பேச்சுத்தமிழ் - பாகம் 13

மேகலா : கிருஷ்ணா…., இன்னைக்கு நீ கொடுக்கும் பதிலெல்லாம் சூப்பர் counter கிருஷ்ணா…. ச்சும்மா இடது கையால மலையப் புரட்டுற வேலையைச் செய்திருக்கிற கிருஷ்ணா… இதப் பார்ரா…, கோவர்த்தனமலையைச் சுண்டு விரலால தாங்கிப் புடிச்சவன் நீ… இந்த மலையப் புரட்டுற வேலையெல்லாம் உனக்கு ஜுஜுபி… உனக்குப் போயி உதாரணம் காட்டுறேனே… உதாரணத்தையும், உதாரணம் காட்டுறவங்களையும் jolly-யா deal பண்ற ஆளு நீ…

கிருஷ்ணர் : ‘கடப்பாரையவே தூக்க முடியாதவன், மலையப் புரட்ட முடியுமா’… போங்க boss…, என்னைக் கலாய்க்காதீங்க…

மேகலா : ஐயோ…, உன் கன்னத்தைக் கிள்ளி திருஷ்டி கழிக்கணும் கிருஷ்ணா… நீ பேசும் பேச்செல்லாம் ‘பன்ச் டயலாக்’… ஆஹா…. கிருஷ்ணா…, நாங்கெல்லாம் ‘குண்டக்க மண்டக்கன்னு பேசுவோம்’…, குத்து மதிப்பா அர்த்தம் புரிஞ்சிக்குவோம்… தத்துப்பித்துன்னு உளறுவோம்… சம்பந்தப்பட்டவங்க வந்து ரெண்டு வப்பு வச்சா, ‘குய்யோ முறையோன்னு’ புலம்புவோம்….

கிருஷ்ணர் : ஆமா…, நீ என்ன…, ஆசிரியப்பா…, வெண்பா என்ற இலக்கணங்களை வைத்து செய்யுளா எழுதுற… குத்து மதிப்பு, குண்டக்க மண்டக்க, தத்து பித்துன்னு rhiming-ஆ பேசுற…

மேகலா : இல்ல கிருஷ்ணா… இதெல்லாம் நாங்க அன்றாடம் பேசுற சாதாரண சொலவடைதான் கிருஷ்ணா… ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்துல, M. G. R. கூட, ’அன்பான அமைதியான மனைவி…, ஏறுக்கு மாறான ஆம்பள வீட்டுல’…, என்று பொருத்தமில்லாத புருஷனை ரொம்ப correct-ஆ அளவெடுத்த மாதிரி சொல்லுவாரு…

கிருஷ்ணர் : என்னடா இன்னும் M. G. R. அ சொல்லலயேன்னு நினைச்சேன்…, சொல்லீட்ட. சரி…, ‘ஏறுக்கு மாறானா’ என்ன அர்த்தம்…

மேகலா : குடும்பத்துக்குப் பொருத்தமில்லாத ஒருவர்…, அல்லது…, சம்பந்தமில்லாத காரியத்தைச் செய்யிறது… ‘ஏறுக்கு மாறா’ ஏதாவது செய்யிறது… சில சமயங்களில் கிருஷ்ணா…, ‘குல்சா’வா சொல்ற விஷயம்…, அதாவது, ’குத்து மதிப்பா’ சொல்றது கூட, ஆங்கிலத்தில் random-ஆ correct ஆகிடும்… நமக்கே திகைப்பா இருக்கும் கிருஷ்ணா…

கிருஷ்ணர் : எப்பவுமே, ‘தத்துப்பித்துனு’ உளறுபவன், குத்து மதிப்பா correct ஆ சொல்றது ஆச்சரியம்தான… அதே மாதிரி…, கால அளவுகள் சரியாகத் தெரியாத போது உபயோகிக்கும் வார்த்தை என்ன… கொஞ்சம் தேடிப் பிடிச்சி சொல்லு பார்ப்போம்…

மேகலா : ’ஏறக்குறைய’ 30 வருடங்களுக்கு முன்பு தான்…, கிருஷ்ணா…, ‘கீதை’யின் மூலம் உன்னைத் தெரிந்து கொண்டேன்… சொல்லிட்டனா… அதே மாதிரி, தராசு நிறுக்கும் போதும், ஏறக்குறைய இருந்தாலும், கண்டும் காணாமல் இருப்பது…

கிருஷ்ணர் : சொல்லிட்டயா… இரு; உன்ன சிக்கல்ல மாட்டி விடுகிறேன்… சிங்கம், மானை வேட்டையாடும் போது…, மானின் நிலமை என்ன…

மேகலா : ‘குத்துயிரும், குலை உயிருமாய்’ கதறும் கிருஷ்ணா…

கிருஷ்ணர் : எப்படிக் கேட்டாலும் சொல்றாளே… சரி…, இதுக்கு உன்னால சொல்லவே முடியாது… வாழ்க்கையில் உழைத்து முன்னேறுபவர்களை என்னன்னு சொல்லுவ…

மேகலா : ‘கைய ஊனி கரணம் பாயுறது’… கிருஷ்ணா…, இன்னும் ஏதாவது கேளு கிருஷ்ணா….

கிருஷ்ணர் : தப்பு நடந்து போச்சுனா…

மேகலா : ‘ஏடாகூடமா’ ஏதாவது ஆகி விடப் போகுது என்போம்…

கிருஷ்ணர் : ‘ஏடாகூடமா’…, அப்படீன்னா…

மேகலா : கிருஷ்ணா…, சில வார்த்தைகளுக்கு அர்த்தம் தேடி பிரிச்சி மேஞ்சாலும், தனித்தனியா அர்த்தம் கண்டுபிடிக்க முடியாது… ஒரு சிலர்…, ‘குல்சா’வான ஆட்கள்…, அப்படி இப்படீன்னு இருப்பாங்க… அவங்கள குறிப்பிடும் போது, ‘ஏடாகூடமான’ ஆளு.. அதிலும், குறிப்பிட்ட விஷயத்துல, ‘அப்படி இப்படி’ன்னு இருப்பாங்க…, என்று இலை மறை காயாக சொல்லுவாங்க…

கிருஷ்ணர் : Oh! ஷோக்குப் பேர்வழிகளை சொல்றயா…

மேகலா : ஷோக்குப் பேர்வழிகளை மட்டும் இல்ல கிருஷ்ணா…. கொஞ்சம் ‘அப்படி இப்படின்னு’தான் இருக்கும்…, நாமதான் adjust பண்ணிப் போகணும்…., அப்படீன்னு, புது இடத்துல, புதுசா ஒருவர் நுழையும் போது, இடத்துக்குத் தகுந்த மாதிரி, adjust பண்ணிக்கணும்னு advice பண்றோம்ல…, அதுக்குக் கூட, இந்த ‘அப்படி இப்படி’…, சில சமயங்கள்ல ‘ஏடாகூடம்’ கூட நமக்குக் கை கொடுக்கும் கிருஷ்ணா…

கிருஷ்ணர் : சரி…, கொஞ்ச நேரத்துக்கு இந்த தத்துப் பித்துனு பேசுறத நிறுத்தி வைப்போம்… மக்கள், வியாபாரத்தில் அதிகமாக புழங்கும் வார்த்தைகள் என்னென்ன…, சொல்லு பார்ப்போம்….

மேகலா : கிருஷ்ணா…, maarket-ஐயே, ‘சந்தை’ன்னு சொல்லுவாங்க… அதிலும், செவ்வாய்க்கிழமை சந்தை, வெள்ளிக்கிழமை சந்தைன்னு சொல்றது…, இந்த நாட்களில் கூடும் சந்தை… பொதுவாக சந்தை என்பது…, பல பொருட்களை, பல வேறு வியாபாரிகள், ஒரே இடத்துல கூடி வியாபாரம் செய்வது… மீன் விற்கும் இடத்தை, ‘மீன்கடை’…, கோழி விற்கும் இடத்தை, ‘கோழிக்கடை’ அப்படீன்னு தனித்தனியாகவும் சொல்லுகிறோம்… இன்னும், பலசரக்குக்கடை, காய்கறிக்கடை, பழக்கடை அப்படீன்னும் சொல்லுவோம்… Mass level-ல ஒரு பொருளை விற்கும் கடையை…, அதாவது, மொத்தக்கடை அப்படீன்னும் சொல்லுவோம்ல… அந்தக்கடையை, ‘வெல்லமண்டி, ‘வெங்காய மண்டி’ அப்படீன்னும் சொல்லுவாங்க….

(தொடரும்)

Comments

Popular posts from this blog

பக்குவம் - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

பக்குவம் - பாகம் 8

ஆளுமை - பாகம் 5