பேச்சுத்தமிழ் - பாகம் 4
கிருஷ்ணர் : நீ பாடிய ‘சத்தியவான் சாவித்திரி’ கூத்துப் பாட்டு நவராத்திரி படத்தில் இடம் பெற்றதுதானே… ரொம்ப நல்ல பாட்டு மேகலா… இந்த கூத்து நாடகத்தை, ஏன் இந்தப் படத்தில் வைத்தார்கள் என்பதை விட…, நல்ல வேளை, இப்படி அழிந்து கொண்டிருக்கும் ஒரு கலையை பதிவு பண்ணி வைத்திருக்கிறார்கள் என்று சொல்லலாம். தெருக்கூத்தின் வழிமுறையை அப்படியே பதிவு பண்ணியிருக்கிறார்கள். நடிகர் திலகமும், சாவித்திரியம்மாவும் கொஞ்சம் கூட மிகைப்பட்ட நடிப்பு இல்லாமல், கூத்துக் கலைஞர்களாக அப்படியே நடித்திருக்கிறார்கள். அவர்கள் கண் அசைவும், விரலசைவும் நீ சொன்ன மாதிரி நின்றபடிக்கே நடனமாடுவதும், பேச்சுத் தமிழை, கிராமியத் தமிழை இலக்கியமாக்குவதுமாக…, ஏ…, யப்பா, இதனாலேயே நவராத்திரி படம்…, ஒரே ஷாட்டில் பல sixerகளை விளாசித் தள்ளி விட்டது… மண் மணக்கும் தமிழில் ரசிகர்களிடம், சத்தியவான் சாவித்திரி கதையை விருந்தாகவே கொடுத்து விட்டார்கள் மேகலா… சூப்பர்… பேச்சுத் தமிழை பேச ஆரம்பித்ததும்…, அது, கொஞ்சும் தமிழாகி விட்டது… எப்படி மேகலா…, பேச்சுத் தமிழை, ஒரு மாதிரி இழுத்து இழுத்து, புது மாதிரி பேசுகிறார்கள்… அதிலும், தத்தத்தோம்.., தளாங்கு தகதித்தோம் என்று சொல்லி விட்டு, சத்தியவான் சாவித்திரியை ‘வரச் சொல்லு’…, ‘வரச் சொல்லு’ என்னும் போது…, ‘தங்க ஜரிகை சேலை எங்கும் பள பளக்க…, ஆஹ்ஹா…, வந்தேனே…, ஏ, வந்தேனே… தனியாளா வந்தேனையா’…, என்று பாடும் போது, ஒவ்வொரு வார்த்தையும்…, பேச்சுத் தமிழ்…, ஆனால், அதையே பாட்டாகப் பாடி, மக்களை சொக்க வச்சிர்ராங்க மேகலா….
மேகலா : கிருஷ்ணா…, அதனால்தான், அந்த காலகட்டத்தில், மக்களிடையே கூத்துக்குனு ஒரு மதிப்பு இருந்தது கிருஷ்ணா… இந்த சினிமா வந்த பிறகு எல்லாம் போச்சு. மக்களுக்கும், தங்களுக்கு எந்த மொழி பரிச்சயமோ, அந்த மொழியில் கேட்பதற்குத்தான் பிடிக்கிறது. நாடகத்திலோ, சினிமாவிலோ, வசனம் வரும் போது, அதுவே மக்களிடையே வரவேற்பு ‘மாஸ்’ ஆகி விடுகிறது…. உனக்கு ஒண்ணு தெரியுமா கிருஷ்ணா… மக்களுக்கு உதாரணம் சொல்வதற்கு, சில punch dialogue தேவையாக இருக்கும்… வீடுகளில், தன் குடும்பம் தழைத்தோங்குவதற்கு, ‘வாழையடி வாழை’ என்ற உதாரணத்தை சாதாரணமாகப் பேசி, மனசு நிறைஞ்சு போவாங்க கிருஷ்ணா…
கிருஷ்ணர் : அட…, ஆமால்ல… ‘மூக்கணாங்கயிறு போடுவது’…, ’வாழையடி வாழையாக குலம் தழைக்க’ விரும்புவது.., ’கரும்புச்சாறை விட இனிப்பானது’ என்று சொல்லுவது…, இதெல்லாம் நடைமுறையில் புழக்கத்தில் உள்ள வார்த்தைகள். இதை உதாரணம் சொல்லும் போது, சொல்லுபவர்க்கும் எளிமையானது…, கேட்பவர்க்கும் சுலபமாய்ப் புரிந்து கொள்ளக் கூடியது…, இல்லையா….
மேகலா : கிருஷ்ணா…., ஒரே மாதிரி ஓடுவதைக் கூட, ‘செக்கு மாடு மாதிரி’ ஒரே கோட்டுல போறான். அப்படீன்னு சொல்லும் போது, லேசா காமெடி தலை தூக்கும் பாத்தியா…, அதுதான் நம்ம பெருசுகளோட நக்கல் கிருஷ்ணா… சிலரைப் பத்திப் பேசும் போது, ‘ஓ, அவனா…, கிட்ட வந்தா உதைப்பான், எட்டப் போனா குரைப்பான்’…., அப்படீன்னு, கழுதையையும், நாயையும் குறிப்பிட்டு சொல்லுவாங்க… அந்த பேசப்படுகிற ஆளோட குணாதிசயம் பளிச்சுனு தெரிஞ்சிரும் கிருஷ்ணா… அதே மாதிரி, எப்பவும் லொடலொடன்னு பேசுறவங்கள…, ‘ஓலப்பாயில நாய் மோண்ட மாதிரி’, எப்பப் பாத்தாலும், லொடலொடன்னு பேசிக்கிட்டு இருப்பான்’ – அப்படீம்பாங்க கிருஷ்ணா…
கிருஷ்ணர் : வாவ்! இப்படீலாம் தமிழில் இருக்கா… பளிச்சுனு சொல்லியிருக்காங்க மேகலா….
மேகலா : இது மட்டுமா கிருஷ்ணா…. எத்தன தடவ சொன்னாலும் கேக்காதவங்கள, ‘எருமை மாட்டு மேல மழை பேஞ்ச மாதிரி’…, என்ன சொன்னாலும் அசையாம இருக்கான்’ – அப்படீன்னு சொல்லுவாங்க கிருஷ்ணா…
கிருஷ்ணர் : ஏ…, யப்பா…, மனுஷன் தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்ச்சிகளை எப்படி உன்னிப்பாய் கவனிக்கிறான் பாரு… சூப்பர் மேகலா… இதே மாதிரி பொழுது போவது தெரியாம பேசிக்கிட்டே இருக்கலாம் போலயே…
மேகலா : கிருஷ்ணா…, உனக்கு ‘மாங்கொட்டை கல்’லுனா என்னன்னு தெரியுமா கிருஷ்ணா…
கிருஷ்ணர் : ‘மாங்கொட்டை கல்லு’… இந்த கிணறு வெட்டும் போது…, வெட்டுபவர்கள், கடப்பாரையால் இடித்துத் தோண்டுவார்கள். அப்படித் தோண்டும் போது, பூமிக்கடியில், சில சமயம், இந்தக் கல்லு தென்படலாம். அப்படித் தென்பட்டால், மேற்கொண்டு தோண்ட மாட்டார்கள். ஏன்னா, அந்தக் கல்லை உடைக்க முடியாது… பிறகு எப்படி கிணறு தோண்ட… அந்த மாதிரி கல்லுக்கு, ‘மாங்கொட்டைக் கல்லு’னு பேரு…
மேகலா : உனக்குத் தெரியாதுனு நெனச்சேன் கிருஷ்ணா… எல்லாத்தையும் தெரிஞ்சி வச்சிருக்க கிருஷ்ணா… அப்படியே, மாங்கொட்டைக் கல்லு தட்டுப்பட்டால் ஏன் கிணறு வெட்ட மாட்டார்கள் என்பதையும் சொல்லேன் கிருஷ்ணா…
கிருஷ்ணர் : சரி…, பூகோள அறிவியலின்படி, பூமிக்குக் கீழே, பல வித மணற்படுகைகள், கனிமங்கள், உலோகங்கள் எல்லாம் இருக்கும்ல… சில இடங்களில் தண்ணீரும் இருக்கும். அந்த இடத்தில் கிணறு தோண்டுவார்கள். அதில் சில சமயம், நொறுங்கக் கூடிய கற்களும், பாறைகளும் தென்படலாம். பாறையை உடைத்துத் தோண்டும் போது, பல நேரங்களில், அதனடியில் வற்றாத த்ண்ணீர் ஊற்றாக வெளிவந்து கிணறு நிரம்பி விடும். இதுதான் கிணறு தோண்டும் process… ஆணால், மாங்கொட்டைக் கல்லு இருந்தால், அந்தப் பகுதியை உடைக்க முடியாது… இதில் என்ன special…
மேகலா : கிருஷ்ணா…, எங்க ஐயாப்பா…, எங்க உறவுக்காரர் ஒருத்தர….
(தொடரும்)
Comments
Post a Comment