பேச்சுத்தமிழ் - பாகம் 17

கிருஷ்ணர் : Oh! நெசம்மா…, நீ சொன்னது மாதிரி, ‘கொங்கு தமிழ்’ கேட்பதற்கு ரொம்ப இதமா இருக்கு மேகலா….

மேகலா : கிருஷ்ணா…, இந்த கொங்கு தமிழ் மேல சினிமாக்காரங்களுக்கு ஒரு அதீத காதல்… ‘சின்னக்கவுண்டர்’ படத்துல, குளத்தில விஷம் வச்சிட்டாங்க என்பது குற்றச்சாட்டு… அது பஞ்சாயத்துக்கு வந்திருச்சி… இடையில் டவுனுக்குப் போய் வர வேண்டிய அவசியம் hero-வுக்கு வருது… தனக்குப் பதிலாக தன் அம்மாவை பஞ்சாயத்தில் நிறுத்தி வைத்து விட்டு, ‘குறிப்பிட்ட நேரத்தில் வருகிறேன்; அப்படி வரவில்லையென்றால், விஷம் கலந்த குளத்துத் தண்ணீரை அம்மா குடிப்பாங்க’ என்று சொல்லி விட்டு கிளம்புகிறார்…. கிளம்பும் போது, விஜயகாந்த் கண் கலங்குவார்… அப்போ, அவங்க அம்மா, ‘நீ ஏன் கண்ணு மறுவுற.., அம்மா நான் இருக்கோம்ல…, போயிட்டு வா…’ என்று சோகமாகப் பேசினாலும்…, கொங்கு தமிழ் கம்பீரமாகப் பேசும்… சாதாரணமாக, பெரியவங்க, சின்னவங்கள, ‘ஏங்கண்ணு, ஒன்ர அப்பாரு ஊட்ல இருக்காரா’…, அப்படீன்னு, ‘கண்ணு’ன்னுதான் கூப்பிடுவாங்க….

கிருஷ்ணர் : வாவ்! கொங்கு தமிழ் ரொம்ப வெள்ளந்தியாக, கிராமீய மணம் வீசும்படி இருக்குதுங்கோ…

மேகலா : கிருஷ்ணா…., பேச்சுத்தமிழில் திட்டும் போது, அவரவர்க்குரிய கொஞ்சும் தமிழில் திட்டுவாங்க கிருஷ்ணா.. முதலில் அதற்கு அர்த்தம் தெரிவதற்கே dictionary போடணும் கிருஷ்ணா… எங்க அப்பா, ஐயாப்பாலாம், எங்கள பாராட்டுறதனாலோ, இல்ல திட்டுறதுனாலோ…, ‘பயபுள்ள, என்ன பேச்சு பேசுது…’, ‘முட்டாப்பய மவளே’ அப்படீன்னுதான் சொல்லுவாங்க… நாங்க சொல்லுவோம்…, ‘உங்களயே ஏம்ப்பா திட்டிக்கிறீங்கன்னு’ சொல்லுவோம்…

கிருஷ்ணர் : ஏன் அப்படிச் சொல்ற…

மேகலா : ‘முட்டாப்பய மவளே’ – அப்படீன்னா என்ன…

கிருஷ்ணர் : ஸ்…, ஸ்…, ஆமாம்… முட்டாப்பயன்னு உங்க அப்பாவையே சொல்லிக்கிற மாதிரி….

மேகலா : ‘பேப்பய புள்ளைக’ – அப்படீன்னும் சொல்லுவாங்க… செட்டிநாட்டுப் பக்கம், நம்பிக்கைக்கு உரியவன் தப்புப் பண்ணும் போது…, ‘பட்டுக்கெடப்பான்’, ‘கட்டைல போக’ – அப்படீன்னு திட்டுவாங்க…

கிருஷ்ணர் : பட்டுக் கெடப்பான்னா….

மேகலா : நல்லா கஷ்டப்பட்டு கெடக்கட்டும் என்று சபிக்கிறது….

கிருஷ்ணர் : அம்மாடியோவ்… இது பலிச்சிருச்சின்னா…

மேகலா : அப்பப்ப கோபத்தில் பேசுறதுக்கெல்லாம் value-வே கிடையாது கிருஷ்ணா… யாரச் சொல்றாங்க…, தன்னோட அன்புக்குரியவங்களத்தான… உனக்குத் தெரியுமா… சின்னக் குழந்தைங்க சேட்டை பண்ணும் போது…, ‘என்னடா திருட்டுப் பயலே’ (அதுக்குப் பேசக்கூடத் தெரியாது)… ‘திருட்டு முழு முழிக்கிறான் பாரு’… என்னடா ஜுஜ்ஜு.., புஜ்ஜுன்னு கொஞ்சுவதைக் கூட negative-ஆ பேசுற தகப்பன்மாரு எத்தனை பேரு….

கிருஷ்ணர் : Oh! இது கூட நல்லா இருக்கே…

மேகலா : ’கர்மம்’ என்றால் என்ன கிருஷ்ணா….

கிருஷ்ணர் : ‘கர்மம் செய்; பலனை எதிர்பாராதே’ன்னு சொல்கிறோமில்ல… அப்ப, ‘கர்மம்’னா…, ‘கடமை’…, ‘நித்திய வேலை’ என்று அர்த்தமாகும்…

மேகலா : இப்படி உயர்வான சொல்லை, நாங்க எப்படி பயன்படுத்துகிறோம் தெரியுமா…. எதையாவது கெட்டதை பார்த்தாலோ, அறிந்தாலோ…, ‘சீ…, கர்மம்…, கர்மம்’ என்று கொந்தளிச்சிருவோம்… அந்தக் கர்மத்தைச் செய்தவனை, ‘கர்மம் பிடிச்சவன்’ என்றும் easyயா சொல்லிருவோம் கிருஷ்ணா…

கிருஷ்ணர் : ஐயோ…, எனக்கு மூச்சே நின்னுரும் போலயே… ‘கர்மம்’ என்பது எவ்வளவு முக்கியமான சொல்…

மேகலா : இது தூய தமிழ்ச்சொல் கிடையாதுல கிருஷ்ணா… பிற மொழியிலிருந்து கடன் வாங்கிய சொல்லின் முழு அர்த்தம் தெரியாமல், சில சமயங்களில் பேசுற தமிழில் தடுமாறி விடுகிறது கிருஷ்ணா…

கிருஷ்ணர் : இப்படீலாம் கூட நடந்து விடுமா…

மேகலா : அது அப்படித்தான் கிருஷ்ணா… இந்தப் பழமொழியக் கேளு… எங்க அம்மா…, அடிக்கடி எங்களப் பார்த்து சொல்லும் பழமொழி… ‘அறிவு வச்சி மனையிறதுக்குள்ள விடிஞ்சிட்டான் போல’….

கிருஷ்ணர் : யார குறிப்பிட்டு சொல்றாங்க….

மேகலா : எங்கள படைச்ச பிரம்மனைப் பாத்து சொல்றாங்க… இதுல பார்த்தியா… ‘அறிவு’ என்பது நல்ல தமிழ்ச்சொல்…, ’மனையிறது’ என்பது, கட்டுவது என்பதன் தூய தமிழ்ச்சொல்… எங்களை படைத்த போது, பிரம்மன், கை, கால் எல்லாத்தையும் படைத்தவன், அறிவை வைப்பதற்கு முன், விடிஞ்சி போச்சாம்… அதனால, அறிவை வைக்கும் முன் நாங்க பிறந்து விட்டோம்…. அறிவில்லாம ஆடுறோம்பாங்க….

கிருஷ்ணர் : வாவ்! உங்க அம்மா எவ்வளவு அழகா உங்கள கணிச்சி வச்சிருக்காங்க… Correct-ஆ சொல்லியிருக்காங்களே….

(தொடரும்)

(அடுத்த பகுதியுடன் நிறைவு பெறும்)

Comments

Popular posts from this blog

பக்குவம் - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

பக்குவம் - பாகம் 8

ஆளுமை - பாகம் 5