கதை கதையாம் காரணமாம் - பாகம் 3

கிருஷ்ணர் : அறிவு என்பது இருவகைப்படும் என்பதை நீ நம்புகிறாயா….

மேகலா : இருவகையா… எனக்குப் புரியல கிருஷ்ணா…. கல்வியின் மூலம் பெறப்படுவதுதானே அறிவு…, கிருஷ்ணா….

கிருஷ்ணர் : அப்போ…, உன் தாய் தந்தை மூலம் கற்றுக் கொண்டது அறிவு இல்லையா…

மேகலா : ஓ…, ஆமாம்… குழந்தையின் முதல் teacher-ஏ அம்மாதான்… இப்ப புரியுது கிருஷ்ணா… அம்மா, அப்பா கற்றுக் கொடுக்கும் அறிவு ஒன்று… அனுபவத்தின் மூலம் தெரிந்து கொள்ளும் அறிவு இன்னொண்ணு….

கிருஷ்ணர் : இதை விளக்கத்தான் அம்மையப்பன் நாடகமே நடத்துகிறார்…. இடையிடையே தத்துவங்களையும் அள்ளி வீசுகிறார்… பிள்ளையார் என்ன கேட்கிறார்… ‘உலகம் என்றால் என்ன…, அம்மையப்பன் என்றால் என்ன’ – முதன்முதலில் குழந்தையின் கண்ணுக்கு அம்மாதான் எல்லாமாகத் தெரியும். அவள் ’பந்தை’க் காட்டி…, ‘பந்தைப் பிடி’…, ‘ஓடுது பார்’ – என்று சொல்லுவாள். குழந்தை ஓடிப் போய் பிடிக்கும்… ‘காகா கத்துது’, ‘குருவி பறக்குது’, ‘நாய் வாலை ஆட்டுது’ – என்று சொல்லச் சொல்ல, ஒவ்வொரு செயலையும் உன்னிப்பாய் கவனிக்கிறது…; பாடம் கற்றுக் கொள்கிறது… அம்மாவும், அப்பாவும் தான், குழந்தையின் முதல் பல்கலைக்கழகம் இல்லையா… அப்போ…, குழந்தைக்கு உலகமே, தன் அம்மா, அப்பாதான்… இப்பச் சொல்லு…, உலகம் என்றால் என்ன? அம்மையப்பன் என்றால் என்ன…

மேகலா : அம்மையப்பன் தான் உலகம் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : நம்முடைய முதல் கல்வி, ஆழமாக நமக்குள் விதைக்கப்படுவது, நம்முடைய அம்மா அப்பாவால்தான்… தாய், தகப்பன் கற்றுக் கொடுக்கும் கல்வி மூலமாகத்தான் நமக்கு உலகம் அறிமுகமே ஆகிறது… இதை உணர்ந்த வள்ளுவர்,

‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு’ – என்று சொன்னாரா…

அறிவின் ஆரம்பமாகிய ‘அகரம்’ தான் எழுத்துக்களில் முதல் எழுத்து… அது போல, ஆதி பகவன் தான், எல்லா உயிர்களுக்கும், அறிவின் தேவைகளுக்கும் உலகத்தில் முதன்மையானது… இதை உணர்த்துவதுதான், கணபதியின் அறிவு. அம்மையப்பனுக்குள் இந்த பிரபஞ்சமே அடங்கியுள்ளது – என்ற தத்துவமும் வெளிப்படுகிறது… ஒரு காலகட்டத்தில் நாம் என்ன சொல்லுவோம்… ‘என் அம்மா, அப்பாதான் என் குடும்பம்…, எங்கள் குடும்பம் என்பது, என் அம்மா, அப்பா’ – என்கிறோமா… அப்படித்தான் கணபதியும்… மிகப் பெரிய தத்துவத்தை…, மிக எளிமையாக, அம்மையப்பனைச் சுற்றி வந்து, உலகத்தையே சுற்றி வந்ததாக அறிவிக்கிறார்…. பிரபஞ்சத்தை உள்ளடக்கிய அம்மையப்பரை, முன்னும் பின்னுமாக சுற்றி வந்து, பிரபஞ்சத்தையே கண்டுகொள்கிறார். அவர் ஞானம் வெளிப்படுகிறது. அறிவின் ஆழம், மிகத் தெளிவாக விளக்கப்படுகிறது… வெற்றி கொள்கிறார்…. இது ஒரு புறம் இருக்கட்டும்… ஐயன் கேட்ட கேள்வி என்ன…?

மேகலா : உலகத்தை யார் முதலில் சுற்றி வருகிறார்களோ…, அவர்களுக்குத்தான் இந்த ஞானப்பழம்…

கிருஷ்ணர் : சரி…, இதற்கு முருகன் கூறிய பதில் என்ன…?

மேகலா : ‘உலகத்தைத்தானே…, இதோ ஒரு நொடியில் சுற்றி வருகிறேன்’ – என்று கூறினார் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : ஐயனுடைய போட்டிக்கு, இது வெளிப்படையான பதில்… இன்னொரு வகையான அறிவை முன்வைக்கிறார்… அம்மாவிடம் கற்கும் முதல் கல்வியைத் தாண்டி, எதையும் நமக்கு நாமே கற்றுத் தெரிந்து கொள்வது, நம்முடைய அறிவை வலிமையாக்கும் முயற்சி… நமக்குள் இருக்கும் அறிவு, புதிது புதிதாய், தேடித் தேடி, புதிய உலகைப் படைக்கத் துடிக்கிறது… இந்த அனுபவத்தில், முதல் படிக்கல்லில் தடங்கல் ஏற்பட்டாலும், அடுத்தடுத்து, மாற்றுச் சிந்தனையை சேர்த்து, புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடிக்கும் போது…, இது தேவை, இது தேவையில்லாதது…, இன்ன முறையில் அணுக வேண்டும்…, இன்ன முறையில் மாற்றி யோசிக்க வேண்டும்…, என்று நம் அறிவு வலுவாக பயிற்சி எடுக்கிறது… அப்பொழுது இன்னொரு புதிய வரலாறே உருவாகிறது. அதற்குப் பெயர்தான் ’application of knowledge’. ஒரு அறிவை, அது செல்லும் திசையெல்லாம் செல்ல விடுவதல்ல நான் சொல்வது… புதிய அனுபவத்தைத் தேடும் போது, அறிவை வளரச் செய்வது, உலகத்தின் ஒவ்வொரு இயக்கத்தையும் அறிவுபூர்வமாக ஆராய்வது… ஒவ்வொரு இயக்கத்திலும், ஒவ்வொரு அசைவிலும், ‘உயிரும், சக்தியும்’ ஒளிந்திருப்பதை அறிவது… அம்மையப்பனே உலகம் என்று கண்டு கொள்வது…, ஒரு அறிவு… உலகத்தின் பறப்பது, படர்வது, நடப்பது, ஓடுவது, வளர்வது…, என்று ஒவ்வொரு இயக்கத்திலும், அம்மையப்பரைப் பார்ப்பதுதான், ‘அனுபவ அறிவு’… அதைத் தெரிந்து கொள்ளும் முயற்சியில் இறங்கிய முருகன், பரம்பொருளின் அம்சம்…

மேகலா : வாவ்! நீ சொல்லச் சொல்ல, என் மெய்யெல்லாம் சிலுக்குது கிருஷ்ணா…. பின்ன ஏன்…, கிருஷ்ணா…, முருகன் கோபித்துக் கொண்டதாகவும், பிள்ளையார் புத்திசாலியாகவும் எல்லோரும் காமெடியாகப் பேசுகிறார்கள்….

கிருஷ்ணர் : At least கதையின் மூலமாவது கடவுளின் குடும்பத்தைப் பேசட்டுமே என்பதற்காகத்தானோ… என்னதான் மேலோட்டமாக கதையைப் பேசினாலும், அம்மையப்பனுக்குள் இந்த உலகத்தை பிள்ளையார் பார்த்ததாகவும்…., உலகத்தை சுற்றி வந்து நேர்மையாக விரைவாக முருகன் செயல்பட்டார் என்றும்…, இருவித கோணத்தில் பேசுகிறார்களே… அதற்காகத்தான் அம்மையப்பன் நடத்திய நாடகம் இது மேகலா…. ஒரு புறம் அம்மையப்பனுக்குள் உலகத்தையே பார்ப்பது… மற்றொரு புறம், உலகம் முழுவதிலும், அம்மையப்பனைப் பார்ப்பது… சரி…, அடுத்த கதையைச் சொல்லு மேகலா….

(தொடரும்)

Comments

Popular posts from this blog

பக்குவம் - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

பக்குவம் - பாகம் 8

ஆளுமை - பாகம் 5