மேகலா : கிருஷ்ணா…, கதையை…, அப்படியே தமிழ் மக்கள் மனசுல பதிந்த படியே, திருவிளையாடல் படத்தில் சொல்லப்பட்டது போலவே சொல்லுகிறேன் கிருஷ்ணா…. அம்மையப்பன் கைலாயத்தில், சிவகணங்கள் புடைசூழ அமர்ந்திருக்கிறார்,… நாரதர் அப்போது அங்கே வருகிறார். மரியாதை நிமித்தமாக, ஐயனைக் காண பழத்துடன் வருகிறார்…. அந்தப் பழத்தை, ‘எவருக்குமே கிடைக்காத ஞானப்பழம் ஒன்று எனக்குக் கிட்டியது…. எம்பெருமானே, முழுமுதற்கடவுளான உங்களுக்குத் தர வேண்டும் என்று கொண்டு வந்தேன்’ என்று பழத்தைக் கொடுக்கிறார்…. ஐயனோ, ‘என்னில் சரிபாதி நீயே… ஆகையால், இந்தக் கனியை நான் அருந்துவதை விட, நீ அருந்துவதுதான் சிறந்தது’ என்று அந்தக் கனியை, அம்மையிடம் தருகிறார்… அம்மையோ, ‘இனி வருங்காலம் பிள்ளைகள் கையில்; அவர்களுக்கே இந்தக் கனியைக் கொடுக்கலாம்’ என்று சொல்கிறார்…. அப்பொழுது, கணபதியும், முருகனும் அங்கு வருகின்றனர். கனியைப் பார்த்த கணபதி, ‘அம்மா, நான் தான் மூத்த பிள்ளை; எனக்குத் தான் பழம்’ என்கிறார். முருகனோ, ‘இல்லையம்மா, நான் தான் செல்லப்பிள்ளை; எனக்குத்தான் பழம்’ என்கிறார்…. அப்பொழுது பார்வதிதேவியோ, ‘இருவரும் கேட்கிறார்களே…., ஆளுக்குப் பாதி சமமாகப் பிரித்துக் கொடுத்து விடலாம்’ என்கிறார்…. அப்பொழுது ஐயா, அறிவு பிறப்பதற்கான ஒரு திட்டத்தைக் கூறுகிறார். ‘இதுவோ ஞானப்பழம்; இதை அறுக்கக் கூடாது… இந்தப் பழத்தைப் பெறுவதற்கு யாருக்குத் தகுதி இருக்கிறது என்று பார்க்கலாம்… ஏதாவது ஒரு சோதனை நடத்து; அதில் யார் வெற்றி பெறுகிறார்களோ, அவர்களுக்குத்தான் இந்த ஞானப்பழம்… என்ன நாரதரே, சரிதானே….’ என்று சூட்சுமமாகக் கேட்கிறார்…. நாரதரும், விஷயம் விவகாரமாகி விட்டது…, இனி இங்கு ஒரு நாடகம் நடக்கப் போகிறது…, என்று யோசித்து…, ‘ம்…, ம்…, ஆமாம் இறைவா’ என்று பதறுகிறார். அம்மாவோ, ‘பரீட்சையோ, சோதனையோ…, இதில் வல்லவர் தாங்கள்தான்… எனக்கு பிறர் மனம் வருத்தப்பட்டால், சகிக்க முடியாது’ என்று கூறி, விலகிக் கொள்கிறார்.
இப்பொழுது ஐயன், போட்டியை அறிவிக்கிறார். ‘இந்தப் பிரபஞ்சத்தை யார் முதலில் சுற்றி வருகிறார்களோ, அவர்களுக்குத்தான் இந்த ஞானப்பழம்’ என்று கூற…, முருகன், ‘உலகத்தைத்தானே…, இதோ ஒரு நொடியில் சுற்றி வருகிறேன்’ என்று சொல்லி, தன் மயில் வாகனத்தில் ஏறி, உலகத்தை சுற்றி வரப் புறப்பட்டு விடுகிறார். கணபதியோ, நாரதரிடம், ‘முனிவரே, அம்மையப்பன் என்றால் என்ன? உலகம் என்றால் என்ன?’ என்று கேட்கிறார். முனிவரும், ‘அம்மையப்பன் தான் உலகம்…; இந்த உலகம் தான் அம்மையப்பன்’ என்று கூறி, விவகாரத்திற்கு பிள்ளையார் சுழி போடுகிறார். கணபதியும், ‘அப்படியானால், அம்மையப்பனைச் சுற்றி வந்து, கனியைப் பெற்றுக் கொள்வேன்’ என்று கூறி, அம்மையப்பரை வலம் வந்து, போட்டியில் வென்று விடுகிறார்…. கனி, கணபதிக்குக் கிடைத்து விட்டது… முருகன் உலகத்தைச் சுற்றி விட்டு, திரும்ப வருகிறார். அப்பொழுது கணபதி, ‘தம்பி, நான் தான் ஜெயித்து விட்டேன்…, கனி எனக்குக் கிடைத்து விட்டது’ என்கிறார். முருகனோ, ‘தாயே, என்ன இது’ என்கிறார். அம்மாவோ, ‘எனக்கும் ஒன்றும் புரியவில்லை… கணபதி, அம்மையப்பன் என்றால் என்ன? உலகம் என்றால் என்ன – என்று கேட்டான். அதற்கு எல்லோரும், ‘அம்மையப்பன் தான் உலகம், உலகம் தான் அம்மையப்பன் என்று சொன்னார்கள்… உடனே எங்களைச் சுற்றி வந்து, உலகத்தை வலம் வந்ததாகச் சொல்லி, கனியைப் பெற்றுக் கொண்டான்’ – என்று சொல்லவும்…, ‘பெரியவர்களாக திட்டமிட்டு செய்யப்பட்ட செயல்; மிகவும் நன்றாக இருக்கிறது; நான் வருகிறேன்; எனக்கென்று ஒரு உலகம்; என் மக்கள்’ என்று கூறி, ‘அங்கு இருக்கப் போகிறேன்’ – என்று கோபித்துக் கொண்டு வெளியேறி விடுவார்…. எல்லோரும் சமாதானப்படுத்தியும் கேளாமல், பழத்துக்காகக் கோபித்துக் கொண்டு, தென்பகுதியில் இருக்கும் மலை ஒன்றின் மீது ஏறி அமர்ந்து கொள்வார்… பழத்தின் காரணத்திற்காக கோபித்துக் கொண்டு, மலை மீது நின்றதனால், அந்த மலை ‘பழநி’ என்று அழைக்கப்படுகிறது… கிருஷ்ணர் : அப்படியே, ‘சினிமா ரீல்’ ஓடுகிறது, என் கண் முன்னே…. இது ஒரு சுவாரஸ்யத்திற்காக, அம்மா, அப்பா, மூத்த பிள்ளை, இளைய பிள்ளை, பிடிவாதம், மாத்தி யோசித்தல் என்று பல twist-களை வைத்து, கதை சொல்லப்பட்டிருக்கிறது… அல்லது பரம்பொருளால் நடத்தப்பட்டிருக்கிறது…. ஒன்று நாம் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு வேதத்தையோ, தர்மத்தையோ, எடுத்துச் சொல்லும் போது. மனிதர்கள் மனதில் எளிதாக பதியும் வகைக்கு சொல்லுவதுதான் சிறப்பு… அப்படி எடுத்துச் சொல்லும் போது, பலர் நினைக்கலாம்…., ‘பார்ரா, கடவுள்னு சொல்றாங்க… அவங்க கூட, பிள்ளைகளிடம் பாரபட்சம் காட்டுகிறார்களே…, இதுதான் தர்மமா…, கடவுள்னா, above the personality இல்லையா…, இப்படி சாமான்யனாகவா சித்தரிக்கப்படுவது…. பழம் கிடைக்கலனு கோவிச்சிக்கிட்டுப் போவாங்களா… பிள்ளையாருக்கு உலகத்தை சுற்ற முடியாது; அவர் உடம்பு பெருசு… அதனால்தான் அம்மா, அப்பாவை, ‘உலகம்னு’ சொல்லி, ‘காகா’ பிடித்து, பழத்தைப் பெற்றுக் கொண்டார்’ – என்று நக்கல் செய்யலாம்…. ஒரு சூட்சுமத்தை நீ நன்றாகப் புரிந்து கொள்… பரம்பொருளை, இந்த நக்கலோ, எளிமையோ, ஒண்ணுமே தெரியாது என்று சொல்லுவதோ, கோபப்படுவதோ, பிடிவாதமோ…, இது எதுவுமே செய்து விடாது… பரம்பொருளுக்கு, அறிவின் ஆழத்தையும், அனுபவத்தின் மேன்மையையும், மக்களுக்கு எடுத்துக் காட்ட வேண்டும்… இறங்கி அடிக்க தீர்மானித்து, இந்த நாடகத்தை நடத்துகிறார். மேகலா : அறிவின் ஆழம், அனுபவத்தின் மேன்மை…, இரண்டையும் நீயே விளக்கிச் சொல் கிருஷ்ணா…
(தொடரும்)
Comments
Post a Comment