கதை கதையாம் காரணமாம் - பாகம் 6

மேகலா : கிருஷ்ணா…, முதலில், மகாபாரதம் எழுத ஆரம்பிக்கும் முன்…, இதை இப்படித்தான் எழுத வேண்டும்…, அதுவும் இன்ன காலத்திற்குள் முடிக்க வேண்டும் என்று வியாசர் நினைத்தாரே…, அதுவே மிகப் பெரிய செயலாக நினைக்கிறேன் கிருஷ்ணா… ஒரு இதிகாசத்தை எழுத ஆரம்பிக்கும் முன்…, அத்தனை சம்பவங்களையும் மனசுக்குள் வரிசைப்படுத்தி யோசிக்கும் போது…, எத்தனை நாளில் முடியும் என்பதை கணிக்க முடியாதில்லையா… அப்படிப்பட்ட இதிகாசத்தை உரிய காலத்துக்குள் முடிக்கணும் என்று நினைப்பதே, அவருடைய ’கர்ம யோகத்திற்கு’, அடிப்படை சாட்சியாகும்… பின்ன எதற்கு தயக்கமும், குழப்பமும்…

கிருஷ்ணர் : மேகலா…, உனக்கு நல்லா தெரியும்… வியாசர், மகாபாரதத்தில், ஒரு கதாபாத்திரமுமாக உலா வருவார்… ஆரம்பத்தில் இருந்து, குருக்ஷேத்திரப் போர் முடிந்த பின்னும் கூட, அங்கு நடந்த சம்பவங்களை நேரில் பார்த்தவர். ஒரு காட்சியும் தப்பாது… இண்டு இடுக்கு கூட விடாமல் எழுதத் தயாராகி விட்டார். நேரில் கண்ட சம்பவங்கள் என்பதால், காட்சிகள் அவருக்குள் பாடல்களாக ஊற்றெடுக்கிறது… என்ன செய்வார்…. ஒவ்வொரு நிகழ்ச்சிகளும், ஒவ்வொரு தர்மத்தை எடுத்துரைக்கிறது…, எதையும் விட முடியாது… அனைத்தும் மக்களிடம் போய்ச் சேர வேண்டிய வாழ்க்கைத் தத்துவங்கள். யாரோ ஒருவர் எழுதுவதை விட, ‘ஞான யோகம்’ முழுதாய் அறிந்தவர் எழுதுவது, ‘மாகாபாரதத்திற்கு’ பெருமை சேர்க்கும் என்று நம்புகிறார். அதனால்தான் அத்தனை பரபரப்பு….

மேகலா : இதற்கு பிள்ளையாரும் ஒத்துக் கொண்டது…, எனக்கு எத்தனை சந்தோஷமாக இருக்கு தெரியுமா கிருஷ்ணா….

கிருஷ்ணர் : ஒத்துக்காமல் என்ன செய்வார்… வேதங்கள் நான்கும் இறைவனால் படைக்கப்பட்டவை… மகாபாரதமோ…, ஐந்தாவது வேதம் என்று உலகத்தாரால் போற்றப்படுகிறது. தர்மம் நிறைந்த இதிகாசத்தை, வேத வடிவானவன் எழுதுவதே பொருத்தமாக இருக்கும்… கணபதியும் இதை அறிந்தவர்… உனக்குத் தெரியுமா…. பிள்ளையார் ‘ஞான வடிவானவர்’. அதனால்தான் நாரதரும், பிள்ளையாரை recommend பண்ணுகிறார்…. நமக்கெல்லாம் வியாசர், கணபதியிடம் மகாபாரதத்தை எழுத ஒப்படைத்தது சந்தோஷமான செயல்தான்…

மேகலா : வியாசர், கணபதியை அழைத்தவுடன், என்ன ஏது என்று எதுவுமே கேட்காமல்…, சரியென்று ஆமோதிக்கக் கூட இல்லை…, அப்படியே எழுத உட்காருகிறார்.. எழுத்தாணி கூட கையில் இல்லை… தேடி எடுப்பதற்குக் கூட அவகாசம் கொடுக்காமல்…, தன் அழகிய கொம்பையே ஒடித்து எழுத்தாணியாக்குகிறார்.. மற்றொருவர் இப்படிச் செய்வாரா கிருஷ்ணா….

கிருஷ்ணர் : ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’… கணபதிக்கோ, கொம்பு கூட எழுத்தாணி… மகாபாரதத்தை பிரதி எடுப்பது, செயற்கரிய செயல் என்பதை கணபதி முழுமையாக நம்புகிறார்…. இந்த இதிகாசத்தில், பெருமையாக உலா வரும் பீஷ்மர், விதுரர், துரோணர், பாண்டவர்கள் என்ற எல்லோரும், ஒரு வகையில் தியாகம் செய்தே தர்மத்தை நிலைநாட்டியிருக்கின்றனர்…. பீஷ்மர், தனக்கான அரச பதவியையே துறக்கிறார்.. விதுரர், துரியோதனன் செய்த எத்தனையோ அவமானங்களை எதிர்கொள்கிறார்…. பாண்டவர்கள், காட்டிலே வாழ்ந்தே பொழுதைக் கழிக்கின்றனர்… சரி…, நாம் இந்தக் கொம்பை இழப்பது பெரிய விஷயமில்லை…, என்று நினைத்து கொம்பை ஒடித்திருக்கலாம்… பிள்ளையாருக்கு அதுவே திருஷ்டிக் கொம்பாகி விட்டதே….

மேகலா : ஆமாம் கிருஷ்ணா… அடுத்து வியாசரிடம், ‘நீங்கள் பாடல்களை வேகமாகச் சொல்லுங்கள்… அதே சமயம், எனக்குப் புரிந்து விட்டதா என்பதை verify பண்ணிக் கொள்ளுங்கள் என்றாரே…

கிருஷ்ணர் : ‘அதுதான் பிள்ளையார்’… கணபதி ஒரு ஞான சொரூபம்… இன்னொன்று…., யாரை எப்படிச் சொல்ல வேண்டும் என்று தெரிந்தவர்…. வியாசர் பாட்டுக்கு…, நிற்காமல் பாடல்களைச் சொன்னால்…, எப்படி வியாசரை slow பண்ணச் செய்வது… அதனால்தான், கணபதி, ஒரு diplomatic idea-வைச் சொல்லுகிறார்….. ‘எனக்குப் புரியணும்… அப்படி, clear ஆகச் சொல்லுங்கள்… என்பது புத்திசாலித்தனமான முடிவு….

மேகலா : ஆனால், மக்களில் பல பேர், பிள்ளையார் எழுத்தாணி எடுக்காமல் உட்கார்ந்து விட்டார்… மறுபடியும் எழுந்திருந்து எடுக்க முடியாது. அதனால்தான் கொம்பை ஒடித்து விட்டார்…, என்று சொல்லுகிறார்கள் கிருஷ்ணா…

கிருஷ்ணர் : சொல்றவங்க சொல்லிட்டுப் போகட்டும்… யாராவது…, ‘நாம ஒரு வேலையும் செய்யாம, சும்மாதான இருக்கிறோம்…, அனாவசியமா இந்தக் கைகள் எதுக்குன்னு, கையை வெட்டியா போடுறாங்க… எழுதவே சம்மதிச்சவர்…, எழுத்தாணி எடுக்கத்தான் முடியலயாமா… சொல்றவங்க சொல்லிட்டுப் போகட்டும்… ஐந்தாவது வேதமாகிய மகாபாரதத்தை, கணபதி எழுதச் சம்மதித்தது…, அந்த மகாபாரதத்திற்குப் பெருமை…

மேகலா : நிச்சயமாய் கிருஷ்ணா…. நாமெல்லாம் ஒரு வேலையை ஆரம்பிக்கும் முன், பிள்ளையார் சுழி போடுவோம்ல… முக்குக்கு முக்கு…, பிள்ளையார் கோயில் வைத்து, office-க்குப் போகும் போதும், school, college-க்குப் போகும் போதும், பிள்ளையாரைக் கும்பிடுகிறோமே… பிள்ளையாருக்கு இந்த மாதிரி எதுவும் கிடையாதா கிருஷ்ணா….

கிருஷ்ணர் : ஞான விளக்கை ஏற்றி வைத்த ஞான சொரூபன்…, கணபதி… புல்வெளியில் அமர்ந்து எழுத ஆரம்பித்தாலே போதும். அந்த அருகம்புல் கூட, வேள்வியில் இடும் அரச மரமாகும்… பிள்ளையாரின் ஆனந்த சிரிப்பு கூட, ஆழ்ந்த தியானத்தின் அர்த்தமாகும்… கலகலப்பாய் தெரிவார்…. தெளிவான அமைதியில் கூர்ந்து கவனிப்பார்… பழுதொன்றுமில்லை… வியாசர்தான் பிள்ளையாரை வணங்கி, ‘சுழி’ போட வேண்டும்… வேறு ஏதாவது கேள்வி இருக்கா…

மேகலா : பிள்ளையாரைப் பற்றி நீ சொல்லச் சொல்ல…, இன்னும் தெளிவாய் பிள்ளையார் சுழியின் அவசியம் புரிகிறது கிருஷ்ணா….

கிருஷ்ணர் : சரி…, அடுத்த கதை என்ன….?

(தொடரும்)

Comments

Popular posts from this blog

பக்குவம் - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

பக்குவம் - பாகம் 8

ஆளுமை - பாகம் 5