கதை கதையாம் காரணமாம் - பாகம் 9
கிருஷ்ணர் : சரி…., அடுத்த கதை….?
மேகலா : ‘பிரம்ம ரிஷி’ என்றால் என்ன கிருஷ்ணா….? ஏதாவது பதவியா கிருஷ்ணா….?
கிருஷ்ணர் : யார் சொன்னது? ஒருவர்…, தன் முயற்சியினாலும், தவத்தாலும், தன் மனதை ஒருமுகப்படுத்தி, புலன்களை அடக்கி…, உணவு, உடை, உறவு என்ற எந்த ஆசையும் இல்லாமல், இறைவனின் நாமத்தை ஜெபித்துக் கொண்டு, தன் குணங்களை மென்மையாக்கி…, எல்லா மக்களையும், உயிர்களையும் ஒரே சமமாகப் பாவித்து, பிறர் நன்மையையே, தன் கருத்தாகக் கொண்டு, தன் வாழ்க்கையை பிறருக்காகவே வாழ்வது…, என்று தன்னை உயர்ந்த தகுதியுடையவராக்கியவர்தான் ‘பிரம்ம ரிஷி’… உலகப் பற்றைத் துறந்த மகரிஷி, மூன்று காலங்களையும் அறிந்தவர்கள் ஆவார்கள். தெய்வ குணங்கள் நிறைந்த இவர்கள் நினைத்தாலே போதும், கடவுள் இறங்கி வருவார்… ஆமாம்…, ஏன் இந்தக் கேள்வி…? விசுவாமித்திரர் கதையைச் சொல்லப் போகிறாயா….?
மேகலா : ஆமாம் கிருஷ்ணா…. விசுவாமித்திரர், பிரம்ம ரிஷி ஆன கதையைச் சொல்லப் போகிறேன் கிருஷ்ணா….
கிருஷ்ணர் : Very good… சொல்…, கேட்க ஆவலாக இருக்கிறேன்….
மேகலா : கௌசிக நாட்டின் மன்னன், ‘கௌசிகன்’… தன் நாட்டை நீதிநெறி தவறாமல் ஆண்டு வந்தான்… ஒரு முறை…, மன்னன் தன் பரிவாரங்களுடன், அருகில் இருந்த காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். அந்தக் காட்டினில் அழகான நீர்வீழ்ச்சியும், அதைத் தொடர்ந்த அழகான நீரோடை ஒன்றும் ஓடியது. அதற்குப் பக்கத்தில், ‘வசிஷ்டர்’ தன் மாணவர்களுடன், ஆசிரமம் அமைத்து வாழ்ந்து வந்தார். அந்த ஆசிரமத்தைச் சுற்றி, முனிவர்கள் ஓதும் வேதஒலி ஒலித்துக் கொண்டே இருக்கும். காட்டுப்பூக்களில் தேனைக் குடிக்க வரும் வண்டுகள் ரீங்காரமிட்டு, வேத மந்திரங்களுக்குப் பின்னிசை பாடும்… மான் கூட்டங்களும், முயல் கூட்டங்களும், இங்குமங்கும் துள்ளிக் குதித்து ஓடும்…, மயில்கள் நடனமாடும்… மரங்கள் தோறும், கிளிக்கூட்டமும், மைனாக்களும் ஓசையிட்டு சுற்றித் திரியும்…. சிங்கம், புலி முதலிய விலங்குகள் விலகி நிற்கும். இந்த அற்புதமான இடத்துக்கருகில், களைத்துப் போய் வந்த கௌசிக மன்னனும், அவன் பரிவாரங்களும், இளைப்பாறுவதற்காக, ஆசிரமத்தில் யார் இருக்கிறார்கள் என்று பார்க்க வந்தார்கள்… அவர்களை, வசிஷ்டர் வரவேற்று உபசரித்தார். வந்திருப்பவர், கௌசிக நாட்டின் மன்னன் என்பதை அறிந்த வசிஷ்டர், அவர்களை விருந்து உண்ண அன்புடன் அழைத்தார். கௌசிகனும், ‘இந்தக் காட்டில் என்ன உணவு உங்களால் சமைக்க முடியும்…, உங்களுக்கு சிரமம் வேண்டாம்… நாங்கள் சற்று இளைப்பாறி விட்டு, காட்டில் கிடைக்கும் கனியை உண்டு, எங்கள் வழியில் செல்கிறோம்’ என்று சொன்னார்… வசிஷ்டரோ, ‘எனக்கு சிரமம் என்பதே கிடையாது… உங்களுக்கான உணவை சமைப்பதை, ‘நந்தினி’ பார்த்துக் கொள்வாள்… நீங்கள் நீர்வீழ்ச்சியில் குளித்து வாருங்கள்’ என்று சொன்னார். மன்னனுக்கு, ‘நந்தினி’ என்ற பெயர் மீது சிறந்த அபிப்பிராயம் ஏற்பட்டது… ‘யார் நந்தினி’ என்று ஆர்வத்துடன் திரும்பிப் பார்த்துக் கொண்டே…, நீர்வீழ்ச்சிக்குக் குளிக்கச் சென்றான்…. மூலிகை மலர்களின் வாசம் கொண்ட நீரோடையில் ஆனந்தமாய் குளித்து முடித்து, விருந்து சாப்பிட ஆர்வத்துடன் வந்தார்கள்… நந்தினியின் உதவியால், விருந்து தயாராக இருந்தது… கௌசிகனுக்கும் , பரிவாரங்களுக்கும்…., தலைவாழையிலை விரிக்கப்பட்டு, அதில் ருசியான பலவகை பதார்த்தங்கள் பரிமாறப்பட்டன. இனிப்பு வகையில், பணியாரங்களும், பாலில் செய்த பதார்த்தங்களும், பாயாசமும், மிருதுவான ரொட்டியும், பருப்பு, கீரை வகைகள், கிழங்கு வகைகளும், எண்ணையில் பொரித்த காய்கறிகளும், தயிரில் தோய்த்த பழங்களும், காய்கறிகளும், நெய்யால் தயாரித்த அன்னங்களும்…, என்று பலவகையான பதார்த்தங்களும் வந்த வண்ணம் இருந்தன… அரண்மனையை விட்டு, வேட்டைக்கு வந்த பிறகு, வெறும் பச்சைக் காய்கறிகளும், கிழங்குகளையுமே உண்டு வந்த வீரர்களுக்கு, ருசியான பதார்த்தங்கள், தேவாம்ருதமாக இருந்தது. அள்ளியள்ளி உண்டு மகிழ்ந்தார்கள்… கௌசிக நாட்டு மன்னனுக்கு ஒன்றுமே விளங்கவில்லை. இது எப்படி சாத்தியம்… மனிதர்கள் யாரும் வாழாத இந்த வனப்பிரதேசத்தில், இத்தனை பதார்த்தங்களை, எப்படிச் செய்ய முடியும்…, என்று யோசித்து, அதை வசிஷ்டரிடமே கேட்டார்… ‘நீங்கள் குறிப்பிட்ட நந்தினியை நான் பார்க்க வேண்டும்… அவள் தேவலோகத்து மங்கையோ’ என்று ஆவலுடன் கேட்டார். வசிஷ்டரும், புன்முறுவல் பூத்தபடி, நந்தினியை அழைத்து வந்து, தலையைத் தடவிக் கொடுத்து, கௌசிகனிடம், ‘இவள் தான் ‘காமதேனு’ என்று அழைக்கப்படும் நந்தினிப்பசு. இப்பொழுது என்னிடத்தில் இருக்கிறாள்… ‘நந்தினி’ என் தாய் மாதிரி… அன்புடன், அவளிடம் என்ன கேட்டாலும் தருவாள். இன்று உங்கள் அனைவருக்கும் விருந்து படைக்கச் சொன்னேன். இந்த விருந்து சுவையாக இருந்ததென்றால், நந்தினியே காரணமாவாள்’ என்று பூரிப்புடன் சொன்னார். கௌசிகன், காமதேனுப் பசுவா.., ஓஹோ…, என்ன கேட்டாலும் தருவாளா… ஓஹோ…, நான் சோதித்துப் பார்க்கவா’ – என்று கேட்டார். அதற்கு வசிஷ்டர், ‘நந்தினியை அன்பால் வெல்லலாம்… சோதனைக்குக் கட்டுப்பட மாட்டாள்….’ என்று கௌசிகனின் உள்நோக்கம் அறிந்தபடி பதில் சொன்னார். ‘மகாமுனிவரே, தெய்வீகத் தன்மை கொண்ட இந்தப் பசு, காட்டில் வாழும் முனிவர்களுக்கு எதற்கு… மனிதர்கள் வாழும் நாட்டிற்கு அழைத்துச் சென்றால், மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யலாம்…. என் நாடும் சுபிட்சமடையும். இந்தப் பசு உங்களிடம் இருப்பதை விட, என்னிடம் இருப்பதே சிறப்பு… அதனால், நந்தினியை என்னோடு அனுப்பி வையுங்கள்’ என்று பிடிவாதமும், மிரட்டலும் கலந்த பணிவுடன் கேட்டார். இதை எதிர்பார்த்த வசிஷ்டர், ‘என் மகள் போல் போற்றி வளர்த்த நந்தினியை அழைத்துப் பாருங்கள்… அவள் வந்தால் கூட்டிச் செல்லுங்கள்’ என்று மன்னனின் எதிர்பார்ப்பை தட்ட முடியாமல் பதில் சொன்னார்…. இனி, நந்தினி நமக்குத்தான் என்ற முடிவுக்கு வந்த மன்னன், நந்தினியை அழைத்துப் பார்த்தார்… நந்தினி கட்டியிருந்த இடத்திலிருந்து, ஒரு சுற்று சுற்றி, பின்வாங்கி, வர மறுப்பது போல உறுமியது…. சளைக்காத கௌசிகனும், பசு கட்டப்பட்டிருந்த கயிற்றைப் பற்றி இழுத்துச் செல்ல முற்பட்டார்… காமதேனுப் பசுவும், செய்வதறியாது திகைத்துப் போய்…, வசிஷ்டரின் காலடியிலேயே சரணடைந்து, ’உம்முடைய மகள் போல என்னை வளர்த்து விட்டு, இப்படி கை விடலாமா… என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று கண்ணீர் விட்டுக் கலங்கியது… வசிஷ்டரும், ‘விருப்பமில்லாத பசுவை விட்டு விடுங்கள்’ என்று சொல்லிப் பார்த்தார்…. மன்னனோ…, வசிஷ்டரின் சொற்களை ஏற்றுக் கொள்ளாமல், முன்னிலும் பலவந்தமாக பசுவை இழுத்தான்…. முன்னங்கால்களை, தரையில் பலமாக ஊன்றி வர மறுத்த காமதேனுவிடம், வசிஷ்டர், ‘நந்தினி, உன்னை நீயே காப்பாற்றிக் கொள்… நீ யாரென்று காட்டு’ என்று உத்தரவிட்டார்.
(தொடரும்)
Comments
Post a Comment