பேச்சுத்தமிழ் - பாகம் 5

மேகலா : கிருஷ்ணா…, எங்க ஐயாப்பா, எங்க உறவுக்காரர் ஒருத்தர…, அவ…, சரியான மாங்கொட்டக்கல்லு என்று நக்கலா சிரிச்சிக்கிட்டே சொன்னாரு… நான் எங்க அப்பாட்ட, ‘ஐயாப்பா, மாங்கொட்டக்கல்லுனு சொல்றாரு… ஏன் இப்படி சொல்றாருப்பா’ என்று கேட்கவும், எங்க அப்பா, முதலில் பயங்கரமாகச் சிரித்து விட்டார்… பிறகு எனக்கு விளக்கினார்… கிணறு தோண்டும் போது, மாங்கொட்டக்கல்லு தட்டுப்பட்டால், கடப்பாரை, ‘ணங்குனு’ சப்தம் போட்டு எகிறி, கடப்பாரை போட்டவர் முகத்திலேயே எதிர்த்து அடிக்கும்… கல்லு உடையாது…, நம்ம மூஞ்சி பேந்துரும்… நம்ம உறவுக்காரரும் அப்படித்தான்… ’நம்ம பாத்து கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்தால், நம்மையே திருப்பி அடிச்சிருவாங்க’ என்ற அர்த்தத்தில், மாங்கொட்டைக்கல்லை உதாரணம் சொல்லி உனக்கு விளக்கியிருக்கிறார்’ என்று சொல்லி, எங்க ஐயாப்பாவோட அறிவியல் அறிவையும், நக்கலையும் நினைச்சி சந்தோஷப்பட்டார் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : Oh! ஆமாம்ல… மாங்கொட்டை கல்லோட தன்மையே அதுதானே. கடப்பாரையைப் போட்டா, போட்டவன் முகத்துல தான் திரும்பி அடிக்கும்… மனுஷங்க எப்படி இயற்கையின் செய்கையை பொருத்தமாக யோசிக்கிறாங்க பாரு…

மேகலா : ‘வெட்டு ஒண்ணு, துண்டு இரண்டா’ பேசணும் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : வாவ்! மேகலா…, இது நல்லா இருக்கு…

மேகலா : இது என்ன…. இன்னும் கேளு கிருஷ்ணா…. ‘ஆடுற மாட்டை ஆடிக் கறக்கணும்…, பாடுற மாட்டைப் பாடிக் கறக்கணும்’… திறமைசாலிகளுக்கு…, அதுவும் psychology தெரிந்தவங்களுக்கு, யாரையும் தன் பக்கம் இழுக்கும் திறமையிருக்கும் கிருஷ்ணா… அசால்ட்டா யோசிப்பாங்க… அதுவும் நமக்குப் புரியற மாதிரி பேசுறாங்க பாரு… இது ஒரு வகையான… என்னத்த சொல்றது….

கிருஷ்ணர் : இதுதான் ‘வாழ்வியல்’ மேகலா… தன்னைச் சுற்றி நடக்கும் சம்பவங்களை வைத்தே உலகத்தை அளவிடுவது…

மேகலா : அதிலும், அம்மாவை…, அப்பாவை விட சிறப்பாக பிள்ளை ஒரு செயலை செய்து விட்டால், ‘வித்து ஒண்ணு போட்டா, சுரை ஒண்ணா முளைக்கும்’..., அப்படீன்னு பெருமைப் படுவாங்க… அதே நேரத்துல, பிள்ளைகள் சேட்டை பண்ணும் போது…, ‘உன் பிள்ளைகளில் யாரை உனக்கு ரொம்பப் பிடிக்கும்னு’ கேட்டா, அம்மா easy-யா, ‘கழுதை விட்டைல, முன்விட்டை வேற, பின்விட்டை வேறயா’…. எல்லாம் ஒரே ரகம் தான்னு ரொம்ப அசால்ட்டா சொல்லுவாங்க கிருஷ்ணா….

கிருஷ்ணர் : ஐயோ! மேகலா…, எனக்கு, சிரிச்சி சிரிச்சி வயிறு புண்ணாப் போயிரும் போல… அப்போ.., ‘தாய் எட்டடி பாஞ்சா, குட்டி பதினாறடி பாயும்’ – என்ற பழமொழிய எப்ப சொல்லுவாங்க…?

மேகலா : இதை, அம்மா, அப்பாவைக் காட்டிலும், நம்ம well-wishers, பாத்து அசந்து போய் சொல்லும் பழமொழி கிருஷ்ணா…

கிருஷ்ணர் : Oh! Right…, right… நம்ம பெருசுகள், உண்மையான உளவியல் மன்னர்கள்தான் மேகலா…

மேகலா : கிருஷ்ணா…., உதாரணம் காட்டி புரிய வைக்கிறது ஒரு புறம்…, நம்மை பிரமிக்க வைக்கும் வார்த்தைகள் இன்னொரு புறம் இருக்கு…. ஒரே சொல்லுல, எதிராளியை முட்டாளாக்குவது, நம்ம பேச்சுத்தமிழுக்குன்னு ஒரு value இருக்கு கிருஷ்ணா….

கிருஷ்ணர் : எப்படி…

மேகலா : யேய் ‘கூமுட்டை’

கிருஷ்ணர் : ஏய்…, என்னம்மா.., என்னையவா சொல்லுற…

மேகலா : ஐயோ…, இல்ல கிருஷ்ணா… முட்டள்தனமா ஏதாவது செஞ்சா…, உடனே, வில்லிலிருந்து அம்பு புறப்படற மாதிரி…, ‘கூமுட்டை’ என்று வந்து மொத்த முட்டாள்தனத்தையும் சுட்டிக் காட்டி விடும்… அதே மாதிரி, என்ன சொல்லிக் கொடுத்தாலும், ‘திருதிரு’னு முழிச்சா…, ‘வெளக்கெண்ணெய்…, வெளக்கெண்ணெய்’, திருதிருனு முழிக்கிறதப் பாரு…, ‘வெளக்கெண்ணெய் குடிச்ச மாதிரி’ – அப்படீன்னு சொல்லி, படிப்பில interest இல்லாதத சுட்டிக் காட்டீருவாங்க…

கிருஷ்ணர் : ‘ஆடு திருடுனவன் மாதிரி முழிக்கிற’ – அப்படீன்னு எப்ப சொல்லுவாங்க…

மேகலா : செய்த தப்பை மறைக்க முடியாமல் முழிக்கும் போது, ‘ஆடு திருடுனவன் மாதிரி’ன்னு சொல்லுவாங்க கிருஷ்ணா….

கிருஷ்ணர் : நெசம்மா மேகலா…, நம்ம முன்னோர்கள்…, வாழ்க்கையை படிச்சவங்க மேகலா… சாதாரண மொழில, அசாதாரணமான, powerful சொல்லை வைத்து, casual ஆக யோசிக்கிறாங்க பாரு… கேக்க விருப்பமில்லாம முழிக்கிறதுக்கும், செஞ்ச தப்ப மறைக்க முழிக்கிறதுக்கும் உண்டான வித்தியாசத்தை எவ்வளவு சாதாரண வார்த்தையைப் போட்டு சொல்றாங்க… நல்ல விவரமான ஆளுகதான்…

மேகலா : சும்மா…, விவரமான ஆளுக மட்டுமில்ல கிருஷ்ணா….

(தொடரும்)

Comments

Popular posts from this blog

பக்குவம் - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

தன்னம்பிக்கை - பாகம் 3

தன்னம்பிக்கை - பாகம் 4