார்….

கிருஷ்ணர் : அர்ஜுனன் போர் புரிய மாட்டேன் என்று சொல்லி, ’என்னை எதிரிகள் கிண்டல் செய்தாலும் பரவாயில்லை. நான் போர்க்களத்தை விட்டு விலகப் போகிறேன்’ என்று கோழை மாதிரி பேசுகிறான்… அவனுக்கு, அந்த சமயத்தில் தேவையானது, ‘அன்பும், அரவணைப்பும்’ இல்லை… ஒரு ‘shock treatment’ – இதைத்தான் நான் கொடுத்தேன்… அவன் மனப்பக்குவத்திற்கு சுளுக்கெடுத்த வேலையைத்தான் செய்தேன். சுளுக்கு நீங்கியதும், மனம் பக்குவமடைந்தது… அர்ஜுனன், போர் வீரனானான்… உனக்கு, இன்னும் ஒரு உதாரணத்தை சொல்லுகிறேன் கேள்… பள்ளிக்கூடம் போக மாட்டேன் என்று ஒரு குழந்தை பிடிவாதம் பிடித்தால்…, அவங்க அம்மா என்ன செய்வாங்க….

மேகலா : முதுகுல ரெண்டு போடு போட்டு, டீச்சரிடம் கொண்டு போய் விட்டு, ‘டீச்சர், பிள்ளையை பக்குவமா பாத்துக்கோங்க டீச்சர்’ – என்று சொல்லிட்டு வருவாங்க கிருஷ்ணா….

கிருஷ்ணர் : அம்மா அடிப்பாங்க…, டீச்சர்ட்ட போயி, ‘பக்குவமா பாத்துக்கோங்க’ன்னு சொல்றாங்கல்ல…. அந்தக் குழந்தைக்கு, கண்டிப்பும் தேவை…, அனுசரணையும் தேவை. ‘பக்குவம்’, கண்டிப்பாகவும் இருக்கும்…, அரவணைப்பாகவுமிருக்கும்…

மேகலா : Oh! கிருஷ்ணா…, இன்னொரு அர்த்தத்திலும், ‘பக்குவம்’ புழக்கத்தில் இருக்கிறது கிருஷ்ணா….

கிருஷ்ணர் : இருக்கும் மேகலா…. ‘பக்குவம்’ என்பதே, வளர்ச்சியை எதிர்பார்த்தோ, அக்கறையினாலோ சொல்லப்படும் வார்த்தை…. சில தருணங்களில், இந்த ‘பக்குவம்’ மாதிரி apt ஆன வார்த்தை தமிழில் வேற ஒண்ணு கிடைக்கவே கிடைக்காது என்பது மாதிரி, strong ஆன வார்த்தை… சரி…, நீ சொல்ல வந்ததைச் சொல்லு….

மேகலா : கிருஷ்ணா…, நமக்கு company-யில் ஒரு வேலை கைகூடணுமா…, இல்லை வீட்டில் பெரியவங்களால ஒரு காரியம் நடக்கணுமா… அப்படீன்னா…, company M. D -யிடம், நாம் செய்த ஒரு வேலையையோ…, M. D-க்குப் பிடித்த ஒரு பொருளையோ யார் மூலமாவது கொடுத்து, ‘இதை M. D-யிடம் சேர்த்து விடு… அவர் சந்தோஷமாய் இருக்கும் நேரம் பார்த்து, ‘பக்குவமா’ கொடுத்து விடு’ என்று சொல்வார்கள் கிருஷ்ணா…. இது office மட்டுமில்லை கிருஷ்ணா… எந்த இடத்திலும் நமக்கு காரியம் சாதிக்க வேண்டுமென்றால், இந்த மாதிரி, பக்குவமான நேரம் பார்த்து சேர்த்து விடு…, என்று சொல்லி, எதிர்பார்ப்பவர்கள் அநேகம் பேர்….

(தொடரும்)

Comments

Popular posts from this blog

பக்குவம் - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

பக்குவம் - பாகம் 8

ஆளுமை - பாகம் 5