பேச்சுத்தமிழ் - பாகம் 2

மேகலா : அப்படித்தான் போல கிருஷ்ணா…. இந்தப் பழமொழி மாதிரி பேச்சுவழக்குப் பழமொழி நிறைய இருக்கு கிருஷ்ணா… அதை விட இன்னும் ஒரு ஆச்சர்யமான விஷயம் இருக்கு கிருஷ்ணா… நீ கேட்டா அசந்து போயிருவ கிருஷ்ணா…

கிருஷ்ணர் : என்னது…, அசந்து போற அளவுக்கு… பேச்சுத் தமிழில் அப்படி என்ன இலக்கியம் புதைந்து போயிருக்கு….

மேகலா : நாட்டுப் பாடல்கள் கிருஷ்ணா… இந்த நாட்டுப் பாடல்கள் எல்லாம், யாரோ ஒருவர் தன்னை மறந்து இட்டுக்கட்டிப் பாடியதுதானே… அப்படி ஒரு கிராமவாசி…, தன்னுடைய தேசபக்தியை எப்படி…, அதிலும் நக்கலாக வெளிப்படுத்துகிறார் பார் கிருஷ்ணா… 18-ம், 19-ம் நூற்றாண்டுகளில், கிராமப் பகுதிகளில் மக்களிடையே, ஆங்கிலேயர்களுக்கு எதிரான புரட்சிகரமான எதிர்ப்பு அவ்வளவாகக் கிடையாது என்றுதானே நினைத்தார்கள்… இந்தப் பாட்டைக் கேள்…

‘ஊரான் ஊரான் தோட்டத்துல

ஒருத்தன் மட்டும் வெள்ளரிக்கா

காசுக்கு ரெண்டு விக்கச் சொல்லி

காயிதம் போட்டான் வெள்ளத்துரை’

என்ற இந்த நாடோடிப் பாடலைக் கேட்டாயா கிருஷ்ணா…

கிருஷ்ணர் : யாரு வீட்டுத் தோட்டத்துல விளைஞ்ச வெள்ளரிக்காய்க்கு, யாரு bill போடுறது… இது யாரு எழுதியது மேகலா…, சரியான நக்கல்…. ஒரு பாரதியார் பாடிய ஆங்கிலேய எதேச்சதிகாரத்துக்கு எதிரான பாடல் மாதிரி, அதி அற்புதமான வயித்தெரிச்சல் பாட்டு… நான் நினைக்கவேயில்லை….. இவ்வளவு ஆழமான தேசபக்திப் பாடல்…. அடிமையில் ஆதங்கம் கொண்ட பாடல், சாதாரணமாக நாட்டுப் புறப் பாடலில் இருக்கிறதா…. Super மேகலா…. சூப்பர்… ஆமாம், இந்த ‘காயிதம்’னா என்ன….?

மேகலா : ‘காகிதம்’…, ‘letter’…, ‘தபால்’…

கிருஷ்ணர் : Oh! பேச்சுத் தமிழை புரிவதற்கே dictionary வேணும் போல இருக்கே….

மேகலா : கிருஷ்ணா…, இன்னொரு game கிருஷ்ணா… இதுவும் ஆங்கிலேய எதிர்ப்பு பாட்டுதான்… சின்னக் குழந்தையை, அப்பா, தன் காலில் நிற்க வைத்து, கைகளைப் பிடித்துக் கொண்டு, மேலே தூக்கி இறக்கி விளையாடுவார்… அப்போ…,

‘ஐ சக்கா ஐ

அரப்படி நெய்

வெள்ளக்காரன் தொப்பியில

தீயப் பொருத்தி வை’

என்று பாடி, குழந்தையை சிரிக்க வைப்பார்… இது ஜனரஞ்சகமாக, எல்லார் வீட்டிலும், இந்த மாதிரி இளம் அப்பாமார்கள், தங்கள் பிள்ளைகளுக்கு விளையாட்டு காட்டுவது சகஜமாக நடக்கும் கிருஷ்ணா…. யாரும் சொல்லிக் கொடுக்காமல், social media awareness இல்லாமல், paper பார்த்து, radio கேட்டு வந்த கொஞ்ச news-ல் எடுத்த ஆங்கிலேய எதிர்ப்பு உணர்வு… பேச்சுத் தமிழில் தேசபக்தி எப்படி சிலிர்க்குது பாத்தியா கிருஷ்ணா….

கிருஷ்ணர் : ‘என் மண்…, என் தேசம்’ என்ற உணர்வு, எல்லா தரப்பு மக்களிடமும், வெள்ளந்தியாக இருந்திருக்கிறது மேகலா… கேக்கவே சந்தோஷமாக இருக்கிறது… ‘வெள்ளக்காரன்’, ‘வெள்ளத்துரை’, ‘காயிதம் போட்டான்’…, என்ற வார்த்தையிலிருக்கும் நக்கலும், ஆதங்கமும் சூப்பர்…, சூப்பர் மேகலா… பாரதியாரின் வண்டிக்காரன் பாட்டைச் சொல்லேன்… சாதாரண வார்த்தைகளில் இழையோடும், கொஞ்சம் பயம், வழித்துணைக்கு அவசரமாக அழைக்கும் வீரம்மை பக்தி…, யப்பா, பேச்சுத் தமிழில் விளையாடும் ஒசந்த இலக்கியம்…. அந்தப் பாட்டைச் சொல்லேன்….

மேகலா : கிருஷ்ணா…., பேச்சுத் தமிழில் பேசும் போது, நீ கூட, உயர்ந்த இலக்கியம் என்பதற்கு ‘ஒசந்த இலக்கியம்’ என்று சொல்லும் போது…, உன் மனசுல தமிழை எவ்வளவு ரசிக்கிறாய் என்று புரிகிறது கிருஷ்ணா…. ‘வண்டிக்காரன் பாட்டை’ இதோ சொல்றேன் கிருஷ்ணா…

‘காட்டு வழிதனிலே – அண்ணே!

கள்ளர் பயமிருந்தால் – எங்கள்

வீட்டுக் குலதெய்வம் – தம்பி

வீரம்மை காக்குமடா!’

‘நிறுத்து வண்டியென்றே – கள்ளர்

நெருங்கிக் கேட்கையிலே – எங்கள்

கருத்த மாரியின் பேர் சொன்னால்

காலனும் அஞ்சுமடா’ –

நெஞ்சுக்குள்ளே பயமிருந்தால், கருத்த மாரியையும், குலதெய்வம் வீரம்மையையும் நினைத்தால், பயம் ஓடிப் போகும்…, என்று சொல்லி, தன்னோட கடவுள் பக்தியை எவ்வளவு வெள்ளந்தியாக…, இயல்பாகச் சொல்லுகிறார் பார்த்தாயா கிருஷ்ணா… உனக்கு இன்னொரு குழந்தை மனம் கொண்ட கவிஞனின் பாடல் ஒன்றை சொல்கிறேன்…, கேள் கிருஷ்ணா…. நீ மாடு மேய்ப்பவன் தானே…. இந்தப் பாட்டைக் கேள்…

தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு

அங்கு துள்ளிக் குதிக்குது கன்னுக்குட்டி

நாவால் நக்குது வெள்ளைப்பசு

பாலை நன்றாய்க் குடிக்குது கன்னுக்குட்டி…

கிருஷ்ணர் : ம்…, சொல்லு அடுத்த வரி என்ன….

கிருஷ்ணர் : மொத்தப் பாட்டும் இதுதான் கிருஷ்ணா… ஒரு காட்சி… பசுவும், கன்னுக்குட்டியும் தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருக்கிறது…. காலையில் தோட்டத்திற்கு வந்த மனுஷன்…, பசுவையும் கன்றையும் பார்க்கிறார்… அவர் மனசுல எழுந்த வார்த்தைகள் இது மட்டும் தான்…

‘பசு மாடு புல்லை மேயுது

கன்னுக்குட்டி துள்ளிக் குதிக்குது’

இதில் வார்த்தை ஜாலம் கிடையாது… பசுவும், கன்னுக்குட்டியும் என்ன செய்ததோ, photo எடுப்பது போல அதைச் சொல்கிறார்…. ‘நாவால் நக்குது’ என்ற வார்த்தையில், தடவிக் கொடுத்தது என்ற சால்ஜாப்பெல்லாம் கிடையாது… Straight-ஆ ‘நக்குது’ என்று போட்டு, பாடலை இலக்கிய உலகத்தில் தவழச் செய்து விட்டார் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : வாவ்! இவ்வளவுதான் பாடலா….

(தொடரும்)

Comments

Popular posts from this blog

பக்குவம் - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

பக்குவம் - பாகம் 8

ஆளுமை - பாகம் 5