கதை கதையாம் காரணமாம் - பாகம் 13
மேகலா : அழுக்கேறிய பல் தெரிய சிரித்துக் கொண்டே கேட்ட சண்டாளனின் முகத்தை ஏறெடுத்துப் பார்த்த உத்தங்கர் அதிர்ந்து போனார்…. இப்படி ஒரு தோற்றத்தில் ஒரு சண்டாளன் தண்ணீர் கொண்டு வருவான் என்றூ எதிர்பார்க்கவேயில்லை. இது கிருஷ்ணனின் சாகசமேயன்றி வேறு யாரால் இப்படிச் செய்ய முடியும் என்று கோபம் கொண்டார்…. ‘நான் தண்ணீர் கேட்டால்…, இப்படி ஒருவனை நீ அனுப்பலாமா கிருஷ்ணா… தவம் செய்யும் நான், இவனிடம் எப்படி தண்ணீர் வாங்கிக் குடிப்பேன்’ – என்று புலம்பினார்…. அந்த சமயத்தில் ஸ்ரீகிருஷ்ணர் அங்கு வந்து, ‘என்ன உத்தங்கரே! தண்ணீர் வந்ததா…’ – என்று இங்குமங்கும் தேடிப் பார்த்தார்… உத்தங்கர், ‘உனக்கு இது நல்லா இருக்கா கிருஷ்ணா. நான் உன்னிடம் தண்ணீர் கேட்டேன். நீயோ…, துர்நாற்றம் வீசும், மாமிசத்தைக் கையில் ஏந்திய சண்டாளனையா அனுப்பி வைப்பாய். தவம் புரியும் நான், சண்டாளனிடம் தண்ணீர் எப்படி வாங்கிக் குடிப்பேன்’ – என்று கோபமும், ஆயாசமும் ஒரு சேரப் புலம்பினார்…. ‘என்னது, சண்டாளனா… உம்மிடம் தண்ணீர் தருகிறேன் என்றதும், சாட்சாத் இந்திரனிடம் தான் நான் சொன்னேன்… பாலைவன சஞ்சாரி உத்தங்கர் தண்ணீர் கேட்டால்…, அமிர்தத்தை அவருக்கு வழங்க வேண்டும் என்று…., ‘நெசம்மா’ அப்படித்தான் சொன்னேன்… அதற்கு இந்திரன், என்ன சொன்னான் தெரியுமா? ‘சரி கிருஷ்ணா…, நீங்கள் சொன்னதற்காக…, மனிதர்களுக்குக் கிடைக்காத அமிர்தத்தை உத்தங்கருக்கு கொடுக்கிறேன். ஆனால் ஒரு நிபந்தனையோடு தருகிறேன்’ என்றான். ‘நான் எந்த தோற்றத்தில் சென்றாலும், உத்தங்கர் என்னிடம் தண்ணீர் வாங்கிக் குடிக்க வேண்டும்’ என்று சொன்னான். நெசம்மா, நான் இந்திரன் சண்டாளனாக வருவான் என்று எதிர்பார்க்கவேயில்லை… இந்திரன் கையில் வைத்திருந்தது…, தேவலோக அமிர்தம்… நீர் சண்டாளன் என்று வாங்க மறுத்து விட்டீர்…’ என்று லேசாக பரிகாசம் இழையோட புன்னகை புரிந்தார்…. அதிலும், இதை கட்டாயமாக நான் தான் செய்தேன் என்று கோபப்படுகிறீர்…. உத்தங்கரே, மனதால் நீர் இன்னும் பக்குவம் அடைய வேண்டும். தவத்தில் சிறந்தவர்களுக்கு, புல், பூண்டு, பூச்சி, பறவை, உயர்ந்தவர், தாழ்ந்தவர், ஏழை, பணக்காரன்…, என்ற எல்லாமும் சமமே…’ என்று ‘சமதிருஷ்டியை’ எடுத்துச் சொன்னார்…. உலகில் எல்லாவற்றையும், சமமாகப் பார்ப்பவர்களை, இறைவன் உயர்வாகப் பார்ப்பான்…’ என்றதும், உத்தங்கர், வெட்கித் தலை குனிந்தார்…. கிருஷ்ணருக்கோ, உத்தங்கருக்கு ஏதாவது வரம் கொடுக்க வேண்டும் என்று தோன்றியது. அதனால், ‘உத்தங்கரே, கவலை வேண்டாம். எப்பொழுதெல்லாம் உங்களுக்கு தாகம் ஏற்படுகிறதோ…, அப்பொழுது மழை மேகங்கள் திரண்டு, மழையைப் பொழிவிக்கும். அந்த மேகங்கள், ‘உத்தங்க மேகம்’ என்றே அழைக்கப்படும்’ என்று வாழ்த்தி விடை கொடுத்தார்….
கிருஷ்ணர் : கதையைச் சொல்லி விட்டாய்… இதில் நீ என்ன கேட்கப் போகிறாய்…?
மேகலா : ஏன் கிருஷ்ணா…, உத்தங்கர், ஸ்ரீகிருஷ்ணரைப் பார்த்தவுடன், அவரிடம் பீஷ்மரைப் பற்றியும், கௌரவர்களைப் பற்றியும் தெரிந்து கொள்ளவும், அவர்களை நலம் விசாரிக்கவும் தானே ஆசைப்படுகிறார். பாண்டவர்கள் மீது பெரிய அக்கறை இருப்பதாகத் தெரியவில்லையே…
கிருஷ்ணர் : அது வேற ஒண்ணுமில்லை… பீஷ்மருடைய பலமும், நிர்வாகத் திறமையும் சுற்றியிருப்போர் எல்லோரையும் கவரக் கூடியது. பீஷ்மருடைய வாழ்க்கை வரலாறு, ஆச்சர்யமான ஒன்று… தான் விரும்பும் நேரத்தில் மரணத்தை எதிர்கொள்ளலாம் என்ற வரம் பெற்றவர் என்ற மரியாதை எல்லோருக்கும் உண்டு…. அவருடைய அசாத்திய போர்த்திறமை மீது, அனைவருக்கும் பயம் உண்டு… அதனால் பீஷ்மர் மீது, எல்லோருக்கும் மதிப்பும், மரியாதையும் இருந்தது….. அஸ்தினாபுரத்தின் மன்னனாக திருதராஷ்டிரனும், இளவரசனாக துரியோதனனும் இருந்ததால், நிறைய பேருக்கு கௌரவர்கள் மீது அன்பும், மரியாதையும் இருந்தது… ஸ்ரீகிருஷ்ணர், பாண்டவர்கள் மீது பரிவு கொண்டுள்ளார் என்று பரவலாக எல்லோராலும் நம்பப்பட்டது. அதனால், நலம் விசாரிப்பவர்கள், முதலில் பீஷ்மர், அடுத்து கௌரவர்கள்…, அதற்குப் பின் பாண்டவர்கள் என்று விசாரிப்பதுதான் வழக்கமாக இருந்தது… அப்படித்தான் உத்தங்கரும் விசாரித்தார்.. இதில் ‘தப்பு’ இருப்பதாக நான் நினைக்கவில்லை…
மேகலா : அப்புறம் ஏன்…, ‘பீஷ்மர் உட்பட கௌரவர்கள் அனைவரும் மாண்டனர்’ என்றதும், கிருஷ்ணர் மீது கோபம் கொள்கிறார்… நீதான் எல்லா அழிவுக்கும் காரணம் என்று கூசாமல், கிருஷ்ணருக்கே சாபம் கொடுக்க முன் வருகிறாரே…
கிருஷ்ணர் : இதிலும் நான் அவருடைய, ‘ஒரு குலமே அழிந்து விட்டதே’ என்று வருத்தப்பட்ட மனநிலையைத்தான் பார்க்கிறேன்… என்ன…, கொஞ்சம் அதிகமாகக் கோபப்பட்டு…, அவசரப்பட்டு, கிருஷ்ணர்தான் அழிவுக்குக் காரணம் என்று குற்றம் சாட்டி விட்டார்…. இது அவருடைய பக்குவமற்ற தவத்தைத்தான் காட்டுகிறது… வேறொன்றுமில்லை… அதனால், என்னுடைய விஸ்வரூப தரிசனத்தை பார்க்க விரும்பியதால், நானும் அவருக்கு தரிசனம் காட்டினேன்….
மேகலா : அதற்காக, ஸ்ரீகிருஷ்ணர் பரம்பொருள் என்று தெரிந்தும், இப்படி நடந்து கொள்ளலாமா கிருஷ்ணா… இப்படி, கூப்பிட்டதும், தன் முன்னே கிருஷ்ணர் ஓடி வருவதால்…, ‘தான்’ என்னவோ தவத்தில் சிறந்த முனிவராகவும்…, கிருஷ்ணர் என்னவோ பாரபட்சம் காட்டும் சாதாரண மாயாவி என்றும் நினைத்தவர்தானே…
கிருஷ்ணர் : அப்படிச் சொல்ல முடியாது… நமக்கு…, ஒரு விஷயம்…, அதிர்ச்சிகரமாகவோ, விருப்பமில்லாததாகவோ நடந்தால்…, அதை உடனே யாரிடம் உரிமையாக எடுத்துச் சொல்லுவோம் அல்லது சண்டை போடுவோம். ஒண்ணு…, நம் பெற்றோரிடம்…, இல்லையென்றால்…, நம்ம பிறப்புக்குக் காரணமான கடவுளிடம்… இதுதானே சாதாரணமாக மனித இயல்பு… உத்தங்கரும், என்னிடம் கோபம் கொண்டது, என் மேல் அவருக்கிருந்த உரிமையின் பேரில் தான்….
மேகலா : பின் ஏன் கிருஷ்ணா… அவர், தண்ணீர் கேட்டதும்…, அவரை இப்படி அலைக்கழித்தாய்…?
கிருஷ்ணர் : மேகலா…, ஒன்றை நீ சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். கடவுளிடம் உரிமை என்பது வேறு… தவம் செய்து, கடவுளை அடைய…, அதாவது முக்தி அடைவது என்பது வேறு… ‘தவம்’…, இது மிகப் பெரிய விஷயம்… கடவுளிடம் தண்ணீர் கேட்கலாம்… வழியில் வரும் சண்டாளனைக் கூட அனுப்பி தண்ணீர் தருவார்… ஆனால், சண்டாளனிடமிருந்து தண்ணீரைப் பெற்றுக் கொள்ளும் மனநிலைக்கு நீ வந்து விட்டாயா…, அல்லது வர வேண்டும் என்று எதிர்பார்ப்பதும், ஆசைப்படுவதும் கடவுளின் தன்மை…. கடவுள். ஒவ்வொரு நிலையிலும், உன் தகுதியை நீ மேம்படுத்த வேண்டும் என்றுதான் முனைவார். நீ உன் தகுதியை வளர்த்துக் கொண்டால், அதற்கான பலனை அடைவாய். தகுதி வளராத பட்சத்தில், கடவுள் அதை சுட்டிக் காட்டத்தான் செய்வார்… உன் மீது கடவுளுக்கு இல்லாத அக்கறை வேறு யாருக்கு உண்டு… தவம் என்பது…, மேன்மையான முயற்சி. எல்லோரையும் சமமாகப் பார்ப்பது பக்குவத்தின் முதல் படி…
மேகலா : ஓ! சூப்பர் கிருஷ்ணா…. உன் மீது பக்தி கொண்டதனால்…, தாகம் எடுத்த போதெல்லாம், மழை பொழியும் அருள் கொடுத்தாயா கிருஷ்ணா…
கிருஷ்ணர் : அது மட்டுமல்ல… ஒரு குலமே அழிந்ததே என்று பீஷ்மர் மீதும், கௌரவ குலத்தின் மீதும் அவர் கொண்ட அன்பும் ஒரு காரணம்… சரி…, கேள்வி நேரம் முடிந்ததா…. அடுத்த கதையை ஆரம்பிக்கலாமா….
மேகலா : Yes கிருஷ்ணா…. உத்தங்கர் கதையில் நீதான் தீர்க்கமாக பதில் சொல்லி விட்டாயே. அதனால், அடுத்து முருகன் கதை சொல்லலாம் என்றிருக்கிறேன் கிருஷ்ணா…
கிருஷ்ணர் : என்ன கதை…?
(தொடரும்)