கதை கதையாம் காரணமாம் - பாகம் 7
கிருஷ்ணர் : சரி…., அடுத்த கதை என்ன….?
மேகலா : ‘பஸ்மாசுரன்’ கதை கிருஷ்ணா…
கிருஷ்ணர் : சரி…, சொல்லு…
மேகலா : பஸ்மாசுரனுக்கு ஒரு விபரீத ஆசை வருகிறது… ‘கடவுள்’ என்பது ஒரு பதவி என்று நினைத்து விட்டான் போல… அதற்கு, எம்பெருமானைக் காலி பண்ணி விட்டால், தான் கடவுளாகி விடலாம் என்று கணக்குப் போடுகிறான்… ஆனால், அதற்கு நாம் எப்படி கடவுளாவது… கடவுளை எப்படி வரவழைப்பது… தன் மனதில் ஒளிந்திருக்கும் வக்கிரமத்தை வெளிக்காட்டாமல், எப்படி கடவுளைப் போட்டுத் தள்ளுவது என்று பலவாறாக யோசிக்கிறான்… அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது…. முனிவர்களும், மகரிஷிகளும் தவம் செய்து கடவுளிடம் வரம் பெறுகிறார்கள் என்பதை நினைத்தவுடன், தானும் தவமிருந்து கடவுளை வரவழைப்போம் என்று யோசிக்கிறான். அதற்காக, தன்னைச் சுற்றி நெருப்பை உண்டாக்கி, நெருப்பு வளையத்திற்குள் நின்று கடுமையாக தவம் செய்யத் தொடங்கினான். வெய்யில் என்று பார்க்கவில்லை…; அடாத மழையென்றும் துவளவில்லை… கடும் குளிரையும் பொருட்படுத்தவில்லை. தன் மனதை ஒருமுகப்படுத்தி, எம்பெருமானை நோக்கி, கடுமையாக தவம் புரிந்தான். எம்பெருமானும் பஸ்மாசுரனின் தவத்தில் மகிழ்ந்து, அவன் எதிரில் தோன்றினார்…. ‘பஸ்மாசுரா, உன் தவத்தை மெச்சினோம்… நீ வேண்டுவது யாது…’ என்று கேட்கவும்…, பஸ்மாசுரன், நிதானமாக சிரித்து விட்டு, ‘பெருமானே, இந்த உலகத்தில், எனக்கு இல்லை என்பதே இல்லை… நான் மனதால் ஆசைப்பட்டால் கூட, அது என் கையில் கிடைத்து விடும்… இருந்தும் எனக்கு ஒரு ஆசை இருக்கிறது… அதை உங்களால் கொடுக்க முடியுமா…’ என்று கேட்கிறான். எம்பெருமானும், ‘கேள்…, நீ கேட்டதைக் கொடுப்பதற்காகத்தான் கேட்கிறேன்… என்ன வரம் வேண்டும், கேள்’ என்று தன் வலையை விரித்தார். உடனே பஸ்மாசுரன், ‘பரம்பொருளே, நான் யார் தலையில் கை வைத்தாலும், அவர்கள் தலை வெடித்து சுக்கு நூறாகி விட வேண்டும்… இந்த வரத்தைத் தர முடியுமா…, உங்களால்’ என்று கூர்மையாகப் பார்த்துக் கொண்டே கேட்கிறான்… பரம்பொருளும், தன் சூட்சும ஞானத்தை ஒளித்து வைத்து, ‘இதோ தந்தேன்’ – என்று அவன் கேட்ட வரத்தை அளித்தார்…. எம்பெருமான் அளித்த வரத்தைப் பெற்ற பஸ்மாசுரன், புதிய பலத்துடன் ஒருமுறை, தன்னைத் தானே பலம் காட்டி சிலிர்த்துக் கொண்டான். கடவுளும் அவனை ரசித்துக் கொண்டே, அடுத்த காட்சிக்குத் தயாரானார்…. ‘என்ன பஸ்மாசுரா…, திருப்திதானே…. இனி, உலகில் நீயே பலசாலி… யார் தலையிலாவது கை வைத்துப் பார்க்கப் போகிறாயா’ – என்று வேடிக்கையாகக் கேட்க, ‘இதோ என் எதிரில் நிற்கும் உன் தலையிலேயே கை வைத்து சோதித்துப் பார்க்கிறேன்’ – என்று சொல்லி, பரம்பொருள் தலையில் கை வைக்கப் பாய்ந்து வந்தான்…. பஸ்மாசுரன் mind voice-ஐத்தான் ஆரம்பம் முதலே கேட்டு வரும் பரம்பொருள்…, பயந்தவர் போல பதறி ஓடினார்… ஓடியவர், மறைந்தே போனார். பஸ்மாசுரனும், ‘நீர் மறைந்தால்…, உம்மை விட்டு விடுவேனா… எந்த உலகத்தில் சென்று ஒளிந்திருந்தாலும்…, தேடி வந்து, உம் தலையில் கை வைத்து, உம்மை அழிக்காமல் விடுவதில்லை’ என்று கொக்கரித்தான்… இறையனாரத் தேடி ஓடி வந்த நேரத்தில், பஸ்மாசுரன் எதிரில், காண்போர் கண்டு சொக்கி விடும் அழகில், ஒரு மோகினி வந்தாள். அவள், அழகில் மான் போன்றும், அழகிய நடையில் மயில் போன்றும், அசைந்து அசைந்து ஒய்யாரமாக நடந்து வந்தாள். மோகினியைக் கண்ட மாத்திரத்தில், பஸ்மாசுரன் நிலை குலைந்து போனான்… மோகினியும், ஒய்யாரமாக பஸ்மாசுரனைப் பார்த்து, தன் இதழ் வழியே புன்னகையைக் கசிய விட்டாள். இதைக் கண்ட பஸ்மாசுரன், தலை கிறுகிறுக்க தள்ளாடிப் போய், மோகினியைத் தொடுவதற்காக, விகாரமாய் பல்லிளித்துக் கொண்டே கையை நீட்டினான். இதைப் பார்த்த மோகினி, செல்லமாக பழிப்புக் காட்டி, ‘என்னை தொட வேண்டுமா?’ என்று நடன அசைவுடன் நளினமாய்க் கேட்டாள். அதற்கு அசுரனும், விகாரமாய் இளித்துக் கொண்டே, பேரழகி சம்மதித்து விட்டாள் என்று பாய்ந்து வந்தான். அதற்கு மோகினி, ‘என்னைத் தொட வேண்டுமானால், நான் செய்வது போல செய்து காட்டும்…; பிறகு பார்க்கலாம்’ என்று சொல்லவும்…, ‘என்ன வேண்டும்… செய்து காட்டு, உடனே செய்கிறேன்… என்னால் முடியாதது எதுவும் இல்லை’ என்று அலட்சியமாகச் சொன்னான்… மோகினியும், ‘அப்படியா’ என்று கேட்டு, தன் ஒடிசலான இடுப்பை ஆட்டி, ஆட்டி நடனமாடினாள். அசுரனும், தன் பருத்த இடுப்பை ஆட்டி ஆட்டி, மோகினியைப் பார்த்து வெற்றிப் புன்னகை செய்தான்… மோகினி, கலகலவென்று சிரித்துக் கொண்டு, கைகளை அசைத்து பாவனை காட்டினாள். அசுரனும், அதைப் போலவே செய்தான். மோகினியின் ஆட்டம் ஆரம்பமாகியது… நடனமாடிக் கொண்டே, தன் கைகளால், தன் பாதத்தைத் தொட்டுக் காட்டினாள். அசுரனும், தன்னால் முடிந்தவரை, நடன அசைவுகளுடன் பாதத்தைத் தொட்டு, ‘எப்படி’ என்றான். மோகினியும், இடையைத் தொட, அசுரனும் உடனடியாக இடுப்பைத் தொட்டு இளித்தான்… மோகினி, அங்கு தொட்டு, இங்கு தொட்டு, தன் தலையில் கை வைத்து, ’உன்னால் முடியுமா’ என்று புருவம் உயர்த்தி, கண்ணால் கேட்டாள். மோகினி விரித்த வலையில் விழத் தயாராகி விட்டான் அசுரன்… ‘இதென்ன பிரமாதம்’ என்ற தொனியில், அசுரனும், ஒரு சுற்று சுற்றி வந்து, தன் தலையில் கை வைக்க…, அந்தக் கண நேரத்தில், அசுரன் தலை வெடித்து மாய்ந்தான்… பாவம்…, எம்பெருமான் ஓடி ஒளிந்து கொண்டார் என்று நினைத்துக் கொண்டிருக்க…, மோகினியாய் வடிவெடுத்ததே கடவுள் தான் என்பதை அறியாமல், கடவுளிடமே challenge விட்டு, தன் உயிரையே விட்டு விட்டான் கிருஷ்ணா….
(தொடரும்)
Comments
Post a Comment