கதை கதையாம் காரணமாம் - பாகம் 10
மேகலா : அவ்வளவுதான்…. நந்தினி, வலிமையாக நிமிர்ந்து நின்று உறுமியது. ஆயிரக்கணக்கான படை வீரர்களை ஆயுதங்களுடன் உற்பத்தி செய்தது… அந்த வீரர்கள், மன்னனுடனும், அவர் பரிவாரங்களுடனும் போர் செய்யத் தொடங்கினர்…. மன்னனுக்கு எதுவும் தெரியாமல் திகைத்துப் போனான்… பசுவோ, அத்தனை பேரையும் காட்டை விட்டே விரட்டியடித்தது…. அவமானம் தாங்காத கௌசிக மன்னன், இந்த நிகழ்ச்சியை மறக்க முடியாமல், வசிஷ்டரை வென்றே தீருவது…, ’ஒரு காட்டில் வசிக்கும் சன்னியாசிக்கு இத்தனை உறுதியா… வசிஷ்டரும் தவம் செய்து பெற்றதுதான் இந்த வலிமையா… இதை எப்படி முறியடிப்பது…. நாமும் காட்டிற்குச் சென்று தவமிருந்து கடவுளிடம் வரம் பெறுவோம்… அப்புறம் ஒரு கை பார்க்கலாம்…, இந்த வசிஷ்டரை…’ என்று முடிவு செய்து, தன் நாட்டை பொறுப்பாளர்களிடம் ஒப்படைத்து விட்டு, காட்டிற்குச் சென்று தவம் செய்யப் புறப்பட்டார்…. மன்னன், தன் மனதை ஒருமுகப்படுத்தி, பரம்பொருள் பரமசிவனாரை நினைத்து கடுமையான தவம் மேற்கொண்டார்…. மன்னனுடைய தவத்தால் மனம் மகிழ்ந்த பரமசிவனாரும், மன்னனிடம், ‘கௌசிகா, உன் தவத்தால் மனம் மகிழ்ந்தோம்… நீ வேண்டும் வரம் கேள்’ என்று கேட்டார். மன்னனும், ‘இறைவா, இந்த எளியோனை மதித்து, வேண்டும் வரம் கேள் என்று கேட்டு, என்னையும், தவம் செய்யும் முனிவராய் ஏற்றுக் கொண்டீர்… இறைவா, யாரிடமும் இல்லாத, பலரும் அறியாத அஸ்திரங்களை அளித்து என்னை ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்’ என்று கேட்டார். மனம் மகிழ்ந்த இறையனாரும், மகரிஷி கேட்ட வரத்தைத் தந்து வாழ்த்தினார். தான் கேட்ட வரம் கிடைத்ததும், கௌசிக மகரிஷி, உலகமே தன் வசம் ஆனாற்போல, நிமிர்ந்து நின்று, தோள்களை உயர்த்தி, பலம் காட்டி உற்சாகமடைந்தார். அதே உற்சாகத்தோடு, வசிஷ்டரின் ஆசிரமத்திற்குச் சென்று, வசிஷ்டரை உரக்கக் கூவி அழைத்தார். வசிஷ்டரும், கௌசிகரின் குரல் கேட்டு வெளியில் வந்து, ‘என்ன கௌசிகா…, என்ன வேண்டும்?’ – என்றார்….. ’என்ன முனிவரே…, தவம் செய்வது உங்களால் மட்டும் தான் முடியுமா… இதோ, பரமசிவனாரை நோக்கி தவம் புரிந்து, மகரிஷி ஆகி உள்ளேன். என்னோடு சண்டையிட உங்கள் பசுமாடு எங்கே…’ என்று நக்கலாகக் கேட்க…, வசிஷ்டரும், புன்முறுவல் பூத்தபடி, ‘கௌசிகா, தவம் செய்பவர்களுக்கு, பழி வாங்கும் குணமோ, கோபமோ இருக்கக் கூடாது… நீயே உன்னை மகரிஷி என்று சொல்லக் கூடாது… நீ நடந்து கொள்ளும் விதம், உன் பக்குவம், உன் பொறுமை பார்த்து, பிறர் உன்னை மகரிஷியென்ன, ‘பிரம்ம ரிஷி’ என்றே அழைப்பார்கள்… இன்னும் உன்னை மேன்மைப்படுத்திக் கொள்’ – என்று ஒரு ஆச்சாரியனுக்குரிய பொறுமையுடன் கூறினார்… இதையெல்லாம் கண்டுக்காத கௌசிக மஹரிஷி, போருக்குத் தயாரானார். இதை எதிர்பார்த்த வசிஷ்டரும், தன் தண்டத்தையே ஆயுதமாக்கி, கௌசிகனை எதிர்த்தார்… பரமசிவனாரிடம் கேட்டுப் பெற்ற அஸ்திரங்கள் அனைத்தையும், வசிஷ்டரின் தண்டம் ஒன்றுமில்லாமல் காலி செய்தன… இதை சற்றும் எதிர்பாராத கௌசிகன், வசிஷ்டரின் முன்னே தலை குனிந்து நின்றார். வசிஷ்டரும், ‘கௌசிகா, நான் சொல்லப் போவதை கவனமாகக் கேள். தவம் செய்து நீ இறைவனிடம் கேட்டுப் பெற்றது அஸ்திரங்கள் மட்டும் தானா… ஒரு தவ முனிவனுக்கு இருக்க வேண்டிய முயற்சி, அசாத்தியமான மன உறுதி இரண்டும் உன்னிடம் இருக்கிறது… கோபத்தைக் குறைத்து, பொறுமையைக் கடைப்பிடித்தால்…, நீ விரைவில் பிரம்ம மகரிஷியாவாய்’ என்று வாழ்த்தி அனுப்பினார். கௌசிக மகரிஷியும், கோபத்தைக் குறைப்போம்; பொறுமையாய் நின்று பிரம்ம ரிஷியாய் ஆகியே தீருவது, பிறர் நன்மைக்காகவே தவம் செய்வது என்ற உறுதியான கொள்கையுடன், காட்டிற்கு தவம் செய்யச் சென்றார்…. தன் மனதை ஒருநிலைப்படுத்தி, கோரமான தவம் செய்தார். அவர் செய்த தவத்தினால், அக்னிப் பிழம்பாக ஜொலித்தார். கடுமையான தவத்தினால் வெளிப்பட்ட வெப்பத்தைத் தணிக்க இந்திரன், ‘மேனகை’யை அனுப்பினான். முனிவர் தவம் செய்யும் இடத்திற்கு வந்த மேனகை, வண்ணமயில் நடந்து வருவது போல, முனிவரின் முன்னும் பின்னும் அசைந்து அசைந்து நடந்து வந்தாள்… கௌசிகனின் கவனம் பிசகியது. மேனகையின் அழகு அவரை ஈர்த்தது. தன் தவத்தை மறந்து, மேனகையுடன் கூடினார்…. அவர்களுக்கு ஒரு பெண்குழந்தை பிறந்தது… முனிவருக்கு, தான் எதற்காக காட்டிற்கு வந்தோம் என்பது மனசுக்குள் வந்தது… மேனகையிடம், ‘பெண்ணே, நான் ஒரு சிறந்த நோக்கத்தோடு தவம் செய்கிறேன். நீ இந்திரலோகமே திரும்பச் செல்…’ என்று அவளை வழியனுப்பி வைத்தார்… மீண்டும் கோரமான தவத்தில் ஈடுபட்டார். அந்த சமயத்தில், இஷ்வாகு குலத்தைச் சேர்ந்த மன்னனாகிய ‘திரிசங்கு’, தன் ஸ்தூல வடிவத்துடன், சொர்க்க லோகம் செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டு…, அந்த ஆசையை, காட்டில் வேதம் ஓதும் மகரிஷிகளிடம் சொன்னான்… எல்லோரும், ‘தேவலோகத்துக்கு மனிதர்கள் ஸ்தூல வடிவத்துடன் செல்ல முடியாது’ என்று மறுத்து விட்டனர். வசிஷ்டரின் பிள்ளைகள் மறுத்ததோடு மட்டுமல்லாமல், திரிசங்குவை, சண்டாளனாக மாறக் கடவது என்று சபித்து விட்டனர்…. மனம் வருத்தப்பட்ட திரிசங்கு, கௌசிக மகரிஷியிடம் வந்து, தன் இயலாமையை புலம்பினான். முனிவரும், ‘வருத்தப்படாதே திரிசங்கு… உன்னை நான் இந்திரலோகத்துக்கு அனுப்பி வைக்கிறேன்’ என்று சொல்லி, ‘இதோ, என் தவ வலிமையால் தேவர்களைக் கேட்கிறேன். ‘திரிசங்கு’ இந்திரலோகத்துக்குச் செல்’ என்று அனுப்பினார். எல்லோரும் பார்க்க, ’திரிசங்கு’, சண்டாள உருவத்துடன் மேலுலகத்துக்குச் சென்றான். இதைப் பார்த்த இந்திரன், ‘மனிதர்கள் வர முடியாத தோற்றத்தில் இங்கு வரும் திரிசங்கு…, திரும்பிச் செல்’ – என்று தள்ளி விட்டான். ‘முனிவரே, என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று அலறிக் கொண்டே வந்த திரிசங்குவை, கௌசிக மகரிஷி, ‘அங்கேயே நில்…, இதோ என் தவ வலிமையை இப்பொழுது இந்திரன் அறிவான். எல்லோரும் பார்க்க, நான் இன்னொரு இந்திரலோகத்தையே படைக்கிறேன். தேவர்களும், வசுக்களும், மருத்துக்களும் என்னால் படைக்கப்படுவர். அந்த இந்திரலோகத்தில், ‘திரிசங்கு’ நீ துருவ நட்சத்திரமாய் மின்னப் போகிறாய்’ என்று கூறிக் கொண்டே, இன்னொரு உலகத்தைப் படைக்க முற்பட்டார்…. அங்கு கூடியிருந்த பல மகரிஷிகளும், முனிவரை சாந்தப்படுத்தி, அமைதிப்படுத்தினர்…. ‘நீங்கள் அறியாதது எதுவும் இல்லை. இயற்கைக்கு மாறாக, இன்னொரு தேவலோகம் படைக்கலாமா. திரிசங்கு உங்கள் விருப்பப்படி, துருவ நட்சத்திரமாகவே இருக்கட்டும். உங்கள் கோபத்தைக் குறையுங்கள்’ என்றனர். தன் நிலை உணர்ந்த கௌசிகர், மீண்டும் கோரமான தவத்தில் ஈடுபட…, கொஞ்சம் கொஞ்சமாக, மேன்மையான பக்குவத்தை அடைந்தார். அமைதியான சூழலில், அங்கு வந்த வசிஷ்டரும், ‘விசுவாமித்திரரே, உங்கள் தவம் ஈடேறியது. நீங்கள் ‘பிரம்ம ரிஷி’யானீர்கள்’…. உங்களால் இந்த உலகம் உய்வு பெறட்டும்’ என்றூ வாழ்த்தினார். வசிஷ்டரின் வாழ்த்தினை பணிந்து ஏற்றுக் கொண்ட விசுவாமித்திரரும், ‘பிரம்ம ரிஷி’யானார் கிருஷ்ணா…..
(தொடரும்)
Comments
Post a Comment