கதை கதையாம் காரணமாம் - பாகம் 4

மேகலா : கிருஷ்ணா…, இதுவும், பார்வதி பரமேசுவரனார், உலகிற்கு ‘நம்பிக்கை’ எப்படி இருக்க வேண்டும் என்பதற்காக நடத்திய நாடகம் தான் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : Oh! இந்தக் கதையா…, அற்புதம்…; சொல்லு…

மேகலா : ஒரு முறை, பார்வதி தேவி, பரமேசுவரனாரிடம் ஒரு சந்தேகத்தைக் கேட்கிறார். ‘ஐயனே, மக்கள், கங்கையில் குளித்தால், தங்கள் பாவத்தைத் தொலைத்து புண்ணியம் அடைவார்கள் என்று ஒரு நம்பிக்கையை சொல்கிறார்கள்… நானும் பார்க்கிறேன்…, தினந்தோறும், கங்கையில் நீராட வருபவர்கள் ஏராளம் பேர்… வருகிறார்கள், குளிக்கிறார்கள், செல்கிறார்கள். ஆனால், பாவங்கள் தொலைந்ததாகத் தெரியவில்லையே… ஒரு பக்கம் கங்கையில் குளிக்கிறார்கள்…, மறு பக்கம் குற்றங்களும் பெருகிக் கொண்டே போகின்றன… மக்களுக்கு கங்கையின் மேல் நம்பிக்கையில்லையா…, இல்லை…, கங்கைக்கு புண்ணியம் வற்றிப் போய் விட்டதா…’ என்று ஆதங்கத்துடன் கேட்கிறார். சர்வேஸ்வரனும், ‘உமாதேவி, இந்தக் கேள்விக்கு பதிலை, நாம் உலகுக்குச் சொல்லியே ஆக வேண்டும்… நாமும் நாடகம் நடித்து பல நாட்கள் ஆகி விட்டதல்லவா… கங்கை நதி தீரத்துக்கே செல்வோம்… நான் வயதானவனாக, பேரழகியான உன் கையைப் பற்றிக் கொண்டு, நடக்க முடியாமல் நடந்து வருகிறேன்… மற்றதை அங்கு சென்று பார்க்கலாம்… நீ மட்டும், ‘பாவம் செய்யாதவன் யாரோ, பாவத்தைத் தொலைத்தவன் யாரோ…, அவர் மட்டும் தான் என் புருஷனைத் தொட வேண்டும்’ என்ற வசனத்தை, சரியான சமயத்தில் சொல்ல வேண்டும்… மற்று நடப்பதை அங்கு வந்து பார்’ – என்று சொன்னதோடு, வயதான கிழ உருவம் எடுத்துக் கொண்டு, பேரழகியான பார்வதி கையைப் பிடித்துக் கொண்டு, தள்ளாடித் தள்ளாடி, கங்கை நதியோரம் வந்து சேர்ந்தார்… அங்கு, கங்கையில் குளித்து புண்ணியம் தேடியவர்கள், வருவதும் போவதுமாக இருந்தனர். அங்கு ஒரு பள்ளம் இருந்தது… இறையனார், அதைப் பார்க்காமல் நடக்கவும், பள்ளத்துக்குள், ‘தொபுக்கடீர்’ என்று விழுந்தார். கிழட்டு இறையனார், எழ முடியாமல் தத்தளித்தார். அப்பொழுது, பார்வதி தேவி, ‘குய்யோ முறையோ’ என்று கதறி அழுதார். ‘என் புருஷனை யாராவது தூக்கி விடுங்களேன்… தள்ளாமையால் அவரால் எழுந்திருக்க முடியவில்லை’ என்று கூப்பாடு போட்டார்…. அவ்விடத்தில் சென்று கொண்டிருந்த சிலர், காண்போரைக் கவரும் பேரழகி, இப்படி வயதான கிழவனை தன் கணவன் என்று சொல்கிறாளே என்ற ஆதங்கத்துடன், கிழவரைத் தொட்டு தூக்க முற்பட்டனர். அப்பொழுது பார்வதி தேவியார், ‘பாவம் செய்யாதவன் யாரோ, பாவத்தைத் தொலைத்தவர் யாரோ…, அவர் மட்டுமே என் புருஷனைத் தொட முடியும்’ என்று கடுமையாக எச்சரித்தார்…. எல்லோரும் கங்கையில் குளித்து விட்டு திரும்பியவர்தான்… இருந்தாலும், ஒரு இளம் பெண், இப்படி ஒரு உத்தரவை போட்ட பிறகு, தயங்கியபடி, இறையனாரை தூக்கும் முயற்சியைக் கை விட்டனர்…. அப்பொழுது அங்கு வந்த இளைஞன் ஒருவன், கிழட்டு இறையனாரைத் தூக்கி விட முற்பட்டான்.. அப்பொழுது, பார்வதி தேவியார், ‘பாவம் செய்யாதவர் யாரோ, பாவம் தொலைத்தவர் யாரோ’ என்ற பிலாக்கணத்தை, மறுபடியும் ஒப்புவித்தார்…. அந்த இளைஞனோ, ‘அம்மையே, எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து நான் பாவம் எதுவும் செய்ததில்லை… அதுவும் தவிர, இப்பொழுதுதான், கங்கையில் குளித்து வருகிறேன்… நான் அறியாமல் செய்த பிழைகளைக் கூட, கங்கை மாதா கழுவி, புண்ணியமாக்கி விட்டாள். இருப்பினும், உங்கள் உத்தரவுக்காக…, இதோ, மறுபடியும் கங்கையில் குளித்து வருகிறேன்…’ என்று சொல்லி விட்டு, ஓடோடிச் சென்று, கங்கையில் முழுகி எழுந்து வந்தான். தன் பாவம் தொலைந்தது என்ற முழு நம்பிக்கையோடு, இறையனாரைத் தூக்க முற்படும் போது, சூரியனைப் போல சுடர் விடும் தேஜசுடன், அன்னை பார்வதி தேவி சமேதராக, பரமேசுவரனாக காட்சி தந்து, இளைஞனிடம், ‘நீ கங்கை மீது கொண்ட நம்பிக்கை என்னை மிகவும் கவர்ந்தது’ – என்று சொல்லி, இளைஞனை வாழ்த்தினார். அத்தோடு, ‘உமா, முன்னோர்கள் சொல்லி வைத்த தர்மங்கள் அர்த்தம் நிறைந்தது. அதில் நம்பிக்கை வைப்பவர்களுக்கு மட்டும் தான், ‘தர்மம்’ கை கொடுக்கும்… தர்மம் அது பாட்டுக்கு இருக்கட்டும்… நாம் நம் போக்கிலே செல்லுவோம்’ என்று நினைப்பவர்களுக்கு, தர்மம் வெறும் theory மட்டும் தான்… கங்கையில் குளித்தால் புண்ணியம் என்று நினைத்து குளிப்பவர்கள், பாவம் செய்யப் பயப்படுவார்கள்…. கங்கையில் குளிப்பதை, bathroom-ல் குளிப்பது போல நினைத்தால்…, ‘குளிப்பு ஒரு புறம்…, குற்றம் ஒரு புறம்’ என்று மலிந்துதான் போகும்’ – என்று கூறவும்…, உமையம்மையும் அதை ஆமோதித்தார்…. இதுதான் கிருஷ்ணா கதை….

கிருஷ்ணர் : இந்தக் கதையின் மூலம் நீ என்ன தெரிந்து கொண்டாய் மேகலா…

மேகலா : கிருஷ்ணா…, மக்கள், ‘வேதங்கள்’, ‘தர்மங்கள்’, ‘நம் நம்பிக்கை’ எல்லாவற்றையும்…, சாப்பிடுவது, குளிப்பது போல, அதுவும் ஒரு செய்கை மாதிரிதான் ஏற்றுக் கொள்கிறார்கள் போல… அதனால்தான்…, ‘இந்த மந்திரம் சொன்னால் இது நடக்கும்’…, ‘அமிர்தவர்ஷினி ராகத்தைப் பாடினால் மழை பொழியும்’…, ‘கனகதாரா ஸ்தோத்திரம் சொன்னால், தங்கமாய்ப் பொழியும்’ – என்ற நம்பிக்கையைக் கூட, எந்த ஒரு நெகிழ்ச்சியும், நம்பிக்கையும் இல்லாமல் சொல்கிறார்கள் போல… அவர்கள் மனதில் ஏறியிருப்பது…, ‘நமக்கு, நம் வீட்டில் தங்கம் சேர வேண்டும்…, அதற்காக கனகதாரா ஸ்தோத்திரம் சொல்லுவோம்’…, என்று ’ரசம் வைப்பது போல’ மந்திரத்தைச் சொல்லுகிறார்கள்… ஆதிசங்கரரால், மகாலக்ஷ்மியை நினைத்து பாடிய கனகதாரா ஸ்தோத்திரம், சாதாரண மக்கள் வாயில், எழுத்துக்கள் அடங்கிய வார்த்தைகளாக மட்டுமே வெளிப்படுகிறது…

கிருஷ்ணர் : ஒரு மந்திரத்தைச் சொல்லும் போது, அதன் அர்த்தம் தெரியணும் என்பதில்லை… நீ தேசிய கீதம் பாடியிருக்கிறாயா…

‘ஜன கண மன அதிநாயக ஜயஹே

பாரத பாக்யவி தாதா’ –

என்ற இந்தப் பாடலின் அர்த்தம் உனக்குத் தெரியுமா… இருந்தாலும் ஒரு கூட்டத்தில் எல்லோரும் சேர்ந்து பாடும் போது…., ‘ஜயஹே ஜயஹே ஜயஜயஜயஹே’ என்ற வார்த்தையை உரக்க உச்சரிக்கும் போது, ஒவ்வொரு இந்தியனும், இது நம் தேசிய கீதம் என்ற உணர்வோடு பாடுகிறார்களே…, அது போலயாவது, கொஞ்சம் மகாலக்ஷ்மியை நினைத்து…, தாமரைப்பூவில் மலர்ந்தவளே என்று கூப்பிடும் போது, அந்தச் சொல், லக்ஷ்மியின் காதில் விழுந்ததா என்ற ஆசையுடன் பாடினால், தங்கமழை பெய்யா விட்டாலும், சாரலாவது அடிக்குமே…. இறையனாரின் விருப்பமும் அதுதானே மேகலா… கங்கையில் குளித்து விட்டு திரும்பினால், நம் பாவம் தொலைந்தது என்றாவது நம்பலாம் இல்லையா…. புண்ணியத்தைப் பற்றி பிறகு யோசிக்கலாம். நாம் செய்த தவறுகளையெல்லாம் கங்கை மாதா கழுவி விட்டாள் என்று நம்பலாமே…..

(தொடரும்)

Comments

Popular posts from this blog

பக்குவம் - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

பக்குவம் - பாகம் 8

ஆளுமை - பாகம் 5