பேச்சுத்தமிழ் - பாகம் 15

மேகலா : இது ஒட்டுவாரொட்டி கிருஷ்ணா… கிருஷ்ணா…, மேய்ச்சலில் மட்டும் தமிழ் விளையாடல… நீ…, ‘ஏர்தழுவுதல்’ விளையாட்ட விளையாடி இருக்கியா…

கிருஷ்ணர் : ஆமாம்…, ‘ஏழு எருதுகளை’ அடக்கிய பின் தான், நப்பின்னய கல்யாணமே செய்திருக்கேன்…

மேகலா : எத்தனை வீரச் செயல் இது… எங்க பக்கத்துல, காளையடக்குதல், ஏரு தழுவுதல் என்று தூய தமிழில் பேசுபவர்கள் பக்கத்தில் ‘மாடுபிடி விளையாட்டு’ என்று எங்களைப் போல மக்கள் பேசும் மொழியும் உண்டு. அதிலும், அலங்காநல்லூரில் வீரவிளையாட்டு பார்த்து running commentary சொல்பவர்கள்…, ‘இதோ வாடிப்பட்டி கருப்பன் வந்துட்டான். வாடிவாசல் திறந்ததும், சீறிப் பாஞ்சு வந்துட்டான்… தில்லு இருக்கும் மாடுபிடி இளைஞர்கள்…, கருப்பன் கொம்பைத் தொட்டுப் பாரு… தொட்டுப் பார்ப்பவனுக்கு 500 ரூபா… திமிலைப் பிடித்தால், 1000 ரூபாய்… திமிலைப் பிடித்து கருப்பனை அடக்கிப் பாரு’ என்று சொல்லும் போதே…, இங்கே மாடுபிடி வீரர்களுக்கு…, ‘சும்மா ஜிவ்…வுனு’ ஏறும். கொம்பைப் பிடிச்சி, ‘உருமால’ உருவிட்டா, நண்பர்கள், அவனைத் தூக்கிச் சுமந்து கொண்டாடிருவாங்க… தங்கச் சங்கிலி கழுத்தில் மின்ன, தோளில் வழியும் இரத்தத்தைக் கூட பொருட்படுத்தாமல்…, காதலியைப் பார்த்து கண்ணடிக்கும் ‘மாடுபிடி வீரன்’… அடேங்கப்பா…, கூட்டத்தில் விசில் பறக்கும்…

கிருஷ்ணர் : நீ சாதாரண பேச்சுத்தமிழில் சொல்லும் போது கூட, இந்த நிகழ்ச்சி இத்தனை சந்தோஷமாய், மாடுபிடி விளையாட்டை நேரில் பார்க்க ஆசையைத் தூண்டுகிறது…

மேகலா : தூண்டுதுல கிருஷ்ணா… மாடு…, மேய்ச்சல்…, ஜல்லிக்கட்டு…, மாடு பிடித்தல்…, இதெல்லாம் அப்படித்தான்… கிராமிய மணம் வீசும் சுவாரஸ்யம்… மாட்டை விற்கவும், வாங்கவும் உனக்குத் தெரியுமா கிருஷ்ணா….

கிருஷ்ணர் : மாட்டை வாங்கலாம்… எதுக்கு விக்கணும்….

மேகலா : புது மாடு வாங்க…, பழைய மாடு விற்கன்னு…, நடக்கும்ல கிருஷ்ணா… புது மாடு வாங்குனாத்தான, இன்னும் மந்தையில மாடுகளைச் சேர்க்கலாம் கிருஷ்ணா… அதுக்கு மாட்டுக் கடைக்கா போவாங்க…

கிருஷ்ணர் : ஐயய்யே…, இது என்ன…, ரோட்டுக்கடை மாதிரி மாட்டுக்கடை…, மாட்டுச்சந்தைன்னு சொல்லு… ஒவ்வொரு ஊருலயும், செவ்வாய்க்கிழமையோ…, வெள்ளிக்கிழமையோ…, பல ஊரு மாடுகளைக் கொண்டு வருவாங்க… மாட்டின் லட்சணம், சுழிக்குத் தகுந்த மாதிரி, விலையும் இருக்கும்…

மேகலா : எப்படி கிருஷ்ணா விலை பேசுவாங்க… எங்க பக்கமெல்லாம், விற்பவரும், வாங்குபவருக்கு வாங்கிக் கொடுப்பவரும், விரல் பிடித்து rate பேசுவாங்க… அடுத்தவங்க பார்த்திரக் கூடாதுன்னு, துண்டால மூடிக்குவாங்க. இன்ன விரல் பிடிச்சா…, இன்ன rateன்னு ரகசிய டீலிங்ல பேசுவாங்க…

கிருஷ்ணர் : கொஞ்சம் இரு… அதென்ன, வாங்குபவருக்கு வாங்கிக் கொடுப்பவர்…

மேகலா : தரகர் கிருஷ்ணா… காங்கேயம் மாடு விலைக்கு வருது…, நேரத்துக்கு 10 படி பால் கறக்கும்னு…, வாங்குபவருக்கு ஆசையைத் தூண்டி விட்டு, 10000 ரூபாய் rate.. நான் உங்களுக்கு வாங்கித் தர்ரேன். உங்களுக்காக 9000 ரூபாய்னு ownerட்ட கேட்போம்… இப்படி நைச்சியமா பேசி, ஏற்கனவே பேசிய தொகையை, கண்ணு முன்னே action replay பண்ணிக் காட்டுவாங்க… 8000 ரூபாய்க்கு போகக் கூடிய பசு மாட்டை, 9000 ரூபாய்க்கு வாங்கிக் கொடுத்து…, ரெண்டு பக்கமும் 1000, 1000னு கமிஷன் வாங்கிக்குவாங்க…

கிருஷ்ணர் : இப்படிலாமா நடக்குது… அப்போ, விற்பது காங்கேயம் மாடு இல்லையா…

மேகலா : நீ வேற கிருஷ்ணா…. ரெண்டு, மூணு கன்னு போட்ட வயசான மாடா கூட இருக்கலாம்…

கிருஷ்ணர் : இப்படியெல்லாமா சந்தையில நடக்குது…

மேகலா : முறைப்படி வியாபாரமும் நடக்கும் கிருஷ்ணா… இந்த மாதிரி அப்பப்ப நடக்கும்… வியாபாரம்னாலே…, ஒண்ணு, வாங்குபவரின் மனம் குளிர, பொருட்களை விற்பது…, இன்னொண்ணு, ஏதாவது build-upஆகப் பேசி வியாபாரம் பண்ணுவது…

கிருஷ்ணர் : ‘கோக்கு மாக்கான’ ஆட்கள், எல்லா துறையிலும் இருப்பாங்களோ…

மேகலா : கட்டாயம், வியாபாரத் துறையில் இருப்பாங்க கிருஷ்ணா… எந்த அளவுக்கு, ‘கோக்கு மாக்கா’ வியாபாரிகள் வியாபாரம் பண்ணுவாங்களோ, அந்த அளவு, நாங்களும் எச்சரிக்கையா இருப்போம் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : இருந்துதான ஆகணும்… சரி…, நீ எச்சரிக்கையா நடந்துக்கிட்ட அனுபவத்தைச் சொல்லேன்…

மேகலா : கிருஷ்ணா…, ஒரு தீபாவளிக்கு, ‘பால்கோவா’ கிண்டலாம்னு தீர்மானம் பண்ணி…, பால்காரரிடம் 1.5 லிட்டர் பால் வாங்கினேன். அவர் அளந்து ஊற்றி விட்டு, நான் எப்போதும் 200 ml தான் வாங்குவேன் என்பதால், அதிகப்படி பாலுக்கு காரணத்தைக் கேட்டார். நானும், ‘பால்கோவா கிண்டப் போகிறேன்’ என்று சொல்லவும், அவர் சொன்ன டயலாக்கைக் கேட்டு நான் அசந்தே போனேன் கிருஷ்ணா…

கிருஷ்ணர் : அப்படி என்ன அந்த பால்காரர் சொன்னார்….

(தொடரும்)

Comments

Popular posts from this blog

பக்குவம் - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

பக்குவம் - பாகம் 8

ஆளுமை - பாகம் 5